ஆ. ராமசாமி, பல்லடம்.
கேள்வி :
ஜோதிடஉலகின் முடிசூடா சக்கரவர்த்தியாகிய குருஜி அவர்களுக்கு இந்த 72 வயது சிஷ்யகோடியின் வணக்கங்கள் பல. என் தம்பி மகனுக்கு 24 வயது தொடங்கி பெண்பார்த்து இதுவரை அமையவில்லை. தற்போது 31 வயது ஆகிறது. நல்லபடிப்பு, சொந்தவீடு, நல்லதொழில், வருமானம், வீட்டுவாடகை, நல்ல பழக்க - வழக்கம், ஒரேபையன் என்று ஏகப்பட்ட தகுதி இருந்தும் பெண் அமையவில்லை. எப்போது திருமணம் என்ற திட்டவட்டமான பதிலை நீங்கள் ஒருவர்தான் தரமுடியும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். தம்பிக்கும் எனக்கும் நிம்மதியைத் தர வேண்டுகிறோம்.
பு,சு | ரா | ||
சூ,குரு | ராசி | ||
சந் | ல,செவ், சனி | கே |
பதில்:
(விருச்சிகலக்னம், தனுசுராசி. லக்னத்தில் செவ், சனி. நான்கில் சூரி, குரு. ஐந்தில் புத, சுக். ஆறில் ராகு. 6.3.1986, 0.15 அதிகாலை, பெங்களூர்)
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி இணைந்து இரண்டு, ஏழு, எட்டாமிடங்களோடு தொடர்பு கொண்டாலே திருமணம் தாமதமாகும் என்பது விதி. தம்பி மகனின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி இணைந்து ஏழாமிடத்தைப் பார்ப்பதும், ராசிக்கு இரண்டாமிடத்தை சனி பார்க்க, ராசிக்கு ஏழாமிடத்தை செவ்வாய் பார்ப்பதும் தோஷ அமைப்பு. தாம்பத்திய சுகத்தைத் தரக்கூடிய சுக்கிரன் நீசனுடன் இணைந்து சூன்யபலத்தை அடைந்ததும் பலவீனம்.
லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யும் பட்சத்தில் சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருக்கும் சந்திரபுக்தியில் அடுத்த வருடம் ஜூலைக்கு மேல் திருமணம் நடக்கும். பரிகாரங்களைச் செய்ய இயலாவிடில் சுக்கிரனின் வீட்டில் இருக்கும் கேதுவின் சாரம் பெற்ற ராகுதசை சுயபுக்தியில் 33 வயதில் திருமணம் நடந்து குருபுக்தியில் தந்தை ஆவார்.
ஜி .ஜோதிமணி, கோவை - 2.
கேள்வி :
என் கணவர் குடிப்பழக்கத்தால் எங்களை மிகவும் கஷ்டப்படுத்தி அவரும் கஷ்டப்பட்டு இறந்து விட்டார் . இரண்டு மகள்களை கூலி வேலை செய்து வளர்த்து வருகிறேன். பெரிய மகளுக்கு 19 வயது ஆகிறது. அவளுக்கு எந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும். செவ்வாய் தோஷம் உள்ளதா? அவளது எதிர்காலம் எப்படி? நல்ல குணமுள்ளவன் மணமகனாக அமைய என்ன வகையான பரிகாரம் செய்ய வேண்டும்? இந்த ஏழை துர்பாக்கியவதி மகளுக்கு ஒரு நல்லவழி காட்டுங்கள் என்று ஜோதிடத்தின் ஜோதியை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
ல,சனி | |||
கே | ராசி | ||
வி | சந்,சூ, பு,ரா | ||
செவ் | சு |
பதில்:
(மீனலக்னம், சிம்மராசி. லக்னத்தில் சனி, ஆறில் சூரி, ராகு, புத. ஏழில் சுக். எட்டில் செவ். பதினொன்றில் குரு. 2.9.1997, 7.45 இரவு, பழனி)
மகள் ஜாதகத்தில் சுபர்பார்வை இல்லாத செவ்வாய் எட்டில் இருப்பதால் செவ்வாய்தோஷம் இருக்கிறது. மேலும் லக்னத்திற்கு எட்டில் செவ்வாய், ராசிக்கு எட்டில் சனி என்கிற அமைப்பு உண்டாகி, ஏழுக்குடைய புதன் ஆறில் மறைந்து, களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி சனிபார்வையில் இருப்பது தாமத திருமண அமைப்பு என்பதால் 25 வயதிற்குப் பிறகுதான் திருமணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்.
மகளுக்கு லக்னாதிபதி நீசமாக இருந்தாலும் சனியுடன் பரிவர்த்தனை பெற்று நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதால் யோகமான ஜாதகம்தான். நல்ல குணமுள்ள கணவன் அமைவதற்கு வியாழக்கிழமைதோறும் அருகில் உள்ள பழமையான சிவாலயத்தில் அருள்பாலிக்கும் தட்சணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு மகளுடைய வாழ்க்கை படிப்படியாக ஏற்றம் பெறும். எதிர்காலத்தில் சிக்கல் எதுவுமின்றி நல்ல வாழ்க்கை இருக்கும்.
ஆர். ராஜலட்சுமி, அரியலூர்.
கேள்வி :
இரண்டு பெண்குழந்தைகள் அறுவைச்சிகிச்சையின் மூலம் பிறந்துள்ள நிலையில் எனது மாமனாரும், மாமியாரும் ஆண் வாரிசு வேண்டும் என்று குடும்பக்கட்டுப்பாடு செய்யக்கூடாது என்று சொல்லுகிறார்கள். இங்குள்ள ஜோதிடர்கள் எனக்கு ஆண்குழந்தை இல்லை என்று சொல்லுகிறார்கள். சமீபத்தில் குடலில் பெரிய அறுவைச்சிகிச்சை செய்து எனக்கு வயிறு முழுவதும் தையல் போடப்பட்டுள்ளது. எனக்கு ஆண் குழந்தை உண்டா?
குரு | |||
ராசி | சந்,கே | ||
ரா | |||
சு,சனி | ல,சூ, பு | செவ் |
பதில்:
(விருச்சிகலக்னம், கடகராசி. லக்னத்தில் சூரி, புத. இரண்டில் சுக், சனி. மூன்றில் ராகு. எட்டில் குரு. பனிரெண்டில் செவ். 19.11.1989, காலை 7.30, அரியலூர்)
ஜோதிடத்தில் புத்திரதோஷம் எனப்படுவது ஆண்குழந்தை இல்லாத நிலையை மட்டுமே குறிக்கிறது. பொதுவாக குழந்தைகள் பற்றிய பதில்களுக்கு கணவன் மனைவி இருவரின் ஜாதகமும் பார்க்கப்பட வேண்டும். உன்னுடைய விஷயத்தில் உன் பெண் குழந்தைகளின் ஜாதகத்தில் அவர்களுக்கு தம்பி அமைப்பு உண்டா என்பதையும் கணித்தால்தான் துல்லியமான பதில் சொல்ல முடியும். உன்னுடைய ஜாதகத்தை மட்டுமே நீ அனுப்பி இருக்கிறாய்.
புத்திரகாரகனும், ஐந்தாம் வீட்டு அதிபதியுமான குருபகவான் உன் ஜாதகத்தில் எட்டில் மறைந்து, சனி பார்வை பெற்று, குருவும், சுக்கிரனும் 180 டிகிரி அமைப்பில் நேருக்குநேர் பார்த்துக் கொண்டிருப்பதால் ஜாதகப்படி உனக்கு ஆண் வாரிசு இல்லை.
கே. பொன்னையன், நாகர்கோவில் - 3.
கேள்வி :
33 வயதாகும் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒன்றும் சரியாக அமையவில்லை. எப்போது திருமணம்? மகள் எம்.எட்., எம்.பில் படித்திருக்கிறாள். அரசு வேலை கிடைக்குமா? எப்போது கிடைக்கும்.
சந் | ரா | செவ் | |
ராசி | சூ | ||
பு,சு | |||
ல | வி,கே | சனி |
பதில்:
(தனுசுலக்னம், மீனராசி. ஏழில் செவ். எட்டில் சூரி. ஒன்பதில் புத, சுக். பதினொன்றில் சனி. பனிரெண்டில் குரு, கேது. 30.7.1983, மாலை 4.35, நாகர்கோவில்)
மகளுக்கு லக்னாதிபதி குருபகவான் கேதுவுடன் இணைந்து பனிரெண்டில் மறைந்து பலவீனமாக உள்ள நிலையில், லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், ராசிக்கு எட்டில் உச்ச சனி என்கிற அமைப்பு உண்டாகி, ராசிக்கு இரண்டாம் வீட்டை சனி பார்த்து, லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை செவ்வாய் பார்ப்பது தோஷ அமைப்பு என்பதால் திருமணத்திற்கு தாமதம் ஆகிறது.
தற்போது ஆறுக்குடைய பாவியான சுக்கிரனின் தசையில், எட்டுக்குடைய சந்திரனின் புக்தி நடப்பது திருமணம் செய்வதற்கு சரியில்லாத நேரம். லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள். 2018 பிற்பகுதியில் செவ்வாய் புக்தியில் திருமணம் அமைவதே நல்லது. அரசு வேலைக்கு வாய்ப்பு குறைவு.
வி. ஆனந்தன், கிழக்கு தாம்பரம்.
கேள்வி:
மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் நன்றாகப் படித்து கிளாஸ் டீச்சரிடம் பெயர் வாங்குகிறாள். ஆனால் முதல் இடம் பிடிக்க முடியவில்லை. எதிலும் நிதானமாக இருக்கிறாள். இரண்டாவது மகன் எதிலும் சுறுசுறுப்பாக வேகமாக இருக்கிறான், படிப்பு விஷயத்தில் சொல்லும்படியாக இல்லை. படிப்பில் முன்னிலை பெற எதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் அய்யா...
பதில்:
குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள். நீங்கள் சிறுவனாக இருந்தபோது கிடைத்த விளையாட்டு சுதந்திரம் கூட இப்போது உங்கள் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மகன், மகள் இருவருக்குமே கன்னிலக்னமாகி படிப்பிற்கும், புத்திசாலித்தனத்திற்கும் காரணமான புதன் வலுவாக அமைந்து, மகள் பவுர்ணமி யோகத்திலும், மகன் அமாவசை யோகத்திலும் பிறந்து, இருவருக்குமே செவ்வாய் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்வதால் இருவருமே படித்து மிக உயர்ந்த நிலையில் இருப்பார்கள். குழந்தைகளால் உங்களுக்குப் பெருமைகள் இருக்கும். பரிகாரங்கள் தேவை இல்லை.
மகனைப் பிரிய மனமில்லை. சேர்ந்து சாகப் போகிறோம்...
ஒரு சகோதரி, பாண்டிச்சேரி.
கேள்வி :
வாழ்க்கையின் எல்லையில் மரணத்தின் வாயிலில் நின்று இக்கடிதத்தை எழுதுகிறேன். பரம்பரை பணக்காரக் குடும்பத்தில் பிறந்த எனக்கு கடன் தொல்லை தாங்க முடியவில்லை. எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் தகுதிக்கு மீறி கடன் வாங்கிய என் கணவர் இன்னும் இரண்டு மாதத்தில் கடனை அடைக்காவிட்டால் என் வாழ்க்கையையும் என் ஒரே மகனின் வாழ்க்கையையும் முடித்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். மகனைப் பிரிய மனம் இல்லை. எங்கள் மகனுக்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. எனவே வாழ்ந்தாலும் இறந்தாலும் ஒன்றாகத்தான் இருக்கும். கடனை அடைக்க முடியுமா? அல்லது துர்மரணம்தான் எங்களின் முடிவா? இந்த சகடயோக ஜாதகி கடைசிவரை கஷ்டப்படத்தான் வேண்டுமா? தெய்வம்தான் என்னை ஏமாற்றி விட்டது. நீங்களும் ஏமாற்றி விட வேண்டாம்.
பதில்:
கடனுக்காக செத்துப் போவது என்றால் உலகத்தில் யாருமே உயிரோடு இருக்க முடியாதே அம்மா... உலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதையாவது கடன் வாங்கத்தான் செய்கிறோம். உன் கணவன் வாங்கிய கடனுக்குப் பயந்து நீ செத்துப் போவதாக வைத்துக் கொண்டாலும், ஒன்றும் அறியாத ஆறுவயது பிஞ்சு இந்த உலகில் எதையும் அனுபவிக்காமல், எதுவும் அறியாமல், எதற்காக அம்மா செத்துப் போகவேண்டும்?
நீ மட்டும் பரம்பரைப் பணக்காரியாகப் பிறந்து குழந்தையிலிருந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்து, ஒரு கல்யாணத்தையும் செய்து குழந்தையும் பெற்றுக் கொள்வாய். ஆனால் உனக்குப் பிறந்தது மட்டும் நீ அனுபவித்த சிறுவயது சந்தோஷங்கள் எதுவும் கிடைக்காமல் குழந்தையிலேயே செத்துப் போக வேண்டும். அப்படித்தானே?
உன்னுடைய ஜாதகத்தில் சகடயோகம் என்று குறிப்பிட்டிருக்கிறாய். சகடம் என்றால் சக்கரம் என்று அர்த்தம். அதன்படி இந்த யோகம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் என்பது ஜோதிடவிதி. எனவே தற்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நீ இன்னும் சில நாட்களில் சந்தோஷப்பட்டுத்தான் ஆக வேண்டும். இதுதான் சகடயோக வாழ்க்கை.
நீ குறிப்பிட்டிருக்கும் உன் வாழ்க்கைச் சம்பவங்களின்படி உன்னுடைய கணவரின் பிறந்தநேரம் மாலை 4. 30 மணியிலிருந்து 5 நிமிடமாவது தள்ளி இருக்க வேண்டும். இதன்படி உன் கணவனுக்கு கன்னிலக்னத்திற்குப் பதில் துலாம் லக்னமாக வரும். தற்போது துலாத்திற்கு கடன் ஸ்தானாதிபதியான குருவின் தசை நடப்பதால் உங்களுக்கு கடன்தொல்லைகள் இருக்கிறது. உன்னுடைய ஜாதகப்படி எட்டுக்குடையவன் புக்தி நடப்பதாலும், மகனுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் உன் மனம் பேதலிக்கும்படியான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆறு, எட்டுக்குடையவர்களின் தசை,புக்தி நடக்கும்போது சமாளிக்க முடியாத தொல்லைகளும், மானம் போகும்படியான சம்பவங்களும் நடக்கத்தான் செய்யும். இது போன்றவைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு செய்த தவறை திருத்தி அமைத்து வாழ்வதில்தான் ஒருவருடைய வெற்றி அடங்கி இருக்கிறது.
கணவருக்கு துலாம் லக்னமாகி லக்னாதிபதியும் ஆயுள் ஸ்தானாதிபதியுமான சுக்கிரன் உச்சம் என்பதாலும், உனக்கும் அதே துலாம் லக்னமாகி சுக்கிரன் எட்டில் ஆட்சி பெற்றதாலும், குழந்தைக்கு எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டையே பார்ப்பதாலும் உங்கள் மூவருக்கும் தீர்க்காயுள் யோகம் இருக்கிறது. எனவே உங்கள் மூவருக்குமே இளம்வயதிலோ, மத்திம வயதிலோ துர்மரணம் இல்லை.
மூவரின் ஜாதகப்படி அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குப் பிறகு கடனை அடைக்கும் வழிகள் ஆரம்பித்து படிப்படியாக கடன் தொல்லைகள் நீங்க ஆரம்பிக்கும். 2018 முதல் கடனே இல்லாத வாழ்க்கை உங்களுக்கு உண்டு. நீ குறிப்பிட்டிருக்கும் சொத்தை அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே விற்க முடியும். சனிக்கிழமைதோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வா. பிரச்னைகளுக்கு விடிவு பிறக்கும்.
நன்றி ஐயா