adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (25.7.17)

சி. எஸ். குமரன், கட்டிமாங்கோடு.

கேள்வி :

எனது மகள் பிறந்தவுடன் ஜோதிடர் எழுதி தந்த ஜாதக குறிப்பை இணைத்துள்ளேன். இந்த ஜாதகம் கம்ப்யூட்டரில் கணிக்கும் ஜாதகத்தில் இருந்து மிகவும் மாறுபடுகிறது. குறிப்பாக லக்னம் மாறிவிட்டது. தசா, புக்தி அமைப்புகளும் மாறுகின்றன. இதில் எது சரி என்பதை சொல்லி, மகளுக்கு எவ்வளவோ முயற்சித்தும் இன்னும் திருமணம் முடியவில்லை. எப்போது திருமணம் முடியும் என்ற விபரத்தையும் தருமாறு கேட்டு கொள்கிறேன்.

பதில்:
சந் செவ் குரு
 ரா ராசி
ல,பு சூ,சுக்
 சனி

(மகர லக்னம், மீன ராசி. 1-ல் சூரி, புத, சுக். 2-ல் ராகு. 3-ல் சந். 4-ல் செவ். 5-ல் குரு. 12-ல் சனி. 10.2.1989, காலை 6.40, நாகர்கோவில்)

பிறக்கும் போது எழுதித் தந்த ஜோதிடர் தவறான வாக்கிய பஞ்சாங்கத்தில் ஜாதகத்தை எழுதி இருக்கிறார். கம்ப்யூட்டரில் கணித்த திருக்கணித பஞ்சாங்கத்தை மட்டுமே பொருத்தம் பார்க்கவும், மற்ற பிற விஷேசங்களுக்கும் உபயோகிக்கவும். வாக்கிய பஞ்சாங்கம் பிழையானது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மகளுக்கு 2-ல் ராகு, 8-ல் கேது என்ற நிலையுடன் ராசிக்கு 2-ல் வலுப் பெற்ற செவ்வாய் அமர்ந்து ஏழாம் இடத்தை பார்ப்பதால் தாமதமாக 30 வயதில் திருமணம் ஆகும்.

ஆர். மணிகண்டன், திருப்பூர்.

கேள்வி :

இதுவரை வாழ்க்கையில் நான் சந்தித்தது எல்லாமே துரோகம், அவமானம், வேதனை மட்டும்தான். சொந்தபந்தம் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக வாழ்கிறேன். முதல் திருமணம் காதலால் நடந்து விவாகரத்தில் முடிந்து விட்டது. ஒன்றுமே இல்லாமல் தெருவில் நின்றாலும் சுய நம்பிக்கையுடன் வாழ்கிறேன். இந்த 4 வருடத்தில் நிறைய துரோகங்கள் நடந்து விட்டன. கடந்த 2 மாதங்களாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அதிகமாக இருக்கிறது. எதற்காக வாழ்கிறோம் என்றும், வாழவே தகுதி இல்லை என்றும் தோன்றுகிறது. வாராவாரம் செவ்வாய்கிழமை மாலைமலரில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கேள்வியும் அதற்கு தருகின்ற தன்னம்பிக்கையான பதிலும் என்னுடைய எண்ணத்தை மாற்றுகின்றன. போட்டோகிராபர் வேலை செய்து கொண்டிருக்கிறேன். பெரிய அளவில் செய்ய முடியுமா? எல்லோரையும் போல குடும்பம், குழந்தை என்று வாழ முடியுமா? இரண்டாவது திருமணம் உண்டா? ஒரு தந்தையைப் போல என் மனக்குறையைத் தீர்க்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

பதில்:
குரு கே
ராசி  சந்
சுக்
சூ,பு சனி ல செவ்

(விருச்சிக லக்னம், கடக ராசி. 1-ல் செவ். 2-ல் சூரி, புத, சனி. 3-ல் சுக். 5-ல் குரு, கேது. 6.1.1988, அதிகாலை 3.23, கோவில்பட்டி)

ஏழு வயதில் இருந்து விருச்சிக லக்னத்திற்கு வரக் கூடாத எட்டுக்குடைய வலுப் பெற்ற புதன் தசை 24 வயது வரை நடந்ததால் உங்களுக்கு இளம் வயதில் இருந்தே சோதனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தற்போது நடைபெறும் தசாநாதன் கேதுவும் புதனின் வீட்டில் இருப்பதால் அஷ்டமாதிபதி புதனை போலவே சாதகமற்ற பலன்களை தந்து கொண்டிருப்பார்.

எந்த ஒரு லக்னத்திற்கும் எட்டுக்குடையவனின் தசையோ, அஷ்டமாதிபதி வீட்டில் அமர்ந்த ராகு-கேதுக்களின் தசையோ நடக்கும் போது கெடுபலன்கள் மட்டுமே இருக்கும். கேது தசை முடியும் ஆகஸ்ட் 2019 வரை உங்களுக்கு தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் ஏமாற்றங்கள் மட்டுமே இருக்கும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொழில் முயற்சிகள் எதுவும் கை கொடுக்காது.

அடுத்து நடக்க இருக்கும் தசாநாதன், சுக்கிரன் மூன்றாம் வீட்டில் நட்பு வலுவுடன் லக்னாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், பவுர்ணமியை விட்டு விலகி இரண்டு நாட்களே ஆன ஒளி பொருந்திய சந்திரனின் பார்வையில் இருப்பதாலும் யோகத்தைச் செய்யும். 31 வயதிற்கு பிறகு வாழ்க்கையில் எந்த வித கஷ்டமும் இன்றி மிகவும் நன்றாக இருப்பீர்கள். கூட்டுத்தொழில் செய்ய வேண்டாம்.

சுக்கிரதசையில் 32 வயதில் இரண்டாவது திருமணம் நடக்கும். முதல் திருமண வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறை தற்போது உணர்ந்திருப்பீர்கள் என்பதால் இரண்டாவது வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். ஆண்-பெண் என இரண்டு குழந்தைகளுடன் எதிர்காலத்தில் நன்றாகவே இருப்பீர்கள். கவலை வேண்டாம்.

ஜி. முத்துக்குமார், திருநின்றவூர்.

கேள்வி :

மகன் டிப்ளமோ ஆட்டோமொபைல் படித்து விட்டு தனியார் கார் கம்பெனியில் மெக்கானிக் வேலை செய்து வருகிறான். மிகவும் குறைந்த சம்பளம்தான் கிடைக்கிறது. வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறான். தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு உண்டா? அல்லது உள்நாட்டில் தான் வேலையா? ஜாதகத்தில் தசா, புக்தி நன்றாக உள்ளதா? சுக்கிரன் நட்புக் கிரகத்தின் பார்வையில் இருக்கிறாரா? அல்லது பகைக் கிரகத்தின் பார்வையில் உள்ளதா? எந்த வயதில் முன்னேற்றம் ஏற்படும்? இது ராகு-கேதுவால் பிரச்சினை உள்ள ஜாதகமா?

பதில்:
சுக் ல,சூ பு,கே
 சனி ராசி  சந் செவ்
ரா குரு

(ரிஷப லக்னம், கடக ராசி. 1-ல் சூரி, புத, கேது. 3-ல் சந், செவ். 5-ல் குரு. 7-ல் ராகு. 10-ல் சனி. 11-ல் சுக். 27.5.1993, காலை 6.05, சென்னை)

மகனுக்கு ரிஷப லக்னமாகி, பத்தாமிடத்தில் சனிபகவான் இருப்பதால் நுணுக்கமான மெக்கானிக் போன்ற தொழில் பொருத்தமானது. தற்போது உச்சமான லக்னாதிபதி சுக்கிரனின் தசை நடப்பதால் சுயபுக்தி முடிந்ததும் 2017 ஜூலை மாதம் முதல் வேலை அமைப்புகளில் நிரந்தர நிலை ஏற்படும்.

ஒருவர் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்றால் ஜாதகத்தில் எட்டு, பனிரெண்டாம் இடங்கள் சுபத்துவமாக இருக்க வேண்டும் என்பது விதி. மகனின் ஜாதகத்தில் பனிரெண்டாம் அதிபதி ராசியில் நீசமாகி அம்சத்தில் உச்சம் பெற்ற நிலையில், சந்திரனுடன் இணைந்து சுபத்துவமாகி இருப்பதும் எட்டாம் அதிபதியான குருபகவான், உச்ச சுக்கிரனின் பார்வையை பெற்று சுபத்துவமாகி இருப்பதும் நடக்கும் சுக்கிரதசையில் மகன் வெளிநாட்டு வேலைக்குச் செல்வார் என்பதைக் காட்டுகிறது.

அதேநேரத்தில் ஒரு சுபகிரகம் உச்ச வர்க்கோத்தமம் பெறக்கூடாது. உங்கள் மகனின் லக்னாதிபதி சுக்கிரன் ரேவதி 4-ம் பாதத்தில் அமர்ந்து உச்ச வர்க்கோத்தமம் பெற்றுள்ளது அளவுக்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு என்ற நிலை என்பதால் சுக்கிர தசை சராசரி நன்மைகளை மட்டுமே செய்யும்.

ஜோதிடத்தின் வெகு சூட்சுமமான ஒரு கேள்வியை மிகவும் எளிமையாக கேட்டிருக்கிறீர்கள். சுக்கிரன் நட்பு கிரகத்தின் பார்வையில் இருக்கிறாரா? பகை கிரகத்தின் பார்வையில் இருக்கிறாரா? என்பது ஜோதிடத்தில் தலை சுற்ற வைக்கும் ஒரு கேள்வி. நான் ஏற்கனவே குருவும்,, சுக்கிரனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது ஜாதகத்தை பலவீனமாகும் என்பதை எழுதி இருக்கிறேன்.

இங்கே உங்கள் மகன் விஷயத்தில் உச்ச சுக்கிரனை அவரது ஜென்ம விரோதியான பகைகிரகம் குரு அஷ்டமாதிபத்தியம் பெற்ற நிலையில் பார்த்துக் கெடுக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் அதேநேரத்தில் இயற்கை சுபகிரகமான குருபகவான் லக்னாதிபதியையும், லக்னத்தையும் பார்ப்பதால் கடைசிவரை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இந்த மூன்றுக்கும் பஞ்சம் வராது.

ஆனால் சுக்கிரனின் தனித்தன்மையை, நன்மை தரும் வலிமையை குருபகவான் கெடுப்பார். இந்த அமைப்பால் உங்கள் மகனுக்கு வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்கின்ற ஆர்வம் இருக்கும். குருவின் பார்வை லக்னத்திற்கும், லக்னாதிபதிக்கும் இருப்பதால் வருகின்ற எண்ணம் அது. சுக்கிர தசை சந்திர புக்தியில் மகன் வெளிநாடு செல்வார். ராகு, கேதுவால் பிரச்னை எதுவும் இல்லை.

சுமங்கலியாகப் போவேனா?

ஆர். பிரேமா, சென்னை.

கேள்வி :

இத்துடன் 77 வயதாகும் என் கணவரின் ஜாதகத்தையும் என் ஜாதகத்தையும் அனுப்பியிருக்கிறேன், இவரது யோக பலம், தேக ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை ஆயுள் பலம் பற்றியும், இவருக்கு கிரக மாலிகா யோகம் இருக்கிறதா என்பதைப் பற்றியும் சொல்லவும். என் ஜாதகப்படி உடல் ஆரோக்கியம் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி ஏதும் காண்பிக்குமா? சுமங்கலியாகப் போவேனா என்பது பற்றியும் குறிப்பிடவும்?

பதில்:

வயதான கணவரை தனியே இங்கே தவிக்க விட்டு விட்டு சுமங்கலியாய் போவதற்கு அப்படி என்ன சுயநலம் அம்மா உங்களுக்கு?

ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு வி,ஐ.பி. குடும்பத் தலைவி தன்னுடைய ஜாதகத்தை காட்டி “அய்யா.. எனக்கு முன் இவர் போவாரா என்று பாருங்கள். நான் சுமங்கலியாக போக விரும்பவில்லை. இது நடக்குமா என்று சொல்லுங்கள்.” என்று கேட்டார்கள்.

“ஏனம்மா.. இப்படி ஒரு வித்தியாசமான எண்ணம்?” என்று கேட்டதற்கு, “பதினாறு வயதில் இவரைக் கல்யாணம் செய்து கொண்டு இந்த வீட்டிற்கு வந்தேன். இவருக்கு கோபப்படுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ஒழுங்காக வேளாவேளைக்கு சாப்பிடக் கூடத் தெரியாது. தட்டில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் சாப்பிட்டு எழுந்திருப்பவர் அவர்.

“இப்போது கூட என்ன மாத்திரை எதற்காக சாப்பிடுகிறோம்? எப்போது சாப்பிட வேண்டும் என்று ஒரு துளியும் இவருக்குத் தெரியாது. நான் கொண்டு போய் கையில் கொடுக்க வேண்டும். தண்ணீரை நீட்ட வேண்டும். சாப்பிட்டு விட்டு அப்படியே வேலையில் முழுகி விடுவார். என்னதான் மகன், மகள், பேரன், பேத்திகள் இருந்தாலும் நான் பார்ப்பது போல ஆகுமா? எனக்கு அவர் மட்டும்தான். ஆனால் அவர்களுக்கு வேறு உறவுகள் இருக்கிறார்கள்.”

“வாழ்நாள் முழுவதும் சண்டை போட்டுக் கொண்டுதான் இதுவரை இருந்திருக்கிறோம். ஆனால் ஒரு வினாடி நான் இல்லை என்றாலோ, கூப்பிட்ட ஒரு குரலுக்கு நான் வராவிட்டாலோ, இன்னொரு முறை கூப்பிட நேர்ந்தாலோ, இவர் கண்கள் அலைவதும், மனம் தவிப்பதும் எனக்கு மட்டும்தான் தெரியும். நான் இல்லையன்றால் துடித்துப் போய் விடுவார்.”

“இவரைத் தனியே விட்டு விட்டு நான் மட்டும் முன்னே போய் விடக்கூடாது. யாரும் இவரைக் கவனிக்க மாட்டார்கள். கடைசிவரை நான் மட்டும் தான் இவரைக் கவனிக்க வேண்டும். இவரைக் கொண்டு போய் வைத்த பிறகுதான் என் கட்டை சாய வேண்டும். இந்த அமைப்பு எனக்கு சித்திக்குமா பார்த்துச் சொல்லுங்கள்.” என்றார்.

உண்மையைச் சொன்னால் பெண்மையின் உன்னதத்தை அப்போது நேரிடையாக உணர்ந்தேன். என் முன்னே பேசியது ஒரு பெண் அல்ல. உலகிலேயே மிகவும் உயர்வான நமது கலாசாரத்தை தன் அன்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கட்டி ஆண்டு கொண்டிருக்கும் ஒரு மகா சக்திதான் என் முன்னே பேசிக் கொண்டிருந்தது.

இறுதியில் அவர் விருப்பப்படியே நடந்தது. இன்று கணவரில்லாமல் அவர் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த உன்னதப் பெண்மணி.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும் எட்டுக்கதிபதியும் வலுத்து லக்னத்தை குரு பார்த்தால் அவர் தீர்க்காயுள் எனப்படும் எண்பது வயது தாண்டி வாழ்வார். இந்த அமைப்பு உங்கள் கணவருக்கு இருக்கிறது. எழுபது வயது தாண்டி விட்டாலே தேக ஆரோக்கியம் பற்றிச் சொல்வதற்கு ஜோதிடத்தில் என்ன இருக்கிறது? இந்த வயதில் வருவது வந்துதானே தீரும்?

இரண்டாம் வீட்டிலிருந்து எட்டாம் வீடு வரை கிரகங்கள் ஒரு மாலை போல வரிசையாக இடைவெளியின்றி இருப்பது கிரகமாலிகா யோகம் தான். உங்கள் ஜாதகப்படி ஆறாமிடத்தில் ஒரு பாபக் கிரகம் இருப்பதால் தீராத வியாதியோ, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதியோ வருவதற்கு வாய்ப்பில்லை. சுமங்கலியாகப் போக மாட்டீர்கள்.

3 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (25.7.17)

  1. மிக நல்ல விளக்கம் குருஜி மிக்க நன்றி ஐயா

  2. குருஜி அவர்களுக்கு உங்களுடைய கேள்வி பதில்கள் மிக அருமை கடிதம் எழுதுபவர்களின் போன் நம்பரையும் எழுதிஅனுப்பினால் அவர்களுக்கு SMS மூலமாக கடிதம் கிடைக்கப்பெற்றதையும் பதில்கள் எந்த வாரம் அனுப்புவீர்கள் என்பதையும் தெரியப்படுத்தினால் வாசகர் களுக்கு அது பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கின்றேன். என் வேண்டு கோளுக்கு பதில் அனுப்புவீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி

  3. வணக்கம் குருஜி, தெளிவான விளக்கம், பயனுடைய பதில்கள் .ஜோதிடர்களுக்கு தேவையான உதாரணங்கள், அனைத்தும் அருமை. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *