adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 24.1.2017

எஸ். எ, பாளையங்கோட்டை.

கேள்வி:

மாதம் ரூபாய் அறுபதாயிரம் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறேன். செய்யும் கட்டிடத் தொழில் லாபகரமாக இல்லை. தற்போது கையில் எந்த வேலையும் இல்லை. கடன்கள் அடைபடுமா? வட்டி கட்டுவதில் இருந்து மீள்வேனா? கடந்த பதினைந்து வருடங்களாக எத்தனையோ பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த எனக்கு சொந்த வீடு பாக்கியம் இருக்கிறதா? இதே தொழிலைச் செய்யலாமா? வேறு தொழில் என்றால் எதைச் செய்யலாம்? குழந்தைகள் நன்றாக இருப்பார்களா? ஆண்குழந்தை பாக்கியம் உண்டா? கடன்கள் அடைந்து நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் எப்போது இருப்பேன்? பரிகாரம் என்ன?

பதில்:

விருச்சிக லக்னமாகி ஐந்து பதினொன்றாமிடங்களில் சூரியனும் சந்திரனும் அமர்ந்து பவுர்ணமி யோகமும் தர்மகர்மாதிபதி யோகமும் அமைந்திருப்பதால் கட்டுமானத் தொழில் உங்களுக்கு ஏற்றதுதான். செவ்வாயும் சந்திரனும் இணைந்திருப்பதாலும் உங்களுக்கு இந்தத்தொழில் நிச்சயம் லாபம் தரும்.

தற்போது எட்டில் அமர்ந்திருக்கும் ராகுவின் தசை நடந்து கொண்டிருப்பதால் கடன் தொல்லைகளும் நிம்மதியற்ற சூழல்களும் இருக்கின்றன. ராகுதசை நடக்கும் இன்னும் மூன்று வருடங்களுக்கு கடன் பிரச்னை இருக்கத்தான் செய்யும். சமாளியுங்கள். யோக ஜாதகம் என்பதால் அவமானப் படும்படி எதுவும் வராது. எல்லா நிலைமைகளிலும் கடைசி நொடியில் உங்களுக்கு கடவுள் கை கொடுப்பார்.

2020 முதல் நடக்க இருக்கும் குரு தசையில் கடன்கள் படிப்படியாக அடையும். ஒரே வருடத்தில் கடனை முழுக்க அடைத்து முடிப்பீர்கள். சொந்த வீடும் அப்போது அமையும். ஆண் குழந்தை இருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல உங்கள் மனைவியின் ஜாதகத்தையும் பார்க்க வேண்டும். உங்கள் ஜாதகப்படி குருதசை சுயபுக்தியில் ஆண் வாரிசு உண்டு. செவ்வாய்க்குரிய முறையான பரிகாரங்களைச் செய்யுங்கள்.

என்.எஸ். வனவாசி.

கேள்வி:

பதினைந்து ஆண்டுகளாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்கிறேன். வயதாகி விட்டது. பலமுறை குடும்பத்துடன் சேர முயற்சி செய்தும் பலனில்லை. மகன், மகள், மனைவி யாருமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதுவரை எப்படியோ சமாளித்து விட்டேன். இப்போது நம்மீது யாராவது பாசம் காட்ட மாட்டார்களா என்று ஏங்குகிறேன். எனக்கு ஜாதகம் இல்லை. எனது மகன் மற்றும் பேரனின் ஜாதகம் அனுப்பியிருக்கிறேன். இந்த நிலை மாறுமா? அல்லது சாகும்வரை இதுதானா? தற்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றுகிறது. இது அனைத்தும் கிரக பலன்தானா? அல்லது என் தலை எழுத்தா? ஏதாவது பரிகாரம் உண்டா?

பதில்:

நடக்கும் அனைத்தும் கிரகங்கள் தரும் பலன் என்றுதான் ஜோதிடம் சொல்லுகிறது. உங்களுடைய நிலை என்ன, குடும்பத்தை விட்டு பிரியும் அளவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை உங்கள் ஜாதகத்தில் மட்டும்தான் உணர முடியும். நம்மில் பெரும்பாலோர் இளமைக்காலத்தில் இருக்கும்போது நமக்கும் ஒருநாள் வயதாகும், நாமும் ஒருநாள் கிழவனாவோம் என்பதை உணர்வதே இல்லை.

உங்கள் மகன் ஜாதகப்படி சூரியனும் சனியும் ஒன்றாக இணைந்து ஒன்பதுக்குடையவனை செவ்வாய் பார்ப்பதால் உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் கடைசி வரை ஆகாது. அவர் உங்களை வைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. பேரன் ஜாதகப்படி எட்டில் அமர்ந்த ராகுதசை நடப்பதால் அவனது பதினைந்து வயது வரை நீங்கள் மகன் வீட்டில் சேர முடியாது.

மனைவி அல்லது மகள் மூலமாக குடும்பத்தில் சேர முடியுமா என்று முயற்சி செய்யுங்கள். வாராவாரம் திங்கட்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் காலையில் நடக்கும் அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுத்து வேண்டிக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

மா. கேசவன் புதுச்சேரி-5.

கேள்வி:

மகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. திருப்பஞ்சலி வாழைப் பரிகாரம், பிரம்மதீஸ்வரர் ஆலயம் சென்று ஜாதகத்தை பிரம்மா முன்பு வைத்து பூஜை செய்தது, மரக்காணம் பூமீஸ்வரர் ஆலயத்தில் கால சர்ப்ப தோஷ பரிகாரம் என்று பலவற்றை செய்தும் பலனில்லை. தங்களுடைய ஆலோசனையை எதிர்பார்க்கிறோம்.

பதில்:

மகனுக்கு மகரலக்னம், மகரராசியாகி, லக்னம், ராசிக்கு ஏழில் சனி வர்க்கோத்தமம் பெற்று சூட்சும வலுப் பெறாமல் அமர்ந்து லக்னத்தில் உள்ள சந்திரனையும் சுக்கிரனையும் பார்ப்பது தோஷம். மேலும் லக்னத்திற்கு ஐந்தில் செவ்வாய் அமர்ந்து புத்திரகாரகன் குரு, ராகுகேதுக்களுடன் இணைந்ததும் புத்திர தோஷம்.

தற்போது கேதுவுடன் இணைந்த குருதசை நடப்பதால் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீ காளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொள்ளவும். ஒரு செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் சித்திர குப்தன் கோவிலில் மகனை அபிஷேகம் செய்யச் சொல்லுங்கள். இன்னொரு ஜென்ம நட்சத்திரம் அன்று கும்பகோணம் கஞ்சனூரில் வழிபட்டு இரண்டரை மணிநேரம் ஆலயத்தினுள் இருக்கச் செய்யுங்கள். கண்டிப்பாகத் திருமணம் நடக்கும்.

சி.சீனிவாசன் பழனி.

கேள்வி:

முப்பத்தி ஐந்து வயதாகும் எனக்கு இதுவரை சரியான வேலை அமையவில்லை. தற்போது அரசு வேலைக்கு முயற்சித்து வருகிறேன். அமையுமா? திருமணம் நடந்து மூன்று மாதத்தில் பிரிந்து விவாகரத்து ஆகிவிட்டது. மீண்டும் திருமணம் நடக்குமா? என் ஜாதகத்தில் தாரதோஷம் உள்ளதா? பரிகாரம் செய்ய வேண்டுமா? இதுவரை வாழ்க்கையில் பெரும் துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகிறேன். இனியாவது மாற்றம் வருமா? பரிகாரம் செய்ய வேண்டுமா? உங்கள் ரசிகன் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

பதில்:

ஜாதகத்தில் தாரதோஷம் இருப்பதால்தானே முதல் திருமணம் நிலைக்காமல் போனது? அப்புறம் என்ன இருக்கிறதா என்ற கேள்வி? ராசிக்கு ஏழில் சனி இருப்பதும், பதினொன்றுக்குடைய சுக்கிரன் நீசபங்க அமைப்பில் இருப்பதும் தாரதோஷம். எனவே உங்களுக்கு இரண்டாவது திருமணம் உண்டு அது நிலைக்கவும் செய்யும்.

ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேராக இருக்கும் பவுர்ணமி யோகம் அமைந்து, சூரியன் பத்தாம் வீட்டில் திக்பலமாக இருப்பதாலும், தர்ம கர்மாதிபதியோகம் உள்ளதாலும் அரசுவேலை உண்டு. ஆனால் அங்கே சனி இருப்பதால் அதிகாரி பதவி கிடைக்காது. சாதாரண எழுத்தர் வேலை கிடைக்கும். அரசுத் தேர்வு எழுதுங்கள். வெற்றி உண்டு. குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை மாலைமலரில் எழுதியிருக்கிறேன் அவற்றைச் செய்யுங்கள்.

எஸ். வெங்கடாசலம் திருவையாறு.

கேள்வி:

வெளிநாட்டில் நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதை என்னுடைய முன் கோபத்தினால் இழந்து இப்போது இந்தியா திரும்பி விட்டேன். இப்போது நினைத்தாலும் குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. மீண்டும் அதே கம்பெனியில் வாய்ப்பு கிடைக்குமா? வெளிநாடு செல்ல முடியுமா? எனது கோபம் எப்போது ஒழியும்? எதிர்காலத்தில் நன்றாக இருப்பேனா?

பதில்:

கோபத்திற்கு காரண கிரகமான செவ்வாயின் விருச்சிக லக்னத்திலும், மேஷ ராசியிலும் பிறந்த நீங்கள் வாழ்நாள் முழுவதும் கோபக்காரர்தான். அதை முழுவதுமாக உங்களால் ஒழிக்க முடியாது. ஆனால் இறைவழிபாடு, தியானம், யோகா மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

தற்போது அஷ்டமச் சனி நடப்பதால் நல்ல வாய்ப்பை இழந்து விட்டீர்கள். ஆயினும் எட்டு, பனிரெண்டுக்குடையவர்கள் ஜாதகத்தில் சுப வலுப்பெற்று இருப்பதால் அறுபது வயது வரை நீங்கள் இந்தியாவிற்கு கிழக்கு நாடு ஒன்றில் நிரந்தரமாக இருப்பீர்கள். அதன்பிறகு உங்கள் காலம் தாய்நாட்டில் இருக்கும். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கும் ராகு புக்தியில் மறுபடியும் வெளிநாடு செல்வீர்கள். ஆனால் அதே கம்பனிக்கு செல்ல முடியாது.

முப்பது நாளில் பிரிந்த தங்கை கணவனுடன் சேருவாளா?

எஸ். ரஜினி, வேலூர்.

கேள்வி :

சிம்ம ராசி , மகம் நட்சத்திரத்தில் பிறந்த என் தங்கைக்கு வயது 32. நான்குமாதத்திற்கு முன்பு திருமணமாகி கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம்வந்து மூன்று மாதமாக பிரிந்து இருக்கிறார்கள் . அவர்கள் பிரச்சினைகள்முடிந்து சேர்ந்து வாழ்வார்களா ?

பதில்:

வெறும் ராசி நட்சத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையைச் சொல்லி விட முடியாது. அதற்கு முன் 32 வயதாகும் உங்கள் தங்கைக்கு ஒரு கேள்வி...! நான்கு மாதங்களுக்கு முன் திருமணமாகி மூன்று மாதமாகப் பிரிந்திருக்கிறாய் என்றால் ஒரே ஒரு மாதத்திற்குள் உன் கணவனை முழுதாகப் புரிந்து கொண்டாயா?

ஒரு பெண்ணிற்கு பொறுமை மிகவும் அவசியம் அம்மா. நீ என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் ஒரு மனிதனைப் பற்றி முப்பது நாட்களுக்குள் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? இப்போதெல்லாம் கணவனைப் பிரிவது, விவாகரத்து என்பது பெண்களுக்குள் சகஜமாகி விட்டது. முப்பது வருடங்களுக்கு முன் உன் அம்மாவிடம் டைவர்ஸ் என்று சொல்லியிருந்தால் உடனே காதைப் பொத்தியிருப்பார்.

உனக்கு திருமணமாகும் போதே 32 வயதாகி விட்டது அம்மா... முப்பது வயது தாண்டி விட்டாலே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் கஷ்டம் அவளை மணமுடித்துக் கொடுப்பவர்களுக்குத்தான் தெரியும். அதற்காக ஒரு பொறுக்கியிடமோ, வீணாய்ப் போனவனுடனோ யாரும் உன்னை வாழச் சொல்ல மாட்டார்கள். ஆனால் முப்பது நாட்களுக்குள் உன் புருஷனை நீ புரிந்து கொண்டு பிரிந்து வந்துவிட்டது அதிசயம்தான்.

இங்கே குறையில்லாத ஆணோ பெண்ணோ யாருமே இல்லை. எல்லோரும் குறையும் நிறையும் கலந்தவர்கள்தான். ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொண்டு, அடுத்தவரை சகித்துக் கொண்டு வாழ்வதுதான் நம்முடைய வாழ்க்கைமுறை. அதிகமாக சகிப்புத்தன்மை உள்ளவர்களும், எதையும் பாசிடிவாக, நல்லதனமாக எடுத்துக் கொள்பவர்களும் நீடித்து சேர்ந்து வாழுகின்ற ஒரு நிலையைப் பெறுகிறார்கள். அதற்காக அவர்கள் தினமும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் இங்கே நிறையத் தம்பதிகள் சேர்ந்து வாழ்வதே குழந்தைகளுக்காகத்தான்.

நீ சிம்மராசி என்பதால் எதையும் அடக்கி ஆள வேண்டும் என்ற ஆசை உனக்கு இயல்பாகவே இருக்கும். உனக்கு அடங்காதவர்கள் வந்தால் சிக்கல்தான். இன்னும் ஒரு மூன்று வருடம் கழிந்தால், முப்பத்தி ஐந்து வயதாகி விட்டால் ஒரு பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கடினம் என்று விஞ்ஞானம் சொல்கிறது. எனவே இதுபோன்ற வயதுகளில் இருக்கும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவெடுக்கும்போது அவசரப் படக்கூடாது.

முதலில் உனக்கு நீயே ஒரு சுயபரிசோதனை செய்து கொள். எந்தவொரு பிரச்னை என்றாலும் முதலில் இருந்து வாழ்ந்து பார். சாதாரணமான, சரி செய்யக் கூடிய பிரச்னையை பெரிதாக்கி விட்டோமா என்று யோசித்துப் பார். ரோட்டில் போகிறவனிடம் ஈகோ பார்க்கலாம். வாழப் போகிறவனிடம் பார்க்காதே.

இங்கே பெரும்பாலான பெண்கள் முதல் திருமணத்தில் ஒரு சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி, ஒரு நல்லவனிடம் ஈகோ பார்த்துப் பிரிந்து, இரண்டாவது திருமணத்தில் ஒரு அயோக்கியனை மணமுடித்து, அடிபட்டுச் சாவதை வெளியே சொல்ல முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *