adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 73 (2.2.2016)

ச. வெங்கடகிருஷ்ணன், பாலக்கரை, திருச்சி.

கேள்வி :

பதிலுக்கு காத்திருந்து ஏமாந்து கொண்டிருக்கிறேன். பிறந்தது முதல் தோல்விகள் அவமானங்கள்தான் மிச்சம். பிறந்தபோது செவ்வாய் தசை, பிறகு ராகு, குருதசை என பாதகமான தசைகளால் நொந்துவிட்டேன். சனிதசையில் இருந்து நன்றாக இருப்பேன் என ஜோதிடர்கள் சொன்னார்கள். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு சொந்த ஊரில் கடன்காரனாகி ஊரை விட்டு வெளியேறி இன்றுவரை வேதனைதான் மிஞ்சி இருக்கிறது. 43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை. படிப்பிற்கேற்ற வேலை கிடைக்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?

செவ் சந் சனி, கேது
லக் ராசி  சூ, புத
குரு சுக்
செவ்
பதில் :

(கும்பலக்னம், ரிஷபராசி. இரண்டில் செவ். ஐந்தில் சனி, கேது. ஆறில் சூரி, புத. ஏழில் சுக். பனிரெண்டில் குரு)

கொடுக்கப்பட்டுள்ள பிறந்தநாள் நேர விவரப்படி மீனலக்னம் என்று தவறாக கணிக்கப்பட்ட ஜாதகம். கும்பலக்னம் என்பதே சரி. மீனலக்னமாக இருந்திருந்தால் லக்னாதிபதி குரு நீசவக்கிரம் பெற்றதால் ஜாதகம் யோகமாகி தற்போது திருமணமாகி குழந்தைகளுடன் இருந்திருப்பீர்கள்.

கும்பலக்னம் என்பதால் லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். ராசிக்கு இரண்டில் சனி. ஏழுக்குடைய சூரியன் ஆறில் மறைவு. ஏழாமிடத்தில் களத்திர தோஷத்துடன் சுக்கிரன் அமர்ந்து ராசிக்கு எட்டில் ராகு என இதுவரை திருமணம் ஆகவில்லை. அதேநேரத்தில் நான் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல திருமணமாவது புத்திரபாக்கியத்திற்காக என்பதால் கடுமையான புத்திரதோஷம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் என்பதன்படி உங்களுக்கு புத்திரஸ்தானாதிபதி புதன் ஆறில் மறைந்து காரகன் குருவும் பனிரெண்டில் மறைந்து நீசமாகி ஐந்தில் சனி அமர்ந்ததாலும் திருமணபாக்கியம் கிடைக்கவில்லை.

மீனலக்னம் என்றால் குருபகவான் லக்னாதிபதியாகி நீச வக்கிரம் பெற்றதால் குரு தசையிலேயே திருமணம், வேலை அமைப்புகளை கொடுத்திருப்பார். புதன் ஆறில் மறைந்ததால் நடப்பு புதன்புக்தியும் நன்மைகளைச் செய்வதற்கில்லை. கேதுபுக்தி முதல் மாற்றங்கள் ஆரம்பித்து வாழ்வின் பிற்பகுதியில் நன்றாக பொருளாதார வளத்துடன் இருப்பீர்கள். திருமணம் ஆவதற்கு ராகு மற்றும் சுக்கிரனுக்கான முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள்.

இரா. மணி, உத்தமபாளையம்.

கேள்வி :

மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவனுக்கு வெகுகாலமாக திருமணத்திற்கு பெண் அமையவில்லை. பல பரிகாரங்கள் செய்தும் பயன் இல்லை. தயவுசெய்து எப்போது நடக்கும் என்று அவசியம் பதில் அளிக்கவும்.

பதில் :

28 வயது மகனுக்கு வெகுகாலமாக பெண் அமையவில்லை என்றால் உங்களுக்கு முன் கேள்வியைக் கேட்டிருக்கும் 43 வயது வெங்கடகிருஷ்ணனுக்கு எத்தனை காலமாக பெண் அமையவில்லை என்று சொல்லலாம்?

உங்கள் மகனுக்கு சிம்மலக்னம், துலாம்ராசியாகி. ராசிக்கு இரண்டில் சனி. ராசிக்கு ஏழில் செவ்வாய் என்ற அமைப்பு உண்டாகி லக்னத்திற்கு இரண்டு, எட்டில் ராகு-கேதுக்கள் அமர்ந்து சர்ப்பதோஷமும், புத்திரஸ்தானாதிபதி குருபகவான் ராகுவுடன் இணைந்து தற்போது சனிதசையும், ஏழரைச்சனியும் நடப்பதால் தாமதமாகத்தான் திருமணம் நடக்கும்.

2018 ஆவணிக்கு மேல்தான் உங்கள் மகனுக்கு தாம்பத்திய சுக அமைப்பே வருகிறது என்பதால் 2019 தை மாதம் திருமணம் சனிதசை சுக்கிரபுக்தியில் திருமணம் நடக்கும். அதற்கு முன் குடும்பாதிபதி புதன் புக்தியில் திருமணம் நடந்தால் குழப்பங்கள் இருக்கும்.

அஞ்சாநெஞ்சனின் அடிமை, மதுரை.

கேள்வி :

வெட்டு ஒன்று துண்டுரெண்டாகச் சொல்லுங்கள் குருஜி... அப்பாவைப் போல அரசியலில் செல்வாக்கோடு இருப்பேனா? எம்பி எம்எல்ஏ உண்டா?

பதில் :

மகரலக்னமாகி சனி சுபத்துவமின்றி ஏழில் அமர்ந்து லக்னத்தைப் பார்த்ததால் நீங்கள் தற்போது குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பீர்கள். நாற்பத்தி ஐந்து  வயதுவரை இந்தப்பழக்கம் உங்கள் அரசியல் முன்னேற்றத்திற்குத் தடையாகி அடுத்த புதன்தசை ஆரம்பித்ததும் அரசியல் முன்னேற்றம் பெறுவீர்கள். புதன் உச்சமாகி சூரியசந்திரர்கள் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருப்பதால்  வடக்கைக் குறிக்கும் புதனின் தசையில் எம் பி ஆவீர்கள்.

பி. அமுதா, கும்பகோணம்.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது குடும்பமே தங்களின் ரசிகர்கள். நான்கு வயதுக் குழந்தை உள்ள எனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கலாமா? வயதான எங்களுக்குப் பிறகு மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது. இரண்டாவது திருமணத்தால் மகள் குழந்தைக்கு பாதிப்பு இருக்குமா? குழந்தையால் அவளுக்கு முன்னேற்றம் கிடைக்குமா? 33 வயதாகும் எனது மகனுக்கும் எப்போது திருமணம் நடக்கும்?

பதில் :

மகளுக்கு திருக்கணிதப்படி கன்னிராசி என்பதால் கடந்த காலங்களில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்திருக்கும். மீன லக்னமாகி இரண்டாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருப்பதால் பிரச்சினைகளுக்கு மகளும் ஒரு காரணமாக இருந்திருப்பார்.

லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், ராசியில் சனி, ராகு இருப்பது இரண்டாம் திருமண அமைப்பு என்பதால் நடக்கும் ராகுதசையில் சனியுடன் இணைந்த சந்திர புக்தியில் இரண்டாவது திருமணம் அமையும். அந்த வாழ்க்கை நன்றாகவும் இருக்கும். வரப்போகும் குருதசை யோகதசை என்பதால் மகளைப் பற்றிக் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. குழந்தையைப் பற்றி சொல்வதற்கு குழந்தையின் ஜாதகத்தைத்தான் பார்க்க வேண்டும். மகனுக்கும் கடுமையான தாரதோஷ அமைப்பு என்பதால் வரும் நவம்பருக்கு பிறகு 2017 முற்பகுதியில் திருமணம் நடக்கும்.

எஸ். கந்தசாமி, வேடப்பட்டி.

கேள்வி :

மகனுக்கு திருமணமாகி நான்கு மாதங்களில் பிரிந்து சென்று வழக்கும் பதிவு பண்ணிவிட்டார்கள். மகன்-மருமகள் ஜாதகம் அனுப்பி இருக்கிறேன். என் பையனுக்கு இரண்டாவது திருமணம் வாய்ப்பு உள்ளதா? எப்போது?

பதில் :

மகனுக்கு தனுசுலக்னம், மகரராசியாகி ராசிக்கு ஏழாமிடத்தை சனி, செவ்வாயும் லக்னத்திற்கு ஏழாமிடத்தை செவ்வாயும் பார்த்து எழுக்குடையவன் பனிரெண்டில் மறைந்த ஜாதகம். மருமகளுக்கு லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி, ராகு என்ற அமைப்பு உள்ளதால் மருமகளுக்கு இரண்டாவது திருமணமாகும் என்பதன்படி மகனுக்கு முதல்திருமணம் நிலைக்காது. மகனுக்கு களத்திர தோஷமும், புத்திரதோஷமும் வலுவாக இருப்பதால் 2018-க்கு பிறகே பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். குருவை வலுப்படுத்தும் பரிகாரங்களை செய்து கொள்ளவும்.

என். ஜெயபாலன், பாண்டிச்சேரி - 11.

கேள்வி : 

மகனுக்கு திருமணம் காலதாமதமாகிறது. திருவெண்காடு திருப்பாம்புரம் சென்று பரிகாரம் செய்துள்ளோம். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்? திருமணம் எப்போது? பெண் சொந்தமா, அந்நியமா? அவனது எதிர்காலம் எப்படி? தங்களின் தீர்க்கமான வேதவாக்கான பதிலை குடும்பமே எதிர்பார்க்கிறோம்...

பதில் :

மகனுக்கு எட்டில் ராகு அமர்ந்து ஏழுக்குடைய சனி திருக்கணிதப்படி ஆறில் மறைந்து குருவும் சுக்கிரனும் இணைந்துள்ளதால் திருமணம் தாமதமாகிறது. வரும் ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் ஜாதகப்படி திருமண அமைப்பே வருகிறது. மகனது ஜென்மநட்சத்திரத்திற்கு முதல்நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தியில்   தங்கி சர்ப்பசாந்திபூஜை செய்யுங்கள். இந்தவருட ஆவணியில் இருந்து சித்திரைக்குள் திருமணம் முடிந்து விடும். அந்நியப்பெண். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் மகனின் எதிர்காலம் திருமணத்திற்குப் பிறகு சிறப்பாக இருக்கும்.

கணவர் திருந்துவாரா? எப்போது?

ஒரு மகள், நாகர்கோவில்.

கேள்வி :

மணமாகி 28 வருடங்களாக கணவரின் குணத்தால் எப்போதும் ஒரே பயம், என்ன நடக்குமோ என்ற படபடப்பில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பைத்தியகாரிபோல்தான் வாழ்கிறேன். பிள்ளைகளுக்கும் இதே நிலைமைதான். வீட்டில் கணவர் யாரையும் மதிப்பதில்லை. பேசவும் விடுவதில்லை. சுயமாக நாங்கள் சிந்திக்கவும் முடியாது. எதுவும் செய்யவும் கூடாது. அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்ய வேண்டும். எப்போதும் அதட்டுவதும் குறை கூறுவதுமாக என்னையும் பிள்ளைகளையும் வண்டி மாடு மாதிரித்தான் தினமும் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவரது குணம் மாறுமா? கடந்த ஆறு வருடங்களாக குடி, பெண் சகவாசத்தால் வீடு, சொத்து, நிலம் எல்லாம் விற்றுத் தீர்த்து விட்டார். ஊரை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் வசிக்கிறோம். திருமண வயதில் பெண் இருக்கிறாள் என்று நினைப்புக் கூட இல்லை. மூன்று பிள்ளைகளின் எதிர்காலமாவது நன்றாக அமையுமா? மூத்தவன் வெளிநாடு போவானா? இரண்டாம் மகளுக்கு அரசு வேலை கிடைக்குமா? இளைய மகனின் எதிர்காலம் என்ன? என்னை விட என் பிள்ளைகள் உங்கள் பதிலுக்கு ஆவலாக காத்து கொண்டிருக்கிறார்கள். தந்தைக்குச் சமமான குருஜி... இந்த மகளின் கடிதத்தை ஒதுக்கி விடாதீர்கள். இன்னொரு கடிதம் எழுதும் நிலையிலும், தங்களை நேரில் சந்திக்கும் நிலையிலும் நான் இல்லை.

பதில் :

ஐந்துபேர் கொண்ட குடும்பத்தில் கணவருக்கும், இரண்டு மகன்களுக்கும் விருச்சிக ராசியாகி மூவருக்கு ஏழரைச்சனி நடப்பதால் கடந்த நான்கு வருடங்களாக மனதைப் பாதிக்கும் கடுமையான பிரச்சினைகள் குடும்பத்தில் இருக்கும்.

மூத்தமகனுக்கு மகரலக்னம், விருச்சிகராசியாகி லக்னாதிபதி வெளிநாட்டைக் குறிக்கும் பனிரெண்டாமிடத்தில் சுபத்துவமாக அமர்ந்து பனிரெண்டுக்குடைய குருபகவான் உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதாலும் நடப்பு தசாநாதன் புத பகவான் எட்டுக்குடைய சூரியனுடன் பரிவர்த்தனையாகி சுக்கிரனுடன் இணைந்து சுபவலுவுடன் எட்டாமிடத்தில் அமர்ந்துள்ளதாலும் வெளிநாட்டில் நிரந்தரமாக வசிப்பவனாகவும், வெளிநாட்டுக் குடிமகனாகவும் இருப்பான். வரும் சனி புக்தியில் 2017 ஏப்ரலுக்கு மேல் வெளிநாட்டில்தான் இருப்பான்.

இரண்டாவது மகளுக்கு மிதுனலக்னம், மகரராசியாகி ராசிக்கு பத்தாமிடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் வலுப்பெற்று பார்த்து அரசு வேலைக்குரிய சிம்மத்தில் குரு அமர்ந்து சூரியன் வர்க்கோத்தமம் பெற்றதால் 2017-ம் ஆண்டு அரசுத்துறையில் பணிபுரிவாள்.

இளைய மகனுக்கும் மகரலக்னம், விருச்சிகராசியாகி லக்னாதிபதி சனி ஆட்சிபெற்று யோகதசைகள் நடப்பதால் ஏழரைச்சனி முடிந்ததும் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து குடும்ப நிலைமை சீரடைந்து குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். ஜாதகப்படி கணவர் திருந்த வாய்ப்பு இல்லை. பிள்ளைகள் தலையெடுத்தபின் நிலைமை தலைகீழாக மாறி இப்போது உங்களை வண்டி மாடு மாதிரி ஓட்டிக் கொண்டிருப்பவரின் கழுத்தில் சங்கிலியை போட்டு ஓரமாக உட்கார்த்தி வைத்து கடைசி வரை சாப்பாடு போட்டுக் கொண்டிருப்பீர்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 73 (2.2.2016)

  1. மிக நல்ல விளக்கம்–வாழ்த்துக்கள் குருஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *