adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 130 (11.4.2017)

டி. வடிவேலன், தூத்துக்குடி.

கேள்வி :
நானும், ஒரு பெண்ணும் நான்கு வருடங்களாக காதலித்து வருகிறோம். இரு வீட்டு பெற்றோரும் சம்மதமும் தெரிவித்து விட்டார்கள். ஆனால் பொருத்தம் பார்த்தபோது எங்களுக்கு நான்கு பொருத்தம் மட்டுமே உள்ளது. எனக்கு நாகதோஷம் உள்ளது. இதனால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து. மேலும் எனக்கு 29 அல்லது 31 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் பல்வேறு கருத்துகளை சொல்கிறார்கள். இதனால் எங்களது      பெற்றோர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு தரும் தாங்கள் எனது வாழ்க்கைக்கும் ஒரு தீர்வுதரும்படி வேண்டுகிறேன். என் இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?
செவ் சந் பு.சுக் சூ குரு
ராசி கே
ரா
ல சனி
சந் சூ கே
ராசி  செவ் பு,குரு
சனி ல சுக்
 ரா
பதில்:
(ஆண்: தனுசு லக்னம், ரிஷப ராசி. 1-ல் சனி. 2-ல் ராகு. 4-ல் செவ். 6-ல் புத, சுக். 7-ல் சூரி, குரு. 21.6.1990, இரவு 7.57, கடலூர்)
(பெண்: சிம்ம லக்னம், மீன ராசி. 1-ல் சுக். 5-ல் ராகு, 6-ல் சனி. 11-ல் சூரி, கேது. 12-ல் செவ், புத, குரு. 5.7.1991, காலை 10.15, விழுப்புரம்)
ஒருவரை ஒருவர் விரும்பும் காதல் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரும் மனமுவந்து சம்மதித்த பிறகு பொருத்தம் பார்க்கவே தேவை இல்லை. உடல் கொடுத்த தாயும், தகப்பனும் ஏற்றுச் செய்யும் எதுவும் நமக்கு நன்மையாகவே முடியும் என்பதே நமது சாஸ்திரம். பெற்றோர்கள் சந்தோஷமாக ஏற்று கொள்ளும் போது அங்கு தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை.
நாகதோஷம் இருப்பதால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து என்றெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. உனது ஜாதகப்படி ஏழாமிடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்த்து ராசிக்கு எட்டில் சனி இருப்பது தாமத திருமணம் செய்யும் அமைப்பு. அதேநேரம் காதல், கலப்புத் திருமணம் இதற்கு ஒரு பரிகாரம் என்பதால் இப்போது திருமணம் செய்யலாம்.
2018-ல் ஏப்ரலில் ஆரம்பிக்கும் குருதசை, சுயபுக்தியில் உனக்கு தகப்பனாகும் அமைப்பு வந்துவிட்டதால் தாராளமாக இந்த பெண்ணை திருமணம் செய்யலாம். இருவருக்குமே பதினொன்றாம் இடம் வலுவிழந்து யோகதிசைகள் நடக்க இருப்பதால் மறுதிருமண அமைப்பு இல்லை. இருவருக்குமே லக்னாதிபதி வலுப் பெற்று, யோகர்கள் சுபத்துவம் பெற்றிருப்பதால் வாழ்வில் சிறப்பாகவே இருப்பீர்கள்.
உன்னுடைய ஜாதகப்படி மனைவியை குறிக்கும் ஏழாமிடத்தில் பாக்கியாதிபதி சூரியனும், குருவும் அமர்ந்து லக்னத்தை பார்ப்பதால் திருமணத்திற்கு பிறகு மனைவியால் உனக்கு யோகம் உண்டாகி, குழந்தை பிறந்ததிற்கு பிறகு நன்றாக இருப்பாய். லக்னத்தை குரு பார்ப்பதால் உன்னால் ஒரு பெண்ணை சந்தோஷமாக வைத்து கொள்ள முடியும்.
அதேநேரத்தில் வரும் தீபாவளிக்கு பிறகு உனது ரிஷபராசிக்கு அஷ்டமச் சனி நடக்க இருப்பதால் இன்னும் மூன்று வருடங்களுக்கு நீ வேலை, தொழில் விஷயங்களில் செட்டிலாக முடியாது. எனவே மூன்று வருடங்களுக்கு பிறகு உன் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
. சகுந்தலா, நிலக்கோட்டை.
கேள்வி :
நாற்பது வயதாகியும் என் மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ஆயிரக்கணக்கில் பரிகாரம் செய்தாகி விட்டது. அவனுக்கு விதவைப் பெண்தான் அமையும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். இதுஉண்மையா? அவனுக்கு திருமணம் நடைபெறுமா? நான் பேரன், பேத்திகளை பார்ப்பேனா? மகனுடைய நண்பர்கள் அவனை சாமியார்என்று கேலி செய்கிறார்கள் என்று சொல்லி மனவேதனை அடைக்கிறான். என் வேதனை எப்போது தீரும்?
ல கே சந் செவ் குரு
ராசி சுக் சனி
 சூ பு
ரா
பதில்:
(மீன லக்னம், ரிஷப ராசி. 4-ல் செவ், குரு. 5-ல் சுக், சனி. 6-ல் சூரி, புத. 7-ல் ராகு. 5.9.1977, இரவு 8 மணி, திண்டுக்கல்)
மகன் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் ராகு அமர்ந்து, ஏழாமிடத்தை சனி, செவ்வாய்   இருவரும் பார்க்கிறார்கள். இப்படி மூன்று அசுப கிரகங்களும் ஒரு பாவத்தோடு   சம்பந்தப்பட்டால் அந்த பாவம் பலவீனமாகும் என்ற விதிப்படி மகனுக்கு திருமண பாக்கியம் கனவாகவே இருக்கிறது.
ஜோதிடர்கள் சொன்னது ஓரளவு உண்மைதான். அதேநேரத்தில் விதவை என்பதை விட விவாகரத்தான பெண் என்பதே பொருத்தமானது. ஸ்ரீகாளஹஸ்திக்கு ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் சென்று ருத்ராபிஷேகம் செய்யுங்கள். நடக்கும் குருதசை, சந்திர புக்தியில் சந்திரன் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து தாம்பத்திய சுகத்தை கொடுக்கும் நிலையில் இருப்பதால் இந்த வருட இறுதியில் திருமணம் நடக்கும்.
ஆயினும் மகனின் ரிஷப ராசிக்கு ஐப்பசி முதல் அஷ்டமச்சனி நடக்க இருப்பதும், ஏழுக்குடையவர் ஆறில் மறைந்து பதினொன்றுக்குடையவர் அந்த வீட்டை பார்ப்பதும், கல்யாணம் ஆகியும் நிம்மதி இல்லாத நிலையை கொடுக்கும் என்பதால் பொருத்தம் பார்ப்பதில் கவனம் தேவை.
இர்பானாபேகம், சென்னை.
கேள்வி :
மாலைமலரில் வரும் ஜோதிடத்தை விடாமல் படித்து வருகிறேன். 32 வயது மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து நான்கு வருடமாகிறது. விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. விவாகரத்து ஆகுமா? 2-வதுதிருமணம் செய்து கொடுக்கலாமா? 2-வது திருமணம் செய்து வைத்தால்அவர் எனது மகளை நல்லபடியாக பார்த்துக் கொள்வாரா?
சந் ரா
 சுக் செவ் ராசி
 சூ குரு சனி பு,கே
பதில்:
(கன்னி லக்னம், மேஷ ராசி. 3-ல் சனி, புத, கேது. 4-ல் சூரி, குரு. 6-ல் சுக், செவ். 1.1.1985, அதிகாலை 00.05, சென்னை)
மகளுக்கு கடந்த 2 வருடங்களாக அஷ்டமச் சனி நடப்பதால் கடுமையான மன அழுத்தத்தை தரும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும். ஜாதக அமைப்புப்படி அவளுடைய கணவருக்கும் ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கலாம். மகள் ஜாதகத்தில் சுக்கிரன் ஆறில் செவ்வாயுடன் இணைந்து, சனி பார்வையை பெறுவது சரியான ஒன்றல்ல. நடக்கும் விவாகரத்து வழக்கிற்கு மகளும் ஒரு வகையில் காரணமாக இருப்பார். 2019-ம் வருடம் மகளுக்கு இன்னொரு திருமணம் நடக்கும். அதன் மூலம் நல்ல வாழ்க்கை அமையும்.
கல்பனா, மணலி.
கேள்வி :
உங்களின் அனைத்து எழுத்துகளையும் விடாமல் படிக்கிறேன். கணவரை இழந்த எனக்கு எப்போதும் மனதில் இனம் புரியாத பயமும், குழப்பமும்இருந்து கொண்டே இருக்கிறது. கொஞ்ச நாட்களாக உடம்புக்கும் ஏதாவது      வந்து கொண்டே இருக்கிறது. மருந்து எடுத்துக் கொள்கிறேன். எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இரண்டு பிள்ளைகளையும் தனியே தவிக்க விட்டு விட்டுப் போய்விடுவேனோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயந்து சாகிறேன். என் ஆயுள்பலம் எப்படி இருக்கிறது? கடைசிவரை இருந்து பிள்ளைகளை நல்லபடியாக கரை சேர்ப்பேனா? கணவரின் அரசுவேலையை கேட்டு மனு      கொடுத்திருக்கிறேன். எப்போது கிடைக்கும்? சனிதசை நடப்பதால்சனிக்கிழமை காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுகிறேன். சனிக்கு அர்ச்சனை செய்யலாமா? உடம்பு சுகம் பெற பரிகாரம் இருந்தால்சொல்லுங்கள். என் குழப்பத்தை தெளிவுபடுத்தி அருளுமாறு ஜோதிட அரசனை பணிவுடன் வேண்டுகிறேன்.
பு சுக் செவ் சனி
 சந் சூ ராசி  கே
ரா
 குரு
பதில்:
(விருச்சிக லக்னம், கும்ப ராசி. 2-ல் குரு. 3-ல் ராகு. 4-ல் சூரி. 5-ல் புத. 6-ல் சுக், செவ். 13.3.1972, இரவு 10.40, சென்னை)
ஜோதிடத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு எதையாவது நினைத்து மனத்தைப் போட்டு குழப்பி கொள்ளும் உன்னைப் போன்றவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று குருவின் பார்வையை பெற்றால் அவர் 60 வயதிற்கு மேல் உறுதியாக வாழ்வார். ஆயுள் ஸ்தானாதிபதியான எட்டுக்குடையவனும், ஆயுள் காரகனான சனியும் கூடுதலாக வலுப் பெற்றிருந்தால் நிச்சயமாக 80 வயது தாண்டி தீர்க்காயுளுடன் இருப்பார்.
உனக்கு விருச்சிக லக்னமாகி லக்னாதிபதி செவ்வாய் ஆறில் மறைந்தாலும், ஆட்சி பெற்று சுக்கிரனுடன் இணைந்து சுபத்துவமாகி, குருவின் பார்வையுடன் இருப்பது நல்ல ஆயுள் பலத்தை குறிக்கிறது. அதைவிட மேலாக ஆயுள் ஸ்தானாதிபதியான புதன் நீசமானாலும், அவருக்கு வீடு கொடுத்த குரு ஆட்சி பெற்றதன் மூலம் நீசபங்கமாகி வலுவடைந்து, ஆயுள்காரகன் சனியும் திக்பலம் பெற்றதால் நீ தீர்க்காயுள் வாழ்வாய். புத்திரகாரகன் குரு ஆட்சி பெற்றதன் மூலம் உன் குழந்தைகள் நன்றாக இருப்பதை வயதான காலத்தில் உன்னால் பார்க்க முடியும். கணவனைத் தவிர்த்து மற்ற அனைத்திலும் நல்ல அமைப்புகளை கொண்ட ஜாதகம் உன்னுடையது.
இந்த உலகில் குறை இல்லாதவர்கள் எவரும் இல்லை. ஏழாமிடத்தில் சனி அமர்ந்து ஏழுக்குடையவன் ஆறில் செவ்வாயுடன் இருப்பதால் சனிதசை, சுக்கிர புக்தியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நீ கணவனை இழந்திருக்க வேண்டும். ஆயுள் பற்றிய சந்தேகம் வரும்போது சனிக்கு அர்ச்சனை செய்யலாம். காலபைரவரை வணங்குவதும் சரிதான்.
செவ்வாய்க்கிழமை தோறும் பூந்தமல்லியில் இருக்கும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடு. அவர்தான் உனக்கு சரியான டாக்டர். உனது உடல், மன நோய் இரண்டையும் தீர்த்தருள்வார். தூரம் அதிகமென்றால் பக்கத்திலேயே இருக்கும் பழமையான முருகன் கோவிலுக்குச் சென்று மனமுருக “முருகா.. உன் உள்ளம் உருகாதா..” என்று கேள். அனைத்தையும் அவன் அருள்வான். சூரியனும் சந்திரனும் அமாவாசை யோகத்தில் இணைந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதால் அடுத்த வருடம் உனக்கு அரசு வேலை கிடைக்கும். அதுமுதல் உன் வாழ்வில் எந்தப் பிரச்னையும் இருக்காது.
விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?
டி. ராமமூர்த்தி, நெற்குன்றம்.
கேள்வி :
எனது மகனின் ஜாதகத்தின் லக்னத்திலேயே ஆறு, எட்டு, பனிரெண்டிற்குடையவர்கள் அனைவரும் இருக்கிறார்கள். சனியும் ஆறில்      இருக்கிறார் என்பதோடு படிப்பு ஸ்தானாதிபதி சந்திரன், கேதுவின் நட்சத்திரத்தில் உள்ளதால் அவனது கல்வியில் குறை ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. இந்த ஜாதக அமைப்பு அவனது தொழில், திருமணத்தை பாதிக்குமா?
சந்,ல,பு செ,சுக் குரு சூ கே
ராசி
 ரா சனி
பதில்:
(மேஷ லக்னம், மேஷ ராசி. 1-ல் செவ், புத, சுக், குரு. 2-ல் சூரி. 3-ல் கேது. 6-ல் சனி. 30.5.2011, காலை 4.08, சென்னை)
மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய், சுபர்களான புதன், சுக்கிரன், குரு ஆகியரோடு இணைந்திருப்பதும், முக்கியமாக அவரது நண்பரான சந்திரனுடன் நெருங்கி இருப்பதும் யோகம் தருகின்ற அமைப்புகள். இந்த அமைப்பினால் லக்னம் அதிக சுபத்துவமாக அமைந்து நல்ல பலன்களை அனுபவிக்கின்ற தகுதியைப் பெறுவதோடு, லக்னாதிபதியும் லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு.
இந்த அமைப்பினாலும், 21 வயதிற்கு பிறகு லக்ன யோகர்களான சூரிய, சந்திர, செவ்வாய், குரு, தசைகள் நடக்க இருப்பதாலும், லக்னத்திலேயே குருவும், புதனும் திக்பலம் பெற்றிருப்பதாலும் மகனின் படிப்பு, வேலை, தொழில் போன்ற விஷயங்கள் சிறப்பாக இருக்கும். அதேநேரத்தில் குழந்தைக்கு கடந்த இரண்டு வருடங்களாக அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் தற்போது உங்களுடைய பொருளாதார நிலைமையும் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. மகனும் படிப்பில் கவனமின்றி விளையாட்டுத் தனமாகத்தான் இருப்பார்.
ஒரு ஜாதகத்தில் ஆறு, எட்டு, பனிரெண்டிற்குடையவர்கள் இணைவு “விபரீத ராஜயோகம்” எனப்படும் ஒரு சிறப்பு மிக்க யோகமாகும். இந்த யோகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசையில் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் குருட்டு அதிர்ஷ்டமாகவோ, மறைமுக வழிகளிலோ திடீரென உயர்வுகள் உண்டாகும்.
ஆனால் இந்த யோகம் பூரணமாக செயல்பட வேண்டுமெனில் ஆறு, எட்டு, பனிரெண்டிற்குடையவர்கள் மேலேகண்ட ஆறு, எட்டு, பனிரெண்டாமிடங்களுக்குள் தங்களுக்குள் பரிவர்த்தனையாகவோ, அல்லது ஆறு, எட்டு, பனிரெண்டாமிடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் ஒன்று கூடியோ இருக்க வேண்டும். இதில் எவரேனும் ஆட்சி, உச்சம் போன்றவையும் அடைந்திருக்க வேண்டும். அப்போதுதான் விபரீத ராஜயோகம் பூரணமான பலனை தரும். முக்கியமாக ராகு-கேதுக்களுடன் யோகம் தரும் கிரகங்கள் இணைந்திருக்க கூடாது.

உங்கள் மகன் ஜாதகத்தில் ஆறு, எட்டு, பனிரெண்டிற்குடையவர்கள் லக்னத்தில் இணைந்திருப்பது ஓரளவிற்கு விபரீத ராஜயோகம்தான் என்றாலும் அவர்கள் இணைந்திருப்பது லக்னத்தில்தான் என்பதால் யோகம் சிறிது பங்கப்படவே செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *