adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 30 (24.3.15)

எஸ். குமாரி, நீலாங்கரை.

கேள்வி :
எங்கள் குடும்பத்தை பார்த்தாலே கேலி, கிண்டல், ஏளனமாக பேசுகிறார்கள். ஒரே வீட்டில் மூன்று பெண், மூன்று ஆண் என சகோதர, சகோதரிகள் ஆறு பேர் திருமணமாகாமல் இருக்கிறோம். காலம் தோறும் வேதனை, துன்பம், கஷ்டம்தான். மூத்த அக்கா மற்றவர்களை வாய்க்கு வந்தபடி பேசி சாபம் விடுகிறாள். சாப்பாட்டுத் தட்டை தூக்கி அடிக்கிறாள். மானம் போகிற மாதிரி கத்துகிறாள். அவளிடம் ஒரு தேவதை இருப்பதாக பயமுறுத்துகிறாள். நாங்கள் பயந்து சாகிறோம். வீடே துக்க வீடு போல இருக்கிறது. சாதாரண ஒரு பெண்ணை தெய்வம் அடக்க மாட்டேன் என்கிறது. விழுந்து விழுந்து கும்பிட்டாலும் அந்த தெய்வத்திற்கே எங்களைப் பிடிக்காமல் போய்விட்டது. வாழவும் விடாமல் சாகவும் விடாமல் நடு மத்தியில் எங்களை நிறுத்திவிட்டது. குருஜியாவது எங்கள் எதிர்காலத்துக்கான பரிகாரங்களை சொல்லுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
பதில்:
பிறந்த குறிப்புகளை கொடுத்தால் நம் ஞானிகள் அருளிய ஜோதிட விதிப்படி பலன் சொல்லும் எளிய ஜோதிடன்நான். அருள்வாக்கு சொல்பவனோ, சாமியாரோ அல்ல. நட்சத்திரத்தையும், ராசியையும் மட்டும் அனுப்பினால் நான் எப்படியம்மா பதில் சொல்லுவது?. இதுபோல பிறந்தநாள், நேரம், இடம் இவைகளை சரியாக குறிப்பிடாமல் அரைகுறையாக கேட்பதால்தான் என்னால் பலருக்கு பதில் சொல்ல முடியாமல் போகிறது.
இருந்தாலும் ராசிப்படி பார்த்தால் ஆறுபேரில் நான்கு பேருக்கு சித்திரை நட்சத்திரம் துலாம் ராசியாகி ஏழரைச்சனி நடக்கிறது. இன்னும் ஒருவருக்கு கிருத்திகை நட்சத்திரம் மேஷ ராசியாகி அஷ்டமச்சனி நடக்கிறது. இப்படி வீட்டிலிருக்கும் எல்லோருக்கும் சனி நடந்தால் நிம்மதி எப்படி இருக்கும்? சனி முடிந்ததும் அமைதி கிடைக்கும். சுபகாரியங்கள் நடக்கும்.
அதுவரை சனிக்கிழமை தோறும் திருவான்மியூரில் உள்ள அனைத்து உடல் மனநோய்களையும் தீர்க்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் மருந்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள காலபைரவருக்கு வீட்டில் இருந்து நல்லெண்ணை கொண்டுபோய் கோவிலில் மண் அகல்விளக்கு வாங்கி தீபம் ஏற்றிவாருங்கள். எல்லாப்பிரச்னைகளும் தீரும்.
அமாவாசை அன்று பிறப்பது தவறா ?
வி. சோமசுந்தரம், பொன்னேரி.
கேள்வி :
 ரா
செவ் ராசி
பு சுக்
சூ,கே சந் குரு  சனி
என்னுடைய மாப்பிள்ளை அமாவாசையில் பிறந்திருக்கிறார். அவரிடம் உண்மை இல்லை. நேர்மை இல்லை. வேலைக்கு செல்லும் இடத்திலும் கெட்டபெயர். எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். சில விஷயங்களை கடிதத்தில் எழுத முடியவில்லை. என் மகளிடமும் பொய். ஆனால் பார்ப்பதற்கு நல்ல மனிதர்போல் இருப்பார். தெரிந்தே செய்கிறாரா?அல்லது அறியாமல் செய்கிறாரா? என்று தெரியவில்லை. நிறையக் கோவில்களுக்கு கூட்டி சென்றாலும் அவர் மாறுவதாக இல்லை. வீட்டில் இருந்தால் நல்ல பிள்ளையாகத்தான் இருக்கிறார். அமாவாசை அன்று பிறந்தால் இப்படித்தான் என்று சொல்லுகிறார்கள். பரிகாரங்கள் எதாவது இருந்தால் சொல்லுங்கள் .
பதில்:
மேஷ லக்னம், தனுசு ராசி. மூன்றில் ராகு. ஏழில் சனி. எட்டில் குரு. ஒன்பதில் சூரி, சந். பத்தில் சுக், புத. பதினொன்றில் செவ். (13.1.83, 12.5 பகல், சென்னை).
அமாவாசையில் பிறப்பது தவறு இல்லை. அது ஒரு வகையில் யோகம்தான். அன்று பிறந்த எத்தனையோபேர் நல்ல குணங்களுடன் நல்ல நிலையில் வாழ்கிறார்கள். உங்கள் மாப்பிள்ளை விஷயத்தில் அவரின் லக்னத்தையும் அமாவாசை யோகத்தைத் தந்த சூரிய சந்திரனையும் அதாவது ராசியையும் ராகுவின் சாரத்தில் அமர்ந்த சூட்சுமவலுவோ சுபத்துவமோ பெறாத உச்ச சனி பார்த்ததுதான் காரணம்.
வலுப்பெற்ற சனி பார்க்கும் எல்லாம் கெடும். இங்கே சனியின் வீட்டில் லக்னாதிபதி செவ்வாய் அமர்ந்து, குரு எட்டில் மறைந்து லக்னத்தையோ, லக்னாதிபதியையோ சுபர் பார்க்காமல் ராசியில் ராகு,கேது சம்பந்தப்பட்டு சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகி ஜாதகமே சனியின் பிடியில் சிக்கியதால் இந்த நிலைமை. லக்னாதிபதி செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். மாப்பிள்ளை மாறுவார். இங்கே பரிகாரங்களை எழுத இடம் போதாது.
ஜி. காமாட்சிசுந்தரம், கவுந்தபாடி.
கேள்வி :
சனி சந்,ல ரா
செவ் ராசி
பு குரு
 சூ சுக்  கே
மானசீக குருவிற்கு வணக்கம். வாக்குப் பலிதமுள்ள ஜோதிடராக வரமுடியுமா? ஜாதக ரீதியாக அந்த அமைப்பு எனக்கு உள்ளதா?
பதில் :
மேஷ லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் ராகு. ஐந்தில் குரு. எட்டில் சுக். ஒன்பதில் சூரி, புத. பதினொன்றில் செவ். பனிரெண்டில் சனி. (8.1.68, 12.24 பகல், கோபி).
லக்னமும், ராசியும் ஒன்றாகி லக்னாதிபதியையும், லக்னத்தையும் வலுப்பெற்ற குருபார்த்து வாக்கு ஸ்தானத்தை அந்த வீட்டதிபதி பார்த்து ஜோதிடத்திற்குரிய புதன் வர்கோத்தமமாகி அம்சத்திலும் நான்கு கிரகம் வர்கோத்தமம் லக்னாதிபதி ஆட்சி. குரு உச்சம் என அமைந்த யோக ஜாதகம்.
ராகு தசை ஆரம்பித்ததும் ஜோதிடராக முடியும். வாக்கு ஸ்தானத்தை சனி செவ்வாய் பார்த்து அந்த ஸ்தானாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்ததால் கெட்டதைச் சொல்லும் ஜோதிடராக இருப்பீர்கள். நீங்கள் சொல்லும் கெடுபலன் பலிக்கும்.
டி. ஆர். ரவி, சென்னை.
கேள்வி :
ரா குரு சூ,பு சுக்,ல
 சந் ராசி  செவ்
சனி கே
வசதி குறைந்த நான் மிகவும் கஷ்டப்பட்டு என் மகனை பி.. படிக்க வைத்துள்ளேன். மகன் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிறான். நல்ல வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது? வெளிநாடு போவானா?கடைசிக் காலத்தில் பெற்றோரைக் காப்பாற்றுவானா? உங்கள் அருள்வாக்கை சொல்லவும்.
பதில்:
மிதுன லக்னம், கும்ப ராசி. லக்னத்தில் சூரி, புத, சுக். இரண்டில் செவ். ஆறில் சனி. ஒன்பதில் சந். பத்தில் ராகு. பதினொன்றில் குரு. (15.7.87, 4.35 காலை, சென்னை).
லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சிபெற்று ஆறுக்குடையவன் நீசம் பெற்று தற்போது ஒன்பதுக்குடையவன் தசையும் அடுத்து லக்னாதிபதியும் தசையும் நடக்க இருக்கும் யோக ஜாதகம். வரும் ஜூலை மாதத்திற்கு மேல் நல்லவேலை கிடைத்து தைமாதத்தில் திருமணமும் நடக்கும். 2017-ல் ராகுபுக்தி முடிவதற்குள் வெளிநாடு செல்வார். கடைசிவரை தாய், தந்தையை பக்தியுடனும், மரியாதையுடனும் வைத்துக் காப்பாற்றுவார். கொடுத்து வைத்த அப்பா நீங்கள்.
எஸ். கஜேந்திரன், திருவள்ளுர்.
கேள்வி :
சனி செவ் ரா
சந் சூ,பு ராசி
சுக்  குரு
கே
.டி. கம்பெனியில் வேலை செய்துவந்தேன். 2013 பிப்ரவரி மாதம் வேலை போய்விட்டது. அது முதல் நிரந்தமான வேலை இல்லாமல் வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். எப்போது வாழ்க்கை சீரடையும்?
பதில்:
மிதுன லக்னம், கும்ப ராசி. மூன்றில் குரு. எட்டில் புத, சுக். ஒன்பதில் சூரி. பத்தில் செவ், சனி, ராகு. (27.2.68, 1.23 பகல், சென்னை).
அஷ்டமாதிபதி தசையில் எட்டில் மறைந்த விரயாதிபதி புக்தியில் வேலை போய்விட்டது. சனி தசையில் சூரிய, சந்திர, செவ்வாய் புக்திகள் எப்போதுமே நன்மை செய்யாது. வரும் ஜூலை மாதம் குருப்பெயர்ச்சிக்கு பிறகு இதைவிட நல்லவேலை கிடைக்கும். 2017 இறுதியில் ஆரம்பிக்கும் எட்டிற்குடையவனுடன் இணைந்த ராகு புக்தியில் வெளிநாடு செல்வீர்கள். அதன்பிறகு வாழ்க்கை சீரடையும்.
எம். ஆனந்த், பெருந்துறை.
கேள்வி :
ராசி சுக் ரா ல
கே  சூ குரு
செவ் சந் பு சனி
தீராத வியாதியால் அவதிப்படுகிறேன். 35 வயதாகியும் திருமணம் இல்லை. பதிமூன்று வயதிலிருந்து உழைத்தாலும் சேமிப்பு என்பது அறவே இல்லை. வாழ்க்கை இப்படித்தான் இருக்குமா? அல்லது மாறுமா?மாறும் என்றால் எப்போது?
பதில்:
கடக லக்னம். கன்னி ராசி. லக்னத்தில் சுக்கிரன் ராகு. இரண்டில் சூரி, குரு. மூன்றில் புத, சனி. நான்கில் செவ். (11.9.80, 3.56 அதிகாலை, நாமக்கல்).
ராசிக்கு இரண்டில் செவ்வாய் ராசியில் சனி. லக்னத்திற்கு ஏழாம் இடத்திற்கு செவ்வாயும் பார்வை ராசிக்கு ஏழாம் இடத்திற்கு சனிபார்வை. கடுமையான தாரதோஷம். இது போதாது என ஆறுக்குடைய குரு ஆறாம் இடத்தையும் ராசிக்கு ஆறாம் இடத்தையும் பார்த்து வலுப்படுத்தியதால் தீராத நோய்.
கடந்த ஏழு வருடங்களாக கன்னி ராசிக்கு நடந்த ஏழரைச் சனியும் பாதகாதிபதியுடன் இணைந்த லக்ன ராகுவின் தசையும் உங்களைப்படுத்தி எடுத்துவிட்டது. 2017-ல் தான் திருமணம். குருதசையின் பிற்பகுதியில் நோய்த் தொல்லை இருக்காது. திருமணத்திற்கு பிறகு அமைதி இருக்கும்.
சா. பாலு, பூண்டிகிராமம்.
கேள்வி :
கே சந் சனி
குரு ராசி
 சூ செவ்
ரா ல பு செவ்
மூத்த மகனுக்கு திருமணம் செய்ய பத்து ஆண்டுகளாக முயற்சிக்கிறேன் முடியவில்லை. மகனைக் கூட்டிக் கொண்டு அத்தனை பரிகாரக் கோவிலுக்கும் சென்று வந்து விட்டேன். இவனால் பின்னால் மூன்று பேரின் திருமணம் தடையாக இருக்கிறது. நாற்பது வயதாகும் மகனைப் பார்த்து தினம் தினம் வேதனைப்படுகிறேன். வேண்டாதவர்கள் செய்வினை செய்துவிட்டார்கள் என்று ஊரில் சொல்லுகிறார்கள். குருஜி ஐயா ஒரு நல்ல பதில் சொல்லுவீர்கள் என்று நம்புகிறேன்.
பதில்:
விருச்சிக லக்னம். மிதுன ராசி. லக்னத்தில் ராகு. நான்கில் குரு. எட்டில் சனி. பத்தில் சூரி, சுக். பதினொன்றில் புத, செவ். (11.9.74, 11.30 காலை, திருவள்ளூர்).
எட்டில் சனி அமர்ந்து ராசிக்கு ஏழைப் பார்த்து கடந்த 19 வருடங்களாக தசை நடத்தியதாலும் ஏழாமிடம் ராகு கேதுக்களால் பலவீனமாகி சுக்கிரனை குரு பார்த்ததாலும் இதுவரை திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடக்காததும் ஒரு வகையில் நல்லதுதான். நடந்திருந்தால் சனி பிரித்திருப்பார். வாழப் பிடிக்கவில்லை டைவர்ஸ் அது இது என்று கூத்துக்கள் நடந்திருக்கும்.

ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஶ்ரீகாளகஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யுங்கள். இந்த கேது புக்தியில் வரும் தைமாதம் உறுதியாக திருமணம் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *