adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (28.3.2017)

எம். அருணாச்சலம், மதுரை - 3.

கேள்வி :

33 வயதாகும் மகனின் திருமணம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. திருமணம் நடக்குமா? நடக்காதா? நடக்கும் என்றால் எப்போது நடக்கும் என்று சொல்லவும்.

பதில்:
சூ,ரா சுக்,பு
 ல ராசி
 குரு சந் செவ் சனி

(கும்ப லக்னம், விருச்சிக ராசி. 4-ல் சூரி, புத, சுக், ராகு. 9-ல் செவ், சனி. 11-ல் குரு. 12.6.1984, இரவு 11.30, தூத்துக்குடி)

மகனின் ஜாதகத்தில் செவ்வாய்-சனி இணைந்திருப்பதாலும், தற்போது அவரது விருச்சிக ராசிக்கு கடுமையான ஏழரைச்சனி நடப்பதோடு அவரது கேட்டை நட்சத்திரத்தில் சனி சென்று கொண்டிருப்பதாலும் 33 வயதிற்குப் பிறகு அடுத்த வருடத்தில் திருமணம் நடைபெறும்.

பி. அருண், சென்னை.

கேள்வி :

குருஜி அவர்களுக்கு வணக்கம். மூன்று வருடங்களாக ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவர்களுக்கும் என்னைப் பிடித்திருப்பதாக உணர்கிறேன். இதுவரை நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. பொருளாதார ரீதியாக உயர்ந்த பிறகே காதலைச் சொல்ல வேண்டும் என்று காலம் கடத்தி வருகிறேன். என் தந்தை மிகச் சிறந்த வேஷதாரி. எனக்கு 36 வயதாகியும் திருமணம் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்காமல் என் உடன்பிறந்தவர்கள் அவர்களின் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள். வயதுக்கேற்ற பக்குவத்துடன் அணுக மாட்டார் என்பதால் என் காதலைப் பற்றி என் தந்தையிடமும் நான் சொல்லவில்லை. என் காதல் கை கூடுமா? இன்னும் இரண்டு வருடங்களுக்கு குருபலன் இல்லை என்கிறார்கள். என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? என் குழந்தைச் செல்வங்களைப் பற்றியும் சொல்லவும்.

பதில்:
பு ராசி
சூ,கே செவ்
சுக் சந் குரு சனி
(விருச்சிக லக்னம், துலாம் ராசி. 2-ல் சுக். 3-ல் சூரி, செவ், கேது. 4-ல் புத. 11-ல் குரு, சனி. 28-1-1981, அதிகாலை 3.29, சென்னை.)

உனக்கு வந்திருப்பது காதல் அல்ல. விருப்பம் எனப்படும் கிரகக்கோளாறு. இரண்டு பேர் மனமொத்து விரும்புவதற்குப் பெயர்தான் காதல். காதலிப்பதற்கு எது வேண்டுமோ இல்லையோ தைரியம் வேண்டும். உலகமே எதிர்த்தாலும் உன்னைக் கைவிட மாட்டேன் என்கின்ற ஆண்மைத்தனம் வேண்டும். மூன்று வருடங்களாக ஒரு பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட பேச தைரியம் இல்லாத நீ எப்படி அந்தப் பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்கிறாய்? அதைவிட மேலாக அவளும் உன்னைக் காதலிக்கிறாள் என்று எப்படி நம்புகிறாய்?

வயதிற்கேற்ற பக்குவம் என் தந்தைக்கு இல்லை என்று சொல்லும் உனக்குத்தான் 36 வயதாகியும் பக்குவம் இல்லை. பொருளாதார உயர்வு வந்தவுடன் காதலைச் சொல்லலாம் என்று இருக்கிறேன் என்று குறிப்பிடுவதன் மூலம் உன்னுடைய வருமானம் சரியில்லை என்று நீயே ஒப்புக் கொள்கிறாய். அப்படிப்பட்ட குறைந்த வருமானம் உள்ள உனக்கு கல்யாணத்தையும் செய்து வைத்து உன் பொண்டாட்டிக்கும் சேர்த்து உன் அப்பாவும், சகோதரர்களும் சோறு போட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா? அப்படி உன் மனைவியையும் சேர்த்துக் கவனித்தால் அவர்கள் நல்லவர்களாகி விடுவார்களா?

எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை உள்ள எந்தப் பெண்ணும் காசில்லாதவனைக் காதலிக்க மாட்டாள். அன்பையும், அர்ப்பணிப்பையும் தருவது பெண்மையின் குணம் என்றால் அவளுக்கு ஆதரவையும், பாதுகாப்பையும் தருவதே ஆண்மையின் கடமை. தனது வருமானத்தின் மூலம் ஒரு பெண்ணை நன்றாக வைத்து கொள்வதும், அவளுக்கு சரியான பாதுகாப்பு கொடுப்பதும்தான் ஒரு ஆணின் இலக்கணம். தைரியம் வந்து உன் காதலை அவளிடம் சொல்லும்போது “ஐயோ, அண்ணா... நான் உங்களை சகோதரனாக நினைக்கிறேன்.” என்று சொல்லிவிடப் போகிறாள். கவனம்.

ஜாதகப்படி உனக்கு காதல் திருமண வாய்ப்பு இல்லை. விருச்சிக லக்னமாகி, செவ்வாய் உச்சம் பெற்று ராகுகேதுக்களுடன் இணைந்து, சனி லக்னத்தைப் பார்ப்பதால் நீ கொஞ்சம் தன்னம்பிக்கை இல்லாதவனாக இருப்பாய். தற்போது நடக்கும் சனிதசை, சுக்கிர புக்தியில் செப்டம்பருக்குப் பிறகு உனக்குத் திருமணம் நடக்கும். தாமத புத்திரபாக்கிய அமைப்பு இருப்பதாலேயே இதுவரை திருமணம் ஆகவில்லை. ஆணும், பெண்ணுமாக இரண்டு நல்ல குழந்தைகள் உனக்கு உண்டு. ஏழரைச் சனி முடியப் போவதால் நல்ல மனைவியுடன் வாழ்க்கையில் செட்டில் ஆவாய்.

லியாகத் அலி ஏ.ஆர்., திருச்சி.

கேள்வி:

கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறேன். கஷ்டங்கள் தீர தினமும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். எந்தவித முன்னேற்றமும் இல்லை. வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிய நான் மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன். கிடைக்குமா? இங்கேயே வேலை கிடைக்குமா? சொந்தத் தொழில் செய்யலாமா? என்ன தொழில் செய்யலாம்?

பதில்:
சந் சுக் சூ பு
ராசி
குரு சனி  செவ் ரா
(கன்னி லக்னம், மேஷ ராசி 5 ல் குரு,சனி 9 ல் சுக், 10 ல் சூரி,புத 12ல் செவ், ராகு 7-7-1961 மதியம் 12-30 திருச்சி)

1,5,9,10 க்குடையவர்கள் ஆட்சி பெற்ற அருமையான யோகஜாதகம் உங்களுடையது. வேத ஜோதிட விதிகளின்படி ஒருவருக்கு ராகுதசையின் முற்பகுதி யோகம் செய்யுமாயின் பிற்பகுதி சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் கடுமையான எதிர்மறை பலன்களைத் தரும். மேலும் உங்களின் மேஷ ராசிக்கு இப்போது அஷ்டமச் சனியும் நடந்து கொண்டிருக்கிறது.

எனது கணிப்பின்படி உங்கள் வீட்டில் யாருக்காவது ஏழரைச்சனி கண்டிப்பாக நடந்து கொண்டிருக்கும். கவலைப்பட வேண்டாம். இன்னும் சில வாரங்களில் உங்களின் அனைத்துக் கவலைகளும் தீரப் போகிறது. ஜாதகப்படி நடக்கும் குருதசையில் சனி புக்தி வரும் மே மாதம் ஆரம்பிக்க இருப்பதால் ஆகஸ்டிற்கு மேல் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதிப்பீர்கள். இந்த வருடக் கடைசியில் இருந்து இனி உங்கள் ஆயுள் முழுவதும் கஷ்டங்கள் இன்றி பரம்பொருளின் அருளுடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.

ஹரிணி, ஊத்துக்கோட்டை.

கேள்வி:

அய்யா.. பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப் போகிறேன். இதுவரை நான் நன்றாகப் படித்தும் மதிப்பெண்கள் குறைவாகவே வருகின்றன. வரப்போகிற பொதுத் தேர்விலாவது என் முயற்சிக்குப் பலன் இருக்குமா? இந்தத் தேர்வில் என்னுடைய மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்று கணித்துச் சொல்லுங்கள்.

பதில்:
சூ,பு சுக் செவ் குரு சனி
ராசி சந்
கே
(தனுசு லக்னம், கடகராசி 2 ல் கேது, 4 ல் சூரி,புத,சுக். 5 ல் செவ்,குரு,சனி 12-4-2000 இரவு 11-55 திருவள்ளூர்)

தனுசு லக்னமாகி லக்னாதிபதி குருபகவான் ஐந்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்த்த நல்ல ஜாதகம் உன்னுடையது. சூரியனும் புதனும் இணைந்து பத்தாமிடத்தைப் பார்க்கும் தர்ம கர்மாதிபதி யோகம் இருப்பதோடு, ஜீவனாதிபதி புதன் நீசபங்க ராஜ யோக அமைப்பில் இருப்பதால் உனது எதிர்காலம் தூர இடங்களில் சிறப்பாக இருக்கும்.

ராசிக்கு பத்தாமிடத்தில் குரு, செவ்வாய், நீசபங்க சனி இருப்பதால் இஞ்சினியரிங் படிப்பாய். உனது கேள்விக்கு நான் பதில் சொல்லும் நேரத்தை வைத்துக் கணிக்கும் ஆரூட அமைப்புப்படி இந்த பொதுத்தேர்வில் உனக்கு 900 லிருந்து 930 க்குள் மதிப்பெண்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள்.

இருபது வயது மகளுக்கு திருமணம் செய்யலாமா?

ஜோதி, கூடுவாஞ்சேரி.

கேள்வி:

இருபது வயது மகளுக்கு திருமணம் செய்யலாமா என்று ஜாதகம் பார்த்ததில் என் மகளுக்கு காலசர்ப்ப தோஷம் இருப்பதாக சொன்னார்கள். மகளுக்கு வரும் மாப்பிள்ளைக்கு திருமண யோகம் இருந்தால்தான் திருமணம் நடக்கும் என்றும் சொன்னார்கள். என் மகளுக்கு திருமண யோகம் எப்போது? மாப்பிள்ளை பார்க்கலாமா? தோஷம் இருக்கிறதா? பரிகாரம் சொல்லவும்.

பதில்:
சனி
ராசி
சந்,சூ பு,சுக் குரு
செவ் ரா
(மிதுன லக்னம், மகர ராசி 4 ல் செவ்,ராகு, 8 ல் சூரி,புத,சுக்.குரு. 10 ல் சனி. 6-2-1997 மாலை 4-20 செங்கல்பட்டு)

இருபது வயது மகளுக்கு எப்போது திருமணம் செய்யலாம் என்று வரும் பெற்றோரிடம் இப்போது வேண்டாம், இருபத்தி எட்டு வயது ஆகட்டும் என்று சொல்வதைப் போன்ற தர்மசங்கடம் எந்த ஜோதிடருக்கும் வரக்கூடாது. ஆனாலும் கர்மா என்ற ஒன்று இருக்கிறதே... ஜோதிடம் என்ன சொன்னாலும் திருமணத்தைச் செய்து வைத்து விட்டு பிரச்னைகள் வந்ததும் மறுபடியும் கையைப் பிசைந்து கொண்டு ஜோதிடரிடம் ஓடி வருபவர்கள்தான் இங்கே அதிகம்.

மகளின் ஜாதகப்படி முக்கியமான கிரகங்கள் எட்டில் மறைந்து, அதில் கணவனைக் குறிக்கும் குருவும் நீசமாகி, சுக்கிரனுடன் இணைந்திருப்பது தோஷ அமைப்பு. செவ்வாயும், சனியும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதும் சரியான நிலையல்ல. புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்து, காரகன் குரு நீசமானதும் தாமத புத்திர பாக்கியத்தைக் காட்டுகிறது. எல்லாவற்றையும் விட மேலாக நடக்கும் தசாநாதன் ராகு செவ்வாயுடன் இணைந்து, சனி பார்வை பெற்று நான்காம் வீட்டில் உள்ளது தாய்க்கு இவள் விஷயத்தில் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும்.

ஒரு ஜாதகத்தில் ஏழுக்குடையவன் வலுவிழந்து பதினொன்றாம் அதிபதி வலுவானால் இரண்டு திருமண அமைப்பு என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். இந்த ஜாதகத்தில் ஏழாம் அதிபதி குரு எட்டில் மறைந்து, பதினொன்றாம் வீட்டுக்குரிய செவ்வாய் அந்த வீட்டைப் பார்ப்பது இரண்டு திருமணத்தைக் குறிக்கும்.

இதுபோன்ற ஜாதகங்களுக்கு தாமதமாக திருமணம் செய்வதே அந்தப் பெண்ணிற்கு நாம் செய்யக் கூடிய நல்ல விஷயமாக இருக்கும். ஜாதகப்படி பக்குவம் இல்லாத சிறுமி போன்ற மன அமைப்புடன் உங்கள் மகள் இருப்பார். திருமணத்திற்கு உடல் தயாராக இருந்தாலும் குடும்பம் என்றால் என்ன? ஒரு ஆண் என்பவன் எப்படிப்பட்டவன் என்பதை உணரக்கூடிய மனப்பக்குவம் இன்னும் உங்கள் மகளுக்கு வந்திருக்காது. எனவே மகளுக்கு தாமதமாக திருமணம் செய்வது நல்லது.

மேலே சொன்னவைகள் அனைத்தும் மகளின் ஜாதகப்படி என்ன செய்யலாம் என்ற ஜோதிட ஆலோசனை. ஆனால் என்ன நடக்கும் என்ற ஜோதிட பலனை இனிச் சொல்கிறேன்.

நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். அல்லது இந்த பதில் உங்கள் கவனத்திற்கு வராது போகலாம். மகளின் ராசிக்கு இந்த வருட இறுதியில் ஏழரைச்சனி ஆரம்பிக்க உள்ளதாலும், தாம்பத்திய சுகம் கிடைக்கக் கூடிய அமைப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க இருப்பதாலும், அடுத்த வருட இறுதியில் மகளுக்கு திருமணம் செய்து வைத்து சிக்கல்களைச் சந்திப்பீர்கள்.

சிலவகை கர்மாக்களுக்குப் பரிகாரங்கள் இல்லை. ஆயினும் ராகுதசை நடப்பதால் மகளின் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி அதிகாலை நடக்கும் ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். அனைத்தையும் மற்றும் சக்தி அவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.

2 thoughts on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் (28.3.2017)

 1. ராசி, ராசி அதிபதி மற்றும் மகேந்திர பொருத்தம் இல்லையேனில் திருமணம் செய்யலாமா?? வம்ச விருத்தி இருக்குமா??

  1. வணக்கம்,

   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது
   8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.

   வணக்கம்,

   தேவி
   -Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *