adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 147 (8.8.2017)
ரா. சரவணன் பெரம்பலூர்.
கேள்வி :

ஆசானுக்கு வணக்கம். கோவையைச் சேர்ந்த மகனை இழந்த ஒரு தாய்க்கு நீங்கள் கொடுத்த பதில் தாய்ப்பாசமே கிடைக்காத என்னை அழச் செய்தது. குரு, ஆசிரியர், கடவுளை சோதித்துப் பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் இதற்குப் பதில் சொல்வதற்கு உங்களைத் தவிர யாருமில்லை. அம்மா என்றாலே முகம் சுளிக்கும் அளவிற்கு எதற்கும் கோபப்படும், எப்போதும் வெறுப்பாக பேசக் கூடிய அம்மா எனக்கு அமைந்தது ஏன்? இங்குள்ள அனைத்து ஜோதிடர்களும் எனக்கு அரசு வேலை கிடைக்காது என்று சொன்ன நிலையில் அரசு வேலை எந்த அமைப்பால் கிடைத்தது? அரசு வேலை கிடைத்தும் அதை நிம்மதியாக அனுபவிக்க முடியாமல் என் உயிருக்கும் மேலான ஒரே தோழனான அப்பா இறந்தது ஏன்? அம்மாவைப் போல பெண் அமைந்து விட்டால் என்ன செய்வது என்று திருமணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன். எப்போது திருமணம்? ஐந்து வருடங்களாக விருச்சிக ராசி நன்றாக இல்லை என்றுதான் எழுதி வருகிறீர்கள். ஆனால் நான் என்னை சிறுவயது முதல் வளர்த்த தாத்தா, பாட்டி, அப்பாவை அடுத்தடுத்து இழந்து விட்டேன். எப்போது எனக்கு நல்ல காலம்?

புத சூரி ராகு சுக்
 குரு ராசி
 செவ் சந் சனி  கேது லக்
பதில் :
(கன்னி லக்னம் விருச்சிக ராசி 2ல் கேது, 3ல் சந் சனி, 4ல் செவ், 6ல் குரு, 7ல் புத, 8ல் சூரி ராகு, 9ல் சுக் 26-4-1986 மாலை 4.15 பெரம்பலூர்) ஜோதிடம் எப்போதும் பொய்ப்பதில்லை, ஜோதிடர்கள்தான் தவறுகிறார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. கெடுதலான காலம் வரும்போது பாக்கியங்கள் எதுவும் கிடைக்கக் கூடாது. அப்படி ஒரு பாக்கியம் கிடைக்கிறது என்றால் மிக முக்கிய ஒரு இழப்பு நடக்கப் போகிறது என்று அர்த்தம். கிரகங்களுக்கு உயிர், ஜடம் என இரண்டு வகை செயல்பாடுகள் இருக்கின்றன. சூரியனின் உயிர்ச்செயல் தந்தையையும், ஜடச்செயல் அரசுவேலையையும் குறிக்கும். உங்களுக்கு 2014 முதல் கேதுவின் தசை நடக்கிறது. கேது சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து சூரியன், குருவின் பார்வையில் கேது இருப்பதால் இவர்கள் மூவரின் பலன்களையும் செய்வார். உச்ச சூரியனின் பார்வையைப் பெற்றதால் சூரியனின் ஜடக் காரகத்துவமான அரசு வேலையை கேது கொடுத்தார். சிம்மம் ராசிக்குப் பத்தாமிடமாகி அதன் அதிபதி உச்சமாகி, அதையும் லக்னத்திற்கு பத்தாமிடத்தையும் குரு பார்த்ததால் உங்களுக்கு அரசு வேலை கிடைத்தது. அதேநேரத்தில் இப்போது கடுமையான ஏழரைச் சனி நடந்து கொண்டிருப்பதால் மிகப் பெரிய மனக்கஷ்டத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டும் என்பதால் எங்கே அடித்தால் உங்களுக்கு வலிக்குமோ அங்கே அடிக்கப்பட்டு உயிராக நினைத்த தகப்பனை இழந்தீர்கள். கேதுவுக்கு எட்டில் மறைந்த சுக்கிர புக்தியில், சுக்கிரன் தந்தை ஸ்தானாதிபதி என்பதால் தகப்பன் மரணம். இங்கே சூரியன் தனது ஜடச் செயலான அரசு வேலையைக் கொடுத்து உயிர்ச் செயலான தந்தையை எடுத்துக் கொண்டார். இதுதான் கிரகங்களின் விளையாட்டு. கேதுவிற்கு சூரிய, குரு, சுக்கிர சம்பந்தம் இருப்பதால் இவர்கள் மூவரின் செயல்களையும் தர வேண்டும் என்ற விதிப்படி, அவர் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் வரும் குரு புக்தியில் திருமணத்தைக் கொடுத்து மனைவியின் மூலம் சுக்கிரனின் செயலான தாம்பத்திய சுகத்தையும், அடுத்து குருவின் செயலான குழந்தை பாக்கியத்தையும் தருவார். இதுவே ஜோதிட விதி. தாயைக் குறிக்கும் நான்காமிடத்தில் பாபக் கிரகமான செவ்வாய் அமர்ந்து, நான்காம் அதிபதி ஆறில் மறைந்து, தாயார் காரகன் சந்திரன் நீசமாகி சனியுடனும் இணைந்ததால் உங்களுக்கு தாயின் அன்பு கிடைக்கவில்லை. இதுபோன்ற அமைப்பில் உங்களுக்கு தாயார் சிறு வயதில் இருந்தே இருக்கக் கூடாது. ஆனால் நீச சந்திரனை வலுவான சுக்கிரன் பார்ப்பதால் தாயார் இருக்கிறார். வரும் அக்டோபருக்குப் பிறகு சனி விலகுவதால் இனிமேல் அனைத்துப் பிரச்னைகளும் விலகி நன்றாக இருப்பீர்கள். அ. பழனிவேல், கரடிகுளம்.
கேள்வி :
24-12-2016 முதல் மன அழுத்தம், பயம், அமைதியின்மை, நிம்மதி இல்லாமல் எதையோ பறி கொடுத்ததைப் போல இருக்கிறேன். மனநிலை பாதிக்கப்பட்டவன் போல வாழ்கிறேன். இதற்கு என்ன காரணம்? மீண்டும் நிம்மதியாக வாழ்வதற்கும், மன அழுத்தம் பயம் போன்றவற்றில் இருந்து விடுபடவும் என்ன செய்ய வேண்டும்?
சுக் சூரி,பு கேது குரு
சந் செவ் ராசி  சனி
     ராகு லக்
பதில் :
(கன்னி லக்னம் கும்பராசி 2ல் ராகு 6ல் சந் செவ். 7ல் சுக், 8ல் சூரி புத கேது, 9ல் குரு, 11ல் சனி 14-4-1977 மாலை 5.30, நெல்லை) நீங்கள் குறிப்பிட்ட அந்தக் காலம் முதல் உங்களுக்கு எட்டில் மறைந்து கேதுவுடன் இணைந்த லக்னாதிபதி புதனின் தசை ஆரம்பித்திருக்கிறது. ஒரு மகா தசை துவங்கும் போது சில மாற்றங்கள் வாழ்விலும் எண்ணங்களிலும் ஏற்படும். எட்டாமிடம் என்பது எதிர்மறை பலன்களைத் தரக் கூடிய இடம் என்பதாலும், எட்டில் மறைந்துள்ள புதன் சனியின் பார்வையைப் பெற்றிருப்பதாலும் தசை ஆரம்பித்ததும் இனம்புரியாத கலக்கத்தை புதன் கொடுக்கிறார். ஆயினும் புதன், உச்ச சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், நவாம்சத்தில் உச்ச நிலை பெற்றிருப்பதாலும் ஏதோ ஒன்று தவறாக நடந்து விடுமோ என்ற பயம் இருக்குமே தவிர, கெடுபலன்கள் நடைபெற வாய்ப்பில்லை. லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். நன்றாக இருப்பீர்கள். வெ. ராஜ்பாண்டியன், வலசை.
கேள்வி :
ராகு,கேது தோஷம் என்றால் என்ன? அது எத்தனை ஆண்டுகள் தொடரும்? இந்த தோஷத்திற்கான பரிகாரங்களை எளிய முறையில் செய்வது எப்படி?
பதில் :
ஜோதிடத்தில் புரிந்து கொள்ள மிகவும் சிரமமான, மிக உயரிய ஒரு சூட்சும விஷயத்தை மூன்று வரிகளில் கேட்டு மூன்றே வரிகளில் விளக்கவும் கேட்கிறீர்கள். ஜோதிட சாஸ்திரப்படி இருள் கிரகங்கள் என்று சொல்லப்படும் ராகு, கேதுக்கள் ஒரு ஜாதகரின் மண வாழ்க்கையைக் குறிக்கும் இரண்டு, ஏழு, எட்டாம் இடங்களில் இருப்பது சர்ப்ப தோஷம், நாக தோஷம் அல்லது ராகு, கேது தோஷம் என்று சொல்லப்படுகிறது. திருமண காலம் வரை இந்த அமைப்பு ஒருவருக்கு தடைகளையும், தாமதங்களையும் ஏற்படுத்தும். எளிமையான பரிகாரங்கள் என்று இங்கே எதுவும் இல்லை. டாக்டரிடம் போய் “டாக்டர், எனக்கு காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் மாத்திரை சாப்பிடவும், ஊசி போடவும் எனக்கு பிடிக்காது. என் நோய் தீருவதற்கு வழி சொல்லுங்கள்.” என்பது போன்றது இது. ஒரு ஜோதிடர் வாய்க்கு வந்ததை எல்லாம் பரிகாரமாகச் சொல்ல முடியாது. அது பலிக்கவும் செய்யாது. ராகு,கேது தோஷத்திற்கென உள்ள முறையான பரிகாரங்களை ஏற்கனவே மாலைமலரிலும், பால ஜோதிடத்திலும் எழுதியிருக்கிறேன். தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பிரபாவதி, சென்னை-33.
கேள்வி :
என் மகன் பிறந்த போது அவன் திருவோண நட்சத்திரம், மகர ராசி என்று சொன்னார்கள். இப்போது அவிட்ட நட்சத்திரம், மகர ராசி என்று சொல்கிறார்கள். இதில் எது சரி என்றும் அவனது திருமணம் எப்போது நடக்கும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
பதில் :
சென்னைப் பகுதியில் பின்பற்றப்படும் திருக்கணித பஞ்சாங்கப்படி உங்கள் மகன் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி என்பதே சரி. தென்மாவட்டங்களில் இன்றும் தவறான கிரக நிலைகளைச் சொல்லும் வாக்கியப் பஞ்சாங்கம் பின்பற்றப் படுகிறது. அது மெதுவாக மாறியும் வருகிறது. திருவோண நட்சத்திர இறுதியான நான்காம் பாதத்தில் உங்கள் மகன் பிறந்திருப்பதால், வாக்கியப்படி உங்கள் மகனின் நட்சத்திரம் அவிட்டம் என்று வரலாம். அது தவறு. திருவோணம் என்பதே சரி. ஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்ந்திருப்பதால் இன்னும் ஒரு வருடம் தாமதமாக முப்பத்தி ஐந்து வயதில்தான் திருமணம் நடக்கும். ஜாதகம் யோகமாக இருப்பதால் ஏழரைச் சனி முடிந்ததும் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
மனைவி. குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள்?
கே. சத்தியன், திருவனந்தபுரம்.
கேள்வி :
அரபு நாட்டில் மிகப் பெரிய செல்வாக்கான ஒரு வேலையில், அரேபியர்களுக்கு நிகரான பதவியில் இருந்த நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்தையும் இழந்து அசிங்கப்பட்டு, கூனிக் குறுகி தாய்நாடு திரும்பி விட்டேன். 2015 ம் ஆண்டு என் உயிரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் என்னிடம் இருந்து பறித்து விட்டது. என் மனைவி கூட என்னைப் புரிந்து கொள்ளவில்லை. என் குழந்தைகளை இப்போது எங்கே வைத்திருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. என் குடும்பம் ஒன்று சேருமா? மனைவி என்னைப் புரிந்து கொள்வாளா? என் குடும்ப ஜாதகத்தை வைத்து என் மனைவியும், குழந்தைகளும் இப்போது இந்தியாவில் இருக்கிறார்களா? அல்லது வெளிநாட்டில் இருக்கிறார்களா என்று சொல்ல முடியுமா? மீண்டும் என்னுடைய அந்தஸ்தான நிலை கிடைக்குமா? வேலைக்கு முயற்சி செய்தும் இன்னும் ஒன்றும் சரியாக அமையவில்லை. எப்போது, எங்கே கிடைக்கும்?
பதில் :
ஒரு மனிதனுக்கு கோட்சாரத்தில் அஷ்டமச் சனி நடக்கும் போது, பிறந்த ஜாதகத்தில் ஆறு அல்லது எட்டுக்குடையவர்களின் தசையோ, புக்தியோ வருமாயின் அவனுடைய மனம் தவறான பாதையில் சென்று, ஒரு தப்பான செய்கையை செய்து அசிங்கப்படுவான். உங்களுக்கும் குழந்தைகளுக்கும் மேஷ ராசி, உங்கள் மனைவிக்குத் துலாம் ராசி என்ற நிலையில், ஒரே குடும்பத்தில் உள்ள மூவருக்கு அஷ்டமச் சனி ஆரம்பிக்கும் போது ஜோதிட நம்பிக்கை உள்ள நீங்கள் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஜாதகப்படி எட்டுக்குடைவன் நீச சுக்கிரனின் சம்பந்தப்பட்டு அஷ்டமாதிபதி தசை மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்திருப்பதால் எந்தப் பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தவறை நீங்கள் 2014 ம் ஆண்டு செய்திருப்பீர்கள். இந்தத் தவறு உங்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்திருக்கும்.     அல்லது உங்களுடைய இன்றைய நிலைக்கு ஒரு திருமணமான, குணம் சரியில்லாத ஒரு நீசப் பெண்ணே காரணம். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை உங்கள் மனைவி குழந்தைகளை நீங்கள் சந்திக்க வாய்ப்பில்லை. மனைவியின் ஜாதகப்படி அவரும் குழந்தைகளும் இப்போது இந்தியாவில் இல்லை. உங்களுக்கு வரும் டிசம்பர் மாதத்திற்கு மேல் கிழக்கு நாடு ஒன்றில் வேலை கிடைக்கும். அது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடாக இருக்கும். இனிமேல் வாழ்நாளில் உங்களுக்கு மேற்குத் திசை நாட்டிற்குப் போக வாய்ப்பில்லை. முந்தைய அந்தஸ்தான வேலை இப்போது கிடைக்காது. கிடைக்கும் வேலையில் போய்ச் சேருவீர்கள். மீண்டும் குடும்பம் ஒன்று சேருவது அடுத்த வருடம் இறுதி அல்லது 2019 ம் ஆண்டு ஆரம்பத்தில்தான். இன்னும் ஏழு வருடங்களில் அனைத்தும் சீராகி சகஜ நிலைக்கு வருவீர்கள்.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 147 (8.8.2017)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *