adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 139 (13.6.2017)

எஸ். செல்வம், இரும்பாடிமதுரை.

கேள்வி :

2010-ல் திருமணம் முடித்து நல்லவிதமாக போய்கொண்டிருந்த வாழ்க்கையில் 2012- ம்ஆண்டு வீடு வாங்க வேண்டும் என்று நானும், என் மனைவியும் முடிவுசெய்து அவளுடைய நகைகளை விற்று மற்றும் கடன் வாங்கி வீடு வாங்கினோம். பிறகு ஏற்பட்ட பிரச்னைகளால் என் மனைவி இரண்டு வயது மகனைக் கூட கருத்தில் கொள்ளாமல் 29.6.2013 அன்று மருந்துகுடித்து தற்கொலை செய்து கொண்டார். வீடு வாங்கி வீட்டுக்காரியை இழந்து விட்டேன். நான் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன். வீடுவாங்க வேண்டாம் என்று என் மாமியார் வீட்டில் சொன்னதைகேட்காதது மட்டும்தான் என் தவறு. இப்போது என்மீது மனைவியைதற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு உள்ளது. கடன் பிரச்சனைகள்கழுத்தை நெறிக்கின்றன. மகனின் எதிர்காலத்தை நினைத்தால்பயமாகவும் இருக்கிறது. 7- மிடத்தில் ராகு இருப்பதால் பார்க்கும்ஜோதிடர் எல்லாம் பயமுறுத்தவே செய்கிறார்கள். கடனும், வழக்கும் தீரஎந்த தெய்வத்தை வணங்க வேண்டும். கடன் தீருமா? வழக்கு சாதகமாகமுடியுமா?

ராசி  ரா
செவ் சந்  சூ, பு சுக்,குரு சனி
பதில் :

(மகர லக்னம், விருச்சிக ராசி. 7-ல் ராகு. 9-ல் சுக், குரு, சனி. 10-ல் சூரி, பு. 12-ல் செவ். 9.11.1980, மதியம் 12.40, மதுரை)

முதல்தாரத்தை குறிக்கும் ஏழுக்குடைய கிரகம் வலுவிழந்து, இரண்டாவது திருமணத்தை குறிக்கும் பதினொன்றாம் அதிபதி வலுத்தால் இரண்டு திருமணம் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். உங்கள் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சந்திரன் நீசமாகி, பதினொன்றாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறார்.

அதைவிட மேலாக களத்திரகாரகன் சுக்கிரன் நீசம் பெற்று, குரு, சனி இணைந்த நிலையில் 2012-ம் ஆண்டு ஏழரைச்சனி ஆரம்பித்ததால் நீசம் பெற்ற சுக்கிரன், தனது ஜட காரகத்துவமான வீட்டைக் கொடுத்து உயிர்க் காரகத்துவமான மனைவியைப் பிடுங்கி கொண்டார்.

உலகில் உள்ள நடுத்தர வயது எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் 2012-ம் ஆண்டு முதல் சந்தோஷமாக இல்லை. ஏதேனும் ஒரு வகையில் மன அழுத்தத்தில்தான் இருக்கிறீர்கள். உங்கள் விஷயத்தில் கூடுதலாக மகனுக்கும் அனுஷம் நட்சத்திரமாகி, மாதா காரகன் சந்திரன் நீசம், அஷ்டமாதிபதி சனி தசை நடப்பு, சந்திரனுக்கு சனி பார்வை என்ற அமைப்புடன், ஒரே வீட்டில் இருவருக்கு விருச்சிக ராசி என்பதால் இந்த துயரம் ஏற்பட்டது. விருச்சிகத்தை கணவன், மனைவி, மகன், மகள் எனக் கொண்ட எந்த ஒரு குடும்பமும் இப்போது நன்றாக இல்லை.

கவலைப்படாதீர்கள். இதை விடக் கஷ்டங்கள் இனிமேல் வரப் போவது இல்லை. வரும் தீபாவளி முதல் படிப்படியாக அனைத்தும் தீரத் துவங்கும். கடன் அடைபடுவதற்கான வழிமுறைகள் தெரிய ஆரம்பிக்கும். மனைவியை இழந்ததால் உண்டான வழக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தள்ளுபடியாகும். சுக்கிரன் யோகாதிபதியாகி பலவீனமாக உள்ளதால் சுக்கிரனுக்குரிய முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும். அவற்றை ஏற்கனவே மாலைமலரில் எழுதி இருக்கிறேன்.

டி. மகேஷ்குமார், திண்டுக்கல்.

கேள்வி :

தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிகிறேன். திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது. காரணம் என்ன? எப்பொழுது திருமணம் நடைபெறும்? சில ஜோதிடர்கள் தோஷம் உள்ளதுஎன்றும், சிலர் இல்லை என்றும் சொல்கிறார்கள். எனக்கு தோஷம்உள்ளதா? பரிகாரங்கள் என்ன?

 பு, செ சூ, ரா
 ல ராசி  சுக்
 சந்
குரு  சனி
பதில் :

(கும்ப லக்னம், சிம்ம ராசி. 4-ல் புத, செவ். 5-ல் சூரி, ராகு. 6-ல் சுக். 9-ல் சனி. 10-ல் குரு. 16.6.1983, இரவு 10.35, நெல்லை)

செவ்வாய், ராகு தோஷங்கள் உங்கள் ஜாதகத்தில் கிடையாது. ஆனால் ஏழுக்குடைய சூரியன், ராகுவுடன் ஒரே பாகை, கலையில் இணைந்தது தோஷம். அதோடு கும்ப லக்னத்திற்கு கடும் எதிரியான ஆறுக்குடைய சந்திரன் ஏழாம் பாவத்தில் அமர்ந்து, அவரைச் செவ்வாய் பார்ப்பதும் குற்றம். மிக முக்கியமாக சரியான திருமண காலத்தில் கும்பத்திற்கு வரவே கூடாத சந்திர தசை நடந்ததாலும் உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை.

தற்போது செவ்வாய் தசையில், சனிபுக்தி நடைபெறுகிறது. இருவருமே சுக்கிரனின் வீட்டில் இருந்தாலும், சஷ்டாஷ்டகமாக இருப்பதால் வரும் அக்டோபர் மாதம் வரை உங்களுக்குத் திருமணம் நடக்க வாய்ப்பு இல்லை. அடுத்து நடக்க இருக்கும் புதன்புக்தி, ராசிக்கு 2-க்குடையவன் என்பதாலும், சுக்கிரனின் வீட்டில் செவ்வாயோடு இணைந்து, குருபார்வை பெற்றிருப்பதாலும் அடுத்த வருட ஆரம்பத்தில் உங்களுக்கு திருமணம் நடைபெறும்.

ஏழுக்குடையவனை ராகு கிரகணம் செய்திருப்பதால், ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலையில் அய்யன் காளத்தி நாதனுக்கும், அன்னைக்கும் நடைபெற்றும் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொள்ளவும். சுக்கிரன் பலவீனமாக உள்ளதால் சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை கண்டிப்பாக செய்யவும்.

ஜி. சத்யராஜ், பாண்டிசேரி.

கேள்வி :

மாலைமலரில் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன் நான். எனது நண்பர் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் எனக்குஜோதிடத்தின் மீதும், உங்கள் பதில் மீதும் நம்பிக்கை உள்ளதால் இதைஎழுதுகிறேன். எனது நண்பர் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று ஆறு ஆண்டு காலமாக முயற்சி செய்து வருகிறார். ஒன்றும்நடக்கவில்லை. சொந்தபந்தங்கள் சினிமா வேண்டாம், ஏதாவது வேலைசெய் என்று சொல்கின்றனர். அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல்இயக்குனர் ஆவதுதான் எனது உயிர்மூச்சு என்று வாய்ப்புத் தேடிவருகிறார். இவர் டைரக்டர் ஆவாரா?

பதில்:

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவருக்கு ஜோதிடப்படி பதில் தரக் கூடாது. உங்கள் நண்பருக்கு காய்ச்சல் அடித்தால் நீங்கள் மாத்திரை சாப்பிட முடியாது.

து. சங்கர் நாராயணன், கோவை -47.

கேள்வி :

எனக்கு எல்லாமே என் அம்மா…. என் அம்மா…. என் அம்மா…. என்அம்மாதான் . கடந்த வருடம் என்னுடைய தாயார் திடீரென மாரடைப்பால் இறைவன் திருவடியை அடைந்தார். மூன்று வாரங்களுக்கு பிறகு என்தாயை நினைத்து வேதனையுடன் கோவிலில் அமர்ந்திருந்த போது ஒருகாகம் எனது வலது தோளில் ஆறுதலாக அமர்ந்து விட்டு சென்றது. அதற்கடுத்த வாரம் ஒரு காகம் வீட்டின் உள்ளே ஹாலிற்கே வந்து தட்டில்      மிச்சம் இருந்த உணவை இரண்டுமுறை சாப்பிட்டுச் சென்றது. இதன்பிறகு நான் காலையில் எழுந்தவுடன் என் தாயார் படத்தை வணங்கிவிட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் காகத்திற்கு தண்ணீரும், மிச்சரும்நாள்தோறும் இரு வேளை வைக்கிறேன். நானும் எனது தந்தையும்வீட்டிற்குள்ளே மதிய உணவு சாப்பிடும்போது அந்த காகம் பயமில்லாமல்      எங்களுக்கு பக்கத்திலேயே வந்து உணவை வாங்கி சாப்பிட்டு விட்டுசெல்கிறது. போகும்போது என்னுடைய கண் கண்ணாடியை எடுத்துச்சென்று வெளியில் போடுவது போன்ற விளையாட்டுத்தனங்களையும் செய்கிறது. இறந்துபோன என் தாய்தான் காக உருவில் வருவதாக என்தந்தை நினைக்கிறார். என் மனமும் அவ்வாறே சொல்கிறது. இப்படிகாகம் வீட்டிற்குள் வருவது நல்லதா? கெட்டதா? அது என் தாயா? காகமா? எனக்கு சனி தசை, சனி புக்தி நடப்பதால்தான் தாயை இழந்தேனா?

சந், குரு
ராசி
சுக், ரா
பு, சனி சூ, செவ்
பதில் :

(கன்னி லக்னம், மிதுன ராசி. 3-ல் சூரி, செவ். 4-ல் புத, சனி. 5-ல் சுக், ராகு. 10-ல் குரு சந். 14.12.1989, அதிகாலை 1.30, கோவை)

தமிழில் “கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற பழமொழி உள்ளது. ஒரு சிற்பி, உயிருள்ள நாய் போன்ற ஒரு வடிவத்தைச் செதுக்கி வைத்திருந்தான். அந்தச் சிற்பத்தை நாயாகப் பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கல் தெரியவில்லை. கல்லாகப் பார்ப்பவர்களுக்கு அதில் நாய் தெரியவில்லை என்பதே இதற்கு அர்த்தம்.

மனித மனம் விசித்திரமானது. உலகில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் அனைத்திற்கும் விஞ்ஞான ரீதியாக விளக்கம் சொல்ல முடியாது. மெய்ஞ்ஞானம்தான் இதற்கு பதில் சொல்ல முடியும். இறந்து போன முன்னோர்களை காகத்தின் வடிவில் பார்ப்பதே நம்முடைய மரபு. ஜோதிடப்படி காகத்தை வாகனமாக கொண்ட சனிபகவானே முற்பிறவி, அடுத்த பிறவி செயல்களை சூட்சுமமாக சுட்டிக் காட்டுபவராகிறார். அதனால்தான் இறந்தவர்களின் திதியில், அவர்களுக்குப் படைக்கும் உணவை அவர்களின் சார்பில் பூமியில் உயிருள்ள காகத்திற்கு அளிக்கிறோம்.

காகம் வந்து சாப்பிடுவதன் மூலமாக இறந்து போன நம் முன்னோர்களே நம்மிடம் வந்து திருப்தி அடைவதாகத்தான் நமக்கு அறிவுறுத்தப் பட்டது. ஜோதிடப்படி சகஜமான மற்ற நாட்களில் காகம் வீட்டிற்குள்ளே வருவது நல்லதல்ல என்று சொல்லப் பட்டாலும் சனிதசை, புக்தி மற்றும் ஏழரை, அஷ்டமச்சனி நடப்பவர்களுக்கு சனிபகவானின் வாகனமான காகம் சம்பந்தப் பட்டவைகள் நடப்பது சகஜம்தான். சனியை யோகராக கொண்டவர்களுக்கு சனி சம்பந்தப்பட்டவைகள் நன்மையை மட்டுமே செய்யும். எனவே காகம் வருவது உங்களுக்கு தீமையல்ல.

நான்கில் சனி அமர்ந்து சனிதசை நடப்பதால் சுயபுக்தியிலேயே உயிருக்கு உயிரான தாயை இந்த உலக வாழ்வில் இழந்து விட்டீர்கள். அதேநேரத்தில் உங்கள் தாயும், உங்களைப் பிரிந்து செல்லாமல் சூட்சும வடிவில் உங்களுடனே, உங்களைப் பார்த்தபடியே இருக்கிறார் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அடுத்து நடைபெற இருக்கும் புதன் புக்தி முதல் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். உங்கள் தாய் என்றும் உங்கள் அருகிலேயே இருந்து உங்களைக் கண்காணித்து வழி நடத்துவார். வாழ்த்துக்கள்.

சனி பகவானுக்கான முறையான பரிகாரங்கள் என்ன?

நா. பாஸ்கரன், திண்டுக்கல்.

கேள்வி :

அரசு வேலையில் இருக்கிறேன். 18 வருடங்களுக்கு முன் திருமணமாகிமுதல் பெண் குழந்தை இறந்தே பிறந்தது. அதன்பிறகு குழந்தைபாக்கியமே இல்லை. மந்த புத்தி இருப்பதால் அலுவலகத்தில் எந்தவேலை சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எதற்கும் மற்றவர்களைசார்ந்துதான் இருக்கிறேன். சொந்தக் காலில் நின்று தொழில் செய்யவிரும்புகிறேன். எண்கணிதப்படி பெயரை மாற்றி வைத்துக் கொண்டால்அதிர்ஷ்டம் வருமா? என் மந்த புத்திக்கு பரிகாரம் உண்டா?

குரு ரா
 ல ராசி
சனி  சந்,சூ சுக்
கே பு, செ
பதில் :

(கும்ப லக்னம், சிம்ம ராசி. 2-ல் குரு. 5-ல் ராகு. 7-ல் சூரி, சுக். 8-ல் புத, செவ். 11-ல் கேது. 12-ல் சனி. 20-8-1963, இரவு 7.30, திண்டுக்கல்)

சிம்மம் சுபத்துவமாகி, சிம்மாதிபதி சூரியன் அங்கே ஆட்சி பெற்று, சந்திர கேந்திரத்தில் இருப்பதால் அரசுப்பணியில் இருக்கிறீர்கள். கும்ப லக்னம் என்றாலே நிதான லக்னம் என்றுதான் அர்த்தம். கும்பத்தில் பிறந்தவர்கள் எதையும் அதிகமாக யோசித்துதான் செய்வார்கள். லக்னாதிபதி சனி சூட்சும வலுவின்றி இருந்தால் அதிகமான நிதானத்தோடு, மந்த புத்தி உடையவர்களாக இருப்பார்கள்.

ஜாதகப்படி லக்னத்திற்கு ஐந்திலும், ராசிக்கு ஐந்திலும் ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு, ஐந்துக்குடையவன் எட்டில் மறைந்து, புத்திரகாரகன் குருவை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதால், உங்களுக்கு புத்திர பாக்கியம் நீடிக்க விதி இல்லை. பத்துக்குடையவன் எட்டில் மறைந்ததால் சொந்தத்தொழில் உங்களுக்கு ஒத்து வராது. எண்கணிதப்படி பெயர் மாற்றி வைத்துக் கொண்டால் பெயரை மாற்றித் தரும் ஜோதிடருக்கு அதிர்ஷ்டம் வரும்.

உங்களின் மந்த புத்தி நீங்க சனியை சூட்சும வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. சனிக்கிழமை தோறும் இரவு படுக்கும் போது சிறிதளவு எள்ளை தலைக்கடியில் வைத்து படுத்து, மறுநாள் புதிதாக வடித்த சாதத்தில் கலந்து காகத்திற்கு வைக்கவும்.

வருடம் ஒருமுறை ஒரு சனிக்கிழமை இரவு 8 - 9 மணிக்குள், கரியால் பயன்படுத்தும் இஸ்திரி பெட்டி வைத்துள்ள சலவைத் தொழிலாளிகள் நான்கு பேருக்கு அடுப்புக்கரி தானம் செய்யவும். வருடம் ஒருமுறை சனிக்கிழமை மதியம் 1 - 2 மணிக்குள் ஐயப்ப பக்தர்கள் நான்கு பேருக்கு கருப்பு வேட்டி, துண்டு தானம் செய்யவும். அல்லது இதேநேரத்தில் கால் இழந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் தானம் செய்யவும். சனிக்கிழமை மதியம் 1 - 2 மணிக்குள் ஆதரவற்ற முதியோர், அனாதைகளுக்கு மதிய உணவு அளித்து நீங்களே பரிமாறவும்.

ஒரு சனிக்கிழமை இரவு 8 - 9 மணிக்குள் சனி ஹோரையில், ஒரு கருப்பு நிற பிளாஸ்டிக் தட்டில், கருப்பு கலர் பேண்டு-சட்டை, கால்கிலோ கடுகு, ஒரு கண்மை டப்பா, ஒரு கருப்பு பென்சில் பாக்ஸ், ஒரு பிராந்தி பாட்டில், அரை லிட்டர் நல்லெண்ணை, ஒரு இரும்புத்துண்டு வைத்து, காலை சற்றுத் தாங்கி தாங்கி நடக்கும் ஒரு வயதான கிழவன் அல்லது ஒரு துப்புரவுத் தொழிலாளிக்குத் தானம் செய்யவும். இவைகள் அனைத்தையும் முறையாக செய்யும் பட்சத்தில் உங்களின் மந்தபுத்தி படிப்படியாக விலகத் துவங்கி ஒரு வருடத்திற்குள் உங்களிடம் நல்ல மாற்றம் தெரியும்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 139 (13.6.2017)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *