adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 142 (4.7.2017)

பிரகாஷ், மதுரை.

கேள்வி:

என் ஜாதகத்தில் லக்னத்தில் கேது உள்ளதால் அசிங்கமான தோற்றத்துடன் உடல் மெலிந்து ஒல்லியாக இருக்கிறேன். எப்போது உடம்பு நல்ல நிலைமைக்கு வரும்? எனக்கு பெண்ணாசை அதிகம் உள்ளதால் காந்தவர்வ தோஷம் என்று கூறுகின்றனர். இது உண்மையா? நடக்கும் குரு தசை எப்படி இருக்கும்? வெளிநாட்டு வேலை கிடைக்குமா? ஒரு பெரியவர் நீ பணக்காரன் ஆவாய் என்றார். அது பலிக்குமா? 25 வயதான என்னை பலர் கேவலப்படுத்துவதற்கு காரணம் என்ன? ஜோதிடம் கற்று ஜோதிடர் ஆவேனா

பு சுக் சூ ல கேது
சனி ராசி செவ்
சந்
குரு
பதில்:

(ரிஷப லக்னம், மகர ராசி. 1-ல் கேது. 3-ல் செவ். 5-ல் குரு. 9-ல் சந். 10-ல் சனி. 11-ல் புத, சுக். 12-ல் சூரி. 16.4.1993, காலை 8.09, மதுரை)

லக்னத்தில் கேது இருக்கும் காரணத்தை விட லக்னாதிபதி சுக்கிரன் உச்சமானாலும் வக்கிரம் பெற்று, நீசபுதனை பங்கப்படுத்தி, குருவும், புதனும் பரிவர்த்தனை நிலையில் அமர்ந்திருப்பதே உன்னுடைய மெலிந்த உடலுக்கும் அதிகமான பெண்ணாசைக்கும் காரணம். இந்த வயதில் உன்னுடைய ஜாதக அமைப்புப்படி உனக்கு பெண்களை பற்றிய அதீதமான உணர்வுகள் இருக்கத்தான் செய்யும்.

எட்டுக்குடைய குருவின் தசை நடப்பதால் அசிங்கம், கேவலம் போன்றவைகளை சந்திப்பாய். காந்தர்வ தோஷம் என்பதெல்லாம் ஜோதிடர்கள் சொல்லும் தோஷம் மட்டும்தான். மூலநூல்களில் கிடையாது. குருதசை நடப்பதால் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய். வெளிநாட்டு வேலை கிடைக்கும். பார்க்கும் இளைஞர்களை வாழ்த்துவதற்காக பெரியவர்கள் நீ பணக்காரன் ஆவாய் என்று வாழ்த்துவது வழக்கம்தான். எல்லா பெரியவர்கள் சொல்வதும் பலிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

அஷ்டமாதிபதி குருவின் தசை நடப்பதாலும், ஏழரைச்சனி ஆரம்பிக்க இருப்பதாலும் நீ நல்ல நிலைமைக்கு வருவதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும். குருதசை பிற்பகுதியில் இருந்து நல்லவை நடக்கும். புதன் நீசபங்க வலுவுடன் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் ஜோதிடம் கற்று கொள்ள முடியும். ஆனால் தொழில்முறை ஜோதிடராக ஆக முடியாது. ராசிக்கு 2-ல் சனி இருப்பது நல்ல பலன் சொல்வதற்கு தடை அமைப்பு .

ராமசுப்பிரமணியம், ராஜபாளையம்.

கேள்வி:

மகள் வெளிநாட்டில் கணவருடன் வசித்து வருகிறார். எம்.பி.. படித்து திறமையாக இருந்தும், ஜாதகத்தில் லக்னம், ராசி, லக்னராஜன் மற்றும் சனி வலுவாக இருந்தும், லக்னாதிபதியே பத்தாம் வீட்டில் பலமாக இருந்து தற்போது லக்னாதிபதி தசையே நடந்தும் மகளுக்கு இதுவரை வேலை எதுவும் கிடைக்கவில்லை. சந்திரதசை முழுவதும் பலன் இல்லாமல் போகுமா? சொந்தத் தொழில் செய்யலாமா? எதிர்காலம் எப்படி? மருமகனுக்கு பரணி நட்சத்திரம், மேஷ ராசி.

பதில்:

இவ்வளவு தெளிவாக மகளின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்துள்ள உங்களுக்கு ராஜயோக ஜாதகமாயினும் அஷ்டமச்சனி காலங்களில் யோகபலன்கள் நடக்காது என்பதோடு பொருளாதார பிரச்சினைகளும் இருக்கும் என்பது எப்படி தெரியாமல் போனது? அதிலும் கணவன்-மனைவி இருவருக்கும் மேஷராசியாகி அஷ்டமச்சனி நடக்கும் போது அந்தக் குடும்பத்தில் பொருளாதார உயர்வு எப்படி இருக்கும்?

வேலை கிடைத்தால் கையில் சம்பளம் கிடைக்கும். எதையும் வாங்கும் சக்தி கிடைக்கும். உடனே சந்தோஷம் வரும். அஷ்டமச்சனி நடக்கும்போது சந்தோஷத்திற்கு வழி இல்லை. அக்டோபர் மாதம் சனி முடிந்ததும் மகளுக்கு பொருத்தமான வேலை நிச்சயம் கிடைக்கும். தர்மகர்மாதிபதி யோகம் வலுவாக இருப்பதால் சொந்தத் தொழில் செய்வதற்கும் ஏற்ற ஜாதகம்தான்.

எஸ்தாமோதரன், போளூர்.

கேள்வி:

இந்த முறையாவது கருணைகூர்ந்து பதில் தருமாறு கேட்டு கொள்கிறேன். சிறுவயதில் என்னுடைய ஜாதகத்தை புத்தகமாக எழுதியவர், இவர் சொத்து, பத்து சுகத்தோடு செல்வாக்காக இருப்பார். அப்படி இருப்பார், இப்படி இருப்பார் என்று எழுதி இருந்தார். அதுபோல ஒன்றும் நடக்கவில்லை. இப்போது ராகுதசை இறுதியில் இருக்கிறேன். ராகுதசை 18-வது ஆண்டின் முடிவில் அஜீரணம், பேதி உண்டாகும். ராகுவோடு முடிவு பெறுவார் என்று அந்த ஜோதிடர் எழுதியிருக்கிறார். இதைப் படித்தது முதல் உள்ளம் பதைபதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் முடிவு பெறும் ராகு தசையோடு நானும் முடிவு பெறுவேனா? அல்லது குருதசையிலும் இருப்பேனா?

பதில்:

அந்த ஜோதிடர் எழுதிய எதுவுமே என் வாழ்க்கையில் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டு விட்டு அவர் சொல்லி இருக்கும் அஜீரணம், பேதியும், வாழ்க்கை முடிவு மட்டும் நடக்கும் என்று எப்படி நம்புகிறீர்கள்? அந்தக் காலத்தில் பெரும்பாலான ஜாதகங்களை நோட்டுப் புத்தகத்தில் பொதுப்பலன்களை பக்கம் பக்கமாக ஜோதிடர்கள் எழுதித் தருவார்கள்,. வாக்கியப் பஞ்சாங்கப்படி எழுதப்பட்ட அவைகள் தோராயமானவைதான்.

இந்த வருடம் இது நடக்கும், அடுத்த வருடம் இது நடக்கும் என்று உங்களுக்கு நோட்டில் துல்லியமாக எழுதிக் கொடுக்க முடிந்த ஒரே ஜோதிடர் கடவுள் மட்டும்தான். ஜோதிட மூலநூல்களிலேயே ஒரு ஜோதிடரால் மூன்று வருடங்களுக்கு அப்பால் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது, கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.

எனவே வாழ்க்கைச் சரித்திரத்தை நோட்டுக்களில் எழுதிக் கொடுத்த அந்தக் கால ஜோதிடப்பலன்கள் தோராயமானவைதான். அதன்படி உங்களுக்கு முடிவு ஏற்படும் என்பது நிச்சயமானது அல்ல. உங்கள் ஜாதகப்படி எட்டுக்குடைய சனிபகவான் உச்சமானதாலும், லக்னாதிபதி தனிப்புதனின் பார்வையில் வலுத்து இருப்பதாலும், எட்டில் சுபர் இருப்பதாலும் 85 வயது தாண்டி தீர்க்காயுளுடன் இருப்பீர்கள் கவலை வேண்டாம்.

சுப. சாமிநாதன், தஞ்சாவூர் - 613001.

கேள்வி:

சில நாட்களுக்கு முன் பழைய மாலைமலர் பேப்பரைப் பார்த்தபோது கேட்டை நட்சத்திரம் கெட்ட நட்சத்திரமா? என்ற வாசகம் கண்ணில் பட்டது. அதில் குருஜி அய்யா அவர்கள் எல்லா கேட்டை நட்சத்திரக்காரர்களும் ஏதாவது ஒரு வகையில் மனஅழுத்தத்திலும் ஏமாற்றத்திலும்தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். 75 வயதாகும் எனது தற்போதைய வாழ்க்கைக்கு இது நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது. நான் வணிக வரி அலுவலர் பணியில் நேர்மையாக பணியாற்றி ஓய்வு பெற்றவன். தற்போது கடுமையான ஒரு வாழ்வைக் கடந்து கொண்டிருக்கிறேன். படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். பின்னர் பலரின் வற்புறுத்தலின் பெயரில் திரும்ப வீட்டிற்குச் சென்றேன். தற்போது ஆன்மிகப் பயிற்சி எடுத்து வருகிறேன். எனது எதிர்காலம் பற்றி தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சனி குரு
ராசி சுக்
சூ,பு செவ்,ரா
 சந்
பதில்:

(மேஷ லக்னம், விருச்சிக ராசி. 2-ல் சனி. 3-ல் குரு. 4-ல் சுக். 5-ல் சூரி, புத, செவ், ராகு. 8-ல் சந். 20.8.1942, இரவு 11.15, தஞ்சாவூர்.)

ராசிக்குப் பத்தில் சூரியன் வலுவாக ஆட்சி பெற்று அமர்ந்து யோகதசைகள் இளம் பருவத்தில் இருந்தே நடப்பில் இருந்ததால், லஞ்சம் வாங்காமல் நேர்மையாகவே அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள். ராசியை சனி வலுப்பெற்று பார்ப்பதால் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத பிடிவாதக்காரராக இருப்பீர்கள். நீங்கள் சொல்வதைதான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். இந்தக் குணத்தால் உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் சிக்கல் இருக்கும்.

தற்போது உங்களின் நட்சத்திரத்திலேயே சனி சென்று கொண்டிருப்பதால் வயதிற்கேற்ற மன அழுத்தம் தரும் சம்பவங்கள் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும். இந்த பிரச்சினைகள் அனைத்தும் வரும் தீபாவளி முதல் தீர்ந்து விடும். ராசியை சுபத்துவம் பெற்ற சனிபகவான் பார்ப்பதாலும், தற்போது ராகுதசை நடந்து கொண்டிருப்பதாலும் உங்களின் அந்திமகால வாழ்க்கை சிவ வழிபாட்டில் கழியும்.

சுரேஷ், மதுரை.

கேள்வி:

என் அண்ணனுக்கு வரும் ஆவணி 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இவருக்கு மனைவியால் சொத்து, வாகனயோகம் எப்போது வரும்? இங்குள்ள ஜோதிடர் ஒருவர் ஆவணி மாதம் திருமணம் நடத்தினால் வரும் பெண்ணால் சொத்து, வீடு, புரமோஷன், சம்பள உயர்வு அனைத்தும் கிடைக்கும் என்கிறார். அது எப்போது கிடைக்கும்? திருமணத்திற்கு மண்டபம் பார்த்து விட்டோம். அவர்களது வழியில் யாராவது பண உதவி செய்வார்களா? இன்னொரு ஜோதிடர் அண்ணனுக்கு இருதார யோகம் என்றார். இது உண்மையா?

கேது
ராசி
சனி  குரு
 ல,சந் சூ,செவ் ரா பு, சுக்
பதில்:

(தனுசு லக்னம், தனுசு ராசி. 1-ல் சூரி, செவ், சந், ராகு. 2-ல் சனி. 7-ல் கேது. 9-ல் குரு. 12-ல் புத, சுக். 5.1.1992, காலை 7.11, மதுரை)

உங்களை போன்றவர்களிடம் சிக்கி கொண்டு ஜோதிடம் படும் பாட்டை சொல்லி மாளாது. உன்னுடைய கேள்வியிலேயே வரப் போகும் பெண்ணிற்கு என்ன நடக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆவணி மாதம் திருமணம் நடக்கும் அத்தனை ஆண்களுக்கும் பெண்டாட்டியால் புரமோஷன், சம்பள உயர்வு கிடைக்குமென்றால் நம் நாட்டில் ஆவணியைத் தவிர வேறு எந்த மாதத்திலும் கல்யாணம் நடக்காது.

நீதான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறாயே தவிர உன் அண்ணனின் ஜாதகத்தைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. ஒன்று ஒன்பதுக்குடையவர்கள் பரிவர்த்தனையாகி, வலுப்பெற்ற குருபகவான் லக்னத்தையும், அதில் உள்ள நான்கு கிரகங்களையும் பார்த்து புனிதப்படுத்திய யோக ஜாதகம் உன் அண்ணனுடையது. நல்லவனாகவும், வல்லவனாகவும், மனைவியின் மூலம் வருவதை அசிங்கமாக நினைக்க கூடியவனாகவும் இருப்பான். ஒருவேளை நீ இந்தக் கேள்வியை உன் அம்மா சொல்லி எழுதினாயோ என்னமோ..! இருதார யோக அமைப்பு உன் அண்ணனுக்கு இல்லை.

விமான விபத்தில் இறக்கும் எல்லோர் ஜாதகமும் ஒன்றாக இருக்குமா..?

எஸ். கோபிநாதன். மன்னார்குடி.

கேள்வி:

தெய்வத்திற்கும் மேலாக நான் தினமும் வணங்கும் என் குருநாதரின் திருப்பாதங்களுக்கு வணக்கம். பூகம்பம், சுனாமி பெரிய விபத்துக்களில் மக்கள் பெரும் அளவில் ஒரே நேரத்தில் இறந்து போகிறார்களே அவர்கள் அனைவரும் அன்றைக்கு இறந்து விடுவார்கள் என்று அவர்கள் ஜாதகத்தில் இருக்குமா? உதாரணமாக ஒரு விமான விபத்தில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பலியாகிறார்களே அவர்கள் அனைவரின் மரணகாலமும் அன்றைக்குத்தான் என்பது ஜாதகத்தில் உறுதியாக இருக்குமா?

பதில்:

2012 ம் ஆண்டில் நான் எழுதிய “பால்வெளி மண்டல ஜோதிட விதி” என்ற கட்டுரையினைப் படியுங்கள். சந்தேகம் தீரும். தனி மனிதனுக்கு ஜோதிட விதிகள் இருப்பதைப் போல ஒட்டுமொத்த மனித குலத்திற்கும், என்றோ ஒரு நாள் பிறந்து, என்றைக்கோ ஒருநாள் நிச்சயமாக இறந்து போகப் போகும் இந்த பூமிக்கும் ஜோதிட விதிகள் இருக்கின்றன. இதனை உலகியல் ஜோதிடம் என்போம். இப்போது நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கான பதிலைச் சொல்லும் விதியை நான் பால்வெளி மண்டல விதி என்று அழைக்கிறேன்.

இந்த பெரும் பிரபஞ்ச விதியின் முன்னால் தனிமனித ஜோதிட விதிகள் செயலற்றுப் போகும். அதாவது பிரபஞ்ச விதி ஒரு இடத்தில் செயல்படும்போது அதனுள் அடங்கிய எறும்புகளான நமது ஜாதக விதி எடுபடாது. அமுங்கிப் போகும். நீங்கள் சொல்லும் பூகம்பம், சுனாமி போன்றவைகள் பால்வெளி மண்டல ஜோதிட விதியால் ஏற்படுபவை. அதன்முன் ஒரு தீர்க்காயுள் வாழும் மனிதனின் ஜாதகம் தோற்றுப் போகும். அவன் அற்பாயுளில் இறந்து போவான்.

ஆனால் நீங்கள் கேட்ட இன்னொரு விஷயமான விமான விபத்து சிறியது. பூகம்பம், சுனாமி போல பெரும் அளவில் மனித உயிர்களைப் பலி வாங்குவது அல்ல. இது போன்ற விபத்துகள் தனி மனித ஜோதிட விதிக்குள் அடங்கும். அதில் பயணிக்கும் அனைவரும் அன்றைக்கு இறந்து போவார்கள் என்பது நிச்சயமாக முன்பே தீர்மானிக்கப் பட்டிருக்கும். அவர்களின் ஜாதகத்தில் நிச்சயமாக அந்த அமைப்பு துல்லியமாக இருக்கும்.

நடுவானில் வெடித்துச் சிதறிய நிலையில் கோர மரணத்தை இவர்கள் சந்திப்பார்கள் என்கின்ற கிரக அமைப்புகள் அதில் பயணிக்கும் அனைவரின் ஜாதகத்திலும் இருந்தே தீரும். இதன் காரணமாகவே பல்வேறு இடங்களில் இருந்து மரணத்தை சேர்ந்து சந்திப்பதற்காக அவர்கள் அந்த விமானத்தினுள் ஒன்று கூடுகிறார்கள்.

அந்த அமைப்பு இல்லாதவர்கள், அதாவது அன்று இறக்க விதி  இல்லாதவர்கள் டிக்கெட் எடுத்திருந்தும் டிராபிக் ஜாம் போன்ற ஏதோ ஒரு காரணத்தால் அந்த விமானத்தை தவற விடுகிறார்கள்,

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 142 (4.7.2017)

  1. மிக மிக அற்புதமாகவும் துலிமாகவும் இருக்கிறது தங்களிடம் பயிற்சி வேண்டும்

  2. நீண்ட தர்க்கத்திற்கு வித்திட்ட வினாவிற்கு,உண்மையை விளக்கிய விதம் அருமை ஐயனே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *