adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 79 (29.03.2016)
ஒரு மகன், மதுரை - 16.
கேள்வி:
இந்த 31 வயதுவரை சஞ்சலமான ஒரு விரக்தியான வாழ்க்கையைத்தான் உணருகிறேன். திருமணமாகி ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் உண்டு. அப்பாவின் டீக்கடையில் வேலை செய்கிறேன். கடந்த சில மாதங்களாக ஆன்மிகத்தேடல் அதிகமாகி கோவில்களுக்கு சென்று வருகிறேன் சமீபத்தில் ஒரு ஜோதிடர் உனக்கு இன்னும் ஒரு திருமணம் ராகுதசையில் உள்ளது அது உனக்கு நல்ல எதிர்காலத்தையும் பொருளாதாரத்தையும் தரும். செய்து கொள் என்று சொல்லி என்னை அதிர வைத்துவிட்டார். உங்களைத் தந்தையாக நினைத்துக் கேட்கிறேன். இது நடக்குமா? இரண்டாவது திருமணம் என்பது என் ஜாதகத்தில் உண்மையான அமைப்புத்தானா? அது எனக்குப் பயனா? என் குடும்பம், குழந்தைகள் பாதிக்குமா? ராகுதசையில் பொருளாதார வளர்ச்சிக்கு என்ன தொழில் செய்யலாம்? வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாமா? நான் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது? என் எதிர்கால ரகசியம்தான் என்ன? உங்கள் பதிலை ஈசனின் பதிலாக கருதுகிறேன். வழிகாட்டுங்கள்.
ரா சுக்
ராசி சூ,செவ்
குரு  சந்,பு
சனி,கே
பதில்:
(மீனலக்னம், சிம்மராசி, இரண்டில் ராகு. மூன்றில் சுக், ஐந்தில் சூரி, செவ், ஆறில் புத, எட்டில் சனி, கேது. பதினொன்றில் குரு 21.07.1985, இரவு 10.12, மதுரை)
மீனலக்னத்திற்குப் பதிலாக கும்பலக்னம் என்று தவறாகக் கணிக்கப்பட்ட ஜாதகத்தைக் கொண்டு எந்த அனுபவம் இல்லாத ஜோதிடர் உங்களுக்கு இது போன்று பலனைச் சொன்னாரோ தெரியவில்லை. திருக்கணிதப்படி கடந்த ஒரு வருடகாலமாக உனக்கு ராகுதசை நடந்து வருகிறது. ராகுபகவான் சுபத்துவம் பெற்ற சனியின் பார்வையைப் பெற்றுள்ளதால் இந்த தசை முழுக்க உங்களுக்கு ஆன்மிக எண்ணங்களும் தேடல்களும் இருக்கும்.
இந்த தசையில் இருக்கும் மனைவியைப் பார்த்துக் கொண்டாலே போதும். லக்னாதிபதி நீசமாகி இருப்பதால் இன்னொரு கல்யாணம் கட்டி அந்த மனைவி சம்பாதித்துக் கொடுப்பாளா என்று எதிர்பார்க்கிறீர்கள். இதற்கு ஜோசியன் சொல்லிவிட்டான் என்ற சாக்கு வேறு. பனிரெண்டாமிடத்து சனியின் பார்வையை பெற்ற மேஷராகுவின் தசை உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பொருள் தேட வைக்கும் என்பதால் இரண்டாவது கல்யாண ஆசையை விட்டுவிட்டு இருக்கும் பெண்டாட்டி, பிள்ளையை ஒழுங்காகக் காப்பற்றப் பாருங்கள்.
பிறந்ததிலிருந்து யோகம் தராத ஆறு, எட்டுக்குடையவர்கள் தசை, அடுத்து ஆறில் இருப்பவன் தசை, பின்னர் நீசதசை என இதுவரை சரியில்லாத தசைகள் நடந்ததாலும் லக்னாதிபதி நீசம் ஆனதாலும் இதுவரை வாழ்வில் எந்தவித நற்பலன்களும் இல்லை. ராகுவிற்கு மூன்று கேந்திரங்களில் கிரகங்கள் அமைந்து அவர் மேஷராகுவாக இருப்பதால் இந்த ராகுதசையில் பர்வத ராஜயோகம் வேலை செய்து உங்களை ஓரளவு முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும். எதிர்கால வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.
பிறையோன், புதுச்சேரி – 3.
கேள்வி:
ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்து வருகிறேன். நான்கு வருடங்களாக தேர்வாகவில்லை. நான் சொல்லிக் கொடுத்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிட்டனர். தேர்வு அறையில் சரியான மனநிலை இல்லாத காரணத்தினாலும், வேறு ஏதோ ஒரு காரணத்தினாலும் எனது வெற்றி தள்ளிப் போகிறது. என்னுடன் படித்த ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவர்களும் இப்பொழுது என்னிடம் பேசவில்லை. ஏகப்பட்ட மனக்கஷ்டத்தில் இருக்கிறேன். சிவபெருமான் கருணையினால் தினமும் சிவபூஜை செய்வதால் இதுநாள் வரை காலம் ஓடுகிறது. ஐ.ஏ.எஸ் ஆபிசராகி ஊழலை ஒழிக்கப் பாடுபட வேண்டும் என்பதே என் லட்சியம். நாட்டிற்குப் பணியாற்றத் துடிக்கும் எனக்கு கோள்களின்படி என்ன நிலை என்பதையும் விரும்பியவளே என் துணைவியாக அமைவாளா என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே பலமுறை பதில் அளிக்காததைப் போல இந்த முறையும் ஏமாற்றிவிடாதிர்கள்.
செவ் சந்,குரு சுக்
 ரா ராசி சூ,பு
 கே
 சனி
பதில்:
(விருச்சிகலக்னம், ரிஷபராசி, இரண்டில் சனி. நான்கில் ராகு, ஐந்தில் செவ், ஏழில் குரு, எட்டில் சுக். ஒன்பதில் சூரி, புத. 06.08.1988, பகல் 2.45, புதுவை)
முதுபெரும் எழுத்தாளர் திரு. ரா.கி.ரங்கராஜன் அவர்கள் ஒருமுறை “செய்ய ஆசைப்படுவது வேறு, செய்துதான் ஆகவேண்டும் என்பது வேறு. செய்ய ஆசைப்படுவதை செய்துதான் ஆகவேண்டும் என்று மாற்றிக் கொள்பவன் வெற்றி அடைகிறான்” என்று எழுதியிருக்கிறார். இதையே மகாபாரதத்தில் துரோணாச்சாரியார் “பறவையின் கழுத்தைக் குறி பார்ப்பவனுக்கு மரமும், கிளையும் ஏன் தெரிகிறது?” என்று கேட்டார்.
ஐ.ஏ.எஸ் ஆகி ஊழலை ஒழிக்க ஆசைப்படுபவனுக்கு காதல் எப்படி வரும்? காதல் வரும் என்றால் ஐ.ஏ.எஸ் எப்படி வரும்? தேர்வில் வெற்றி பெற்று நீ கலெக்டரானால் ஆயிரம் காதலிகள் பின்னால் வருவார்களே.! நீ உதவி செய்து ஐ.ஏ.எஸ் ஆனவர்கள் காதலித்துக்கொண்டுதான் வெற்றி பெற்றார்களா என்று கேட்டுப்பார்.
மேலே நான் சொன்னதை ஜோதிடரீதியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒருவரின் லட்சியம் நிறைவேற வேண்டுமெனில் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று ஜீவனாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். உனக்கு லக்னாதிபதி இயற்கைப்பாவி செவ்வாயாகி திரிகோணத்தில் அமர்ந்து வலுக்குறைந்தார். ஜீவனஸ்தானத்தோடு ராகுகேதுக்கள் தொடர்பு கொண்டு பத்துக்குடையவன் அஷ்டமாதிபதியுடன் இணைந்ததால் தொழில்ஸ்தானம் பலவீனமானது. எனவே ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற ஆசை மட்டுமே உனக்கு இருக்கும் அதற்கேற்ற முழு முயற்சி உன்னிடம் இருக்காது. விரும்பிய பெண்ணை மணக்கும் அமைப்பும் உன் ஜாதகத்தில் இல்லை.
ஆர். லோகநாதன், தூத்துக்குடி.
கேள்வி:
சகல தகுதிகளும் இருந்து இத்தனை அழகான எந்தக் குறையும் இல்லாத எங்களின் கண்மணிக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை? எப்போது திருமணம்? இன்னும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ஜோதிட ஜோதியின் திருநாக்கிலிருந்து வரும் அருள்வாக்கிற்காக திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறோம்.
பதில்:
மகளுக்கு கடுமையான புத்திர தோஷம் அமைந்து முப்பத்தியேழு வயதில்தான் அம்மாவாகும் அமைப்பு இருப்பதால் இன்னும் திருமணம் கூடிவரவில்லை. வரும் ஜூலை மாதத்திற்குப் பிறகு மாப்பிள்ளை அடையாளம் காட்டப்படுவார். அருகிலேயே இருப்பவர். இந்த ஆவணி மாதம் திருமணம் நடக்கும். 2017 ம் ஆண்டு இறுதியில் இவர் மூலமான பேத்தியைக் கொஞ்சுவீர்கள். வாழ்த்துக்கள்.
பிளஸ் ஒன் படிக்கும் மகளுக்குத் திருமணம் செய்யலாமா?
ஒரு வாசகர்.
கேள்வி:
மிகுந்த மனவேதனையுடன் எழுதுகிறேன். பிளஸ் ஒன் படிக்கும் மகள் எதிர்புறம் உள்ள பி. காம் படிக்கும் மாணவனுடன் பழகி இருக்கிறாள். ஒரு முறை அவனுடன் ஊர் சுற்றி இருக்கிறாள். உடன் படிக்கும் சக மாணவிகளும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். இன்னொரு மாணவி மூலம் லவ்லெட்டர் கொடுத்தனுப்பும்போது வகுப்பு ஆசிரியையிடம் பிடிபட்டு எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்கூலுக்குச் சென்று நாங்களும் கண்டிக்கப்பட்டோம். இடையில் இன்னொரு மாணவி என் மகளுடன் பழகும் மாணவனுக்கு போன் செய்து அவனும் பள்ளிக்கூடம் வந்துவிட்டான். ஆசிரியை விசாரிக்கும் போது நான்கு மாதங்களாக காதலிக்கிறேன் என்று என் மகள் தைரியமாகச் சொல்கிறாள். அவளுக்கு கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியுள்ளனர். குடும்பத்தில் அனைவரும் பித்துப்பிடித்தாற்போல் இருக்கிறோம். மகளின் ஜாதகப்படி பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையா? காதல் திருமணமா? அடுத்த வருடம் மார்ச் மாதம் பிளஸ் டூ முடித்தவுடன் திருமணம் செய்யலாமா? தெய்வாம்சம் பொருந்திய உங்கள் ஞானத்தால் ஆய்வு செய்து தரப்போகும் பதிலுக்கு என் குடும்பமே காத்திருக்கிறது.
குரு,சனி சூ பு
சந் ராசி சுக்,ரா
கே
செவ்
பதில்:
(சிம்மலக்னம், கும்பராசி, மூன்றில் செவ், ஒன்பதில் குரு, சனி, பத்தில் சூரி, பதினொன்றில் புத, பனிரெண்டில் சுக், ராகு 07.06.1999, பகல் 12.22, சேலம்)
மகளுக்கு தற்பொழுது நீச சனிதசையும் அதில் சனி பார்த்த புதன்புக்தியும் நடக்கிறது. புக்திநாதன் புதன் பனிரெண்டாமிடத்தில் சுக்கிரனுடன் இணைந்த ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் இருப்பதால் காதல் அமைப்புகள் உருவாகின. அடுத்து நடக்கவிருக்கும் கேதுவும் நீசசனியின் பார்வையையும், சுக்கிரன் பார்வையையும் சுக்கிரனின் வீட்டில் இருக்கும் செவ்வாயின் பார்வையையும் பெற்றிருப்பதால் அடுத்தவருடமும் மகள் விஷயத்தில் உங்களுக்குத் தலைவலி இருக்கும்.
அதேநேரத்தில் ஏழுக்குடையவன் நீசமாகி பதினொன்றுக்குடையவன் ஆட்சி பெற்றதும், சனி செவ்வாய் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டதும், சிறு வயதில் திருமணம் செய்யக்கூடாத அமைப்புகள் என்பதால் திருமண விஷயத்தில் அதிக கவனமும், அக்கறையும் தேவைப்படும். எனவே பிளஸ் டூ முடித்ததும் திருமணம் செய்வதைவிட தள்ளிப் போடுவது நல்லது.
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஜோதிடத்தில் முறையான இறைபரிகாரங்கள் வழிபாடுகளாக சொல்லப்பட்டு இருக்கின்றன. எனவே பரிகாரங்களின் மூலம் மகள் வாழ்க்கை சேதம் அடையாமல் பார்த்துக் கொள்ளலாம். திக்பலம் பெற்ற சந்திரகேந்திரத்தில் உள்ள லக்னாதிபதி சூரியன் இதனை உறுதி செய்கிறார்.
இதுபோன்ற இளம்வயது காதல் பிரச்னைகளுக்கு நான் பெரும்பாலும் பெற்றோரைத்தான் குறை சொல்லுவேன். நீங்கள் பிறக்கும் பொழுது டி.வியோ, செல்போனோ, இன்டர்நெட்டோ கிடையாது, ஆனால் இன்றைக்கு நடுவீட்டில் இருக்கும் ‘இடியட் பாக்ஸ்’ எனப்படும் டி.வி கட்டிப்பிடிப்பது முதல் காதல் செய்வது வரை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கிறது.
அப்பாவிடமும், அம்மாவிடமும் எதையும் பேசலாம் எதையும் சொல்லலாம் என்று நட்புணர்வுடன் வளர்க்கப்படும் குழந்தைகள் தவறு செய்வதே இல்லை. ஆனால் இங்கோ பிள்ளைகளைக் கண்டிப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களைத் தண்டித்து அவர்கள் மனதிலிருந்து அதிவிரைவில் விலகும் பெற்றோர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்காகத்தான் எல்லாம் அறிந்த நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று சொன்னார்கள்.
இப்பொழுது கூட மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போல்தான் இருக்கிறது உங்களது கேள்வி. இது போன்று அவசரப்படும் பெற்றோர்கள்தான் குழந்தையை பாழுங்கிணற்றில் தள்ளி விடுகிறீர்கள். இங்கே யாரும் வானத்தில் இருந்து அப்பா, அம்மாவாகவே பொத்தென்று குதித்து விடவில்லை. எல்லோரும் குழந்தைகளாக இருந்துதான் பெரியவர்களாக ஆனோம். நியாயப்படி பார்த்தால் சிறுவயதில் பெற்றோர்கள் செய்த தவறை விட பிள்ளைகள் அதிகமாகச் செய்து விடவில்லை.
நாம் படிக்கும் காலத்தில் இந்தச் செல்போனும், டி.வியும், இன்டர்நெட்டும் இருந்திருந்தால் நம்முடைய பிள்ளைகளைத் தூக்கிச் சாப்பிட்டு இருப்போம். எல்லாத் தவறுகளும் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கத்தான் செய்கிறது. உலகில் ஆணும் பெண்ணும் இருக்கும்வரை அனைத்தும் இருக்கத்தான் செய்யும்.
எங்கே நாம் தவறு செய்தோம்? எந்த வயதிலிருந்து நம் குழந்தை நம்மிடம் இருந்து விலகினாள் என்று நீங்களும் உங்கள் மனைவியும் ஆற அமர உட்கார்ந்து யோசியுங்கள். பெற்ற குழந்தையிடம் ஈகோ பார்க்காமல் மனம் விட்டுப் பேசுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கையின் அர்த்தமே அவள்தான் என்பதையும் அவள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் வாழ்கிறோம் என்பதையும் இந்த வீட்டின் மகாராணி அவள்தான் என்பதையும் அவளுக்கு கனிவுடன் புரிய வையுங்கள். முடிந்தால் பிளஸ் ஒன் படிக்கும் நேரத்தில் இது போன்ற எண்ணங்கள் அவளுக்கு வந்ததற்காக அவளுக்குத் தெரியும்படி உங்களைத் தண்டித்துக் கொள்ளுங்கள்.
“மாறுதல் ஒன்றே மாறுதல் ஆகாதது” என்பது உலக நீதி. எனவே முறையான வழிமுறைகள் மூலம் உங்கள் மகளின் மனமும் மாறும். புதன் வலிமையாக ஆட்சியாக இருப்பதன் மூலம் எதையும் சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் புத்திசாலியான அவள் இதையும் புரிந்துகொண்டு தன்னைத் திருத்திக் கொள்வாள்.

ஜாதகப்படி இரண்டு ஏழாமிடங்கள் பாபக்கிரக தொடர்பு இல்லாமல் இருப்பதால் அவளது வாழ்க்கை சிக்கலாக வாய்ப்பில்லை. பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் அமையும். அடுத்த மூன்று வருடங்கள் சுக்கிரனைச் சுற்றியே அவளுக்கு அமைவதால் கவனமாக இருங்கள். முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 79 (29.03.2016)

  1. Apps தனி கேள்வி பதில் துவங்க குரூஜீ ஜயா வுக்கு எனது வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *