adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 94 (12.7.2016)

திருமலை நம்பி, திருவல்லிக்கேணி.

கேள்வி :

கடவுள்பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்த நான் தினமும் கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பத்துவயதிற்கு மேல் உடல்நலம் பாதிக்கப்பட்டு பத்தாம்வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை ஏழு வருடம் சொந்தத் தொழில் செய்து நஷ்டம் ஏற்பட்டு, தொழிலைத் தொடரமுடியாமல் சென்னை வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகியும் நிரந்தரமாக வேலை அமையவில்லை. பெண்ணும் அமையவில்லை ஒரு வருடமாக வேலை இல்லாமல் மனம் நம்பிக்கை இழந்து விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டது. மற்றவர் போல நல்லவேலை, வாழ்க்கை அமையுமா அல்லது மற்றவர்க்கு உதவியாக எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வது.? தங்கள் பதிலை அருள்வாக்காக நினைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்...

சூ,சு குரு,கே பு
ராசி      சந்,சனி செவ்
பதில் :

(விருச்சிக லக்னம் கடகராசி ஆறில் சூரி சுக் குரு கேது ஏழில் புத ஒன்பதில் சனி செவ் 05.05.1976 7.35 இரவு திருப்பத்தூர் வ.ஆ )

லக்னாதிபதி நீசமாகி முறையான நீசபங்கமாகும் ஒருவருக்கு வாழ்க்கையின் முதல்பகுதி கடுமையான சோதனைகள் உள்ளதாகவும் பிற்பகுதி நிம்மதியானதாகவும் இருக்கும். உங்களுக்கு கடந்த வருடம் வரை விருச்சிக லக்னத்திற்கு வரக்கூடாத புதன்தசை பதினேழு வருடம் நடந்ததால் பாதிப்பு அதிகமாகி விட்டது. ராசியில் சனி செவ்வாய் கூடி ஆறில் சுக்கிரனும் குருவும் இணைந்ததாலும் திருமணம் ஆகவில்லை.

அடுத்தவருடம் ஆரம்பிக்கும் கேதுதசை ராகுபுக்தியில் ராகு சுக்கிரனின் வீட்டில் சுக்கிரனின் பார்வையைப் பெற்று இருப்பதால் திருமணமாகி குருபுக்தியில் நீங்கள் தந்தையாக வேண்டும். லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலை ஸ்ரீ காளஹஸ்தியில் தங்கி ருத்ராபிஷேகம் செய்யவும். ஒரு செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடவும். இன்னொரு ஜென்மநட்சத்திரம் அன்று கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவிலில் வழிபட்டு இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருக்கவும். செவ்வாய்தோறும் பூந்தமல்லி வைத்தியநாதசுவாமி திருக்கோவிலில் வழிபட்டு இருபத்திநான்கு நிமிடங்கள் உள்ளே இருங்கள். அடுத்தவருடம் முதல் ஆனந்தம் ஆரம்பமாகும்.

ப.சரவணன், பல்லடம்.

கேள்வி :

ஜோதிட உலகின் முடிசூடா சக்கரவர்த்திக்கு வணக்கங்கள். 07.04.2016 ல் எனது குடும்ப ஜாதகநகலும் கடிதமும், தங்களை நேரில் சந்தித்து கொடுப்பதற்காக சென்னை மாலைமலர் அலுவலகம் வந்திருந்தேன். தங்களை சந்திக்க இயலாது தபால்மூலம் அனுப்பும்படி சொல்லிவிட்டார்கள். ஐந்து வருடமாக கம்பியூட்டர் பிரவுசிங் தொழில் செய்கிறேன். பூர்வீகச்சொத்து இல்லை. வரும் வருமானத்தில் சேமிக்கவும் முடியவில்லை. இந்த நாற்பதுவயதில் எதிர்காலத்தை நினைத்து மனதில் இனம் புரியாத பயம் வந்துவிட்டது. மனைவி இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றி நல்ல நிலைக்குக் கொண்டு வரமுடியுமா? இப்போது செய்யும் தொழிலை விடாது செய்யலாமா? பையன்களின் எதிர்காலம் எப்படி? தாய் தந்தையரை கடைசிவரை காப்பாற்றுவேனா? கடன் நோய் பகை இல்லாமல் இருப்பேனா? அடுத்த குருதசை உயர்வு தருமா? எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்?

குரு
ராசி   செவ்
சந்  சனி
 பு ல,சூ சுக் ரா
பதில் :

(விருச்சிகலக்னம் மகரராசி லக்னத்தில் சூரி சுக் இரண்டில் புத, எட்டில் குரு, ஒன்பதில் செவ், பத்தில் சனி, பதினொன்றில் ராகு 13.12.1977 6.30 காலை, பட்டுக்கோட்டை)

முந்தைய கேள்விக்குச் சொன்ன பதில் உங்களுக்கும் பொருந்தும். லக்னாதிபதி நீசமாகி முறையான நீசபங்கமானவருக்கு பிற்பகுதி வாழ்க்கைதான் நிறைவாக இருக்கும். செவ்வாய் வளர்பிறைச்சந்திரனின் நேர்பார்வையில் இருப்பது முறையான நீசபங்கம், ஆனால் வக்ரமானது பங்கம். லக்னாதிபதியின் வக்ரவலுவால் பாக்கியாதிபதி சாரம் வாங்கிய பதினொன்றாமிட கன்யாராகு யோக அமைப்பிருந்தும் பெரிய யோகங்களைத் தர வாய்ப்பில்லை.

ஆனால் அடுத்து நடக்க இருக்கும் குருதசை நூதனக்கருவியான கம்ப்யூட்டரைக் குறிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதாலும், புதனுடன் பரிவர்த்தனையாகி இரண்டாம் வீட்டில் ஆட்சிபெற்ற நிலையில் உள்ளதாலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்று பாவகத்தில் ஏழில் இருப்பதாலும் நல்ல யோகத்தைச் செய்யும். குரு தன புத்திரகாரகன் என்பதால் இந்த தசையில் தனம் மூலம் சொந்த வீடு வாகனம் தொழில் உயர்வுகளைத் தருவார். குழந்தைகளையும் வசதியாக வளர்க்க முடியும். மனைவிக்கும் அடுத்தவருடம் முதல் குருவின் பார்வை பெற்ற சூரிய சந்திரர்கள் தசை ஆரம்பிப்பது உங்களுக்கு நல்லநேரம் ஆரம்பிப்பதை உறுதி செய்கிறது.

குழந்தைகள் இருவருக்கும் உங்களைப் போல அல்லாமல் லக்னாதிபதி ஆட்சி பெற்ற யோகவலுவான ஜாதகம் பெரியவனுக்கு மீனலக்னமாகி குரு பத்தில் ஆட்சியாக இருக்கிறார். சின்னவனுக்கு கடகலக்னம் சந்திரன் லக்னத்தில் ஆட்சி. குழந்தைகள் பிறந்ததிலிருந்தே நீங்கள் பெரிதாக ஒன்றும் கஷ்டப்பட்டிருக்க மாட்டீர்கள். இருவரும் வளர வளர யோகமும் வளரும். யோகஜாதகம் என்பதால் இருவரும் உங்களைக் கஷ்டப்படுத்தாமலேயே நல்ல நிலைமைக்கு வருவார்கள்.

க. சேதுபதிராமு, ராமநாதபுரம்.

கேள்வி :

மகனுக்கு பெண் பார்த்து நாங்கள் ஓய்ந்து போய் விட்டோம். மனம் கிட்டத்தட்ட சோர்ந்து போய்விட்டது. இவனுக்கு கல்யாணம் நடக்குமா? நடக்காதா?

பதில் :

மீனராசி இளையவர்களின் நிலைமை இப்போது இப்படித்தான் இருக்கிறது. மகனுக்கு வரும் ஆவணி மாதம் நிச்சயமாகி கார்த்திகையில் திருமணம் நடக்கும். தாம்பத்திய சுக அமைப்பே ஜூலை முதல்தான் ஆரம்பிக்கிறது. 2018 மே மாதம் மகன் தந்தையாவார். உங்களுக்கு முதலில் பேரன் பிறப்பான். வாழ்த்துக்கள்.

சு. பொற்செல்வி, பாளையங்கோட்டை.

கேள்வி :

எனது ஜாதகப்படி சூரியன் நீசமானதால் அரசுவேலை கிடைக்காது என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் நன்றாகப் படிப்பேன். வகுப்பில் எப்பொழுதும் நான்தான் முதல் ரேங்க் எடுத்திருக்கிறேன். அரசு அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் லட்சியம் நான் அரசுத் தேர்வு எழுதலாமா? வெற்றி பெறுவேனா?

பதில் :

மகரலக்னம் மகர ராசியாகி ராசிக்கும் லக்னத்திற்கும் பத்தில் சூரியன் திக்பலமாக அமர்ந்து, வர்க்கோத்தமும் அடைந்து நீசபங்கம் அடைந்ததால் நீ ஒரு எதிர்கால அரசு அதிகாரி. வலுப்பெற்ற குருபகவானும் சிம்மத்தைப் பார்த்து சிம்மராசி சுபத்துவமாக இருப்பதால் சாதாரண அதிகாரி கூட இல்லை. துறைச் செயலாளர் அளவில் மிக உயர்ந்த பொறுப்பில் சர்வ நிச்சயமாக இருப்பாய். ஐஏஎஸ், குரூப் ஒன் போன்ற தேர்வுகளுக்கு உடனே தயாராகு. முதல்முறையே ஜெயித்துக் காட்டுவாய்.

தங்கையின் கஷ்டத்திற்கு என்ன செய்யலாம்?

ஒரு வாசகி, ஈரோடு.

கேள்வி :

ஆறுமாதமாக குழப்பமான மனநிலையில் இருக்கும் நான் என் மனதைத் தெளியவைக்கும் தீர்க்கமான பதிலை குருஜி அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தங்கையின் கணவர் இரண்டு வருடத்திற்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அதுமுதல் அவளை என் கடையில் வேலைக்கு வைத்து சம்பளமும் கொடுத்து வந்தேன். ஜாதகம் பார்த்தபொழுது உனக்கும் உன் தங்கைக்கும் ஒத்து வராது. தொழிலில் நஷ்டம் வரும், இருவருக்கும் சண்டை வரும், அவளை வேறு இடத்திற்கு வேலைக்கு அனுப்புமாறு சொன்னார்கள். மேலும் என்கடையின் வாடகையை இரண்டு மடங்காக உயர்த்தி விட்டார்கள். என் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளும் அதிகரித்த நிலையில் தங்கையை வேறு இடத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவதாகச் சொன்னேன். அவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். இன்று வரை என்னுடன் பேசவில்லை. நானே வலியச்சென்று பேசினால் நீயே துரத்தி விட்டுவிட்டாய், எதற்குப் பேசுகிறாய்? என்று கேட்கிறாள். ஏதாவது சொன்னாலும் எனக்குத் தெரியும் நீ உன் வேலையைப் பார் என்று சொல்கிறாள். எல்லோரிடமும் சண்டை போடுகிறாள். இதற்கு மாற்றுவழி உண்டா என்று எங்கள் ஜாதகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள். அவள் குழந்தைகளுக்கு உதவி செய்துவிட்டு அவளை அவள் விருப்பம் போலவே விட்டுவிடலாமா குருஜி?

 பதில் :

ஜாதகம் பார்ப்பது அப்புறம் இருக்கட்டும். உறவுகள் என்பதே கஷ்டகாலத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்குத்தானே அம்மா? இருவரும் கஷ்டப்பட்டாலும் “இந்தா நான் சாப்பிடும் ரசச்சோற்றில் நீயும் பாதி சாப்பிடு” என்று சொல்லலாமே?

உங்கள் ஊர் ஜோதிடர்கள் தந்தைக்கும் மகனுக்கும் ஏழரைச்சனி நடந்தாலே உடனே மகனை ஆஸ்டலில் சேர்த்து விடு என்றுதான் பலன் சொல்கிறார்கள். இப்படியெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. உண்மையில் அஷ்டம, ஏழரைச்சனி நடக்கும்போதுதான் ஒரு குழந்தைக்கு பெற்றோரின் அரவணைப்பும் அருகாமையும் தேவைப்படும். பெற்றோரைப் பிரியும்போதுதான் வயதுக்கேற்ற தவறுகள் நடக்கும். சனி அவரது நோக்கத்தை நிறைவேற்றுவார். உறவுகள் என்பது எந்த சூழ்நிலையிலும் சேர்ந்திருக்கத் தானே தவிர பிரிந்து போக அல்ல.

மூத்தபிறப்பாய்ப் பிறப்பது சுகமான சுமைகளைத் தூக்கிச் சுமப்பதற்காகத்தான்   அம்மா.. சுகதுக்கங்கள் இருந்தாலும் சுமப்பவருக்குத்தான் அந்த சுகமும் பெருமையும் தெரியும். உனக்கும், தங்கைக்கும் விருச்சிகராசியாகி ஏழரைச்சனி நடப்பதால் உன் ஜாதகப்படி நீ பொருளாதார முதலை இழக்கிறாய். அவள் ஜாதகப்படி எல்லாவற்றிற்கும் முதலானவனை அவள் இழந்து விட்டாள்.

உனக்கு அனுஷம் நட்சத்திரமானதால் இனி படிப்படியாக துன்பங்கள் குறைய ஆரம்பிக்கும். அவள் கேட்டை நட்சத்திரம் என்பதால் அடுத்தவருடம் முதல் கஷ்டங்கள் குறையும். இருவருமே நவம்பர் 2017 முதல் அடுத்தவர் கையை எதிர்பார்க்கத் தேவையின்றி சொந்த உழைப்பில் நன்றாக இருப்பீர்கள்.

நடுத்தரவயதில் இருக்கும் அனைத்து கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கும் இப்போது ஏதாவது ஒருவகையில் மனஅழுத்தம் இருக்கத்தான் செய்யும். தங்கை உன்னை உதாசீனப்படுத்தினாலும் வருத்தப்படாதே. இதுபோன்ற திக்கற்ற சூழ்நிலையில் உன்னைவிட்டால் அவளுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நிறையத் தங்கைகளுக்கு அக்காதானே அம்மாவாக இருக்கிறாள்? முப்பத்திமூன்று வயதில் கணவனை இழந்த அவளுக்கு இன்று நீதான் அம்மாவாக இருக்க முடியும். தவறான ஆலோசனையால் பிழை செய்துவிட்டேன் என்று தங்கையை சமாதானப் படுத்தி அருகில் வைத்துக்கொள். 2018 முதல் இருவருமே நன்றாக இருப்பீர்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 94 (12.7.2016)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *