adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 46 (14.7.15)

எம். பாலசுப்பிரமணியம், சேலம்.

கேள்வி :
 ரா
செவ் ராசி
சந்,பு சூ,சுக்  ல
 கே குரு  சனி
உள்ளது உள்ளபடியே கூறும் குருஜி அவர்களுக்கு வணக்கம். 2009-ல் திருமணமாகி மாமியார் பிரச்னையால் ஒரே வருடத்தில் விவகாரத்தாகி விட்டது. மூன்று வருடமாக இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். எந்த வரனும் அமையவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போல ஆகிவிட்டது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லை. பிரச்னைகளை சந்தித்து சந்தித்து இப்போது எந்த பிரச்னைக்கும் பயப்படுவது இல்லை. எனக்கு செவ்வாய்தோஷம் உள்ளதால் வேறு என்ன தோஷம் உள்ளது என்பதை சொல்லி என் பிரச்னை எனும் பூட்டை உங்கள் தீர்வு எனும் சாவியை வைத்து எனது சொர்க்க வாசலை திறந்து விடும்படி கேட்டுகொள்கிறேன்.
பதில்:
(சிம்மலக்னம், மகரராசி. மூன்றில் சனி. நான்கில் குரு. ஐந்தில் கேது. ஆறில் சூரி, சுக், புதன். ஏழில் செவ்)
லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் அமர்ந்து அதுவே ராசிக்கு இரண்டு என்றாகி ராசிக்கு ஏழாமிடத்தை உச்சசனி பார்த்த அமைப்புடைய உங்களுக்கு முப்பத்தி மூன்று வயதில்தான் திருமணம் செய்திருக்க வேண்டும். 26 வயதில் திருமணம் செய்ததால் இரண்டு திருமண அமைப்பு உண்டானது.
நடக்கும் குருதசை சனிபுக்தியில் அடுத்த வருடம் ஆவணி மாதம் உங்களுக்கு இரண்டாவது திருமணம் அமையும். இரண்டாவது வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முதல் திருமணம் முறிவு பெற்றதால் செவ்வாய்தோஷம் விலகி விட்டது. வேறு எந்த தோஷமும் இல்லை.
மா. சு. சவுந்திரராஜன், செட்டியார்பட்டி.
கேள்வி :
சந்
கே ராசி
செவ் ரா,குரு
சுக் சூ  பு சனி
பிறந்ததிலிருந்தே நடக்க முடியாத 36 வயது பெண்ணைப் பெற்றவனின் வேதனை இது. ஆரம்பகாலத்தில் என்மகள் ஜாதகத்தை பார்த்த சில ஜோதிடர்கள் ஒச்சமாக இருந்தாலும் நடப்பாள். திருமணம் ஆகும் என்று சொன்னார்கள். எல்லாம் பொய்யாக போய்விட்டது. நானும், மனைவியும் தெய்வமே எங்களுக்கு பிள்ளையாக பிறந்திருக்கிறது என்று எண்ணித்தான் அன்பு செலுத்தி அவளுக்கு தினமும் தொண்டு செய்கிறோம். மகளும் பனிரெண்டு வயதிலிருந்து இன்றுவரை தினமும் இரண்டு வேளை கந்தசஷ்டி கவசம் படித்து வருகிறாள். எங்களுக்கோ வயதாகிவிட்டது. எங்களின் கண்ணுக்கு பின்னால் அவளது நிலைமையை நினைத்து மனவேதனை வந்து விட்டது. மகளுக்கு இப்படிப்பட்ட பிறவி அமைந்தற்கு என்ன காரணம்? எது காரணம்? நீங்கள்தான் அவளது ஜாதகத்தை பார்த்து உள்ளது உள்ளபடி சொல்லி எங்களுக்கு ஆறுதல் தரவேண்டும்.
பதில்:
(சிம்மலக்னம், மிதுனராசி. லக்னத்தில் செவ், குரு, ராகு. இரண்டில் சனி. மூன்றில் புதன். நான்கில் சூரி. ஐந்தில் சுக்.)
இறைவனின் படைப்பில் அனைத்துக் கேள்விகளுக்கும் நமக்குப் பதில் தரப்படுவது இல்லை. இந்த பிறவி நன்மை-தீமைகளுக்கு முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களே காரணம் என ஜோதிடம் சொல்லுகிறது. அந்த பாவத்தையும், புண்ணியத்தையும் காட்டுகின்ற இடம் ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் பாவமாகும். ஐந்தாமிடம் வலிமை இழந்தால் ஒருவரின் முற்பிறவி கர்மா இப்பிறவியில் தொடரும் என்பது அர்த்தம். கடைசிக் கேள்விக்கான பதிலில் இதை விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
மகள் ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தை குறிக்கும் ஐந்தாமிட அதிபதி குருவும் ஒன்பதுக்கு அதிபதி செவ்வாயும் நான்கு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து முழுக்க வலிமை இழந்தார்கள். லக்னாதிபதி சூரியன் திக்பலம் இழந்து சனி, செவ்வாயின் பார்வையைப் பெற்று வலுவிழந்தார். ஆக ஜாதகத்தில் ஒன்று, ஐந்து, ஒன்பதிற்குடைய மூவருமே பலமிழந்த நிலையில் லக்னாதிபதிக்கும், ராசிக்கும் சனி பார்வை அமைந்ததும் குற்றம்.
உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு கன்னிலக்னம், மீனராசியாகி லக்னத்திற்கும், ராசிக்கும் புத்திரஸ்தானமான ஐந்தாமிடங்களில் ராகு-கேதுக்கள் அமர்ந்து ராசிக்கு ஐந்தில் நீசசெவ்வாயும் அமர்ந்ததால் புத்திரபாவம் கெட்டு வாழ்நாள் முழுவதும் மகளைப் பற்றி கவலைபட நேர்ந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளில் படைத்தவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் நம் கையில் இல்லை. ஆயினும் உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு தீர்க்காயுள் என்பதால் நீங்கள் நினைப்பதைப்போல மகளை அநாதரவாக விட்டுச் செல்லும் நிலை ஜாதகத்தில் இல்லை.
சங்கரநாராயணன், குரோம்பேட்டை.
கேள்வி :
குரு ரா
சனி ராசி
சூ சந் பு,கே சுக் செவ்
மிகுந்த கஷ்ட நிலை. வருமானத்தில் ஏற்றத்தாழ்வு. கடன்தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எப்போது நல்லநிலைமை வரும்? கடனில் இருந்து எனக்கு எப்போது விமோசனம்?
பதில்:
(மிதுனலக்னம், தனுசுராசி. நான்கில் செவ். ஆறில் புதன், சுக். ஏழில் சூரி. ஒன்பதில் சனி. பதினொன்றில் குரு. பனிரெண்டில் ராகு.)
லக்னாதிபதியும், யோகாதிபதியும் கடனைக் குறிக்கும் ஆறாம் பாவத்தில் அமர்ந்து ஆறுக்குடையவனுடன் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்று தற்போது ஆறாம் அதிபதி செவ்வாயின் சாரம் பெற்ற ராகுதசை நடக்கிறது. 2007-ல் ஆரம்பித்த செவ்வாய்தசை முதல் கடுமையான கடன் அமைப்புகள் உருவாகி ஆறுக்கதிபதி சாரம் பெற்ற ராகு தசையிலும் அது தொடரும்.
அடுத்த வருடம் ஜூலை மாதம் ஆரம்பிக்க இருக்கும் ஆறுக்கு ஆறான பதினொன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருபுக்தி முதல் கடன் தொல்லைகள் குறைய ஆரம்பிக்கும். ஆனாலும் முழுக்க கடன் தொல்லைகள் ராகுதசை பிற்பகுதியில் தான் தீரும். புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்யவும்.
வாழ்நாள் முழுவதும் நான் கூலிக்காரன்தானா?
ரா. மாரிமுத்து, கொன்றைக்காடு.
கேள்வி :
பு செ,சூ குரு சுக் ரா
சனி ராசி
சந்
கே
மாலைமலரில் தாங்கள் எழுதி வரும் கட்டுரைகள் யாவும் பாதுகாக்க வேண்டிய அற்புதப் பொக்கிஷங்களாகும். வாசகர் சார்பாக கோடானுகோடி நன்றிகளை தங்களின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம். அய்யா... நான் சாதாரண தினக்கூலி. ஜாதக ரீதியாகவும் குடும்பச்சூழ்நிலை காரணமாகவும் காலம் கடந்து திருமணம் நடைபெற்றது. யாரிடமும் உதவி கேட்காமல் என் உடல் உழைப்பினால் மட்டும் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதற்கிணங்க வசதி என்னிடம் இல்லை என்பதால் என்னை ஏளனமாகப் பார்க்கும் சொந்த பந்தங்கள் இனிமேல் என்னை ஆச்சர்யமாகப் பார்க்கும் அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளதா? இறுதிவரை நான் கூலிக்காரன்தானா? என் ஆயுள்காலம் எப்படி உள்ளது. தங்களின் திருப்பார்வைக்கு ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். பதிலுக்காக காத்திருக்கிறேன் .
பதில்:
அம்பானி மட்டும்தான் அதிர்ஷ்டசாலியா? நான் மட்டும் அன்றாடங்காய்ச்சியா? என்ற கேள்வி எழுமானால் உலகின் உன்னதமதமான எனது மேலான இந்துமதமும் அதனுள் அடங்கிய வேதஜோதிடமும் நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் தருகிறது.
ஒரு மனிதன் சென்ற பிறவியில் செய்த பாவபுண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிப்பதாக எனது ஒப்பற்ற மதம் தெளிவாகச் சொல்கிறது. முன்ஜென்மத்தில் நல்லதைச் செய்திருந்தால் அதை டெபாசிட் செய்து இப்பிறவியில் எடுத்துச் செலவு செய்கிறீர்கள். பாவத்தைச் செய்திருந்தால் அதையே இப்போது அனுபவிக்கிறீர்கள்.
சிலர் எத்தனை தவறுகள் செய்தாலும் எவ்வித தண்டனையுமின்றி சொகுசாக அந்தஸ்துடன் கடைசிவரை வாழ்ந்து மறைவதும் முற்பிறவி புண்ணியத்தினால்தான். அவர்கள் இப்போது செய்யும் தீமைகளை அடுத்த ஜென்மத்தில் அனுபவிப்பார்கள் என்றே சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
சரி. சென்ற பிறவியில் தெரியாமல் பாவம் செய்துவிட்டேன். அதை இப்பிறவியில் திருத்திக் கொள்ள முடியாதா என்ற கேள்விக்கு பதிலாகத்தான் பரிகாரங்கள் எனும் அமைப்பு சொல்லப்படுகிறது. ஜோதிடத்திற்கு பரிகாரசாஸ்திரம் என்பதுதான் உண்மையான பெயர்.
பரிகாரங்கள் உண்டு என்பதை நமக்கு உணர்த்துவதற்காகவே மார்க்கண்டேயன் கதை இங்கே சொல்லப்பட்டது. பதினாறு வயதில் அற்பாயுளில் இறந்து போவதற்கு அனுப்பப்பட்ட மார்க்கண்டேயன் தனது தீவிரமான இறைவழிபாட்டால் பிரார்த்தனையால் சிரஞ்சீவியாக பரம்பொருளால் மாற்றப்பட்டான்.
பிறக்கு முன் எங்கிருந்தோம் இறந்த பின் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் இடையில் ஏறி இறங்கும் ரயில்பயணம் போன்ற இந்தப் பூமி வாழ்வில் இங்கு நம்மை அனுப்பிய பரம்பொருள் ஒன்றுக்கே நமது முற்பிறவி கர்மாவை ரத்து செய்யவோ தற்காலிக நீக்கம் செய்யவோ அதிகாரம் இருக்கிறது. எனவே தீவிர இறைவழிபாடு மற்றும் முறையான பிரார்த்தனைகளின் மூலம் பரம்பொருளை வேண்டி நமது கர்மாவை மாற்றிக்கொள்வதற்கே பரிகாரம் என்று பெயர். அதேநேரம் அனுபவித்தே ஆகவேண்டிய தீவிர கர்மாக்களுக்கு பரம்பொருள் மாற்றங்களைத் தருவதில்லை.
சென்ற பிறவி செயல்கள் நமது ஜாதகம் மூலமே நமக்கு உணர்த்தப்படுகின்றன. ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணியஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீடு வலுவாக இருந்தால் முற்பிறப்பில் நீங்கள் நல்லதையே செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். லக்னாதிபதியும் வலுவாக இருந்தால் அதன்மூலம் இப்பிறவியில் நன்றாக வாழ்வீர்கள் என்று பொருள். ஒன்பதாம் வீடும் பலமாக இருப்பின் இப்பிறவியும் பயனுள்ளது என்றாகும். இவை சரியாக அமையாத பட்சத்தில் பரிகாரம் எனப்படும் வழிபாடு பிரார்த்தனைகள் மூலம் படைத்தவனை வேண்டி அவன் அனுமதியுடன் மாற்றிக்கொள் என்பதே இறைத்தத்துவம்.
ஒரு ஜோதிடன் தன் வாய்க்கு வந்தது எல்லாம் பரிகாரங்களாகச் சொன்னால் அது பலிக்காது. ஜோதிடன் கடவுள் இல்லை. முறையான பரிகாரங்கள் என்பது நமது முற்பிறவி கர்மாவை நமக்கு உணர்த்தும் திருக்கோவில்களுக்குச் செல்வதும் கிரகவலுவைக் கூட்டிக்கொள்ளும் சில அமைப்புகளைச் செய்வதும்தான். அதைச் சரியாகச் சொல்ல ஒரு ஜோதிடனுக்கு ஆன்மபலமும் நீடித்த அனுபவமும் வேண்டும்.
உங்களுக்கு கன்னிலக்னமாகி லக்னாதிபதி எட்டில் மறைந்து (வாக்கியப்படி ஏழில் நீசம்) ஐந்துக்குடையவன் ஆறில் மறைந்து ஒன்பதிற்குடையவன் பத்தாமிடத்தில் திக்பலம் இழந்து ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்த ஜாதகம். லக்னத்திற்கோ ராசிக்கோ சுபர்பார்வை இல்லாத நிலையில் லக்னாதிபதி கெட்டு ஆறு எட்டிற்குடையவர்கள் அங்கேயே ஆட்சி பெற்றது உங்கள் கர்மாவை உணர்த்துகிறது.
லக்னாதிபதி புதன் கேது சாரத்தில் அமர்ந்து ஐந்திற்குடைய சனி ராகு சாரத்தில் அமர்ந்து (நவாம்சத்தில் ராகுவுடன் இணைவு) ஒன்பதிற்குடைய சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்ததும் தற்போது ஆறாமிடத்தில் ஆட்சிபெற்ற சனிதசை நடந்து கொண்டிருப்பதும் முன்ஜென்மவினையை தெளிவாகச் சொல்லும் அம்சங்கள்.

சனி நேர்வலுப் பெற்றாலே உடல் உழைப்புத்தான் என்பதை எத்தனையோ தடவை எழுதியிருக்கிறேன். ஆயினும் ராகுவிற்கான பிரீத்திகளையும் புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் நீங்கள் செய்வதன் மூலம் அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் சனிதசை ராகுபுக்தியிலிருந்து படிப்படியாக மாற்றங்கள் துவங்கி அடுத்த லக்னாதிபதி புதன்தசையில் நீங்கள் நிச்சயமாக இப்போது இருக்கும் நிலை மாறி செல்வச்செழிப்புடன் வசதியாக வாழமுடியும். இது உறுதி. வாழ்த்துக்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 46 (14.7.15)

Leave a Reply to Suresh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *