adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 140 (20.6.2017)

வி. ராம்குமார், அயன்புரம்.

கேள்வி :

வக்கீல், மளிகைக் கடை, அரசியல் என மூன்று பணிகளைச் செய்துவருகிறேன். அரசியலில் முக்கிய பதவிவாய்க்குமா? வக்கீல் தொழிலை நம்பி இருக்கலாமா? எப்போது திருமணம்? மனக்குழப்பம் தீர வழி காட்டுங்கள்.

 சந்
ராசி
ல,சூ.பு குரு,கே சனி சுக், செவ்
 பதில் :

(விருச்சிக லக்னம், மிதுன ராசி. 1-ல் சூரி, புத, குரு, கேது. 11-ல் சுக், செவ். 12-ல் சனி. 23.11.1983, காலை 7.10, சென்னை)

பனிரெண்டாம் வீட்டில் உச்சமாகி, நவாம்சத்தில் குருவுடன் இணைந்து சுபத்துவமான சனியின் தசை நடப்பதாலும், பொய் சொல்லி பிழைக்க வைக்கும் கிரகமான சனி, வாக்கு ஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பதாலும் மற்ற இரண்டு தொழில்களை விட வக்கீல் தொழிலே உங்கள் வருமானத்திற்கு ஏற்றது. அரசியல் முன்னேற்றம் இப்போது இல்லை. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு மேல் திருமணம் நடக்கும்.

ஜெ. ஜெயலட்சுமி, சென்னை - 87.

கேள்வி :

திருமணமாகி 9 வருடங்கள் ஆகியும் மழலைச் செல்வம் மட்டும் திருமணப் பரிசாக இன்னும் கிடைக்கவே இல்லை. எத்தனையோ மருந்தமாத்திரை, மருத்துவமனை, கோவில்கள் சென்றும் பலன்கள் மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது. ஜோதிடர்கள் ஆவணி, வைகாசி, ஐப்பசி என்று தான் சொல்கிறார்கள். மாதங்கள் வருகிறது. மகிழ்ச்சிதான் வருவது இல்லை. எனக்கு கர்ப்பப் பையிலும், அவருக்கு அணுக்களிலும் பிரச்சினை உள்ளது. வியாபாரத்தில் சம்பாதிக்கும் அனைத்துப் பணமும் விரயமானதுதான் மிச்சம். எனது மாமியார் வீட்டில் அனைவரும் என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் வைத்து இருக்கின்றனர். இப்படி ஒரு நல்ல குடும்பத்திற்கு ஒரு வாரிசைப் பெற்றுத் தர முடியவில்லையே என்றுமனம் புலம்புகிறது. ஜாதகத்தை பார்த்து எங்களுக்கு எத்தனை பிள்ளைகள், மருத்துவம் பார்த்தால்தான் மழலை எனில் எப்போது உரியபலன் கிடைக்கும் அல்லது தத்து எடுத்து வளர்க்கும் யோகம் உண்டா? என்று சொல்லும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

பதில் :

அனுப்பப்பட்டுள்ள கணவன்-மனைவி இருவரின் ஜாதகமும் தவறான வாக்கியப் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது,. இரண்டு ஜாதகத்திலும் பிறந்த நேரம் குறிப்பிடப்பட வில்லை. பிறந்த நேரம் குறிப்பிடாத ஜாதகத்தில் நிச்சயம் தவறு இருக்கும். அந்த ஜாதகங்களை நான் நம்புவது இல்லை. பிறந்த நேரத்தைக் குறிப்பிட்டு மீண்டும் கடிதம் எழுதவும். பதில் தருகிறேன். இதுபோல பிறந்த நேரம் இல்லாமல் ஜாதகம் மட்டும் அனுப்புவதால்தான் நிறையக் கேள்விகளை பதில் தர தேர்ந்தெடுத்தும் என்னால் பதில் சொல்ல முடியாமல் போகிறது.

ஆர். பன்னீர்செல்வம், ஆத்தூர், சேலம்.

கேள்வி :

திக்குத் தெரியாத காட்டில் தறிகெட்டு ஓடும் காளையைப் போலவாழ்க்கை ஏனோதானோ என்று ஓடிக் கொண்டு இருக்கிறது. நிலையில்லாத தொழில், பற்றாக்குறை வருமானம், பிடிப்பில்லா வாழ்க்கை. இதுதான் இன்றைய நிலை. பெண் பிள்ளைகளோ வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வளர வளர மனதில் பயமும்வளர்ந்து கொண்டே இருக்கிறது. அரைகுறையாகத் தெரிந்த ஜோதிடத்தில், பிள்ளைகளின் ஜாதகத்தில் ஆயிரம் சந்தேகங்கள். சொந்தத்தொழில் செய்யலாமா? குழந்தைகளின் சமராகு தசை தீமைசெய்யுமா? துணி வியாபாரம் செய்யலாமா? சூரியனோடு இணைந்து அஸ்தமனமான குருவால் நன்மை செய்ய முடியுமா? ஒரே குழப்பமாக உள்ளது. அனைத்தையும் தெளிய வையுங்கள் குருதேவா....

சந், சனி
ரா ராசி
பு சூ,சு குரு செ
பதில் :

(தனுசு லக்னம், மேஷ ராசி. 3-ல் ராகு. 5-ல் சனி. 10-ல் செவ். 11-ல் சூரி, சுக், குரு. 12-ல் புத. 13.11.1970, காலை 9.15, ஆத்தூர்).

ஒரு கிரகம் அஸ்தமனம் ஆகிறது என்றால் அது ஒளி மங்கிப் போகிறது என்று அர்த்தம். அந்த நிலையில் அது இன்னொரு ஒளி பொருந்திய சுப கிரகத்துடன் தொடர்பு கொண்டால் இழந்த வலுவை திரும்ப அடையும். இதற்காகத்தான் பரிவர்த்தனை ஆன அஸ்தமன கிரகம் சுய பலத்தை திரும்ப அடைவதாக நமது கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது.

உங்களுடைய ஜாதகத்தில் குரு அஸ்தமனம் ஆகி இருந்தாலும், இன்னொரு சுப கிரகமான பவுணர்மிச் சந்திரனின் பார்வையிலும், ஆட்சி பெற்ற சுக்கிரனுடனும் இணைந்து தனது சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால் வலுவாகவே இருக்கிறார். ஆனால் அவரை நீச வக்கிர சனி பார்ப்பது குற்றம். அதோடு குருவும், சனியும் சம சப்தமமாகப் பார்த்து கொண்டாலே அதில் சனிதான் அதிகமான நன்மை அடைவார். சனி தசைதான் சுபத்துவம் பெற்று நன்மைகளைச் செய்யும்.

தற்போது குருவின் தசை நடந்து கொண்டிருந்தாலும் அஷ்டமச்சனி உங்களுக்கு நடப்பதால் வியாபாரத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்காது. அதே போல ஜீவனாதிபதி பனிரெண்டில் மறைந்திருக்கிறார் என்று நீங்கள் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால் அவர் செவ்வாயுடன் பரிவர்த்தனை அடைந்திருப்பதால் பத்தாம் வீட்டில் உச்சமாக இருக்கின்ற நிலையைதான் பெறுகிறார்.

“இருக்கு ஆனால் இல்லை” என்பது போன்ற ஜாதகம் உங்களுடையது. அனுபவம் உள்ளவர்களுக்கே கணிப்பதில் தடுமாற்றத்தை உங்கள் ஜாதகம் கொடுக்கும். நீசனை நீசன் பார்ப்பதாலும், பவுர்ணமி யோகம், பரிவர்த்தனை யோகம் உள்ளதாலும் சில குறைகள் இருந்தாலும் உங்கள் ஜாதகம் யோகமானது தான்.

அஷ்டமச் சனி முடிந்த பிறகு அடுத்த வருடம் முதல் தொழில் நிலைமைகள் சீரடையும். குரு தசையை விட சனி தசை நன்றாக இருக்கும் என்பதற்கு பவுர்ணமிச் சந்திரன், ஆட்சி பெற்ற சுக்கிரன், குரு இவர்களோடு தொடர்பு கொண்ட சனியே சாட்சி. சம ராகு தசை யோக இடங்களில் ராகு இருந்தால் தீமைகளைச் செய்யாது. எனவே குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்பட வேண்டாம். அடுத்த வருடத்தில் இருந்து நிலைமைகள் சீராகும்.

ஜாதகம் வலுவாக இருப்பதால் குழந்தைகளுக்கான சுப காரியங்களை ஒரு தந்தைக்குரிய கடமையோடு சிறப்பாகவே செய்யும் அளவிற்கு பொருளாதார வசதியுடன் இருப்பீர்கள். குருவிற்கு அடுத்த சனி, புதன் தசைகள் யோகத்தை தரும் அனைத்து லட்சணங்களுடன் இருப்பதால் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.

பொன்ராஜ், உத்தமபாளையம்.

கேள்வி :

காவல்துறையில் பணி புரிகிறேன். 20 வயதில் இருந்தே நோயோடு போராடுகிறேன். தற்போது வாழ்க்கைத் துணைவியால் 14 லட்சம் வரைவிரயமாகி, இன்றுவரை கடனில் இருந்து விடுபட முடியவில்லை. மீண்டும் 2015 முதல் மறுபடியும் நோய்த் தொந்தரவுகள் ஆரம்பித்துள்ளது. வாழ்க்கை முழுவதும் கடனும், நோயுமாக இருப்பது பூர்வ ஜென்ம சாபமா ? விதியா அல்லது எனது மதியால் வந்ததா? என் ஜாதகம் பாவ ஜாதகமா? இன்னும் எத்தனை வருடம் இதேபோல கடன், நோயோடு போராடவேண்டும்? வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும், சுகமும் இல்லை என்றாகி விட்டது. எப்போது நன்றாக வாழ்வேன் என்று நல்ல பதில் தரும்படிஜோதிட ஞானியை கேட்டுக் கொள்கிறேன்.

சனி
ரா ராசி சுக்
 சூ, கே
செ சந்,பு குரு
பதில் :

(மகர லக்னம், கன்னி ராசி. 2-ல் ராகு. 4-ல் சனி. 7-ல் சுக். 8-ல் சூரி, கேது. 9-ல் சந், குரு, புத. 12-ல் செவ். 14.9.1969, மாலை 3.45, நெல்லை)

நடப்பது அனைத்தும் சென்ற பிறவியின் கர்மா என்றுதான் ஜோதிடம் சொல்கிறது. ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறு, எட்டுக்குடையவர்கள் வலுப் பெறக் கூடாது என்று அடிக்கடி எழுதி வருகிறேன்.

உங்களுக்கு மகர லக்னமாகி, லக்ன நாயகன் சனிபகவான் நீசமான நிலையில் ஆறுக்குடைய புதன் உச்சமும், எட்டுக்குடைய சூரியன் ஆட்சியுமானது தவறு. லக்னாதிபதி வலுவிழந்தால் ராசிப்படி பலன்கள் நடக்கும் என்ற விதிப்படி ராசிக்கு பத்தாமிடத்தை செவ்வாய் வலுப் பெற்றுப் பார்ப்பதாலும், சிம்மம் வலுவாக இருப்பதாலும் காவல்துறை பணியில் இருக்கிறீர்கள்.

அதேநேரத்தில் லக்னம் வலுவிழந்தாலும், லக்னத்தைக் குருவும், இன்னொரு சுபரான சுக்கிரனும் வலுப் பெற்று பார்ப்பது ஒரு மிகச் சிறந்த பாதுகாப்பு. கடந்த 10 வருடங்களாக சூட்சும வலுவும், சுபத்துவமும் பெறாத சனியின் தசை நடப்பதால் கடன், நோய் தொந்தரவுகள் உங்களுக்கு அதிகமாகவே இருக்கின்றன.

மனைவி, குழந்தைகளில் யாருக்காவது அஷ்டம, ஏழரைச்சனி நடந்து கொண்டு இருந்தால் கடன் தொல்லைகள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஆரோக்கியப் பிரச்சினைகளும்,, கடன் தொல்லைகளும் இருக்கத்தான் செய்யும். 2020 முதல் அனைத்தும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். சனியை சூட்சும வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே அவைகளை மாலைமலரில் எழுதி இருக்கிறேன்.

கணவருடன் நேரில் வர வாக்கு கொடுங்கள்.

க. மலர்விழி கணேசன், மதுரை.

கேள்வி :

அய்யனே... என் ஆசானே, மூளையில் ரத்தக் கசிவு என்று டாக்டர்கள் கைவிட்ட நிலையில் மரணப் படுக்கையில் கணவர் இருந்தபோது இரண்டு ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுடன் உங்களிடம் நேரில் வந்து கதறி அழுதேன். கணவருக்கு ஒன்றும் ஆகாது பிழைத்துக் கொள்வார் என்று சொல்லி சில தானங்களையும், வழிபாடுகளைச் செய்யச் சொன்னீர்கள். யார் அந்த ஜோதிடர் என்று டாக்டர்களே கேட்கும் அளவிற்கு கணவர் குணம் அடைந்தார். இப்போது மறுபடி வேறு ஒரு பிரச்னை வந்திருக்கிறது. மருத்துவர்கள் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்கிறார்கள். நண்டும், சிண்டுமான குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில் எதையும் நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் பழைய துணியைக் கூட விற்கிறேன். உங்களை நேரில் வந்து பார்க்க சக்தி இல்லை. கணவருடன் என்னை வந்து நேரில் பார்ப்பாய் என்று ஒரு வாக்கு தாருங்கள். அது என் குலதெய்வத்தின் வாக்காக இருக்கும். இதை ஒரு மகளின் தந்தி போல பாவித்து பதில் கொடுங்கள்.

சந்   ரா  சனி
ராசி  குரு
ல,கே சூ, சுக் பு, செவ்
பதில் :

(மகனுக்கு விருச்சிக லக்னம், மீனராசி 1ல் கேது, 7ல் ராகு, 8ல் சனி, 9ல் குரு, 11ல் புத, செவ், 12ல் சூரி, சுக் 20-10-2002 காலை 8.45 மதுரை)

கவலைப்படாதே அம்மா. நடப்பவை அனைத்திற்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளக்கும் பரம்பொருள் உன்னையும், குழந்தைகளையும் ஒருபோதும் கைவிட மாட்டார். நடக்கும் அனைத்தையும் பார்த்து நீயும் கிட்டத்தட்ட ஒரு முடிவிற்கு வந்திருப்பாய். உன் ஜாதகமும் அதைத்தான் சொல்கிறது.

உன் மூத்த மகனின் ஜாதகப்படி விருச்சிக லக்னம் மீன ராசியாகி தந்தையைக் குறிக்கும் பிதுர்க்காரகன் சூரியன் நீசமாகி, லக்னத்திற்கு பனிரெண்டிலும், ராசிக்கு எட்டிலும் மறைந்த நிலையில் தற்போது கேது தசையில் விரயத்தில் இருக்கும் சூரியனின் புக்தி நடப்பதால் வரும் ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி வரை உனக்கு நல்ல பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் அம்மா. வரும் அமாவாசையின் நெருக்கம் உனக்கு கருப்பாகவே இருக்கும்.

நடக்கும் அனைத்தும் ஏதோ ஒரு நல்லதையோ, விடிவையோ நோக்கித்தான் நகர்கிறது என்றுதான் நமது புனித நூல்கள் சொல்கின்றன. உனக்கும் எனக்கும் தெரியவில்லை என்பதால் அது இல்லை என்று ஆகிவிடாது. ஜாதகப்படி நீயே சிறிது கலங்கினாலும் சட்டென்று சுதாரித்துக் கொள்ளும் தைரியசாலிதான்.

உலகம் யாரையும் அனாதையாக விட்டு விடுவதில்லை. யாருக்கும் யாரோ ஒருவர் ஆறுதலாக இருக்கத்தான் செய்கிறார்கள். உனக்கு உன் குழந்தைகளின் ஆதரவு காலம் முழுக்க நிறைவாக இருக்கும். இந்த திக்கற்ற சூழ்நிலையில் எதையும் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் திறனை பரம்பொருள் உனக்குத் தந்திருக்கவே செய்திருக்கிறார். கவலைப்படாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *