adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 159 (31-10-17)

டி.சரவணன், அம்மாபேட்டை.

கேள்வி:

எனக்கு திருமணத்தில் நாட்டமே இல்லை. அதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. விசைத்தறி தொழில் செய்து வருகிறேன். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கிறது. தொழிலும் முன்னேற்றமாக இல்லை. எதைச் செய்தாலும் தோல்விதான். ஒரு கிருஷ்ண இயக்கத்தில் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன். கிருஷ்ண பக்தனாக சேவை செய்ய முடியுமா?

பதில்:
சந் ரா  செவ்
31-7-1983, காலை10.53, சேலம் சூ
பு சுக்
 குரு கே சனி

ஒருவருடைய ராசி மற்றும் லக்னத்தோடு ஆன்மீக கிரகங்களான குரு, கேது, சனி ஆகியவை சுபத்துவமாக தொடர்பு கொண்டால் அவருக்கு இயல்புக்கு மீறிய ஆன்மீக ஈடுபாடு இருக்கும். உங்களின் ஜாதகப்படி குருவின் வீட்டில் உள்ள சுபத்துவ சந்திரனை, கேதுவோடு இணைந்து நட்பு வீட்டில் இருக்கும் குரு பார்ப்பதும், பாவக சக்கரத்தில் சனி லக்னத்தில் இருப்பதும் உங்களின் அதிகமான கிருஷ்ண பக்திக்கு காரணம். அடுத்து நடக்க இருக்கும் சூரிய தசையில், சூரியன் சனியின் பூச நட்சத்திர சாரத்திலும், குருவின் பார்வையிலும் இருப்பதால் முழுக்க முழுக்க நீங்கள் சொல்லும் ஆன்மீக இயக்கத்தில் இணைந்து தெய்வப் பணி செய்வீர்கள்.

எம். பானுமதி, திண்டுக்கல்.

கேள்வி :

எனது இளைய மகன் கம்ப்யூட்டரில் எல்லாம் தெரிந்திருந்தும் யாரிடமும் வேலை பார்க்க மறுக்கிறார். நிலையான தொழிலும் அமையவில்லை. சொந்தமாக தொழில் அமையுமா? அல்லது வேலைக்கு செல்வாரா என்று தெரிவிக்க வேண்டும். 33 வயதாகியும் இன்னும் திருமணம் கூடி வரவில்லை. எப்போது திருமணம் ஆகும்?

பதில் :
சந் ரா
6-2-1984, மாலை 7.00, திண்டுக்கல்
சூ பு
 சுக் குரு  கே செவ் சனி

மகன் ஜாதகத்தில் ராசிக்கு எட்டில் செவ்வாய், சனி சேர்ந்துள்ளதாலும், தசாபுக்தி அமைப்புகளின் படியும் 35 வயதில் 2019-ம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு திருமணம் நடக்கும். தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து பத்துக்குடைய சுக்கிரன் சுபத்துவமாகி இருப்பதால் வாகனம் சம்பந்தப்பட்ட சொந்தத் தொழில் அமையும்.

சுமாரிமுத்து, திருநெல்வேலி.

கேள்வி:

ஜோதிட சக்கரவர்த்திக்கு எனது வணக்கங்கள். மகள் பி.. முடித்து விட்டு கடந்த இரண்டு வருடங்களாக அரசுப்பணிக்கான தேர்வுகள் எழுதி வருகிறாள். பிளஸ் டூ கணிதத்தில் 100 சதவிகித முழுமையான மதிப்பெண் பெற்றவள், தற்போது போட்டித் தேர்வுகளில் ஆறாம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்குக் கூட விடையளிக்க முடியாமல் தடுமாறுகிறாள். மிகுந்த ஞாபகமறதி இருக்கிறது. தேர்வுகளில் எப்போது வெற்றி பெறுவாள்? அரசுப்பணி எப்போது கிடைக்கும்? வேலை கிடைக்கும் முன்னரே திருமணம் செய்து கொடுக்கலாமா? கடந்த மூன்று வருடங்களாக மிக மிகக் கடுமையான சோதனைகளை சமாளித்து வருகிற எனக்கும் என் மகளுக்கும் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்தான். தங்களிடம் இருந்து நல்லதொரு பதிலை எதிர்பார்க்கிறேன்.

பதில்:
  கே
சூ சனி  23-2-1995, காலை 9.15, நெல்லை  செவ்
பு
சுக்  சந் குரு ரா

இந்தக் கேள்வியை நான் தேர்ந்தெடுக்க காரணம் ஒரே நாளில், இரண்டு மணி நேர இடைவெளியில் லக்னம் மாறிய நிலையில் வேறு வேறு இடங்களில் பிறந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை அமைப்பும், பெற்றோர் உறவும் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிட ரீதியாக விளக்கத்தான்.

தந்தை தவறாக நடந்து கொண்டார் என்று கீழே உள்ள இன்றைய சிறப்பு கேள்வி-பதிலுக்கு காரணமான பெண்ணும், வேலை கிடைக்கவில்லை திருமணம் செய்து வைத்து விடலாமா என்று கவலையோடு ஒரு தகப்பன் கேள்வி அனுப்பி இருக்கும் இந்தப் பெண்ணும் இரண்டு மணிநேர இடைவெளியில் பிறந்தவர்கள். ஒரு நிமிட இடைவெளியில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளே ஒன்று போல இருப்பதில்லை. ஆயினும் லக்னம் மாறுவதால் பலன்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதை விளக்குவதே இதன் நோக்கம்.

தகப்பனால் இழிநிலையைச் சந்தித்த பெண்ணிற்கு லக்னாதிபதி நீசம். ஆனால் நெல்லைப் பெண்ணிற்கு லக்னாதிபதி குரு லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார். லக்னம் சுபவலுப் பெற்றாலே வாழ்க்கையில் தொல்லைகள் இருக்காது என்பதை அடிக்கடி எழுதுகிறேன். நாமக்கல் பெண்ணிற்கு பெற்றோரைக் குறிக்கும் நான்கு, ஒன்பதாமிடங்கள் பலமிழந்த நிலையில் இந்தப் பெண்ணிற்கு நான்காமிடத்தை சுபர் பார்த்து, ஒன்பதாமிடத்தில் குரு இருக்கிறார். ஒன்பதாம் அதிபதியும் பரிவர்த்தனை அடைந்திருக்கிறார். எனவே பொறுப்பான பெற்றோர்கள்.

லக்னம் வலுப்பெற்று கேந்திர, கோண ஸ்தானங்கள் எனப்படும் 4,5,7,9,10 ஆகிய ஏதாவது ஒரு வீடு பலமாக இருந்தாலே அந்த வீட்டின் துணை கொண்டு ஜாதகர் முன்னேறி விடவோ, நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவோ முடியும். உதாரணத்திற்கு ஆண்களுக்கு பத்தாம் பாவம் வலுத்திருந்தால் நல்ல வேலை மூலம் முன்னேற்றமும், பெண்களுக்கு ஏழாம் பாவம் பலமாக இருந்தால் நல்ல கணவன் மூலம் நிம்மதியான வாழ்க்கையும் இருக்கும். லக்னமும் வலுத்து எல்லா பாவங்களும் பலமாக இருந்தால் அவர் கொடுத்து வைத்தவராக இருப்பார்.

சு. மாரிமுத்து அவர்களே... தந்தைக்கும் மகளுக்கும் விருச்சிக ராசியாகி கடந்த ஐந்து வருடங்களாக கடுமையான ஏழரைச் சனி நடந்ததால் மகளுக்கு ஞாபக மறதியும் சோம்பலும் வந்து விட்டது. உங்களுக்கு மகளைப் பற்றிய கவலைகளும் பொருளாதாரப் பிரச்னைகளும் வந்து விட்டன. ஜென்மச் சனி கடந்த வாரம் முடிந்து விட்டதால் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக மாறும்.

மகளுக்கு பத்தில் சுபர் அமர்ந்து, சிம்மத்தை சூரியன் பார்ப்பதால் அரசுப் பணி கிடைக்கும். ஆனால் தாமதமாகும். தற்போது சுக்கிரதசை நடப்பதால் முதலில் திருமணம் செய்து வைப்பீர்கள். ஏழரைச் சனி முழுவதுமாக முடியும் நேரத்தில் சுக்கிர தசையில் சுய புக்தியும் முடியும். அதன் பிறகு மகளுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைத்து வாழ்வில் குறையின்றி இருப்பாள். வாழ்த்துக்கள்.

தந்தையே அரக்கன் ஆனது ஏன்?

ஒரு வாசகர், பி.குமாரபாளையம்.

கேள்வி:

இந்தக் கேள்விகளுக்கு பதிலும், பரிகாரமும் தாங்கள் ஒருவரால் மட்டும்தான் கூற முடியும் என்கிற நம்பிக்கையிலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேரடியாக எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியிலும் இக் கடிதத்தை அனுப்புகிறேன். சிறுவயது முதல் நான் பார்த்து வளர்ந்த பெண் அவள். தற்போது அவளுக்கு 22 வயதாகிறது. 2 குழந்தைகள் உண்டு. இவளின் 16 வயதில் ஆறுவயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து சிறைத் தண்டனை பெற்ற தாய்மாமனுக்கு கட்டாயப்படுத்தி அம்மாவும் சித்திகளும் திருமணம் செய்து வைத்தார்கள். மணமான நாள் முதல் தினமும் சண்டை, அடி, உதைதான். அடிக்கடி அம்மா வீட்டிற்கு வந்து விடுவாள். 13 மாத இடைவெளியில் இரண்டு குழந்தைகள் பிறந்ததில் இருந்தே எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாள் என்பது தெரியும்.

2014ம் ஆண்டு கணவனுடன் சண்டை போட்டு அம்மா வீட்டிற்கு வந்தவள் அதன் பிறகு வக்கீல் மூலம் விவாகரத்தும் பெற்று விட்டாள். பிறகுதான் இவளுக்கு வேறுவிதமான பிரச்சினை ஆரம்பமானது. தந்தையே இவளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறான். அவள் அம்மாவிடம் கூறியும் அவள் நம்பவில்லை. முதலில் போதையில் இதைச் செய்தவன் இவள் வெளியில் யாரிடமும் சொல்ல முடியவில்லை என்பதை புரிந்து கொண்டு குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டி கடந்த பங்குனி மாத அமாவாசை அன்று பெற்ற மகள் என்றும் பாராமல் அடித்து உதைத்து உறவு வைத்து கொண்டான்.

பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றும் தந்தைக்கு தண்டனையும், இவளுக்கு நியாயமும் கிடைக்கவில்லை. மாறாக இவள் வீட்டில் இருந்தால் பிரச்னைதான் என்று இவளை அடித்து, உதைத்து விவாகரத்தான கணவன் வீட்டிற்கே அனுப்பி வைத்து விட்டனர். இப்போது அங்கே தினம், தினம் செத்துக் கொண்டிருக்கிறாள். தாய், தந்தை இருவருமே இவளுக்கு எதிரிகள் ஆனது ஏன்? தந்தை மீது இவளுக்கு சிறுவயது முதலே பாசம் அதிகம். அப்படி இருந்தும் தந்தையே அரக்கனாக மாறியது ஏன்? யாரையும் தொந்தரவு செய்யாமல், யாருடைய தொந்தரவும் இல்லாமல் குழந்தைகளுடன் தனியாக வாழ ஆசைப்படுகிறாள். அது நிறைவேறுமா? ஏற்கனவே மூன்று முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றி விட்டார்கள். அவளது உயிருக்கு ஆபத்து ஏதேனும் உள்ளதா? உண்மையில் இவள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? சிறுவயது முதல் பார்த்து வளர்ந்த பெண் என்பதாலும், இவளது நிலை உலகில் யாருக்கும் வரக் கூடாது என்பதாலும் பலரது வாழ்க்கையில் விளக்கேற்றி வைக்கும் குருஜி அவர்களின் பாதங்களில் மண்டியிட்டு இதற்குப் பதில் வேண்டுகிறேன்.  

பதில்:
  ல கே
சூ சனி 23-2-1995, காலை11மணி, நாமக்கல்  செவ்
பு
சுக்  சந் குரு ரா

சில கேள்விகளை வெளியிடவும், பதில் தரவும் மனம் கூசுகிறது. ஜோதிடனாய்ப் பிறந்ததன் தர்மசங்கடத்தை இது போன்ற நேரங்களில்தான் உணர்கிறேன். கேட்டை நட்சத்திரக்காரர்கள் யாரும் கடந்த சில வருடங்களாக அவரவர் வயது, தகுதி, இடத்திற்கேற்றார் போல் நன்றாக இல்லை என்பதை மாலைமலரிலும், யூ டூயூப் வீடியோக்களிலும், முகநூல், தொலைக்காட்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் இந்தப் பெண் அடைந்திருக்கும் துயரம் கடவுளுக்கே அடுக்காது. கஷ்டப்படவே பெண்களை உலகில் படைத்திருக்கிறான் கடவுள் என்றாலும், இவளது கஷ்டங்கள் கரையாத மனதையும் கரைத்து விடும். கலங்கவும் வைத்து விடும்.

லக்னாதிபதி கிரகம் நீசமானாலேயே முன்பகுதி வாழ்க்கையில் சோதனைகளை அனுபவிக்க வேண்டும் என்பது விதி. இந்த சோதனைகள் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி நேரங்களில் மிகவும் கடுமையாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் வயதிற்கேற்றார் போல குடும்பம், தொழில், ஆரோக்கியம் போன்றவைகளில் பிரச்சினைகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு எது பிடிக்காதோ அது ஏழரைச் சனி நேரங்களில் நடக்கும். அல்லது அதைச் செய்ய வைக்கப்படுவீர்கள்.

இந்தப் பெண்ணிற்கு மேஷலக்னமாகி, லக்னாதிபதி செவ்வாய் நீசமடைந்து வலுவிழந்த நிலையில், லக்னத்தையும், ராசியையும் சனி பார்த்து பலவீனப் படுத்திய அமைப்புள்ள ஜாதகம். இதில் செவ்வாயும், சந்திரனும் பரிவர்த்தனை அடைந்திருப்பதும், லக்னாதிபதியை குரு பார்ப்பதும் நல்ல அம்சங்கள். 2012-ல் ஏழரைச் சனி ஆரம்பத்தில் இவளது 16 வயதில் முறையற்ற திருமணத்தை செய்து வைத்ததில் இருந்தே இவளுக்கு தொல்லைகள் ஆரம்பமாகி விட்டன.

தாயைக் குறிக்கும் நான்காமிடத்தில் நீசன் அமர்ந்து, நான்காம் அதிபதியும், காரகனுமான சந்திரன் எட்டில் மறைந்து நீசமாகி, சனியின் பார்வையில் உள்ளதால் இவளது தாய் அம்மாவென்று அழைப்பதற்கு தகுதி அற்றவள். அதேபோல தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் அதிபதியான குரு எட்டில் மறைந்து சனி பார்வையில் இருக்க, பிதுர்க்காரகனான சூரியனும், சனியுடன் இணைந்து நீச செவ்வாயின் பார்வையைப் பெற்றதால் இவளது தந்தையும் அப்பாவாக இருக்க தகுதியற்ற ஒரு இழிபிறவி.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தக் கொடுமை நடந்த அமாவாசை இரவில் சூரியனும், சந்திரனும் உச்ச சுக்கிரனுடன் இணைந்த நிலையில் இவளது லக்னாதிபதியான செவ்வாயுடன் புதன் இணைந்திருக்கிறார். நல்லவற்றை மட்டுமே ஜோதிடரீதியில் ஆழமாக விவரிக்க விரும்பும் நான் இந்த மாபாதகத்தை விளைவித்த கிரக நிலைமைகளை இதற்கு மேல் விளக்க விரும்பவில்லை.

லக்னாதிபதி நீசமானாலும் எட்டாமிடத்தோடு பரிவர்த்தனையில் இருப்பதால் இவள் உயிரோடு இருந்து அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பது பூர்வ ஜென்ம கர்மா. தற்போது ஜென்மச் சனி விலகி விட்டதாலும் மாரகாதிபதியான சுக்கிரன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதாலும் இவளது உயிருக்கு இனிமேல் ஆபத்து இல்லை. அதேநேரத்தில் நீங்கள் கேட்கும் நிம்மதி இவளுக்கு 2019 ஆண்டு ஆரம்பத்தில் சுக்கிரதசை சுயபுக்தி முடிந்ததும் கிடைக்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் பெண்ணிற்கு யாரேனும் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் கூட அது முடியாமல் போய் இருக்கும். அந்த அளவிற்கு ஏழரைச் சனியின் ஆதிக்கம் விருச்சிகத்திற்கு கடுமையான தாக்கத்தை கொடுத்திருந்தது. இனி இவளுக்கு பிறரது உதவிகள் கிடைக்கும். ஜாதகப்படி இவளது இரண்டு குழந்தைகளில் ஒன்று தகப்பனைப் போலவே தறுதலையாகவும், இன்னொன்று தாயை வைத்துக் காப்பாற்றும் அளவிற்கு உயர்வானவனாகவும் வரும். இருவரில் யார் எப்படி என்று நான் சொல்லத் தேவையில்லை. அவளே இதனை அறிவாள்.

பரிகாரங்களை சொல்லும்படி கேட்டிருக்கிறீர்கள். ஜோதிடன் பரிகாரங்களைச் சொன்னாலும் அதனைச் செய்வதற்கான அனுமதியை சிலருக்கு பரம்பொருள் தருவது இல்லை. இவள் ஜாதகமும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இன்றைய சூழ்நிலையில் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு இவளால் பரிகாரங்கள் எதுவும் செய்ய முடியாது. செய்யக் கூடிய ஒன்றாக சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றச் சொல்லுங்கள். அதுவே போதும்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 159 (31-10-17)

  1. படிக்கும் போதே கண்களில் கண்ணீர் சொட்டுகிறது ஐயா. எல்லாம் வல்ல பரம்பொருள் அந்த அபலை பெண்ணை காப்பாற்றுவார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *