adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் -112 (22.11.2016)

கே. காமராஜ், திருச்சி -8.

கேள்வி :

சிறுவயது முதல் மொத்த விற்பனைக் கடை வைத்திருக்கிறேன். வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறதுஇன்னும் திருமணமாகவில்லை. 44 லட்சம் கடன் இருக்கிறது. வியாதி, மன உளைச்சல், விரக்தி என வாழ்வு நடக்கிறது. இறைவன் எனக்கு கொடுத்த இந்தத் தொழில் சரிதானா? அதிகாலை மூன்று மணி முதல் மாலை ஏழுமணி வரை கடை திறந்திருக்கிறேன். வியாபாரம் ஆகவில்லை. எதிர்பார்த்த வியாபாரம் நடந்தால் கடனை மூன்று வருடத்தில் அடைத்து விடுவேன்.

உங்கள் கட்டுரைகளில் பாவகிரகம் சூட்சுமவலு அடைய வேண்டும் என்று சொல்கிறீர்கள். எனது ஜாதகத்தில் சனி எந்த நிலையில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முடியவில்லைசனிபகவான் யோகராக இருந்தாலும் தீமைகளைச் செய்வார் என்று படித்தவுடன் குழப்பத்தில் இருக்கிறேன். எனது ஜாதகத்தில் சனி எப்படி இருக்கிறார்? எனது கடனையும், தொழில் முடக்கத்தையும் தீர்ப்பாரா? என் ஜாதகம்யோக ஜாதகமா? அல்லது வெறும் எண்ணங்களை மட்டுமே உற்பத்திசெய்யும் ஜாதகமா? விளக்கம் தரக் கோரி எனது மானசீக குருவின் பாதத்தில் தலை வைத்து வணங்குகிறேன்.

குரு செவ், கேது
ராசி சனி
சந் சூரி,புத சுக்
லக்
பதில் :

(துலாம் லக்னம் மகர ராசி, 7-ல் குரு. 8-ல் செவ், கேது. 10-ல் சனி. 11-ல் சூரி, புத, சுக். 21.8.1975, 10.05 காலை, திருச்சி)

துலாம் லக்னமாகி வாழ்க்கையின் மிக முக்கிய பருவமான 25 வயதில் இருந்து, கடன், நோய், எதிர்ப்புகளை மட்டுமே தரும் குருவின் தசை நடந்ததால் இதுவரை எதுவுமே கை கூடவில்லை. தற்போது யோகாதிபதியான சனியின் தசையில் சுயபுக்தி நடந்து கொண்டிருக்கிறது. துலாத்திற்கு சனி எந்த நிலையில் இருந்தாலும் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்.

லக்னாதிபதியும், ராசிநாதனும் கெடுபலன்களைத் தருவதில்லை என்பது ஜோதிடவிதி. அதன்படி உங்கள் மகர ராசிக்கு அதிபதியான சனியின் தசை உங்களை முழுமையாக கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கும். ராசிக்குப் பத்தாமிடத்தை குரு பார்த்து லக்னத்திற்குப் பத்தில் சனி இருப்பதால் நீங்கள் பார்க்கும் தொழில் பொருத்தமானதுதான்.

எனது பாவக்கிரகங்களின் சூட்சுமவலு தியரிப்படி சனி கடகராசியின் மூன்றாவது டிகிரியில் அமர்ந்து, பவுர்ணமியை நெருங்கிக் கொண்டிருக்கும் சுபச் சந்திரனின் பார்வையோடு, நவாம்சத்தில் சுக்கிரனோடு இணைந்து, சொந்த நட்சத்திரத்தில் சூட்சும வலுவோடும், சுபத்துவத்தோடும் அமர்ந்திருக்கிறார். இந்த சனிதசை உங்களுக்கு சுயபுக்திக்குப் பிறகு மிகப்பெரிய யோகங்களையும் லாபங்களையும் தரும்.

லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், கேது, ராசிக்கு ஏழில் சனி, இரண்டில் ராகு என்ற அமைப்பால் இதுவரை திருமணம் நடக்கவில்லை. சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். சனிதசை சுக்கிர புக்திக்குள் அனைத்து கடன்களும் அடைந்து சொந்தவீடு, கடை என வாழ்க்கையில் முழுமையாக செட்டில் ஆவீர்கள்.

. கார்த்திகேயன், வேலூர் – 7.

கேள்வி :

அரசுப்பணியில் இருந்தும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சொந்தவீடு வாங்கும் யோகம் உண்டா? ராகுதசை ஆரம்பித்த நாள் முதல் சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்கிறேன். பணி புரியும் அலுவலகத்தில் பெண்களால் அடிக்கடி தொல்லைகளும், அவமானங்களும் ஏற்படுகிறது. ஏன் இந்த நிலை? அடுத்து வரும் குருதசையிலாவது நிம்மதி கிடைக்குமா? பொருளாதார உயர்வு இருக்குமா? குருதசை எனக்கும் என் குடும்பத்திற்கும் சுபிட்சத்தை கொடுக்குமா?

சனி சந்  புத
ராசி லக்,சூ குரு
சுக்
செவ், கேது
பதில் :

(கடக லக்னம். மேஷ ராசி. 1-ல் சூரி, குரு. 2-ல் சுக். 4-ல் செவ், கேது. 9-ல் சனி. 12-ல் புத. 30.7.1967, காலை 7 மணி, ஆம்பூர்)

ராசிக்கு பத்தாமிடத்தை சூரியன் பார்த்து, சிம்மம் வலுப்பெற்றதால் அரசுப் பணியில் இருக்கிறீர்கள். கடக, சிம்ம லக்னங்களுக்கு ராகுதசை அவயோகம் தரும். இந்த இரு லக்னங்களுக்கும் ராகு நன்மைகளை செய்ய வேண்டுமென்றால் அவர் ஒரு இக்கட்டான அமைப்பில் இருக்க வேண்டும்.

உங்களுக்கு மேஷராகு என்றாலும் லக்னாதிபதி சந்திரனை கிரகணம் செய்து, சுக்கிரனின் வீட்டில் இருக்கும் கேதுவின் சாரத்தில் அமர்ந்து, ராகுவிற்கு வீடு கொடுத்த செவ்வாயும் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்ததால் ராகு தசை முழுக்கவே பெண்களால் தொந்தரவுகளும், அவமானங்களுக்கும் இருக்கும். மனைவிக்கு கடந்த ஏழு வருடங்களாக ஏழரைச்சனி நடப்பதும் உங்களுக்கு நன்மைகளை செய்யாது.

ஒருவருக்கு ராகுதசை ஆரம்பத்தில் நன்மைகளைச் செய்யாவிடில் கடைசி மூன்று புக்திகளான சூரி, சந்திர, செவ்வாய் புக்திகளில் நல்லது நடக்கும் என்பதை ராகுவின் சூட்சுமங்களில் விளக்கி இருந்தேன். அதன்படி அடுத்த வருடம் முதல் உங்களுக்கு நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். குருபகவான் உச்சமும், திக்பலமும் பெற்றிருப்பதால் சொந்த வீட்டினை தருவார். குருதசை நல்ல யோகங்களை செய்யும்.

ஆர். ஜனார்த்தனன், முதலியார் பேட்டை.

கேள்வி :

மகனுக்கு 5 வருடங்களாக பெண் பார்த்து வருகிறோம். திருமணம் தாமதமாகிறது. நிறைய பரிகாரங்கள் செய்து விட்டோம். எப்போது திருமணம் நடக்கும்?

ராசி
சந்,சுக் செவ்
குரு, கேது ல,பு சூ,சனி
பதில் :

(துலாம் லக்னம், சிம்ம ராசி. 1-ல் சூரி, புத, சனி. 2-ல் குரு, கேது. 11-ல் சுக், செவ். 1.11.1983, காலை 7.05, பாண்டி)

நீங்கள் செய்ததாகச் சொல்லும் பரிகாரங்கள் அனைத்தும் பொதுவான பரிகாரங்கள். உங்கள் மகனின் தோஷத்திற்கான முறையான பரிகாரங்கள் அல்ல. பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு பெற்றோர்கள் சென்று விளக்கேற்றி வைப்பதால் மட்டும் தோஷம் விலகி விடாது. நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளால் பரிகாரங்களுக்கென குறிப்பிடப்பட்ட சில கோவில்களில் சம்பந்தப்பட்டவர் சென்று வழிபடுவதும், கிரக வலுவைக் அதிகரிக்கும் கிரகவாகனம், நிறம், தான்யம் போன்றவைகளை அவை இருக்கும் ராசியின்படி முறையாக கையாள்வது மட்டுமே தோஷங்களை நிவர்த்திக்கும்.

பரிகாரங்களைச் செய்ய அனுமதிப்பதும் பரம்பொருள்தான் என்பதால் கடுமையான தோஷம் இருக்கும் சிலருக்கு, காரியம் கைகூட அமைப்பு இருக்கும் வேளையில் அனைத்தும் அருளப்படும். மற்றபடி ஒன்பது வாரம் நெய் விளக்கு ஏற்றுவது, அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது என்பதெல்லாம் மாலைமலரில் ஞாயிற்றுக்கிழமை நான் எழுதும் ராசிபலன் போன்றதுதான். எல்லோருக்கும் பலிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

உங்கள் மகனுக்கு லக்னத்திற்கு ஏழை சனி பார்க்க. ராசிக்கு ஏழை செவ்வாய் பார்ப்பதும், இரண்டு, எட்டில் ராகு இருப்பதும் தாமத திருமண அமைப்பு. ஏழாமிடத்தை உச்சசனி பார்த்து பதினொன்றுக்குடையவன் நீசபங்கமானது சீக்கிரமாக திருமணம் செய்தால் இரண்டு திருமணம். மகன் ஜாதகம் யோகமாக இருப்பதால் இரண்டு வாழ்க்கை அமையக்கூடாது என்பதற்காக திருமணம் தாமதமாகிறது.

கடந்த இரண்டாண்டு காலமாக நடைபெறும் குரு புக்தியும் துலாம் லக்னத்திற்கு சுபகாரியம் நடப்பதை தடுக்கும். அடுத்த வருடம் பிப்ரவரியில் ஆரம்பிக்க இருக்கும் சனி புக்தியில்தான் திருமணம். சனி சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் தாம்பத்திய சுகம் கிடைக்கும் அமைப்பு அப்போதுதான் உருவாகிறது. லக்னாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து வலுவிழந்து இருப்பதால் சுக்கிரனுக்கான முறையான பரிகாரங்களை செய்யவும்.

வாக்கியப் பஞ்சாங்கமா? திருக்கணிதமா எது சரி..?

சி . நீலகண்டன் , கோட்டார் .

கேள்வி :

மகள் கல்யாணம் தாமதமாகி வருகிறது. எப்போது நடக்கும்? வாக்கிய பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்ட ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். தோஷங்கள் ஏதாவது இருக்கிறதா?

சந் லக்
ராசி சுக்
சனி குரு, புத
ராகு சூரி, செவ்
பதில் :

(மிதுன லக்னம். மீன ராசி. 2-ல் சுக். 3-ல் குரு புத. 4-ல் சூரி, செவ். 7-ல் ராகு. 8-ல் சனி. 24.9.1991, அதிகாலை 0.40, நாகர்கோவில்)

திருக்கணித பஞ்சாங்கமே சரியானது என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். வாக்கியப் பஞ்சாங்கம் பிழையானது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் திருக்கணிதமே பின்பற்றப்படுகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் திருக்கணிதப்படிதான் கோவில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும்தான் வாக்கியப் பஞ்சாங்கப்படி தவறான திதி நட்சத்திரங்களில் கோவில் திருவிழாக்களும், கிரகப் பெயர்ச்சிகளும் நடத்தப் படுகின்றன, இது தெய்வ குற்றம். ( தமிழ்நாட்டிலும் சில கோவில்களில் திருக்கணிதம்தான் )

பஞ்சாங்கம் என்பது கிரகங்களின் இருப்பை சரியாகச் சொல்லும் ஒரு புத்தகம்தான். பூமியில் கிரகங்களின் நிலையை துல்லியமாகச் சொல்வது கிரகண நிகழ்வு. ராகு-கேதுக்களின் டிகிரி சுத்தமான நிலையும், சூரிய சந்திரர்களின் இருப்பும் சரியாகப் பொருந்தினால்தான் கிரகணம் ஏற்படும். ஆனால் வாக்கியப் பஞ்சாங்கத்தில் ராகு-கேதுக்களின் நிலை தவறாகக் கணிக்கப்படுவதால் வாக்கியம் சொல்லும் நேரத்தில் கிரகணம் வராது. எனவே திருக்கணித கிரகண நேரத்தை காப்பியடித்து வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடுகின்றன.

கிரக இருப்பை சொல்வதில் வாக்கியப் பஞ்சாங்கங்கள் தவறுகின்றன என்பதை உணர்ந்துதான் அதை வெளியிடுபவர்கள் சமீபத்தில் இதன் ஆதாரகர்த்தாவான வரருசியின் முறையைக் கைவிட்டனர். ஆனால் பல ஆண்டுகளாக கணித வித்தியாசங்களை திருத்தாமலே வெளியிட்டதால் இப்போது இந்த பிழைகளை எப்படி நேர் செய்வது என்று அவர்களுக்கே புரியவில்லை. எனவே இப்போதைக்கு வாக்கியப் பஞ்சாங்கங்கள் என்பது ஓட்டுனர் இல்லாத வாகனம் போலத்தான். ஓடும்வரை ஓடும்.

திருக்கணிதம் அப்படியல்ல. ஆரியபட்டரில் இருந்து வராஹாமிகிரர் வரை இந்த முறையே சரியானது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அது ஒவ்வொரு கிரக நிகழ்விலும் நிரூபிக்கப் படுகிறது. வாக்கியப் பஞ்சாங்கம் சொல்லும் கிரகநிலை அமைப்பில் ராக்கெட்டை அனுப்பினால் செவ்வாய்க்கு போவதற்குப் பதில் அது புதனுக்குத்தான் போகும்.

சமீபத்தில் உலகம் முழுக்க பொதுமக்களால் பார்க்கப்பட்ட சூரியனைப் புதன் கடந்த நிகழ்ச்சியினை திருக்கணிதம் டிகிரிக்கணக்கில் துல்லியமாக சொன்னது. ஆனால் வாக்கியப் பஞ்சாங்கமோ சூரியனின் பக்கத்திலேயே புதன் இல்லையென்று தவறாகச் சொன்னது. கோடிக்கணக்கான மக்கள் கண்டு களித்ததை விடவா ஆதாரம் வேண்டும்?

காஞ்சிக் கடவுளான மகாபெரியவர் எண்பது ஆண்டுகளுக்கு முன் தவறான வாக்கியப் பஞ்சாங்கங்களுக்கு ஒரு முடிவு காண முயற்சித்தார். அது தடைபட்டுப் போனது. ஆனாலும் அன்றிலிருந்து எண்பது வருடங்களாக காஞ்சிமடத்தில் திருக்கணிதம்தான் நடைமுறையில் இருக்கிறது. சகல வேதங்களிலும், வேதமொழியான சம்ஸ்க்ருதத்திலும் முழுமையான பாண்டித்யம் பெற்ற மகா பெரியவர் தனது ஸ்ரீமடத்திலேயே திருக்கணிதத்தைப் பின்பற்ற உத்தரவிட்டிருக்கிறார்கள் என்றால் அது தவறாகவா இருக்கும்?

வாக்கிய, திருக்கணித குழப்பத்தால் பாதிக்கப்படுவது ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கைதான். சாதாரண பொதுமக்கள் தனது குழந்தை பிறந்த நட்சத்திரத்தை இருவேறு பஞ்சாங்கங்கள் இரண்டு விதமாக சொல்லும்போது குழம்பித் தவித்து ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள்.

ஆயினும் ஜோதிடத்தின் மீதான விஞ்ஞானப் பார்வை வளர்ந்து வரும் இன்றைய சூழலில் வாக்கியம் துல்லியமானது அல்ல என்பதையறிந்த இளைய தலைமுறை ஜோதிடர்கள் திருக்கணித முறையையே பின்பற்றுவதால் வாக்கியங்கள் மெதுவாக மங்கி வருகின்றன. தவறான ஒன்று தானாகவே செல்வாக்கினை இழக்கும் என்பது காலத்தின் கட்டாயம்.

உங்கள் மகள் ஜாதகத்திலும் வாக்கியப்படி சனி ஏழாமிடத்தில் இருக்கிறார். இது தவறு. பொருத்தம் பார்க்கும்போது திருக்கணிதப்படி ஜாதகம் கணித்து சேர்த்து வைக்கவும். மகளுக்கு எட்டில் சனி, ஏழில் ராகு என்பதோடு ராசிக்கு ஏழில் செவ்வாய் இருப்பது தாமத திருமணத்திற்கான அமைப்பு. ஜாதகப்படி அவரது திருமணம் 28 வயதில் புதன் தசை ராகு புக்தியில் நடக்கும். அடுத்து வர இருக்கும் செவ்வாய் புக்தி மிதுனத்திற்கு யோகங்களை தராது என்பதாலும் நவாம்சத்தில் செவ்வாய் நீசமடைந்திருப்பதாலும் திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *