adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 165 (12.12.17)

ரா.சரவணன், பெரம்பலூர்.

கேள்வி :

என்னுடைய மானசீக குருநாதர் அய்யா குருஜி அவர்களின் பாதம் தொட்டு பணிகிறேன். என்னுடைய திருமண விஷயமாக இந்தப் பகுதியில் உள்ள ஜோதிடரிடம் சென்று பார்த்தபோது, முதலில் என்னுடைய குடும்ப விவரங்களையும் என் தாய், தந்தை மற்றும் என்னுடன் பிறந்தவர்களின் எண்ணிக்கை விபரங்களையும் அதில் ஆண், பெண் எத்தனை பேர் என்பதையும் மிகச் சரியாக சொன்னார். அதன்பிறகு அவர் சொன்னவைகள் அனைத்தும் குளறுபடியாகவே அமைந்தன. காதலிக்கும் வாய்ப்பு கிடைக்காத எனக்கு காதல் செய்யும் அமைப்பு உள்ளதே, இப்போது காதல் திருமணம் நடந்திருக்க வேண்டுமே என்று கேட்டார். நான் இல்லை என்று மறுத்தவுடன் எனக்கு சொந்தத்தில் பெண் அமையாது என்றும் அமைந்தாலும் நிலைக்காது என்றும், ஊருக்கு மேற்குத்திசையில் வட்டமான முகமும், சிகப்பான தேகமும், வலதுகண்ணில் மச்சமும் உள்ள, கிழக்குவீதியில் இருக்கும் பெண் அமைவாள் என்றும் சொன்னார். அடுத்து வந்தவர்களுக்கும் இதுமாதிரியான பலன்களைத் தான் சொன்னார். அடுத்து எனது அம்மா, என் அக்கா மகளின் ஜாதகத்தை எனக்கு பொருத்தம் பார்க்கும்போது பத்துக்கு ஒன்பது பொருத்தம் உள்ளது தாராளமாக திருமணம் செய்யலாம் என்று சொன்னவுடன் இடைமறித்த நான் சொந்தக்காரப் பெண் எனக்கு ஒத்து வராது என்று சொல்லி விட்டு இப்போது அம்மாவிடம் அக்கா மகளை திருமணம் செய்யலாம் என்று சொல்கிறீர்களே என்று கேட்க இந்தப் பெண்ணிற்கு ஒரு கால் மாறி வருகிறது. செய்யலாம் என்று பதில் கொடுத்தார். எனக்கு இது பற்றிய குழப்பம் தீரவில்லை. இந்த சீடனின் குழப்பத்தை தெளிவாக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்கிறேன்.

பதில்:
முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை சமூகத்தில் பெரும்பாலும் முறைப்பெண்ணை, பையனை திருமணம் செய்து கொள்ளும் வழக்கமே இருந்து வந்தது. காலம் மாற மாற அதுவும் மாறிக் கொண்டு வந்து தற்போது காலத்திற்கேற்ப உறவுக்குள் திருமணம் செய்து கொண்டால் ஆரோக்கியமற்ற குழந்தை பிறக்கலாம் என்ற விஞ்ஞானக் கருத்துப்படி சொந்தத்தில் திருமணம் செய்வது கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. ஜோதிடம் அருளப்பட்ட அந்தக் காலத்தில் ஒட்டுமொத்த மனித சமூகமும் இது போன்று நகரங்களில் குவிந்திருக்கவில்லை. அப்போது நாம் 50, 100 பேர் கொண்ட தனித்தனி குழுக்களாக, ஒரே குடும்பமாக காடுகளில், விவசாயம் செய்யும் வயல்வெளிகளுக்கு நடுவில் ஜீவனம் நடத்தி வந்தோம். அதில் ஒருவருக்கொருவர் முறைப்பையன், பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். இதுபோன்ற சொந்த அமைப்பு ஒரு பெண்ணிற்கோ, பையனுக்கோ இல்லாத நிலையில் சம்பந்தப்பட்டவரின் நட்சத்திரப்படியும், சகுனத்தை வைத்தும் கிழக்கே நாற்பது கல் போனால் இவரது வாழ்க்கைத்துணை இருக்கிறது என்று பலன் சொல்லப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் இன்று நகரங்களில் குடியேறிவிட்ட பின்பு இதுபோன்று ஒரே ஒரு விதியை மட்டும் வைத்து இந்தத் திசையில் வரன் அமையும் என்று பலன் சொல்வது சரியாக இருக்காது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஜனத்தொகையில் பாதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நகரங்களுக்குள் அடங்கிவிட்ட நிலையில் உழக்கில் கிழக்கு-மேற்கு பார்ப்பது போலத்தான் இதுவும். அதிலும் ஒருவரின் ராசி, லக்னத்திற்கு ஏழாம் வீட்டு அதிபதியின் திசைதான் வரன் இருக்கும் திசையாக சொல்லப்படுகிறது. அது அனைத்து நிலைகளிலும் பொருந்தாது. வரன் இருக்கும் திசையைச் சொல்ல இன்னும் நுட்பமாக உள்ளே செல்ல வேண்டும். ஜோதிடத்தில் எதையும் சொல்ல முடியும் என்றாலும் ஜாதகத்தை பார்த்த அடுத்த நிமிடத்தில் வட்டமுகம், சிவப்பு தேகம், வலது கண்ணில் மச்சம், கிழக்குத் தெரு பெண் என்பதெல்லாம் எந்த ஒரு ஜோதிடராலும் சொல்ல முடியாது. அது ஜோதிட வாக்கு அல்ல. குத்துமதிப்பாக சொல்லப்படும் அருள்வாக்கு. இவைகள் எல்லாம் ஒரு சதவீதம் கூட சரியாக இருக்க வாய்ப்பு இல்லை. கிராமங்களில் ஜாதகம் பார்க்க செல்லும் பெண்கள் ஜோதிடரின் திறமையை சோதிப்பதாக நினைத்துக் கொண்டு, பிரச்சினையை கேட்பதை விட்டுவிட்டு என்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், என் குழந்தைக்கு தாய்மாமன் எத்தனை பேர் என்று தேவையில்லாத கேள்விகளை கேட்பதால், அவர்களை திருப்திப்படுத்த அவர்களிடம் இருந்தே பெற்ற உடன்பிறந்தவர்களின் விவரங்களை துருவகணிதம் என்ற பெயரில் ஜாதகத்தின் ஓரத்தில் சங்கேதபாஷையில் குறித்து வைத்து கூடப் பிறந்தவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. உன்னுடைய ஜாதகத்தின் முதல் பக்கத்திலேயே உன்னுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், தாய்-தகப்பனுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், உன்னுடைய குடும்பவிவரம் என்ன என்பது மறைமுக வடிவில் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதைப் பார்த்து எந்த ஒரு ஜோதிடராலும் துல்லியமாக உன் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி சொல்ல முடியும். இது தவறு என்று தெரிந்தாலும் வருபவர்கள் முதலில் இவற்றையே கேட்பதனால் வேறுவழி இல்லாமல் ஜோதிடர்களும் முதலில் இதனைச் சொல்லி விட்டே பலன் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். தற்போது ஜோதிடம் பற்றிய விழிப்புணர்ச்சி பரவி பல்கலைக்கழக அளவில் ஜோதிடம் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுவதால் கிராமங்களில் உள்ள ஜோதிடர்களிடம் அக்கா, தம்பி எத்தனை பேர் என்று சொல்லும் வழக்கமும் மறைந்து வருகிறது. இளைய தலைமுறை ஜோதிடர்களில் பெரும்பாலானவர்கள் இதைச் சொல்வதில்லை.
விவாகரத்திற்குப் பிறகு நல்ல துணையுடன் இருப்பேனா?
மகாலட்சுமி, நியூஜெர்சி, அமெரிக்கா.
கேள்வி :
திருமணமாகி 14 வருடம் ஆகிறது. கணவனுடன் எப்போதும் சண்டை மட்டும்தான். அன்யோன்யம் இல்லை. மூன்றுமுறை விட்டுப் போகப் பார்த்தேன். ஆனால் அவர் விடவில்லை. இப்போது மகன் பெரியவனாகி விட்டதால் நிம்மதி வேண்டி அவரிடம் விவாகரத்து கேட்க உள்ளேன். தயவு செய்து விவாகரத்துக்குப் பின் என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கூறுங்கள். தனிமையாக இருக்குமா? துணை உண்டா? மறுபடியும் மனநிம்மதி இல்லாத அமைப்புத்தானா? உங்களின் தீவிர ரசிகையான நான் தொலைதூரத்தில் இருந்து தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
பதில்:
செவ் சனி கே
06.10.1973 11.44 காலை வாணியம்பாடி
 சந் குரு
ரா ல சுக் பு  சூ
 செவ்
 கே ல 22.08.1979 7.30 இரவு சென்னை  பு குரு
சந்,சூ சுக்,ரா சனி
                சொந்தக் காலில் நிற்கும் எல்லா பெண்களுக்கும் வருகிற இயல்பான சலிப்பு இப்போது உனக்கும் வந்து விட்டது. நமது கலாச்சாரத்தை இன்றும் ஓரளவிற்காவது கட்டிக் காத்து வரும் இந்தியாவில் உள்ள பெண்களின் சகிப்புத் தன்மையே குறைந்து கொண்டு வரும் வேளையில், அதற்கு நேர்மாறான போக்கைக் கொண்ட அமெரிக்காவில் இருக்கும் நீ இப்படிக் கேட்பதில் ஆச்சரியம் இல்லை. இந்தக் கேள்வியிலும் ஒரு நுணுக்கத்தை எனக்கு நீ உணர்த்துகிறாய். அதாவது கணவனை நான் விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டேன். அது மாறாது. அதற்குள் நீங்கள் தலையிட வேண்டாம். மணமுறிவிற்குப் பிறகு நான் நன்றாக இருப்பேனா? இல்லையா? என்பதை மட்டும் நீங்கள் சொன்னால் போதும் என்று ஒரு வட்டத்திற்குள் நான் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சூசகமாக எனக்குத் தருகிறாய். ஜோதிட நம்பிக்கையுள்ள ஒருவரை பிரச்னைகள் வரும் முன்போ, அல்லது வந்த பின்போ நெறிப்படுத்த வேண்டியது ஒரு நல்ல ஜோதிடனின் கடமை என்பதால், நீ போட்ட வட்டத்துக்குள் இருந்தே பதில் தர வேண்டிய நிர்பந்தம் எனக்கு இருந்தாலும், அனைத்தையும் விளக்க வேண்டியது எனது பொறுப்பாகிறது. மேலும் என்னுடைய தீவிர வாசகி என்று நீ குறிப்பிட்டிருப்பதாலும் இதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். உங்கள் இருவரின் ஜாதகப்படி கணவனுக்கு மகரம், உனக்கு சிம்மம் என்றாகி இருவரின் ராசிகளும் சஷ்டாஷ்டகம் எனப்படும் ஆறுக்கு எட்டானதால் மணமான நாளில் இருந்தே உங்கள் வாழ்க்கை ஏறுக்குமாறாக, ஏட்டிக்குப் போட்டியாகத்தான் இருந்திருக்கும். இருவரின் லக்னத்திற்கும் ஏழில் சனி பாபத்துவம் பெற்று அமர்ந்திருப்பதால் நீங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப் போகாத பிடிவாதக்காரராக இருப்பீர்கள். கும்பலக்னம் என்பதாலும் லக்னத்தோடு தொடர்புடைய கிரக அமைப்புகளாலும் நீ வெகு நிதானமான பெண்ணாகவும், அதிகம் யோசிப்பவளாகவும், எதிலுமே திருப்தி அடையாத, எதிர்மறை எண்ணங்கள் உடையவளாகவும் இருப்பாய். உன் வழிக்குத்தான் மற்றவர்கள் வர வேண்டும். மற்றவர்கள் பேச்சை நீ கேட்க மாட்டாய். எதையும் ஒத்துக் கொள்ளாதவள் நீ. கல்யாணமான நாள் முதல், கடந்த 14 வருடங்களாக கும்பத்திற்கு அவ யோகிகளான சூரிய, சந்திர தசைகள் உனக்கு நடந்து கொண்டிருப்பதால் திருமணத்திற்கு பிறகு மனதிற்குப் பிடித்த வாழ்க்கை உனக்கு அமைந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக ஆறுக்குடைய சந்திரன் ஏழில் அமர்ந்து, சனி, ராகு போன்ற பாப கிரகங்களின் இணைவில் இருப்பதால் கடந்த ஏழு வருடங்களாக மனதளவில் நீ மிகவும் பாதிக்கப்பட்ட அமைப்பில் இருக்கிறாய். கணவன் ஜாதகப்படி தனுசு லக்னமாகி, லக்னாதிபதி குரு நீசம் பெற்று, லக்னம் பாபத்துவம் அடைந்திருப்பதால் உன் கணவன் சுய சிந்தனை இல்லாமல் எப்போதும் அடுத்தவரை சார்ந்து உன் பேச்சை விட அவனது குடும்பத்தாரின் பேச்சை கேட்பவனாக இருப்பான். இதுவே உங்களுக்குள் அடிப்படையான கருத்து வேறுபாடாக இருக்கும். சுருக்கமாக சொல்லப் போனால் உன் கணவன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பான். எதிலும் அவனை சேர்க்க முடியாது. பிறந்தது முதல் ஒவ்வொருவரும் பல்வேறு காலகட்டத்தில் பலவிதமான அந்தஸ்தை அடைகிறோம். ஒரு பெண் முதலில் மகளாகி, பின்னர் மாணவியாகி, அடுத்து காதலி அல்லது மனைவியாகி, பின்பு அம்மா என்று அழைக்கப்பட்டு, நிறைவாக பாட்டி எனும் கவுரவத்தை அடைகிறாள். இதில் தற்போது தாய் எனும் நிலையில் உள்ள நீ, உன் மகனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தகப்பன் பாசத்தை, வாரம் ஒருமுறை மட்டும் தரவோ அல்லது நிரந்தரமாக தடை செய்யவோ என்ன உரிமை இருக்கிறது? ஒரு மனைவியாக விவாகரத்து கேட்கும் நீ.. தாயும், தந்தையும் பக்கத்திலேயே இருக்கும் நிலையை உன் மகனுக்குத் தர வேண்டியதும், தாயாக உன் கடமைதானே. அதை மீறலாமா? யோசித்துப் பார்த்தால் இங்கே கட்டிப் பிடித்துக் கொஞ்சிக் கொண்டிருக்கும் கணவன்-மனைவி யாரும் இல்லை. 99 சதவீதம் தம்பதிகள் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்பவர்கள்தான். என் குழந்தைக்கு தகப்பன் இல்லாமல் போய் விடுவானே என்று கணவனை சகித்து கொண்டும், என் குழந்தைக்கு தாய் இல்லாமல் போய் விடுவாளே என்று மனைவியை சகித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் இங்கே அதிகம். லக்னத்தோடு சனி தொடர்பு கொண்டதால் எதற்கும் அனுசரித்துப் போகாத நீ 14 வருட வாழ்க்கையை முறித்துக் கொண்டு, மிக முக்கியமாக, இளமையை இழந்து விட்ட ஒரு காலகட்டத்தில், தாயாகவும் இருக்கும் நிலைமையில் இன்னொரு துணை பற்றி யோசிக்கிறாயே... அடுத்து வர இருப்பவன் இப்போது இருப்பவனை நல்லவனாக்கிவிட்டால் என்ன செய்வாய்? மூன்றாவதாக ஒருவனை தேடுவாயா? ஒரு நிலைக்கு பிறகு நம்முடைய வாழ்க்கையே சமரசங்களுக்கு உள்ளாக்கித்தான் நகர்கிறது. அதற்கு நீயும் விதிவிலக்காக இருக்க முடியாது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது. ஒன்று இருந்தால் ஒன்று இல்லை என்பதுதான் உலக நியதி. இருப்பதற்குள் நிறைவாக வாழ்வதே உண்மையான மனித குணம். ஒரு மனைவியாக உனக்குள்ள உரிமையை விட, ஒரு தாயாக உனக்குள்ள கடமைதான் முக்கியம். எனது தீவிர வாசகி என்று நீ குறிப்பிட்டிருந்ததால் சற்று உரிமை எடுத்து சில நிலைகளை எடுத்துச் சொன்ன நான், ஜோதிடப்படி என்ன நடக்கப் போகிறது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பலமுறை மாலைமலர் கேள்வி-பதில் பகுதியில் நான் குறிப்பிட்டிருப்பதைப் போல ஒருவரின் ஜாதகத்தில் ஏழுக்கதிபதி வலுவிழந்து, பதினொன்றாம் அதிபதி அதிக வலுப் பெற்றிருந்தால் இரண்டு திருமணம் என்ற அமைப்பின்படி, உன்னுடைய ஜாதகத்தில் ஏழுக்குடைய சூரியன் ஆட்சி பெற்றிருந்தாலும், சனி, ராகுவுடன் இணைந்து பலமிழந்த நிலையில் பதினொன்றுக்குடைய குரு உச்சமானதால் உனக்கு இரண்டு திருமண அமைப்பு உறுதியாகிறது. தற்போது வழக்கை குறிக்கும் ஆறாம் அதிபதியான சந்திரனின் தசையில், வரும் ஜூன்மாதம் சுக்கிரபுக்தி ஆரம்பிக்க உள்ளதால் உன் விருப்பமான விவாகரத்தை விரைவில் உன்னுடைய கணவனிடமிருந்து சட்டப்படி பெறுவாய். அடுத்த இரண்டு வருடங்களுக்கு நீடிக்கும் சந்திர தசை இறுதியில் உன்னுடைய முதல் வாழ்க்கை நிறைவுற்று, ஐந்தாமிடத்தில் அமர்ந்து பதினொன்றாம் இடத்தை பார்க்கும் செவ்வாய் தசையில் இன்னொரு துணையோடு இருப்பாய். பதினொன்றாம் அதிபதி உச்சம் என்பதால் இரண்டாவது வாழ்க்கை, முதல் வாழ்க்கையை விட நன்றாகவே இருக்கும். உன்னுடைய கணவனுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் குருதசை, சுக்கிர புக்தியும் இந்த பலனை நிரூபிக்கிறது. ஏழாமிடம் வலுவிழந்த ஜாதகங்களில் குருதசை, சுக்கிரபுக்தி அல்லது சுக்கிர தசை, குருபுக்தியில் கணவன்-மனைவிக்கிடையே பிரிவு இருக்கும். அது சுப பிரிவா? அசுப பிரிவா? என்பது அவரவர் ஜாதகத்தை பொருத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *