adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 4.4.2017

எஸ். கண்ணன், மடிப்பாக்கம்.

கேள்வி :
எங்கள் குடும்பத்திலும்,என் மைத்துனர் மற்றும்மைத்துனி குடும்பத்திலும்உள்ள மகன்களுக்கு திருமணம் நடத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள்விவாகரத்து நடைபெற்றுள்ளது. (ஒன்று நடைபெறப் போகிறது). இவர்கள்மூவருக்கும் ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்தோம். ஆனால் ஒரு வருடத்திற்குள் எல்லாம் பாழாகி விட்டது. பொருத்தம்பார்த்துச் சொல்லும் ஜோதிடர்கள் இதை முன்பே சொல்ல மாட்டார்களா? இவர்களுக்கு இரண்டாம் கல்யாணம் உண்டு என்று ஏன் முன்கூட்டியேதெரிவிக்கவில்லை? தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.
பதில்:
தமிழ்நாட்டில் பரவலாக நடைமுறையில் இருக்கும் பத்துப் பொருத்தம் பார்ப்பதைப் பற்றி ஏற்கெனவே பலமுறை மாலைமலரில் தெளிவாக எழுதி இருக்கிறேன். வேத ஜோதிடத்தில் நமது ஞானிகள் எந்த ஒரு இடத்திலும் பத்துப் பொருத்தத்தை மட்டும் பார்த்து திருமணம் செய்து வை என்று சொல்லவே இல்லை. பத்துப் பொருத்தம் பார்க்க ஜோதிடர் தேவையில்லை. பத்து ரூபாய் புத்தகம் போதும்.
இந்த பொருத்தங்கள் நான் எழுதும் ராசிபலனைப் போல பொதுவானவைதான். எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்கின்ற அவசியமில்லை. இவைகளைத் தாண்டி, திருமணம் செய்து வைக்க வேண்டிய இருவரின் ஜாதகங்களையும் சீர் தூக்கிப் பார்த்து, இருவரும் மனமொத்து சந்தோஷமாக வாழ்வார்களா? குழந்தை பிறக்குமா? ஆயுளுடன் இருப்பார்களா?. பொருளாதாரக் கஷ்டங்கள் இருக்குமா? என்பது போன்ற விஷயங்களை “ஜாதக அனுகூலப் பொருத்தம்” என்ற முறையில் கணக்கிட்டுத்தான் இருவரையும் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
எல்லாத் துறையிலும் அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள், மேதைகள், மேதைகள் அல்லாதவர்கள் என்ற இரு பிரிவுகள் இருப்பதைப் போல ஜோதிடத் துறையிலும் இருக்கிறது. மேம்போக்கான ஞானம் உள்ள, போதிய அனுபவம் இல்லாத ஒரு ஜோதிடருக்கு எல்லாம் தெரியும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. ஒரு வகுப்பில் நூற்றுக்கு நூறு மார்க் எடுப்பவனுக்கும் மாணவன் என்றுதான் பெயர். பத்து மார்க் எடுத்து தேர்வில் தவறிப் போகிறவனுக்கும் மாணவன் என்றுதான் பெயர்.
அனைத்தும் நமது முன் ஜென்ம கர்மாவின்படியே நடக்கிறது என்று வலியுறுத்தும் இந்த மகா கலையின்படி உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால், சரியான ஜோதிடர் அடையாளம் காட்டப்பட்டு அனைத்தும் நன்றாக நடக்கும். கர்மா சரியில்லை என்றால் மேம்போக்கான ஞானமுள்ள, அனுபவக் குறைவான ஜோதிடரிடம் செல்வீர்கள்.
பொருத்தம் பார்க்க வரும் போதே அபசகுனமாக இவர்களுக்கு இரண்டாவது திருமண அமைப்பு இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்பதை தொலைக்காட்சிகளிலும், ஜோதிடக் கருத்தரங்குகளிலும் சொல்லிக் கொண்டும், எழுதிக் கொண்டும்தான் இருக்கிறேன்.
ஒருவரின் ஜாதகத்தில் ஏழுக்குடையவர் வலுவிழந்து, பதினொன்றுக்குடையவர் பலம் பெற்றால் இரண்டு திருமணம் நடக்கும் என்பது ஜோதிடத்தின் மாறாத விதி. இந்த விதியை எனது மாணவர்களிடத்தில் ஏராளமான முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற சென்னைக் கருத்தரங்கிலும் இதை விளக்கிப் பேசினேன். ஆனால் வலுவிழந்து, பலம் பெற்று என்கின்ற இந்த விதியினை சரியாகக் கணிக்க முடிந்த ஜோதிடரால் மட்டுமே இந்த ஜாதகனுக்கு இரண்டு திருமணம் என்பதை கண்டறிய முடியும்.
ஜாதகம், முகூர்த்தம், ஆரூடம், பிரச்னம் போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கிய இந்த சாஸ்திரத்தில் பொருத்தம் பார்ப்பது என்பது வேறு, எதிர்கால பலன் அறியும் ஜாதக பலனைச் சரியாகச் சொல்வது என்பது வேறு. பொருத்தம், ஜாதகபலன் இரண்டும் அறிந்த ஜோதிடரிடம் சென்றிருந்தால் உங்கள் குடும்பத்திற்கு இந்த நிலை வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஜோதிடரை அடையாளம் காண்பதற்கும் பரம்பொருளின் அனுமதி வேண்டும்.
எஸ். லேகா, ராசிபுரம்.
கேள்வி :
கடந்த ஜூலையில் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுமருத்துவமனைக்கு சென்றதில் அவருக்கு காச நோய் (டி .பி) இருப்பதுதெரிய வந்தது. ஏற்கனவே இடதுகாலில் போலியோ அட்டாக்இருந்தவருக்கு இப்போது டி.பி வந்ததால் வலதுகாலும் செயலிழந்து 10 மாதங்களாக படுத்த படுக்கையாகிவிட்டார். இனி அவர் நடப்பாரா? வேலைக்கு செல்வாரா? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
சுக் ரா சூ பு செவ்
ராசி
குரு  ல
 சந் சனி கே
பதில்:
(சிம்ம லக்னம், தனுசு ராசி. 3-ல் சனி, கேது. 6-ல் குரு. 9-ல் சுக், ராகு. 10-ல் சூரி, புத. 11-ல் செவ். 4.6.1985, காலை 11.20, ராசிபுரம்)
கணவருக்கு கடந்த வருடம் முதல் நோயைத் தரும் ஆறுக்குடைய உச்ச சனியுடன், ஆறு டிகிரிக்குள் நெருங்கி இணைந்த கேதுவின் மூல நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திர தசை நடப்பதால், காச நோயும், நடக்க முடியாத நிலையும் உருவானது. தசாநாதன் சந்திரனை செவ்வாய், சனி இருவரும் பார்ப்பதோடு உன் குடும்பத்தில் கணவருக்கு ஏழரைச் சனி, உனக்கு அஷ்டமச் சனி, மகளுக்கு விருச்சிக ராசியாகி ஜென்மச் சனி என மூன்று பேருக்கு சனி நடப்பதாலும் குடும்பம் தற்போது திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறது.
கவலைப்படாதே. எல்லா சோதனைகளுக்கும் ஒரு முடிவு இருந்துதான் தீரும். உடனடியாக நாளைக்கே உன் கணவன் எழுந்து ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வான் என்று நான் சொல்ல இயலாவிட்டாலும், இந்த வருடக் கடைசியில் உனக்கும், மகளும் சனி விலகுவதால் அடுத்த வருட ஆரம்பத்தில் இருந்து உனக்கு சற்று நிம்மதி கிடைக்கும்.
எம். பூபதி, தெற்குவாசல்.
கேள்வி :
என் வாழ்க்கை மீது நான் நம்பிக்கை வைக்க தங்கள் வாக்கு மீதுநம்பிக்கை வைத்து இந்த கடிதத்தை எழுதுகிறேன். முன்னேற்றம்எப்போது கிடைக்கும்? அதற்கு ஜாதகத்தில் வழி இருக்கிறதா? அப்படியானால் அது எப்போது? உழைப்பிற்கேற்ற ஊதியம் இதுவரைகிடைக்கவில்லை. சொந்தத் தொழில் செய்தால் முன்னேற்றம் உண்டா? ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அடுத்த குழந்தை கிடைக்குமா? தங்களின் வேத வாக்குக்காக காத்திருக்கும் சீடன்.
பதில்:
கே சனி
 குரு ராசி
சந்
சூ சுக் பு,செ ரா
(கடக லக்னம், மகர ராசி. 5-ல் புத, செவ், ராகு. 6-ல் சூரி, சுக். 8-ல் குரு. 12-ல் சனி. 16-12-1974, இரவு 8.45, மதுரை)
இருபது வயது முதல் யோகம் தர இயலாத விருச்சிக ராகு தசை நடந்ததும், இப்போது வரை முன்னேற்றத்தை தர முடியாத தசா, புக்திகள் நடப்பதாலும் எதிர்காலத்தை பற்றிய பயம் உங்களுக்கு இருக்கிறது. லக்னாதிபதி லக்னத்தைப் பார்த்த வலுவான ஜாதகம் உங்களுடையது. தற்போது ஆறுக்குடைய குரு தசையில் எட்டுக்குடைய சனி புக்தி மார்ச் மாதம் வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டம் மோசமானதுதான். சனிபுக்தி முடிந்ததும் எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது.
ஏழரைச்சனி ஆரம்பிக்க உள்ளதால் இப்போது சொந்தத் தொழில் செய்ய வேண்டாம். அடுத்து வர இருக்கும் புதன்புக்தியில், புதன் ஐந்தாமிடத்தில் செவ்வாயோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இன்னொரு ஆண் குழந்தை உண்டு. குரு தசையின் முதல் பாதி எட்டு வருடங்கள் முடிந்தபிறகு, பிற்பகுதி ஒன்பதுக்குடைய பலன்கள் நடக்கும் என்பதால் அதுவரை காத்திருக்கவும். எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் கவலைப்பட வேண்டாம்.
டி. தனுஷ்கோடி, விக்கிரமசிங்கபுரம்.
கேள்வி :
வருமானத்திற்கு வழியறியவில்லை.
வாழ்வில் நிம்மதி வரவும் இல்லை.
வசந்த காலமெல்லாம் கசந்த காலமாயிற்று.
தொடரும் துன்பத்தினால் எனை
தொற்றிக் கொண்டது வேதனை.
நடைபிணமாக வாழும் என்னை
கிடைபிணமாக காலம் மாற்றுமுன்
ஏற்றம் நிகழுமா? ஏமாற்றம்தான் மிஞ்சுமா?
இல்லை ஆசானிடமும் எனக்கு ஏமாற்றம்தானா?
 
பதில்:
கே சனி
 சுக் குரு ராசி
சூ பு
 செவ் சந் ரா
(துலாம் லக்னம். விருச்சிக ராசி. 2-ல் ராகு. 3-ல் செவ். 4-ல் சூரி, புத. 5-ல் சுக், குரு. 9-ல் சனி. 5-2-1975, அதிகாலை 12.33, நெல்லை)
அனுஷத்தில் பிறந்ததினால் அனுதினமும் வேதனைதான்.
ஐந்து வருடமாக அதிகமான சோதனைதான்.
ஐப்பசி பிறந்ததும் அல்லல்கள் தீர்ந்திடுமே..
எப்பசியும் இல்லாமல் ஏற்றம்தான் வந்திடுமே..
செந்தூரைச் சென்றடைந்து கந்தனைக் கண்டு வந்தால்
நொந்த மனம் நேராகும். நடைபிணமும் உயிராகும்.
சீரான வாழ்வு வரும். சிறப்புக்கள் மீண்டும் சேரும்.
ஏழரையான் சோதனையை, ஏறுமயிலான் மாற்றி அருள்வான்
ஆறுமுகத்திடம் ஆறுதல் உண்டு.
மாறுதல் வந்திடும், மறக்காமல் போய் வா.
கேட்டை நட்சத்திரம் கெட்ட நட்சத்திரமா?
ஆர். மலர், திருமுல்லைவாயல்.
கேள்வி :
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்து 31 வயதாகும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அரசுப் பணியிலும் இருக்கிறேன். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவளை பெண் கேட்டுப் போனால் இறந்து விடுவார்கள் என்ற கருத்து மக்களிடம் பரவலாக உள்ளது. அதனால் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்கள். இது உண்மைதானா? மூலம், ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களும் கெட்டவைகள் என்று அந்தப் பெண்களையும் யாரும் திருமணம் செய்ய ஒத்துக் கொள்வது இல்லை. எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கேட்டை நட்சத்திரம் கெட்ட நட்சத்திரமா? இதற்கு முன்னுரிமை கொடுத்து பதில் சொன்னால் என் போன்ற துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாகவும் இந்த மாதிரியான தவறான எண்ணங்களில் இருந்து மக்களுக்கு வெளிவருவதும் இருக்கும்.
ரா
ராசி
குரு
சூ,பு சுக் சந் சனி செவ் கே
பதில்:
(மிதுன லக்னம், விருச்சிக ராசி. கேட்டை நட்சத்திரம். 5-ல் செவ், கேது. 6-ல் சனி. 7-ல் சூரி, புத, சுக். 8-ல் குரு. 8.1.1986, மாலை 4.42, சென்னை)
எல்லா நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே... எல்லா நட்சத்திரங்களும் கெட்ட நட்சத்திரங்களே... ஒருவரின் வாழ்க்கை தனித்த ஒரு நட்சத்திரத்தினால் மட்டும் அமைந்து விடுவதில்லை. ஜோதிடம் என்பதே ஒன்பது கிரகங்கள், பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கைதான். இப்படிப்பட்ட அமைப்பில் ஒரு நட்சத்திரத்தையோ, ஒரு ராசியையோ, ஒரு கிரகத்தையோ மட்டும் வைத்து ஒருவருக்கு எந்த பலனையும் சொல்லி விட முடியாது.
உயர் தனிச் செம்மொழியான தமிழில் எதுகை-மோனையோடு விளையாட முடியும் என்பதால் தமிழ்நாட்டில் மட்டும்தான், “பரணி தரணி ஆளும், மூலம் நிர்மூலம்” போன்ற பழமொழிகள் அதிகம். வேறு மொழிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை. ஜோதிடர்கள் கவிஞர்களாகவும் இருந்ததால் வந்த கோளாறு இது. உன் விஷயத்திலும், “கேட்டை கோட்டை கட்டி ஆளும்” என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். கேட்டையை பெண் கேட்டுப் போனால் இறந்து விடுவார்கள் என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
உன்னுடைய ஜாதகப்படி கணவனைக் குறிக்கும் ஏழுக்குடைய குரு, எட்டில் மறைந்து நீசமானதோடு அல்லாமல் செவ்வாய், சனி இருவரின் பார்வையிலும் இருப்பதால் கடுமையான களத்திர தோஷம் இருக்கிறது. ஐந்தாமிடத்தில் செவ்வாய், ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு, புத்திரகாரகன் நீசமானது தாமத புத்திர பாக்கிய அமைப்பு. இவை எல்லாவற்றையும் விட உனக்கு இப்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதும், சனிபகவான் உன் கேட்டை நட்சத்திரத்திலேயே சென்று கொண்டிருப்பதும்தான் உன் திருமணத் தடைக்கு காரணம்.

எல்லா கேட்டை நட்சத்திரக்காரர்களும் ஏதாவது ஒரு வகையில் மன அழுத்தத்திலும் ஏமாற்றத்திலும்தான் இருக்கிறார்கள், வரும் அக்டோபர் 26 க்குப் பிறகு இந்த நிலைமை மாறுவதால் அடுத்த வருடம் உனக்கு திருமணம் நடக்கும். களத்திர தோஷத்தை தவிர்த்து ஜாதகம் யோக அமைப்புடன் இருப்பதால் திருமணத்திற்கு பிறகு உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கவலை வேண்டாம். முதல் குழந்தை பெண்குழந்தை.

3 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 4.4.2017

 1. SIR,
  DOB 26/06/1969,TOB;-O4.30AM,POB;-NAMAKKAL
  I HAVE NOINCOME ,NO JOB, NO BUNINESS, WHAT I WILL DO FOR INCOME ?

  1. வணக்கம்,

   இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்

   தேவி

 2. குருஜி அவர்களுக்கு வணக்கம்.தங்கள் மாலை மலர் கேள்வி பதில் தவறாமல் படித்து வருகிறேன். மேலும் இணையதளம் செய்திகள் முழுவதும் படித்து வருகிறேன் மிகச்சிறந்த பதில்கள்.யாரும் மறுத்து கூற முடியாத பதில்கள்.இறைவன் தங்களுக்கு அளித்த இந்த அரிய பாக்கியத்தை பல ஆயிரம் பேர் இன்னும் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளும் வகையில் நீண்டகாலம் தொடர்ந்து பனி ஆற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *