adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal -குருஜியின் மாலைமலர் பதில்கள் – 100 (23.8.2016)

கேபிரேமாவதி, கோவை – 17.

கேள்வி :

பி.டெக் படித்த மகனுக்கு ஐந்து ஆண்டுகளாக சரியான வேலை கிடைக்கவில்லைசுமாரான வேலையில் இருப்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறான். நல்ல வேலை அமையுமா? எதிர்காலம்திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? தங்களின் பதிலை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

பதில் :

வேலை கிடைக்கவில்லை. திருமணமாகவில்லை. பிரச்சினையாக இருக்கிறது என்று வருகின்ற கடிதங்கள் அனைத்தும் இளைய பருவ விருச்சிக ராசிக்காரர்களாகவே இருப்பதால் எதற்குப் பதில் சொல்வது, எதை பதில் தராமல் விடுப்பது என்று எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. உங்கள் மகனுக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிகராசி என்பதால் நீங்கள் கேட்ட நல்லவைகள் 2018 ஆண்டு முதல் நடக்கும்.

ஜி. தேவேந்திரன், காரைக்கால்.

கேள்வி :

என் மருமகள் எம். பி. பி. எஸ். படிக்கிறாள். மேலும் படிக்க வைக்கலாமா? சந்திர தசை முடிவில் அல்லது செவ்வாய் தசையில் திருமணம் செய்யலாமா? ஏழில் செவ்வாய், குரு இருப்பது நல்லதா? விளக்கம் அளிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.

பதில் :

ஒருவர் மருத்துவராக வேண்டுமெனில் ராசிக்கோ, லக்னத்திற்கோ பத்தாமிடத்தோடு வலுப்பெற்ற சூரியன், குரு, செவ்வாய் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள ஜோதிட சூட்சுமக் கட்டுரைகளில் எழுதி வருகிறேன்.

உங்கள் மருமகளுக்கு ரிஷப லக்னமாகி, ஏழாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று குருவுடன் இணைந்து சுபத்துவம் பெற்று, பத்தாமிடத்தைப் பார்ப்பதால் மருத்துவம் படிக்கிறார். ஏழில் செவ்வாய் இருப்பது குற்றம் என்றாலும் குருவுடன் இணைந்திருப்பதால் அவர் நல்லவராகி நல்ல வாழ்க்கைத்துணையைத் தருவார். இதுவே செவ்வாய், குரு இணைவின் பலன். சந்திரதசையில் திருமணம் செய்ய முடியாது. செவ்வாய் தசையில் திருமணம் நடக்கும். உயர்கல்வி உண்டு.

சாமியார் என்கிற தங்கராஜ், ஈரோடு.

கேள்வி :

ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்தாவது மகனாக நான் பிறந்ததால் நாய் படாதபாடு படுகிறேன். என்னுடைய மகனாவது நன்றாக இருப்பானா? அவனது படிப்பு வேலை எதிர்காலம் எப்படி அமையும்? இது நான்காவது கடிதம். தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

ல,ரா சந் சனி
 குரு
 கே  சூ,சுக் பு,செவ்
பதில் :
(ரிஷபலக்னம், ரிஷபராசி. லக்னத்தில் ராகு. இரண்டில் சனி. மூன்றில் குரு. ஐந்தில் புதன், செவ். ஆறில் சூரி. சுக். 24-10-2002, இரவு 9.10, பாண்டி)

மகனின் ஜாதகத்தில் மூன்று சுபக்கிரகங்கள் உச்சமாகி, லக்னாதிபதி சுக்கிரனும் ஆட்சி பெற்று இருப்பதால் நல்ல எதிர்காலம் அவருக்கு அமையும். தற்போது ராகு தசை ஆரம்பமாகி 30 வயதுகளில் எட்டுக்குடைய குருவின் தசை நடைபெற உள்ளதாலும் பனிரெண்டிற்குடையவன் பனிரெண்டாமிடத்தை பார்த்து வலுப் படுத்துவதாலும் உங்கள் மகன் எதிர்காலத்தில் வெளிநாட்டில் வேலை செய்வார். அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆவார். புதன் உச்சமானதால் அறிவாளியாகவும், அறிவால் பிழைக்கும் புதனின் துறைகளிலும் இருப்பார்.

சசிரேகா, ஊர் பெயர் இல்லை.

கேள்வி :

கல்யாணமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. கணவரோடு ஐந்து மாதங்கள்தான் சேர்ந்து வாழ்ந்தேன். குழந்தை ஜனித்ததில் இருந்து எங்களுக்குள் சண்டையும், சத்தமுமாக இருந்தது. இப்போது தாய்வீட்டில் இருக்கிறேன். கணவர் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆண்குழந்தை பிறந்ததைக் கூட பார்க்க அவர் வரவில்லை. நான் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் மறுக்கிறார். வழக்கு இன்னும் நடந்து வருகிறது. நாங்கள் இருவரும் ஒன்று சேருவோமா? வயதான என் அப்பா, அம்மா இருக்கும் வரைக்கும்தான் எனக்கு ஆதரவு உண்டு. அவர்களுக்குப் பிறகு எனக்கு எந்த ஆதரவும் கிடையாது. மகனின் பிறந்தகுறிப்பை இணைத்துள்ளேன். கணித்துப் பார்த்து பதில் சொல்லுங்கள்.

குரு பு சூ ல.சுக் கே
 செவ்
 சந் சனி
பதில் :

(மிதுனலக்னம், துலாம்ராசி, லக்னத்தில் சுக், கேது. இரண்டில் செவ். நான்கில் சனி. பத்தில் குரு. பதினொன்றில் புத. பனிரெண்டில் சூரி. 25.5.2010, காலை 8.17)

கணவன், மனைவி சேர்ந்திருப்பார்களா? பிரிவார்களா? என்பதற்கு அவர்களின் ஜாதகத்தைப் பார்ப்பது நல்லது. மகனின் ஜாதகத்தில் தந்தையின் ஆதரவும், அரவணைப்பும் இவனுக்குக் கிடைக்குமா என்று பார்க்க முடியும். உன்னுடைய மகன் ஜாதகத்தில் தந்தையைக் குறிக்கும் ஒன்பதிற்குடைய சனி, அந்த வீட்டிற்கு எட்டில் மறைந்து, ஒன்பதாமிடத்தை நீசச்செவ்வாய் பார்த்ததாலும் தந்தைக்குக் காரகனான சூரியன் பனிரெண்டில் மறைந்ததாலும் உன் மகனுக்கு தந்தையின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு இல்லை. இவன் தந்தையுடன் இருக்க முடியாது என்ற அமைப்பால் நீங்கள் இருவரும் சேருவதற்கும் வாய்ப்பில்லை.

டி.வி. சத்தியநாதன், தி.நகர்.

கேள்வி :

சென்ற வருடம் எனக்கு குடலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இன்னும் பூரணமாகக் குணமாகவில்லை. எதிர்காலத்தில் இன்னும் நோய்வாய்ப் படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இனிமேலும் நோய்த்தாக்குதல் உள்ளதா? ஆயுள் 72 வயது என்பது சரியா? துன்பமில்லா மரணம் அடைய என்ன பரிகாரம்/வழிபாடு செய்ய வேண்டும்? தயவு செய்யவும்.

குரு சந் செவ்
 சூ
 பு,சுக் கே
ல,சனி
பதில் :

(கன்னிலக்னம் ரிஷபராசி லக்னத்தில் சனி, ஏழில் குரு, பத்தில் செவ், பதினொன்றில் சூரி, பனிரெண்டில் சுக்,புத,கேது )

சென்ற வருடம் ஆறுக்குடைய சனிதசையில் எட்டுக்குடைய செவ்வாய் புக்தி நடந்ததால்தான் ஆபரேஷன் செய்யும் அளவிற்கு உடல்நலம் கெட்டது. இனிமேல் அதுபோல தீவிரமான நோய்த்தொல்லை ஏற்பட வாய்ப்பில்லை. அதேநேரம் அடுத்து நடக்க இருக்கும் புக்திநாதன் ராகுவும் ஆறாமிடத்தில் இருப்பதோடு, தசாநாதன் சனிக்கும் ஆறாமிடத்தில் இருப்பதால், ராகுபுக்தியிலும் நோயின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். ஆரோக்கியம் மேம்படுவது குரு புக்தியில்தான்.

அஷ்டமாதிபதி செவ்வாய் ராசியில் திக்பலம் பெற்று, அம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளதாலும், லக்னத்தையும் ஆயுள்காரகனையும் வலுப்பெற்ற குரு பார்ப்பதாலும், லக்னாதிபதி புதன் அம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளதாலும் 72 வயது தாண்டியும் தீர்க்காயுள் இருப்பீர்கள்.

நோயின் தீவிரம் குறைவதற்கு உங்களால் செய்ய முடிந்த பரிகாரமாக பதினேழு வாரம் தொடர்ந்து புதன்கிழமைதோறும் சிறிதளவு பச்சைப்பயிறை இரவு படுக்கும்போது தலைக்கடியில் வைத்துப் படுத்து தனித்தனி பொட்டலமாகச் சேர்த்து கடைசிவாரம் மொத்தமாக்கி கிணறு அல்லது குளத்தில் போடுங்கள். நோய் மட்டுப்படும். மதுரை மீனாட்சிஅம்மன் படத்தை வைத்து புதன்கிழமை தோறும் வழிபடுங்கள். அனைத்துக் குறைகளும் தீர அன்னை வழிகாட்டுவாள். வீட்டில் உங்கள் அருகிலேயே இருக்கும்படி ஒரு பச்சைக்கிளி வளர்ப்பதும் நோயைத் தணித்து ஆயுளை அதிகரிக்கும்.

பெ. ஜெயசித்ரா, கரூர் - 2.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு பாதம் பணிந்த வணக்கம். எனக்கு அரசில் ஆசிரியர் வேலை கிடைக்குமா? எந்த வயதில்? நான்கிற்குரிய செவ்வாயும் ஏழிற்குரிய சனியும் பரிவர்த்தனையாவதன் பலன் என்ன? என்னுடைய ஜாதகம் யோகமானதா? ஏழில் செவ்வாய் குரு இருப்பது கணவரைப் பாதிக்குமா?

பதில் :

அரசு வேலைக்குரிய சிம்மத்தைக் குருபகவான் பார்த்து பத்தாமிடத்தோடு சூரியன் தொடர்பு கொண்டாலும் சூரியனும் சனியும் ஒரே டிகிரியில் இணைந்ததும் பத்தாமிடத்தை செவ்வாய் சனி இருவரும் பார்ப்பதும், எட்டில் மறைந்த ராகுதசையும் அரசுவேலை கிடைப்பதைத் தடுக்கும் அம்சங்கள். ராகுவிற்குரிய ப்ரீத்திகளையும், சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் செய்யவும். நான்கு ஏழு பரிவர்த்தனையால் நல்ல கணவர் கிடைப்பார். ஏழில் செவ்வாய் குருவுடன் இணைந்திருப்பதால் கணவரைப் பாதிக்காது. யோகஜாதகம் தான்.

குடிக்கு அடிமையான மகன் எப்போது திருந்துவான்?

ஆர். கிருஷ்ணதேவி, சென்னை - 40.

கேள்வி :

மூத்தமகன் குடிபோதை, பாக்குக்கு அடிமையாகி பாழாகிக்கொண்டிருக்கிறான். குடியிருக்கும் இடத்திலும் உறவினர்களிடமும் பட்டஅவமானங்கள் கணக்கில் அடங்காதுபெற்றோரை, தம்பியை, தங்கையை ரத்தம் சொட்டச்சொட்ட அடிப்பது. உடமைகளை உடைப்பது, நகை, பொருட்களைத் திருடி விற்பது, கேவலமாகப் பேசுவது என அவன் செயல்படுவது தொடர்கிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்பொழுது திருந்துவான்? எந்தத் துறையில் முன்னேற வாய்ப்பு? வெளிநாடு அனுப்ப முடியுமாஎன்று விளக்கம் கூறி எங்கள் குடும்பத்திற்கு வழி காட்ட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 ல
 பு சந்,சூ குரு,கே சுக்,சனி செவ்
பதில் :

(கும்பலக்னம், விருச்சிகராசி. எட்டில் செவ். ஒன்பதில் சுக், சனி. பத்தில் சூரி, சந், குரு, கேது. பதினொன்றில் புத. 5-12-1983, 11.45 காலை, தஞ்சை)

குடித்துச் சீரழியும் மகனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று கவலைப்படும் தாயுள்ளத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை. இது தெரியாத மகன்களால்தான் ஊருக்கும், உறவுக்கும் தொல்லை.

மகனுக்கு விருச்சிகராசியாகி, மனதிற்குரிய சந்திரன் நீசம் பெற்று, கேதுவுடன்   ஐந்துடிகிரிக்குள் இணைந்து, குடிப்பழக்கத்திற்குரிய லக்னாதிபதி சனிபகவான் உச்சமாகி, லக்ன எதிரியான சூரியனின் தசை நடப்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குடித்துக் கொண்டிருக்கிறார். லக்னத்திற்கோ, ராசிக்கோ சுபர் பார்வை இல்லாததால் இவருடைய மனதை இவர் கட்டுப்படுத்த முடியாது. “ஆடி போய் ஆவணி வந்தால் அவனுக்கு கிரகம் சரியாகிவிடும்” என்று என்னால் பொய் சொல்லவும் முடியாது.

விருச்சிகராசிக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் கும்பலக்னத்திற்கு கடும் எதிரியான ஆறுக்குடைய பாவி சந்திரனின் தசை அடுத்து வர உள்ளதாலும் குடிப் பழக்கத்தை உங்கள் மகன் கைவிட முடியாது. இது அவருடைய பூர்வ ஜென்ம கர்மா. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி முடியும்வரை இவருக்கு நல்லதோ, இவரால் குடும்பத்திற்கு நல்லதோ நடக்காது. ஒரே பரிகாரமாக மகன் திருந்த வேண்டும் என்று சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வேண்டி வாருங்கள். தெய்வத்திலும் உயர்வான தாய் கேட்பதை அந்த தெய்வம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *