வி. சுரேஷ் குமார், தாராபுரம்.
கேள்வி:
46 வயதான எனக்கு இந்தஉலகத்தில் பிடித்தவர்கள்எனது தாத்தா, பாட்டி. ஆகிய இரண்டே பேர்கள்தான். ஏழுவயது வரை தாத்தாவிடம் வளர்ந்தநான் அவரது மறைவிற்கு பிறகு அதுவரை யாரென்றே தெரியாத என்தாய், தகப்பனிடம் சேர்ந்து பெற்றோர்களின் ஓயாத புலம்பலுக்கிடையே வளர்ந்தேன். என்னை ஒரு பெண்பிள்ளையை போல கண்டிப்புடன் அடக்கி அடக்கியே வளர்த்தார்கள். தந்தை எப்போதும் என்னிடம் அதட்டல், அதிகாரத்துடன்தான் நடந்து கொள்வார். அவரை அப்பாவென இதுவரை மூன்று முறைகள் மட்டும்தான் கூப்பிட்டு இருக்கிறேன். பலநேரங்களில் என் அப்பாவையும், அம்மாவையும் கொலை செய்துவிடலாம் என்று நினைக்கும் அளவிற்கு ஆத்திரம் வரும். என் 36 வயதில் எனக்கு பிடிக்காத பெண்ணை வற்புறுத்தி திருமணம் செய்துவைத்தார்கள். முதலிரவு அன்றே வாழ்க்கை வெறுத்து விட்டது. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். மனைவி அருகில் வந்தாலே வெறுப்பாக இருந்தது. தனி அறையில் ஒரு ஆணுடன்படுத்து உறங்குவது போலவே இருந்தது. உடனே விவாகரத்து வழக்குத் தொடுத்து பிரிந்து விட்டேன். அவள் வேறு கல்யாணம் செய்து விட்டாள். மூன்று, நான்கு வருடங்களாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிடித்த பெண் கிடைக்கவில்லை. நல்லவேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்ப வாழ்க்கை இல்லை. ருசியான பிடித்தமான சாப்பாடு இல்லை. எதற்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். டி. என். பி. எஸ். சி பரீட்சை எழுதி இருக்கிறேன். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் நடக்குமா? விதவையாக இருந்தாலும் மனதிற்கு பிடித்த பெண் வேண்டும் என்று நினைக்கிறேன். 2-வது திருமணம் சந்தோஷமாக இருக்குமா? மீதி இருக்கும் காலமாவது மகிழ்ச்சியாக இருப்பேனா? தயவு செய்து எனது குழப்பத்தில் இருந்து விடுதலை தரும்படி ஜோதிட ஞானியை கேட்டு கொள்கிறேன்.
|
ல,சூ
பு,சனி |
|
|
சுக் |
ராசி |
கே |
ரா |
|
சந்,
செவ் |
குரு |
|
|
பதில்:
(மேஷ லக்னம், தனுசு ராசி. 1-ல் சூரி, புத, சனி. 4-ல் கேது. 8-ல் குரு. 9-ல் செவ். 11-ல் சுக். 16.4.1971, காலை 7.30, பாலக்காடு)
லக்னத்தில் நீசபங்கம் பெற்ற வலுவான சனி அமர்ந்து, ராசியோடு செவ்வாய் இணைந்து, லக்னத்தையோ, ராசியையோ சுபர் பார்க்காத அமைப்புள்ள ஜாதகம் உங்களுடையது. இந்த உலகத்தில் உங்களுக்கு யாரையுமே பிடிக்காது. உங்கள் தாத்தா இப்போது உயிரோடு இருந்தால் அவரையும் உங்களுக்கு பிடிக்காது. கடுமையான தாழ்வுமனப்பான்மை உள்ள, இந்த உலகத்தில் யாரோடும் ஒட்டாதவர் நீங்கள். எதிலும் ஒரு சந்தேகம் இருக்கும். லக்னத்தில் சனி இருப்பதால் போனசாக ஆன்மீக ஈடுபாடு மட்டும் உண்டு. முழுக்க முழுக்க கடுமையான பாபத்துவம் பெற்ற சனியின் ஆதிக்கத்தில் இருக்கிறீர்கள்.
பிதுர்க்காரகனான உச்ச சூரியனோடு நீச சனி சேர்ந்து, ஒன்பதில் அஷ்டமாதிபதி அமர்ந்து, ஒன்பதுக்குடையவன் எட்டில் மறைந்ததால் தகப்பனும் நல்லவன் இல்லை. தகப்பனை உங்களுக்கு பிடிக்கவும் இல்லை. அதேபோல நான்கில் சர்ப்ப கிரகங்கள் சம்பந்தப்பட்டு நான்கிற்குடையவன் செவ்வாயுடன் சேர்ந்ததால் அம்மாவையும் உங்களுக்கு பிடிக்கவில்லை.
உங்களுடைய கேள்வியை நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் பெற்றவர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஜாதகப்படி உங்களுடைய குணங்கள் இதுபோன்று அமைவதற்காகவே கண்டிப்பான, யாரையும் வெறுக்கத்தக்க ஒரு இளம் வயது சூழலை சனிபகவான் அமைத்துத் தருகிறார்.
சிறுவயதில் அன்பும், ஆதரவும் கிடைக்காததால் உலகமே இப்படித்தான் என்று எதிர்மறையாக சிந்திக்கும் குணமுள்ளவராக, யாரையுமே பிடிக்காதவராக மாறிப் போனீர்கள். இது போன்றவர்கள் ஜோதிட ஈடுபாடு வரும் போது தன்னுடைய கர்மாவை உணர்ந்து கொண்டு, தன்னை நேர்மறையாக, தன்னம்பிக்கை உள்ளவனாக, தன்னை முழுக்க பாசிட்டிவ் எண்ணங்கள் கொண்டவனாக மாற்றிக் கொள்வதைதான் ஜோதிடம் கற்றுத் தருகிறது.
மேஷ லக்னத்தில் பிறந்த உங்களின் லக்னாதிபதி செவ்வாய் பரிவர்த்தனையின் மூலம் எட்டில் மறையும் நிலையுண்டாகி, லக்னத்தில் சனி முறையான நீசபங்கத்தினால் உச்ச வலுவை அடைந்து உங்கள் மனதை ஆட்டுவிக்கிறார். செவ்வாய்க்கான முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை முறையை நீங்கள் முற்றிலுமாக மாற்றிக் கொள்ள முடியும்.
சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட வருடந்தோறும் ஒரு ஜென்ம நட்சத்திர நாளன்று கும்பகோணம் அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் சென்று இரண்டரை மணி நேரத்திற்கு குறையாமல் உள்ளிருந்து வழிபடுங்கள். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் பழமையான முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் சென்று வணங்கி குறைந்தது இருபத்தி நான்கு நிமிடங்கள் உள்ளே இருங்கள்.
உங்களைச் சுற்றி இப்போது கருப்பு நிறமே அதிகமாக இருக்கும். நீங்களும் கருப்பைத்தான் அதிகம் விரும்புவீர்கள். அதை முழுவதுமாக விலக்கி உங்களைச் சுற்றி சிகப்பு நிறமாக்கிக் கொள்ளுங்கள். அதற்காக கருப்பு நிற தலைமுடியை கருக்கிக் கொள்ள முடியாது.
உங்களைச் சுற்றி இருக்கும் சின்ன சின்ன பொருட்களை சிகப்பு நிறமாக வாங்குங்கள். சிகப்பு நிற ஆடைகளை மட்டும் அணியுங்கள். சிறிதளவு துவரம் பருப்பை ஒரு பொட்டலமாக கட்டி சட்டை அல்லது பேண்டில் உங்கள் உடலைத் தொட்டுக் கொண்டிருக்கும்படி எப்போதும் வைத்திருங்கள். சட்டையின் உள் பாக்கெட்டில் வைக்கலாம். இவற்றைச் செய்வதன் மூலம் உங்களிடம் மிகப் பெரிய மாற்றம் வரும். தன்னம்பிக்கையுள்ள மனிதனாக மாறுவீர்கள்.
ஜாதகப்படி அரசு வேலைக்குரிய சிம்மத்தை சுக்கிரன் பார்த்து சூரியன் உச்சமானதால் சில தடைகளுக்குப் பிறகு உங்களுக்கு அரசு வேலை உண்டு. அதே போல ஏழுக்குடையவனை விட இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் பதினொன்றுக்குடையவன் வலுப் பெற்றதால் நான் மேலே சொன்ன பரிகாரங்களை முறையாக செய்யும் பட்சத்தில் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். கண்டிப்பாக இனி வரும் காலத்தை ஜெயிப்பீர்கள். வாழ்த்துக்கள்.
ஆர். பிரபாகரன், ஆலங்குளம்.
கேள்வி :
ஜோதிடக் கடலே, மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதா? கேது தசை எப்படி இருக்கும்? சுக்கிர தசை நன்மை தருமா? பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
பதில்:
பிறந்தநேரம் குறிக்கப்படாத வாக்கியப் பஞ்சாங்க ஜாதகத்தை அனுப்பி இருக்கிறீர்கள். வாக்கியப் பஞ்சாங்கங்கள் தவறானவை. அதில் கணிக்கும் ஜாதகம் பிழையானது. எந்த ஒரு ஜாதகத்தில் பிறந்தநேரம் குறிக்கப்படாமல் வெறும் நாழிகை மட்டும் எழுதப்பட்டு இருக்கிறதோ அந்த ஜாதகத்தில் தவறு இருக்கிறது என்று அர்த்தம். பிறந்த நேரம் அனுப்புங்கள். பதில் தருகிறேன்.
எஸ். சித்ரா, பரமத்திவேலூர்.
கேள்வி :
திருமணம் ஆனதில் இருந்தே வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லை. பள்ளி ஆசிரியையாக இருக்கிறேன். மகளின் முதல் திருமண வாழ்வும் பொய்த்துவிட்டது. இத்தனை நாள் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி விட்டேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்றால் அறியா மகனை நினைத்தும், மகளை நினைத்தும் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். கடைசி காலத்திலாவது நன்றாக இருப்பேனா?
பதில்:
எல்லாப் பிரச்சினைகளையும் தெளிவாக எழுதியது சரிதான் அம்மா. மூவரின் பிறந்த தேதியை மட்டும் எழுதி நேரம், இடத்தைக் குறிப்பிடாவிட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்.
சந்திரகுமாரி, கோவை.
கேள்வி :
ஏழரைச்சனி நடக்கும் போது பெண் பார்க்கலாமா? எனது மகனுக்கு சனிமுடிந்தவுடன் கல்யாணம் செய்தால் நல்லது என்று சொல்கின்றனர். தற்போது இவன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். வெளிநாட்டில்தான் இருப்பானா? தாய்நாட்டிற்கு எப்போது திரும்புவான்? திருமணம் எப்போது நடைபெறும்? 4-ல் செவ்வாய் இருப்பது பரிகார செவ்வாய்தான். தோஷம் இல்லை என்று சொல்கிறார்கள். எதுவும் பரிகாரம் தேவையா?
பதில்:
செவ் |
|
குரு |
|
ரா |
ராசி |
|
|
கே |
ல,சனி |
சூ,பு |
சந்,சுக் |
|
(தனுசு லக்னம், துலாம் ராசி. 1-ல் சனி, 3-ல் ராகு, 4-ல் செவ், 6-ல் குரு. 11-ல் சுக். 12-ல் சூரி, புத. 5.12.1988, காலை 9.05, மதுரை)
திருமணத்திற்கும் ஏழரைச்சனிக்கும் சம்பந்தம் இல்லை. சொல்லப் போனால் இளம் வயதில் சனி நடக்கும் போதுதான் திருமணம், புத்திர பாக்கியம் கிடைக்கும். ஏழரைச்சனியால் வேலை தொழில் போன்ற பொருளாதார அமைப்பில் தான் பாதிப்புகள் இருக்கும்.
மகனுக்கு ஏழுக்குடைய புதன் பனிரெண்டில் மறைந்து, ஏழாமிடத்தை சனி, செவ்வாய் இருவரும் பார்ப்பது தாமத திருமண அமைப்பு. குரு ஆறில் மறைந்து, ராசிக்கு ஐந்தில் ராகு அமர்ந்து புத்திர தோஷமும் இருக்கிறது. மாலைமலரில் ஏற்கனவே நான் சொல்லியிருக்கும் குருவிற்கான முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள்.
ராசிக்கு எட்டாமிடமும், லக்னத்திற்கு எட்டாமிடமும் சுபத்துவமாகி லக்னாதிபதி குரு பரதேச வாசத்தைக் குறிக்கும் பனிரெண்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் உங்கள் மகன் நிரந்தரமாக வெளிநாட்டில்தான் வசிப்பார். உங்கள் காலத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு வர மாட்டார். நான்கில் செவ்வாய் இருப்பது சொல்லுமளவிற்கு பெரிய தோஷமில்லை.
குடிக்கும் மகன் திருந்துவானா?
வி. முருகேசன், போரூர்.
கேள்வி :
1938-ல் பிறந்து கிட்டத்தட்ட 80 வயதாகும் எனக்கு விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். துலாம் ராசியில் பிறந்த என் ஒரே மகன் என் பேச்சையும், அவன் மனைவியின் பேச்சை கேட்காமல் தினமும் தண்ணீர் சாப்பிடுகிறான். இதனால் உடல் கெட்டு இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்து தெய்வ அருளால் நல்லபடியாக வீட்டிற்குவந்தான். எவ்வளவோ சொல்லியும் மறுபடியும் சாப்பிட ஆரம்பித்துவிட்டான். தினந்தோறும் பகலிலும், இரவிலும் குடித்துவிட்டுத்தான் வருகிறான். கேட்டால் எனக்கு தெரியும் நீங்கள் சும்மா இருங்கள் என்றுசொல்லுகிறான். 80 வயதில் எனக்கு இவனால் நிம்மதி கிடையாது. சிலசமயத்தில் இறந்து விடலாம் என்று நினைக்கிறேன். என் கூடப் பிறந்ததம்பிகள் இரண்டு பேரும் கடந்த ஆறுமாதத்தில் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள். தனிமையில் இருக்கிறேன். என் மகன் திருந்தி தன்குடும்பத்தை காப்பாற்றுவானா? அல்லது காலம் முழுக்க இப்படிதான் இருப்பானா?
பதில்:
மிகப்பெரிய நீண்ட கடிதத்தை எழுதிய நீங்கள் யாருடைய ஜாதகத்தையும் இணைக்காமல் உங்கள் இருவரின் ராசியை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறீர்கள். உலகில் உள்ள விருச்சிக ராசிக்காரர்கள் அனைவரும் அவரவரின் பிறந்த ஜாதக வலுப்படி ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி என்னுடைய ராசிபலன்களில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிலும் ஒருவீட்டில் இரண்டு ஏழரைச்சனி ராசிகள் இருந்தால் கஷ்டங்கள் அதிகம்தான்.
உங்கள் மகனுக்கும், உங்களுக்கும் சனி நடப்பதால் உங்களின் ஒரே எதிர்பார்ப்பும், ஆதர்சமுமான மகன் மூலமாக மன அழுத்தமும், தூக்கமும் இல்லாத நிலைமை உங்களுக்கு இருக்கிறது. சனி நடக்கும்போது நெருங்கிய உறவினர் இழப்பு என்ற வகையில் இரண்டு தம்பிகளையும் இழந்து விட்டீர்கள்.
வருகின்ற அக்டோபர் மாதம் இருபத்தி ஆறாம் தேதி அன்று உங்கள் மகனின் துலாம் ராசிக்கு சனி முற்றிலுமாக விலகுவதாலும், உங்களின் விருச்சிக ராசிக்கு ஜென்மச் சனி நீங்குவதாலும் இனிமேல் உங்களின் மனக்குறை கண்டிப்பாக நீங்கி நீங்கள் எதிர்பார்க்கும் நல்லது நடக்க ஆரம்பிக்கும். மகனின் ஜாதகத்தை பிறந்த நேரத்துடன் அனுப்புங்கள். நிரந்தரமாக குடிப்பழக்கத்தை விடுவாரா, மாட்டாரா என்பதைச் சொல்கிறேன்.
ஜோதிடப் பலன்களை ஆழ்மனக்கூறு தத்துவத்துடன் கலந்து மிகத்துல்லிய பலன்களைத் தங்களால் மட்டுமே தர முடியும் குருஜி ஐயா அவர்களே.பதில் கள் பயனுள்ளவையாக இருந்தன. நன்றி ஐயா.
ஐயா தங்களின் துல்லியமான பதிலுக்காக இந்த வாரமும் காத்திருந்தேன் நனறி