adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 85 (10.5.2016)

பி. ராஜாராம், மதுரை - 10.

 கேள்வி :
ஜோதிட அரசருக்கு அனேக வணக்கங்கள். மகளின் வருங்காலம் என்னாகுமோ எனும் தந்தையின் கண்ணீர் கடிதம். அனைவரின் அறிவுரையையும் மீறி மகள் காதல் திருமணம் செய்து கொண்டு விட்டாள். முறைமாப்பிள்ளை என்றாலும் அவனிடம் குடி, கூத்து, சூது, திருட்டு என அனைத்தும் உண்டு. மகளோ பிறந்தது முதல் சர்க்கரை நோயாளி. தினமும் இரண்டு வேளை இன்சுலின் போட வேண்டும். இந்த நோயுடனேயே பி. எட். முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்.
பெண்ணைப் பற்றிய கவலை இல்லாமல் அவன் பழைய மாதிரியே இருக்கிறான். அவனது பெற்றோரே என் பெண்ணைக் கவனித்துக்கொள்கிறார்கள். எங்களுக்கும், அவர்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை. அவனுக்கு மூலநட்சத்திரம். இது மாமனாருக்கு ஆகாது என்கிறார்கள். உண்மையா? இந்தத் திருமணம் முறிந்து விடும் என்னும், சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் ஒரு ஜோதிடர் சொல்கிறார். என் பெண்ணிற்கு இன்னொரு திருமணம் உண்டா? நல்ல வாழ்க்கை அமையுமா ? படித்து முடிந்ததும் வேலை கிடைக்குமா?
செவ் சூ சனி சு,கே
ல,சனி ராசி
சந் குரு
 பதில்:
(கும்பலக்னம், விருச்சிக ராசி. லக்னத்தில் சனி. இரண்டில் செவ். மூன்றில் சூரி, புத. நான்கில் சுக், கேது. ஒன்பதில் குரு. 29.4.1994, 2.41 அதிகாலை, மதுரை)
குழந்தைகளுக்கு பள்ளிப்பருவத்தில் சுக்கிரதசை நடந்தாலே பெற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி எழுதுகிறேன். அதிலும் ஏழரைச்சனி நடந்தால் வேறு வினையே வேண்டாம். ஏழுக்குடைய சூரியனின் சாரத்தில் இருந்து சுக்கிரன் தசை நடத்துவதால் மகள் காதல் வயப்பட்டு விட்டாள். சூரியனுடன் புதன் இரண்டு டிகிரிக்குள் இணைந்ததால் மாமன் மகனே மணமகன்.
கும்பலக்னமாகி லக்னத்திற்கு ஏழாமிடத்தை சனிபார்த்து இரண்டில் செவ்வாய்   அமர்ந்ததால் 21 வயதில் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த குருவின் புக்தியில் காதல் திருமணம். மகளின் ஜாதகப்படி ஏழுக்குடைய சூரியன் உச்சமாகி இரண்டாம் திருமணத்தை குறிக்கும் பதினொன்றாம் அதிபதி குரு பகைவீட்டில் அமர்ந்து வலுவிழந்ததால் ஒரே திருமணம்தான். ஆனால் கணவன்-மனைவி இருவருக்கும் ஏழரைச்சனி நடப்பதால் இன்னும் நான்கு வருடங்களுக்கு வாழ்க்கை திருப்தியில்லாமல் செல்லும்.
சனி முடிந்ததும் நீங்கள் மகளை மன்னித்து ஏற்றுக் கொள்வீர்கள். ஏழாம் அதிபதி குருபார்வையுடன் உச்சம் என்பதால் மருமகனும் சில வருடங்களில் பொறுப்பானவனாக மாறுவான். மருமகனின் ஜாதகம் இல்லாததால் அவனைப் பற்றிச் சொல்ல முடியவில்லை. லக்னத்தையும், ராசியையும் சுபர் பார்ப்பதால் மகளுக்கு கெடுதல்கள் நடக்க வாய்ப்பு இல்லை.
படித்து முடித்தவுடன் மகளுக்கு அரசு வேலை கிடைக்கும். மகளின் ஜாதகப்படி   மனைவியின் வருமானத்தில் மருமகன் ஜாலியாக இருப்பார். நோயைக் குறிக்கும் ஆறாம் அதிபதி சந்திரன் பவுர்ணமி யோகத்திற்கு அருகில் சுக்கிர பார்வையுடன் வலுவானதால் கடைசிவரை சர்க்கரைநோய் இருக்கும். மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்பதெல்லாம் கட்டுக்கதை.
எஸ். செந்தில்குமார், பம்மல்.
 கேள்வி :
36-வது வயதில் திருமணம் நடந்து விவகாரத்து ஆகி விட்டது. குழந்தைகள் இல்லை. மீண்டும் திருமணம் ஆகுமா? குழந்தைகள் பிறக்குமா? ஏற்கனவே திருமணமான பெண்ணா? அல்லது திருமணமாகாதவளா?  
சனி சந்
ராசி
சு, கே
செவ் சூ,பு குரு
பதில்:
(மிதுனலக்னம், ரிஷபராசி. மூன்றில் சுக், கேது. நான்கில் சூரி, புத, குரு. ஏழில் செவ். பதினொன்றில் சனி)
லக்னத்திற்கு ஏழிலும், ராசிக்கு எட்டிலும் செவ்வாய் அமர்ந்து ராசிக்கு இரண்டாமிடத்தை சனி பார்த்து லக்னத்திற்கு இரண்டாமிடத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணமாகியும் அது நீடிக்கவில்லை. உச்ச வக்ரம் பெற்று நீச வலுவடைந்த லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றாமிடத்தில் நீசவக்ர சனி அமர்ந்து அடுத்த வருடம் தசை நடத்தப் போவதால் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் ஒரு பெண்ணை அடுத்த வருடம் மணந்து கொள்வீர்கள்.
கே. சிவதாணு, நாகர்கோவில் - 1.
கேள்வி :
என்னுடைய சகோதரி மகன் 2005-ல் டி. . . . படிப்பு முடித்து 2006-ல் கோவைக்கு வேலைக்குச் சென்று அதன்பின் சென்னை சென்று வேலைபார்த்து வந்தான். தற்போது வேலை இல்லை. பல கம்பெனிகளில் பயோடேட்டா கொடுத்தும் வேலைக்கு அழைக்கவில்லை. வேலைகிடைப்பதற்கு நாளாகுமா? திருமணம் எப்போது? வேலை பார்க்கும் பெண்      கிடைக்குமா?  
சூ,சுக்
குரு,பு ராசி
 செவ் சனி கே ல, சந்
பதில்:
(கன்னிலக்னம் கன்னிராசி இரண்டில் கேது மூன்றில் சனி நான்கில் செவ் ஆறில் குரு புத ஏழில் சூரி சுக் 25-3-1986 7.22 இரவு நாகர்கோவில்)
தற்போது நடைபெறும் ஆறில் மறைந்த ஜீவனாதிபதி புதன் புக்தி முடிந்ததும் நல்லவேலை தூர இடங்களில் கிடைக்கும். வரும் ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு வேலையில்லாமல் இருக்கமாட்டார். திருமணம் ராகுதசை சுக்கிரபுக்தியில் 2017 இறுதியில் அல்லது 2018 ஆரம்பத்தில் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்ணே அமைவார்.
பெ. சண்முகம், ஈரோடு.
கேள்வி :
மகனுக்கு எப்போது திருமணம்? மருமகள் எவ்வாறு அமைவார்? வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா?
ரா சந்
ராசி      சூ,சு
பு
 குரு செ,சனி
பதில்:
(மீனலக்னம் மிதுனராசி மூன்றில் ராகு ஐந்தில் சூரி சுக் ஆறில் புத எட்டில் செவ்   சனி பத்தில் குரு 26-7-1984 10.10 இரவு திருச்சி )
எட்டில் செவ்வாய் சனி அமர்ந்து ஆறில் புதன் மறைந்ததால் களத்திர தோஷமும், ராசிக்கும் லக்னத்திற்கும் ஐந்தாமிடத்தில் ஆறு எட்டுக்குடையவர்கள் அமர்ந்து குருவிற்கு கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டதால் கடுமையான புத்திர தோஷம் ஏற்பட்டுள்ளதாலும் மகனுக்கு திருமணம் தாமதமாகிறது. 33 வயது முடிந்து திருமணம் நடக்கும். புதனைக் குரு பார்ப்பதால் நல்ல மருமகள் அமைவார். ஏழுக்குடையவன் மறைந்து பதினொன்றுக்குடையவன் உச்சமானதால் இரண்டு திருமண அமைப்பு உள்ளது. அனுபவமுள்ள ஜோதிடரிடம் ஜாதக அனுகூலப் பொருத்தம் பார்த்து இணைக்கவும்.
எம். கார்த்திகேயன், பாண்டிச்சேரி.
கேள்வி :
ஐந்து ஆண்டுகளாகப் பெண் பார்த்தும் திருமணம் அமையவில்லை ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருக்கிறதா? அதற்கு பரிகாரம் உண்டா? முப்பது வயதிற்கு மேல் திருமணம் செய்ய ஜாதகம் பார்க்கத் தேவையில்லை என்கிறார்கள். அது உண்மைதானா? எனக்கு எப்போது திருமணம்?
சந் ரா
ராசி சூ,பு சுக்
குரு செ,சனி
பதில்:
(மகர லக்னம் மீனராசி ஐந்தில் ராகு ஏழில் சூரி புத சுக் பத்தில் செவ் சனி பனிரெண்டில் குரு 18-7- 1984 6.30 மாலை பாண்டி)
மேலே உள்ளவருக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும். ராசிக்கு எட்டில் செவ்வாய் சனி அமர்ந்தது களத்திர தோஷம் என்பதோடு ஐந்தில் ராகு அமர்ந்து பனிரெண்டில் குரு மறைந்ததும் புத்திர தோஷம். முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். 33 வயதில் திருமணம் நடக்கும். முப்பது வயதிற்கு மேல் என்ன? நம்பிக்கையில்லாவிட்டால் எந்த வயதிலுமே ஜாதகம் பார்க்கத் தேவையில்லை.
ஜோதிடம் என்பது விஞ்ஞானம்தான் என்று எப்போது ஏற்றுக் கொள்ளப்படும்?
எஸ். செந்தில்குமார், சேலம்.
கேள்வி:
ஏற்கனவே இரண்டு முறை கடிதம் எழுதியும் பிறந்த நேரம் எழுதாததால் தாங்கள் பதில் தரவில்லை. இந்த முறை பிறந்த நேரம் எழுதியிருக்கிறேன். எதிர்காலம் எப்படி? ஆயுள்பாவம் எவ்வாறு உள்ளது? மணவாழ்வில் ஒற்றுமையில்லா நிலை ஏன்? சொந்தத்தொழில் செய்யலாமா? தங்களின் மேலான வழிகாட்டுதலை எதிர்நோக்கியுள்ளேன்.
பதில்:
எந்த ஜோதிடர் ஜாதகத்தில் நாழிகைக் கணக்கை மட்டும் எழுதி பிறந்த நேரத்தைக் குறிக்காமல் விடுகிறாரோ அவர் அந்த ஜாதகத்தைக் கணிப்பதில் தவறு செய்திருக்கிறார் என்று அர்த்தம். அந்தத் தவறை அடுத்த சோதிடர் கண்டு பிடித்து விடக்கூடாது என்றுதான் பிறந்த நேரத்தை மறைக்கிறார்.
எந்த ஒரு தகப்பனும் என் குழந்தை முப்பத்திரண்டு நாழிகைக்குப் பிறந்தது, நாற்பத்தி ஐந்தரை நாழிகைக்குப் பிறந்தது என்று போய் ஜோதிடரிடம் சொல்வதில்லை. காலை ஆறுமணிக்குப் பிறந்தது, இரவு எட்டு மணிக்குப் பிறந்தது என்றுதான் சொல்வார். அப்படியிருக்கையில் உதயாதி நாழிகைக்குப் பக்கத்தில் பிறந்த நேரத்தை எழுதுவதால் ஜோதிடரின் பேனா மை முழுக்கக் காலியாகி விடுவதில்லை.
பிறந்த நேரம், பிறந்த இடத்தைக் குறிக்காத ஜாதகங்கள் முழுமையானது அல்ல. இவையில்லாமல் யாராலும் பலன் சொல்ல முடியாது. ஜாதகமே தவறாக இருக்குமோ என்று சந்தேகம் வந்துவிட்டால் பலன் சொல்லி என்ன பிரயோஜனம்? இது போன்ற ஜாதகங்களுக்குப் பதில் சொல்லி பலன் தவறினால் சொல்லும் ஜோதிடருக்குத் தானே கெட்டபெயர்?
ஜாதகத்தில் பிறந்த நேரம் குறிக்காததால் தாய்தந்தையர் மறைவிற்குப் பிறகு தனது நேரத்தை அறியமுடியாமல் தவிப்பவர்கள் எத்தனையோ பேர்.,,! பிறந்த நேரம் மறைப்பது, ஜோதிடத்தை முழுமையாக அறியாமல் துருவகணிதம் எனும் மோசடியை மட்டும் வைத்துக் கொண்டு உன் கூடப் பிறந்தவர்கள் இத்தனை பேர், உன் அம்மா கூடப் பிறந்தவர்கள் இத்தனை பேர் என்று சரியாகச் சொல்லி பலன் சொல்வதில் திணறுவது போன்ற செய்கைகளால்தான் இந்த அபாரமான தெய்வீக விஞ்ஞானக் கலைக்கு மூடநம்பிக்கை என்ற பெயருடன் இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது.
ஆனால் இந்தக் குறைகள் எதுவும் இல்லாமல் தன்னை மட்டுமே நம்பும் இளைய தலைமுறை ஜோதிடர்கள் பெருகி வருவது ஜோதிடக்கலைக்கு நல்லகாலம் பிறந்து விட்டது என்பதைக் காட்டுகிறது. என்றேனும் ஒருநாள் இந்தக்கலையிலும் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஜோதிடமும் ஒருவகை காலவியல் விஞ்ஞானம்தான் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பது உறுதி.
உங்களுக்குத் துலாம் லக்னம் கடக ராசியாகி (12-10-1971 7.10 காலை ராசிபுரம்) லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று ராசிநாதனும் ராசியில் அமர்ந்து ஆயுள்காரகன் சனி எட்டில் அமர்ந்து குருவும் எட்டாமிடத்தைப் பார்த்ததால் தீர்க்காயுள். அதேநேரத்தில் ஆறுக்குடைய குரு இரண்டில் அமர்ந்து ஆறாமிடத்தைப் பார்த்ததால் கடன் நோய் தொல்லையுண்டு.
ராசிக்கு ஏழில் செவ்வாய் ராகுவுடன் அமர்ந்து லக்ன ஏழு, ராசிக்கு இரண்டைப் பார்த்து லக்னத்துக்கு இரண்டில் ஆறுக்குடையவன் அமர்ந்து அந்த வீட்டை சனியும் பார்த்து மனைவி மற்றும் குடும்பவீடுகள் கெட்டதால் மணவாழ்வில் ஒற்றுமை இருக்காது. அதேநேரத்தில் தவறு உங்களிடம்தான் இருக்கும்.

தற்போது சுக்கிரதசையில் விரயத்தில் இருக்கும் சூரியபுக்தி நடப்பதால் தொழில் நன்றாக இருக்காது. அடுத்த வருடம் மே மாதம் ஆரம்பிக்க இருக்கும் ஜீவனாதிபதி சந்திர புக்தியில் சொந்தமாக தொழில் செய்வீர்கள். அது நன்றாக இருக்கும். லக்னாதிபதி தசை நடப்பதால் எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *