adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கேதுவின் சூட்சுமங்கள் – C-063- Kethuvin Sootchumangal…

ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களை வைத்து அடையாளப் படுத்தப் படுகையில் வேத ஜோதிடத்தில் ராகு போகக் காரகன் என்றும் கேது ஞானக் காரகன் என்றும் குறிப்பிடப் படுகிறார்கள்.

அருள் அணி, பொருள் அணி என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படும் குரு, சுக்ர தலைமையிலான இரண்டு பிரிவுகளுக்கிடையே, குருவின் நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாயின் லக்னங்களுக்கும், குருவின் லக்னங்களுக்கும் சாதகமாகச் செயல்படும் குணத்தைக் கொண்டவர் கேது.

ராகுவும், கேதுவும் ஒரு நேர்கோட்டின் இரண்டு எதிரெதிர் முனைகள் என்பதை வேத ஜோதிடம் ஏற்கெனவே நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஒளி உட்புக முடியாத, ஒரு ஆழமான இருட்டின் கடினமான, கருப்பான மையப் பகுதி ராகு என்றால், அதன் மையத்தில் இருந்து விலக விலக, இருள் குறைந்து கொண்டே வந்து ஒளியும், இருளும் சங்கமிக்கும் லேசான ஆரஞ்சு நிறமான ஓரப் பகுதி கேது ஆவார். இதன் காரணமாகவே நமது மூலநூல்கள் ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் குறிப்பிடுகின்றன.

இவ்வுலகில் கிடைக்கும் மண், பெண், பொன் போன்ற சராசரி உலக இன்பங்களை அனுபவிக்க வைப்பவர் ராகு என்றால் அவ்வுலக இன்பமான அளப்பரிய ஆன்மிக அருள் இன்பத்தை அனுபவிக்க வைப்பவர் கேது ஆவார்.

அருளாட்சி அற்புதங்களான நமது பேராற்றல் மிக்க திருக் கோவில்களுக்குச் செல்பவர்கள் ஒரு விஷயத்தை தெளிவாகக் கவனித்திருக்கலாம். நம்முடைய  கோவில்களில் வரிசையாக வீற்றிருக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்களில் பெரும்பாலானோர் கேது மற்றும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள் என்பதே அது.

இன்னும் நுணுக்கமாகச் சொல்லப் போனால் நமது மேலான இந்து மதத்தைத்   தழைத்தோங்கச் செய்த அருட் பெரியார்களான தவத்திரு திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருள்திரு மாணிக்க வாசகர், அருளாளர் சுந்தர் ஆகிய நால்வரும் ராகு-கேதுக்களின் நட்சத்திரங்களில் பிறந்தவர்களே

இவர்களில் சம்பந்தர் வைகாசி மூலம், நாவுக்கரசர் சித்திரை சதயம், சுந்தரர் ஆடி சுவாதி, மாணிக்க வாசகர் ஆனி மகம் என்பதே ராகு-கேதுக்களின் ஞானம் தரும் பெருமையை நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும்.

ஒன்பது கிரகங்களிலும் ஒரு மனிதனை ஆன்மிகத்தில் ஈடுபடுத்தக் கூடியவை குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களாகும். இவர்களில் கேது சுபத்துவம் பெற்ற குருவுடனும், சூட்சும வலுப் பெற்ற சனியுடனும் தொடர்பு கொள்ளும்போது ஒருவருக்கு அளவற்ற ஆன்மிக ஈடுபாட்டினைத் தருவார்.

இதுபோன்ற அமைப்புகளில் கேதுவிற்கு வலுவான இடங்கள் என்று நமது மூல நூல்கள் குறிப்பிடும் கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய இடங்களிலோ தனுசு, மீனமாகிய குருவின் வீடுகளிலோ, சனியின் மகரத்தில் சூட்சும வலுப் பெற்றோ, குரு அல்லது சனியின் தொடர்பு அல்லது இணைவில் கேது இருக்கும் நிலையில் ஒருவரை ஞானத்தின் உச்ச நிலைக்குச் செல்ல வைப்பார்.

லக்னத்துடனோ, ராசி எனப்படும் சந்திரனுடனோ சுபத்துவமும், சூட்சும வலுவும் பெற்று கேது சம்பந்தப்படுவாரே எனில், ஒருவரால் பிரம்மத்தை உணரும் ஞானியாக முடியும். போலித்தனமற்ற, பற்றற்ற, உண்மையான, உலகை உய்விக்க வந்த ஞானப் பெரியார்கள் கேதுவால் உருவாக்கப்பட்டவர்கள்.

அதேபோல மனம், சிந்தனை, பாக்கியம் எனப்படும் ஒரு ஜாதகத்தின் ஐந்து ஒன்பது எனப்படும் வீடுகளோடு, கேது நல்ல நிலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஒருவருக்கு ஆன்மிக ஈடுபாடு வரும். இதுபோன்ற ஜாதக அமைப்புள்ள ஒருவர் கேதுவின் சுப, சூட்சும வலுவினைப் பொருத்து ஒரு ஆன்மிக மடத்தின் தலைவர், ஜகத்குரு, ஆகிய நிலையிலிருந்து சிறு கிராமத்துக் கோவிலின் பூசாரி என்ற நிலை வரை இருப்பார்.

உண்மைகளையும், ரகசியங்களையும், சூட்சுமங்களையும் உணர வைப்பவர் கேது தான். ஒருவரின் ஜாதகத்தில் கேது இருக்கும் படிநிலை வலுவைப் பொருத்தும், அவரது சுப, சூட்சும வலுவைப் பொருத்தும் ஒருவரால் தான் இருக்கும் துறையின் மறைபொருள் அம்சங்களை உணர முடியும்.

இதுபோன்ற ஜாதக அமைப்புள்ளவர்களுக்கு ஒரு பொருளின் அல்லது ஒரு கருத்தின் இன்னொரு பரிமாணம் புரியும். இது விஞ்ஞானத்திற்கும், ஆன்மிகம் எனப்படும் மெய்ஞானத்திற்கும் பொருந்தும்.

விஞ்ஞானியும், ஞானியும் ஒரு கண்டுபிடிப்பாளன் என்ற வகையில் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் இருவரையும் உருவாக்குபவர் கேது தான். ஜாதகத்தில் புதன் நேர்வலுப் பெற்று கேதுவோடு சம்பந்தப்பட்டால் அவர் விஞ்ஞானியாகவும், புதனை விட குருவோ சனியோ வலுப்பெற்று அவர் கேதுவோடு சம்பந்தப்பட்டால் அவர் மெய்ஞானியாகவோ இருப்பார்.

அதேபோல கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றில் சந்திரனோ லக்னமோ அமர்ந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு நமது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கின்ற சூட்சுமங்களை உணரும் ஆற்றலும் வரும்.

இன்னுமொரு கருத்தாக ராகுவும், கேதுவும் இருவேறு கிரகங்களாக நமக்குச் சொல்லப் பட்டிருந்தாலும் அடிப்படையில் இவை இரண்டும் ஒரே கிரகம் தான். அதனால்தான் ராகுவும், கேதுவும் ஒரு பாம்பாக வர்ணிக்கப்பட்டு பாம்பின் தலையாக ராகுவும், வாலாக கேதுவும் உருவகப் படுத்தப்பட்டு நமக்குச் சொல்லப்பட்டன.

எனவே ராகு அல்லது கேது நல்ல பலன்களைத் தரவேண்டுமெனில் இருவருமே ஒரே அமைப்பின், ஒரே விஷயத்தின் நேரெதிர்  முனைகளைத் தொடர்பு கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த ஜாதகருக்கு எதிலும் ஒரு முழுமைத்தனத்தை, சாதிக்கக்கூடிய அமைப்பை ராகு, கேதுக்கள் தங்களது தசையில் தருவார்கள்.

இதற்கு உதாரணமாக இணை அமைப்புகளாகச் சொல்லப்படும் லக்னம், ராசி இரண்டும் ராகு,கேதுக்களின் தொடர்பில் அல்லது நட்சத்திரங்களில் இருப்பது, கணவன் சதயம் நட்சத்திரமாகி, மனைவி மகம் நட்சத்திரமாக இருப்பது போன்ற அமைப்புகளைச் சொல்லலாம்.

அதேநேரத்தில் ராகு தசையைப் போல, பொருள் வரவை கேது தசை அளிப்பது இல்லை. பொருளைத் தருவது ராகு என்றும் அருளைத் தருவது கேது என்றும் நமது மூலநூல்கள் தெளிவாக பிரித்து சொல்வதாலேயே பொருளால் கிடைக்கும் போகங்களை அனுபவிக்க வைக்கும் ராகு போகக் காரகன் என்றும் அருளால் கிடைக்கும் தெய்வீக ஞானத்தை அனுபவிக்க வைக்கும் கேது ஞானக்காரகன் என்றும் ஞானிகளால் பிரித்துக் காட்டப்பட்டன.

இருக்கும் வீட்டின் அதிபதியின் செயல்களைப் பிரதிபலிக்கக் கூடியவர்கள் ராகு-கேதுக்கள் என்பதால் ஒரு ஜாதகத்தில் கேது பொருளைத் தரும் சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்தோ, சுக்கிரனுடன் நல்ல நிலைகளில் சம்பந்தப்பட்டோ, அல்லது அந்த ஜாதகத்தின் யோகாதிபதியுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் நேரத்தில் பொருளையும் தனது தசையில் நேர்வழிகளில் தருவார்.

பொருள் தரும் விஷயத்தில் ராகுவிற்கும், கேதுவிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் எப்படி இந்த பணம் வந்தது என்று மறைமுகமான வழிகளில், வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ராகு பணம் தருவார் என்றால் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கவுரவமான வழிகளில் கேது பணத்தைத் தருவார்.

அதுபோலவே தோஷ அமைப்புக்களிலும் ராகுவைப் போல கடுமையான கெடுபலன்களை கேது செய்வது இல்லை. உதாரணமாக ஒரு கிரகத்தின் அருகில் மிக நெருக்கமாகச் செல்லும் ராகு அக் கிரகத்தின் அனைத்து காரகத்துவங்களையும் பறித்து தானே தன் தசை வரும் போது அந்த ஜாதகருக்கு அளிப்பார் என்பதே ஏற்கனவே ராகுவின் சூட்சுமங்களில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில் ராகுவுடன் மிக நெருக்கமாக இணையும் கிரகம் முழுமையாக ராகுவிடம் சரணடைந்து வலிமை இழக்கும் என்பதுதான்.

இதுபோன்ற வலுக்கட்டாயமாகப் பறிக்கும் வேலைகளையும், மற்றக் கிரகத்தை ஆக்கிரமிக்கும் வேலைகளையும் கேது செய்வது இல்லை. கேதுவுடன் மிக நெருக்கமாக இணையும் ஒரு கிரகம் ஒருபோதும் தனது சக்திகளை முழுக்க இழப்பது இல்லை. தன்னுடைய செயல்பாடுகளை ஜாதகருக்குத் தரும் வலிமை அந்தக் கிரகத்திற்கு இருக்கவே செய்யும்.

ராகு என்பது ஆழமான, ஒளி புக முடியாத, எதையும் பார்க்க முடியாத ஒரு இருட்டு என்பதால் அதனுடன் இணையும் ஒரு கிரகத்தின் ஒளி வெளியே தெரிய முடியாது. ராகுவிடமிருந்து அந்தக் கிரகத்தின் ஒளி தப்பித்து அந்த மனிதனுக்கு நன்மைகளையோ, தீமைகளையோ செய்ய முடியாது.

ஆனால் கேது என்பது ஆழமற்ற, நாம் ஊடுருவிப் பார்க்கக்கூடிய, மேலோட்டமான இருட்டு என்பதால் கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்தின் சுய ஒளி ஓரளவு உயிர்ப்புடன், தாக்குப் பிடிக்கும் திறனுடன் இருக்கும். முழுக்க முழுக்க அந்தக் கிரகத்தின் ஒளி கேதுவுக்குள் அமிழ்ந்து விடுவதில்லை, மறைந்து விடுவதில்லை. எனவே கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்திற்கு நன்மை, தீமைகளைச் செய்யும் தகுதி இருக்கும்.

( ஜூலை 8 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

5 thoughts on “கேதுவின் சூட்சுமங்கள் – C-063- Kethuvin Sootchumangal…

  1. கேதுவுடன் இணையும் ஒரு கிரகத்தின் சுயஒளி ஓரளவு உயிர்ப்புடன், தாக்குப்பிடிக்கும் திறனுடன் இருக்கும்.. முழுக்க முழுக்க அந்தக் கிரகத்தின் ஒளி கேதுவுக்குள் அமிழ்ந்து விடுவதில்லை, மறைந்து விடுவதில்லை.> super naration sir

  2. அன்னா வணக்கம். என்னுடைய ஜாதகத்தில் மகர லக்னம். லக்னத்தில் கேது. 7 ல் ராகு. என்னுடைய D.O.B 08.07.81. time 8.00 pm.எனக்கு திருமணம் எப்போது நடக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *