adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 68 (29.12.15)

ஜெ.ரவிச்சந்திரன், தொரவனூர்அஞ்சல்

கேள்வி:
குரு சுக் செவ்  சூ,பு ரா
சந் சனி ராசி
 ல
எனக்கு திருமண வாழ்க்கை உண்டா? இல்லையா? எனது உத்தியோகம் சம்பந்தமான வழக்கு எப்போது முடியும்?

பதில்:
(சிம்மலக்னம், கும்பராசி. ஏழில் சனி. ஒன்பதில் குரு. பத்தில் சுக், செவ். பதினொன்றில் சூரி, புதன், ராகு.)
லக்னத்திற்கு ஏழில் வக்ரச்சனி ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து ராசிக்கு ஏழை சனி, செவ்வாய் பார்த்து லக்னாதிபதியும் ராசிக்கு ஏழுக்குடையவனுமான சூரியன் ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்த ஜாதகம். இதுபோதாது என்று லக்னாதிபதி சூரியனும் குடும்பாதிபதி புதனும் ராகுவின் நட்சத்திரத்திலும் ராகுவிற்கு எட்டு டிகிரிக்குள் நெருங்கியும் இருக்கிறார்கள்.
தாம்பத்திய சுகத்திற்குக் காரணமான சுக்கிரன் பக்கத்து ராசியில் இருந்தாலும் அவரும் ராகுவிற்கு மிக நெருங்கி நவாம்சத்திலும் நீசம்பெற்று வக்ரமும் அடைந்திருக்கிறார். சுக்கிரன் வக்ரமடைந்தாலே ஒருவருக்கு நீடித்த தாம்பத்திய சுகம் கிடைக்காது என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். உங்களுக்கு இதற்கு முன் திருமணமாகி இருந்தாலும் அது நீடிக்க விதி இல்லை.
இதுபோன்ற ஜாதகங்களுக்குத்தான் நமது வேதஜோதிடத்தில் பரிகார அமைப்புகள் சொல்லப்படுகின்றன. லக்னம், குடும்பம், மனைவியைக் குறிக்கும் அனைத்துக் கிரகங்களும் ராகுவின் பிடியில் சிக்கி இருளடைந்ததால் ராகுவிற்கான முறையான பரிகாரங்களை நீங்கள் செய்தால் மட்டுமே திருமணபந்தம் உங்களுக்குக் கிடைக்கும். தற்போது சனிதசையில் ராகுபுக்தி நடைபெறுவதால் பரிகாரங்களை உடனே செய்யுங்கள்.
வழக்கைப் பொறுத்தவரையில் வழக்கைக் கொடுப்பவன் ஆறுக்குடையவன் மற்றும் தீர்ப்பவன் பதினொன்றுக்குடையவன் என்பதால் தற்போதைய ஆறுக்குடைய சனிதசை முழுவதும் கேஸ் நீடித்து அடுத்த பதினொன்றுக்குடைய புதன்தசையில் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும்.
சி.யசாகு, வேலூர் - 632 006
கேள்வி:
கே
ராசி
குரு
 சந் ரா செவ் சூ,பு சுக்
என் தாத்தா எனக்கு யர்சத் என்று பெயர் வைத்தார். என் அப்பா அதை யசாகு மாற்றி பள்ளியில் சேர்த்து விட்டார். எனக்கு சரஸ்வதி அருள் கிடைக்கவில்லை. 15 வயதில் ஓட்டுநர் வேலை கற்றுக்கொண்டேன். என்னுடைய ராசி, நட்சத்திரம், லக்னம், ராசி எண், ராசி நிறம் தெரிவித்து சரியான பெயர் அமைத்து கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வைக்கும் பெயரையே எல்லாவற்றிலும் மாற்றி விடுவேன். எனக்குச் சொந்த வாகனராசி உண்டா? படிக்காததால் என் எதிர்காலம் எப்படி இருக்கும்?.
பதில்:
உங்களுக்கு மீனலக்னம், தனுசுராசி, மூலம் நட்சத்திரம். லக்னாதிபதி குருபகவான் ஆறில் மறைந்து பத்தில் உள்ள ராகுவைப் பார்ப்பதால் ஓட்டுநர் தொழிலில் நிரந்தரமாக இருப்பீர்கள். கல்விக்கும், நான்காமிடத்திற்கு அதிபதியான புத பகவான் கல்விஸ்தானத்திற்கு ஆறில் மறைந்து வக்ரம் பெற்று செவ்வாயுடன் இணைந்ததால் உங்களுக்கு பள்ளிக்கல்வி அமைப்பு இல்லை.
மேற்கத்திய முறைப்படி உங்களுக்கு ராசி எண் ஒன்பதும், மூன்றும், ராசிநிறம் மஞ்சளும், சிவப்பும், ஜாதகத்தில் சனியும், சுக்கிரனும் ஆட்சிபெற்றதால் 31 வயதிற்கு பிறகு சொந்தவாகன அமைப்பு உண்டு. எதிர்காலத்தில் யோகதசைகள் வருவதால் மிகவும் சிறப்பாக இருப்பீர்கள். பிரவீண் அல்லது பிரேம்குமார் என்று பெயர் வைத்துக் கொள்ளுங்கள். தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதால் வருங்காலத்தில் சிறப்பான வாழ்க்கை வாழ்வீர்கள்.
படைப்பில் இவ்வளவு வஞ்சமா? தெய்வம் வேடிக்கை பார்ப்பது ஏன்?
எஸ்.சரவணன், மதுரை-9 
கேள்வி:
வியக்கவைக்கும் உங்களின் பதில்களின் தீவிர ரசிகன் நான். தாயின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் சித்தியின் கொடுமையில் வளர்ந்துபதினெட்டு வயதில் வீட்டை விட்டு துரத்தப்பட்டவன். சொந்தம், பந்தம், நட்பு எதுவும் கிடையாது. எப்படியோ திருமணம் செய்தேன். குழந்தைகளும் பிறந்து விட்டன. மனிதனுக்கு அடிப்படைத் தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இல்லாதவன் வாழ்ந்து என்ன பயன்? வாடகை தரமுடியவில்லை. சாப்பாட்டுக்கு வழி இல்லை. மனைவி, குழந்தைகளுடன் பட்டினி கிடக்கிறேன். நான் பாவம் செய்தவன் என்று வைத்துக் கொண்டாலும் என் மனைவி, மக்கள் துயரப்படுவது ஏன்? இருப்பவனிடம் செல்வம் மேலும் சேருகிறது. இல்லாதவனிடம் தரித்திடம் சேருகிறது. படைப்பில் இவ்வளவு வஞ்சமா? தெய்வம் ஏன் வேடிக்கை பார்க்கிறது? இதுவரை நிரந்தமாக ஒரு வேலை அமையவில்லை. ஜாதகப்படி தொழில் செய்யலாமா? வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கிறேன். குருவாக, தாய், தந்தையாக, சகோதரனாக இருந்து வழிகாட்டுங்கள். பதிலுக்கு குடும்பமே காத்திருக்கிறது.
பதில்:
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி அமைப்பின் போது நடக்கும் கெடுபலன்களைப் பற்றி அவ்வப்போது எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். உங்களுக்கும் மூத்த மகனுக்கும், இரண்டாவது மகளுக்கும் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியாகி மூவருக்கும் ஏழரைச்சனி நடக்கிறது. மனைவிக்கும், கடைசிமகனுக்கும் ரேவதி நட்சத்திரமாகி இருவருக்கும் சென்றமுறை அஷ்டமச்சனி நடந்தது. எனவே 2012 முதல் உங்களுடைய குடும்பமே விரக்தியின் விளிம்பில் நிற்கிறது.
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏழரைச்சனி நடந்தால் குடும்பத்தலைவனின் வேலை, தொழிலைப் பாதிக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் கஷ்டங்கள் என்பது நிரந்தரமானவைகள் அல்ல. மலை மீது ஏற ஆரம்பித்தால் ஏறிக்கொண்டே இருக்க முடியுமா? என்றேனும் ஒருநாள் உச்சி வரத்தான் செய்யும். அதன்பிறகு கீழே இறங்கித்தான் ஆகவேண்டும். அதுபோல கஷ்டங்களும் ஒருநாள் முடிவுக்கு வந்து இன்பம் வந்தே ஆகவேண்டும்.
கவலைப்படாதீர்கள். நம்பிக்கை இழக்காதீர்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் மிகவும் நன்றாக இருப்பீர்கள் பரம்பொருள் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார். விருச்சிகராசிக்கு 2017-ம் வருடத்திற்குப் பிறகு வசந்தம் வரும். இந்தப் புதுவருடம் தொல்லைகள் இன்றி நிம்மதிக்கான ஆரம்பத்தைத் தரும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு சொந்தத்தொழில் செய்யவேண்டாம். கிடைக்கும் எந்த வேலையையும் செய்யுங்கள். கௌரவம் பார்க்காதீர்கள். சனி முடிந்தபிறகு நீங்கள் கேட்ட உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் நிரந்தரமாக பரம்பொருளால் உங்களுக்குத் தரப்படும் என்பது சர்வ நிச்சயம்.
ஐந்துபேர் கொண்ட குடும்பத்தில் அனைவருக்கும் சனி நடப்பதால் அதிகமான தொல்லைகளை அனுபவித்து விட்டீர்கள். குழந்தைகள் மூவரின் ஜாதகம் நல்ல யோகத்துடன் இருப்பதால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. நல்ல தகப்பனை அடையாத நீங்கள் நல்ல தகப்பனுக்கு எடுத்துக்காட்டாக இருப்பீர்கள். இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து கஷ்டம் என்றால் என்னவென்று கேட்பீர்கள்.
கே.சித்ரா, ஊர் பெயர் இல்லை.
கேள்வி:
செவ்
ராசி  குரு கே
ல,சுக் சனி ரா சந்
சூ பு
என் தங்கையில் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது. தற்செயலாக எங்கள் வீட்டிற்கு வந்த ஜோதிடர் சர்ப்பதோஷம், மாங்கல்யதோஷம், சயனதோஷம், புத்திரதோஷம் என்றும் இது நீங்கள் வாங்கி வந்த வரம், கர்மவினை என்று சொல்லி ஜாதக நோட்டை அலட்சியமாக வீசிவிட்டு வேண்டுமானால் ஜோதிடமகானாகிய உங்களைத் தொடர்பு கொள்ளச்சொல்லிவிட்டுப் போய்விட்டார். கல்லூரியில் கோல்டுமெடல் வாங்கிய என் தங்கை பிரபல ஐ.டி. கம்பெனியில் சொற்ப ஊதியத்தில் வேலை செய்கிறாள். அவளுக்கு வெளிநாடு யோகம் அமையுமா? இரண்டாவது வாழ்க்கையாவது மகிழ்ச்சியை அளிக்குமா? பரிகாரம் என்ன?
பதில்:
(மகரலக்னம், சிம்மராசி. லக்னத்தில் சுக், சனி, ராகு. ஐந்தில் செவ். ஏழில் குரு, கேது. பதினொன்றில் புதன். பனிரெண்டில் சூரி)
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழுக்குடையவனை விட பதினொன்றுக்குடையவன் அதிகவலுவாக இருந்து அந்தப் பெண்ணிற்கு சீக்கிரமாக திருமணம் செய்யும் பெற்றோர்கள் அவளை பாழுங்கிணற்றில் தள்ளிவிடுகிறார்கள் என்று அர்த்தம்.
உங்கள் தங்கையின் ஜாதகத்தில் லக்னாதிபதி சனியும், சுக்கிரனும் இரண்டு டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து ஏழுக்குடையவனும் எட்டில் மறைந்த நிலையில் 28 வயதிற்கு முன் திருமணம் செய்தால் முதல் திருமணம் முறியவேண்டும் என்பது விதி.
நடைபெறும் சூரியதசை எட்டுக்குடையவனாகி பனிரெண்டில் இருப்பதால் வரும் சந்திரபுக்தியில் உங்கள் தங்கை வெளிநாடு செல்வாள். இரண்டாவது திருமணம் 28 வயதிற்கு மேல் சூரியதசை சுக்கிரபுக்தியில் அமையும். அதற்கு முன் அமைந்தால் அதுவும் சிக்கல்தான். சுக்கிரபுக்தியில் செய்யும் திருமணம் மகிழ்ச்சியாக இருக்கும். லக்னாதிபதி சனி மிகவும் வலுவிழந்துள்ளதால் சனியை சூட்சும வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களையும் சுக்கிரதோஷம் உள்ளதால் சுக்கிரனுக்கான பரிகாரங்களையும் செய்யவும்.
சி. மோகனசுந்தரம் நெல்லை.
கேள்வி
ஆசானே... தினமும் உங்களின் திருவுருவப்படத்தை வணங்கி விட்டே வாடிக்கையாளருக்குப் பலன் சொல்ல ஆரம்பிக்கிறேன். திக்பலத்தைப் பற்றி அடிக்கடி சொல்கிறீர்கள். பாவக்கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறும்போது திக்பலம் பெறக்கூடாது என்று அடிக்கடி வலியுறுத்திச் சொல்வது ஏன்? விளக்கிச் சொல்லப் பணிகிறேன்.
பதில்
லக்னத்தில் குருவும் புதனும், நான்கில் சுக்கிரனும் சந்திரனும், ஏழில் சனியும், பத்தில் சூரியனும் செவ்வாயும் இருப்பது நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளால் திக்பலம் என வகைப்படுத்தப்பட்டது. ஒரு கிரகத்தின் வலுவைக் கணிக்க நமக்கு ஞானிகளால் அருளப்பட்ட ஸ்தானபலம் திக்பலம் திருக்பலம் கால அயன சேஷ்டபலங்கள் எனப்படும் ஆறுவித பலங்களில் இரண்டாவதான இது ஒரு கிரகத்தின் ஸ்தானபலம் எனப்படும் ஆட்சி உச்ச வலுவிற்கு இணையானதாகும்.
பகல் பனிரெண்டு மணிக்குப் பிறந்த ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பத்திலும் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு பிறக்கும் ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நான்கிலும் இருக்கும் என்பதை வைத்தே ஞானிகள் ஒருவரின் ஜனனத்தின் போது இருக்கும் கிரகநிலைகளை எவ்வாறு துல்லியமாக அளவிட்டிருக்கிரார்கள் என்பதை அறிந்து பிரமிக்கலாம்.
பாபக்கிரகங்கள் வலுப்பெற்றால் தனது கெட்டசெயல்களால் மட்டுமே ஒரு மனிதனை முன்னிறுத்தும் மற்றும் கெட்டவழிகளில் மட்டுமே பயன்தரும் என்பதால்தான் முதலிரண்டு முக்கியபலங்களான ஸ்தான திக்பலங்களை ஒரு பாபக்கிரகம் ஒருசேர அடையக்கூடாது. அப்படி அமைந்தால் கெடுபலன்தான் என்பதே இதில் உள்ள சூட்சுமம்.

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற ஒரு பழமொழி ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது இல்லையா? அப்படியானால் கெட்டவன் இருமடங்கு வலுவானால் ராஜயோகம் கிடைக்குமா? கொஞ்சம் யோசித்தால் உங்களுக்கே ஒளிந்திருக்கும் சூட்சுமங்கள் பிடிபட ஆரம்பிக்கும். எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் எனும் தெய்வப்புலவனின் வாக்கு ஒரு ஜோதிடனுக்கு மிகவும் பொருந்தும்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 68 (29.12.15)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *