adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 158 (24.10.17)

எம்மாயாண்டி பிள்ளை, மதுரை.

கேள்வி :

எனது பேரனின் ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். அவன் வெளிநாடு செல்வானா? அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?

பதில் :
ரா சந்
14-9-2006, காலை 7.21, மதுரை  சனி
சூ சுக்
 குரு ல,பு செவ்

மிகவும் விபரமாக கேள்வி கேட்டு இருப்பதால் நீங்கள் ஜோதிடராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பேரனின் ஜாதகப்படி வெளிநாட்டைக் குறிக்கும் எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டைப் பார்த்து, வெளிநாட்டில் வசிக்க வைக்கும் பனிரெண்டுக்குடையவன் ஆட்சி பெற்ற நிலையில், எட்டாமிடத்தைக் குரு பார்த்து பனிரெண்டில் சுக்கிரன் இருப்பதால் எதிர்காலத்தில் வெளிநாடு யோகம் உள்ள  ஜாதகம்தான்.

25 வயதிற்கு மேல் சர ராசிகளான துலாம், கடகத்தில் அமர்ந்திருக்கும் குரு, சனி தசைகள் நடப்பதால் பேரன் எதிர்காலத்தில் வெளிநாட்டில்தான் இருப்பார். எட்டு, பனிரெண்டாம் இடங்கள் சுபத்துவம் அடைந்தால் ஒரு ஜாதகர் வெளிநாட்டில் பிழைப்பார் என்பது ஜோதிட விதி. அதேநேரத்தில் சிறுவயதில் வருகின்ற ராகு தசை ஒருவருக்கு படிப்பை விட விளையாட்டுத்தனங்களில் ஆர்வத்தைக் கொடுக்கும் என்பதால் கல்லூரி வரை பேரனின் படிப்பைக் கவனித்து ஊக்குவிக்க வேண்டியது அவசியம். லக்னாதிபதி உச்சமாக இருப்பதால் எதிர்காலத்தில் நன்றாக இருப்பான்.

கேபழனிசாமி, சோமந்துறை.

கேள்வி:

எனது மகனின் படிப்பில் 2015-2016-ம் ஆண்டில் தடை ஏற்பட்டது. மீண்டும் இந்த வருடம் 10-ம் வகுப்பு படிக்கிறான். இனிமேல் அவனின் படிப்பு எப்படி அமையும். இவரது தொழில் நிலைமைகள் என்ன என்பது பற்றி பதில் தர விரும்புகிறேன்.

பதில்:
சுக் சந் சூ,குரு பு,சனி ரா
21-5-2001, காலை 10.37, பொள்ளாச்சி
 செவ் கே

படிக்கும் வயதில் ஒரு மாணவனுக்கு அஷ்டமச் சனி நடந்தால் சோம்பல், மறதி போன்றவைகள் வரும். பிறந்த ஜாதகப்படி அப்போது ஆறு, எட்டுக்குடையவர்கள் தசாபுக்தியோ அல்லது பாபத்துவம் பெற்ற ராகுவின் தசை புக்தியோ நடைபெற்றால் படிப்பில் தடை இருக்கும். உங்கள் மகனுக்கு மேஷ ராசியாகி அஷ்டமச்சனி நடக்கும் போது வலுப்பெற்ற பாதகாதிபதி சுக்கிரனின் தசையில் அஷ்டமாதிபதி சனியின் புக்தி நடைபெற்றதால் வயதிற்கேற்ற பாதகமான படிப்பில் தடை ஏற்பட்டது.

ஜாதகப்படி லக்னாதிபதி வலுவாக இருந்தாலே அவர் எதையும் சமாளித்து வாழ்க்கையில் நன்றாக இருப்பார். மகனின் ஜாதகப்படி லக்னாதிபதி சந்திரன் பத்தில் அமர்ந்து அம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பதும், ஒன்பது, பத்துக்குடைய சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனை பெற்று இரண்டு, ஒன்பது, பதினொன்றுக்குடையவர்கள் சம்மந்தம் பெற்றதும் சிறப்பான அமைப்பு என்பதால் 20 வயதிற்கு பிறகு நடக்க இருக்கும் சூரிய தசையின் ஆரம்பத்திலேயே உங்கள் மகனுக்கு தொழில் செய்வதில் ஆர்வம் உண்டாகி பிற்காலத்தில் நல்ல ஒரு தொழில் முனைவோராக இருப்பான். படிப்பவர்கள் அனைவரும் முன்னேறி விடுவதில்லை. படிக்காதவர்கள் அனைவரும் கெட்டுப் போய் விடுவது இல்லை. மகனுக்கு 20 வயதிற்கு பிறகு சூரிய, சந்திர, செவ்வாய் என யோக தசைகள் வருவதால் மிகச் சிறந்த வசதி வாய்ப்புடன் பணக்காரனாக இருப்பான்.

சின்னதுரை, திருநெல்வேலி.

கேள்வி:

குருவின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். எனது குழப்பத்தை தீர்த்து வையுங்கள். ஜோதிடர் எழுதியுள்ள ஜாதகத்தில் எனக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி என்று உள்ளது. கம்ப்யூட்டர் ஜாதகத்தில் தனுசுராசி என்று வருகிறது. உண்மையில் எனது ராசி நட்சத்திரம் என்ன? 33 வயதாகியும் இன்னும் பெண் அமையவில்லை. நல்லபையன், நல்ல குடும்பம் என ஊருக்குள் பெயர் இருந்தும் வரும் வரன் எல்லாம் தட்டிக் கொண்டே போகிறது. எப்போது திருமணம் நடக்கும்?

பதில்:
ரா
1-10-1984, காலை 5.30, நெல்லை
சந்,குரு செவ் கே சுக் சனி ல,சூ பு

ஜோதிடர் எழுதிய ஜாதகம் தவறான வாக்கிய பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டு இருக்கலாம். திருக்கணிதப்படி கம்ப்யூட்டரில் கணித்த தனுசுராசி, மூலம் நட்சத்திரம் என்பதே சரியானது. இன்றைய பெரும்பாலான விவாகரத்துகளுக்கும், மண வாழ்க்கை சரியில்லாத நிலைக்கும் தவறான வாக்கிய பஞ்சாங்கப்படி கணிக்கப்படும் ஜாதகமே காரணம்.

உங்களுக்கு லக்னத்திற்கு 2-ல் சனி. ராசிக்கு 7-ம் வீட்டிற்கு செவ்வாய் பார்வை என தாரதோஷ அமைப்புகள் இருப்பதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. தற்போது நடைபெறும் சந்திரதசை, ராகு புக்தியில், ராகு சுக்கிரனின் வீட்டில் இருந்தால் தாம்பத்திய சுகத்தை ஏற்படுத்தி கொடுப்பார் எனும் விதிப்படி அடுத்த வருடம் நவம்பருக்குள்  திருமணம் நடைபெறும்.

எஸ்டிதர்மலிங்கம், சாமிநாதபுரம்.

கேள்வி:

மகனுக்கு 48 வயதாகிறது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. குடிக்கிறான். அதனால் ஊர் முழுக்க கெட்ட பெயராகி மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எந்தத் தொழிலும் சரியாக இல்லை. திருமணமும் நடைபெறவில்லை. எனக்கு இவனைப் பற்றி என்ன கேட்பது என்றும் புரியவில்லை.

பதில்:
 சந் சனி
 ல 29-8-1969, மாலை 6.05, சேலம் சுக்
சூ கே
செவ் பு குரு

லக்னாதிபதியும், லக்னமும் வலுவிழந்தாலே வாழ்க்கையில் ஒன்றும் சுகப்படாது. மகனுக்கு கும்ப லக்னமாகி லக்னத்தில் ராகு அமர்ந்து லக்னத்தை சூரியனும், செவ்வாயும் பார்ப்பதால் லக்னம் வலுவிழந்தது. சனி நீசமடைவது ஒரு நிலையில் நல்லது என்றாலும் அவருக்கு குரு பார்வையோ, வேறுவிதமான சுப சூட்சும வலுவோ கிடைத்திருக்க வேண்டும். அவை இல்லை.

மகனின் ஜாதகத்தில் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டை சனி, செவ்வாய் பார்த்து, ஐந்துக்குடையவனும் புத்திரக்காரகன் குருவும் எட்டில் மறைந்தது கடுமையான புத்திரதோஷம். நடைபெறும் தசா புக்திகளும், தசா நாதன் சுக்கிரனும் ஆறில் பகை பெற்று அமர்ந்து நீச சனியின் சாரம் வாங்கி அம்சத்தில் நீசமாக இருக்கிறார். அடுத்தடுத்து நடக்க இருக்கும் சூரிய, சந்திர தசைகளும் கும்பத்திற்கு யோகத்தை செய்பவைகள் அல்ல. எனவே உங்களுக்கு மகனுக்கு நல்ல விதமாக எதையும் சொல்ல முடியவில்லை.

எனது ஓரினச் சேர்க்கை ஆர்வத்திற்கு காரணம் என்ன?

ரிஷிகேஷ், ஈரோடு.

கேள்வி:

குருஜியின் திருப்பாதங்களுக்கு வணக்கம். ஆறு மாதத்திற்கு முன் எனது முரண்பட்ட காமமான ஓரினச் சேர்க்கை பற்றியும், அதனால் வந்த காதலைப் பற்றியும் கேள்வி கேட்டிருந்தேன். அதில் நீங்கள் நாங்கள் அசிங்கப்பட்டுப் பிரிவோம் என்று கூறி இருந்தீர்கள். நீங்கள் சொன்னபடியே அவன் செய்த பிரச்சினையாலும், நான் செய்த முட்டாள்தனத்தாலும் எங்களின் உறவு எல்லோருக்கும் தெரிந்து அவமானப்படுத்தி எங்களை பிரித்து விட்டார்கள்.

நான் அவன் மீது வைத்த பாசம் இப்போது வெறியாக மாறி விட்டது. நடந்த விஷயங்களால் சில சமயங்களில் அவன் மீது அளவு கடந்த கோபம் வருகிறது. அவனைக் கொலை செய்து விடலாம் என்று கூட மனம் துடிக்கிறது. நானும், அவனும் ஒன்று சேர்வோமா? அல்லது என்னை நானே அழித்துக் கொள்வேனா? என் தாய், தந்தையை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. என்னை பெற்ற பாவத்திற்கு என் பெற்றோர் கேவலப்படுகிறார்கள். ஆனால் என் மனம் என் பேச்சை கேட்க மறுக்கிறது.

நீங்கள் சொன்னபடியே மனநல மருத்துவரிடமும் சென்று வந்து விட்டேன். நார்மலாகத்தான் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். என் நிலைக்குத்  தீர்வுதான் என்ன? இந்த சமூகம் எனக்கு வெறுப்பை மட்டும்தான் தந்து விட்டது. இறுதியாக எனக்கும், அவனுக்கும் நடந்த பஞ்சாயத்தில் கூட அவன் நல்லவனாகவும், நான் கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டேன். அவன் மீது கொள்ளைப் பிரியம் வைத்த மனம் தற்போது அவனைக் கொலை செய்து விடலாமா என்று வெறியாக மாற என்ன காரணம்? எங்களுடைய ஓரினச் சேர்க்கை உறவுக்கு ஜாதக ரீதியான காரணம் என்ன? இனி என் வாழ்வில் என்ன நடக்கும்? தயவு கூர்ந்து பதில் கூறவும்.

பதில்:
ல கே
சனி 20-11-1995, மாலை 3.56, ஈரோடு­­
சூ,சுக் செவ்,பு குரு சந் ரா

ஒருவரின் ஜாதகத்தில் லக்னமும், ராசியும், லக்னாதிபதியும் பாதிக்கப்பட்டாலே அவர் இயல்புக்கு மாறானவராக இருப்பார். உங்களுக்கு மேஷ லக்னமாகி, லக்னாதிபதி செவ்வாய் எட்டில் மறைந்த நிலையில், லக்னத்தையும், லக்ன நாயகனையும் வலுப் பெற்ற சனி பார்க்கிறார். மனதிற்கு காரகனான சந்திரன் மூன்று டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து கிரகணமாகி இருக்கிறார்.

அதேபோல எட்டாமிடத்தில் சுக்கிரன், செவ்வாய், குரு ஆகிய மூவரும் இரண்டு டிகிரிக்குள் கிரக யுத்தத்தில் உள்ளதோடு அலி கிரகமான சனியின் பார்வையிலும் இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் இந்த லக்னத்தின் கொடும்பாவியான ஆறாமதிபதி புதனின் சாரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலை உங்களது கோபக் குணங்களையும் இயல்புக்கு மாறான வேட்கைகளையும்  காட்டுகிறது.

சனியும், புதனும் ஜோதிடத்தில் அலி கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன. இன்னும் தெளிவாக சொல்லப் போனால் ஆணும், பெண்ணும் இல்லாத இளம் பருவத்தையும், முதுமைப் பருவத்தையும் குறிக்கும் கிரகங்கள் இவை. இந்த இரண்டு பருவங்களிலும் இருக்கும் ஒருவர் ஆணும், பெண்ணும் அல்லாதவர். அதாவது 13,14 வயதுள்ள குழந்தைப் பருவத்தில் நீங்கள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. 60 வயதிற்கு பிறகு முதுமையிலும் அதே நிலைதான். இந்த இரண்டுங்கெட்டான் தன்மையை குறிக்கின்ற கிரகங்கள் ஜோதிடத்தில் அலி கிரகங்கள் என்று சொல்லப்படுகின்றன.

உங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு புதனின் சாரத்தில் அமர்ந்த குருவின் தசை ஆரம்பித்ததில் இருந்து இதுபோன்ற முறையற்ற காமத்தின் மீது அதிகமான ஈடுபாடும் அது தொடர்பான உறவுகளும் ஏற்பட்டிருக்கும். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் குரு தசையில், பாதகாதிபதி சனியின் புக்தி ஆரம்பித்து விட்டதால் நீங்கள் இருவரும் அவமானப்பட்டு பிரிய வேண்டும் என்பது ஜோதிட விதி.

ஆறு, எட்டுக்குடையவர்களின் தொடர்பைப் பெறும் தசாபுக்திகள் ஒரு மனிதனுக்கு நன்மைகளை செய்யாது. அதன்படி தற்போது ஆறாம் அதிபதி நட்சத்திரத்தில் அமர்ந்து எட்டாம் வீட்டில் இருக்கும் குருவின் தசையில் இன்னும் ஐந்து வருடங்களுக்கு உங்களுக்கு நல்ல பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதில் ஒரே ஒரு சாதகமான விஷயம் உங்களுக்கு ஏழரைச்சனி முடிந்து விட்டது என்பது மட்டும்தான்.

எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ ஒரு மிருகம் மறைந்துதான் இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்த முடிந்தவன் அதை பிறருக்குத் தெரியாவண்ணம் மறைத்து சமூகத்தில் வாழ்கிறான். ஜாதகப்படி லக்னாதிபதி மறைந்தாலும் ஆட்சி நிலையில் இருப்பதால் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை உணரவும், அடுத்தவரிடம் அது பற்றி விவாதிக்கவும் கூடிய மனநிலையில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.

ஒரு ஜோதிடனிடம் இதற்குத் தீர்வு கேட்டால் எனக்குத் தெரிந்தவைகளைத்தான் சொல்ல முடியும். தற்போது பச்சை மற்றும் நீல நிறங்களை அதிகமாக உபயோகப் படுத்திக் கொண்டிருப்பீர்கள். இவற்றை அறவே ஒதுக்கி சிகப்பு நிறத்தை அதிகமாக பயன்படுத்துங்கள். குறிப்பாக உங்களின் தலையணை, பெட்ஷீட், உள்ளாடைகள், வாகனம் போன்றவைகள் சிகப்பு நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

எண்ணங்களை முழுமையாக இறைவழிபாட்டில் திருப்புவதே கிரகங்கள் செய்ய இருக்கும் “பாதகங்களை” சமாளிக்கும் வழி. செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் இருக்கும் பழமையான முருகன் கோவிலுக்குச் சென்று இந்த மனவோட்டத்தை மாற்றி அருளும்படி தமிழ்வேளாம் எம்பெருமான் முருகக்கடவுளை வேண்டுங்கள். ஒன்றுக்கு இரண்டு பெண்களை ஆளும் அந்த அழகன் உங்கள் மனதையும் ஒரு பெண்ணின் பால் திருப்புவான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *