adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கேந்திர,கோணங்களில் இருக்கும் ராகு தரும் பலன்கள் C-055 – Kenthira Konangalil Irukkum Raahu Tharum Palangal.
நமது பூமியில் உயிரினங்கள் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே, சிறிதுநேரம் மறைத்துத் தடுக்கும் ஆற்றல் ராகு,கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூலநூல்கள் கிரகங்களின் வலிமையைக் கணக்கிடும்போது சாயாக் கிரகங்களுக்கு முதலிடம் அளிக்கின்றன.
ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தர விடாமல் முழுமையாகத் தடுக்கும், அல்லது குறைக்கும் ஆற்றல் நவ கிரகங்களில் ராகுவிற்கு மட்டுமே உண்டு சூரியனுக்கு அருகே ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கும் கிரகங்கள் அஸ்தங்கம் எனும் பெயரில் எவ்வாறு வலுவிழக்கின்றனவோ, அதேபோல் ராகுவிடம் நெருங்கும் கிரகமும் வலுக் குறையும். குறிப்பாக ராகுவிற்கு எட்டு டிகிரிக்குள் நெருங்கும் ஒரு கோள் ராகுவினால் சுத்தமாக பலவீனமாக்கப்பட்டு தனது இயல்புகள் அனைத்தையும் பறி கொடுத்து விடும். அதாவது அதிக ஒளியையும், ஒளியே இல்லாத ஆழமான இருட்டையும் நெருங்கும் கிரகங்கள் தங்களின் சுயத் தன்மையை இழப்பார்கள். உதாரணமாக, ராகுவிடம் மிக நெருங்கும் குரு, குழந்தைகளையும், அதிகமான பண வசதியையும், நேர்மையான குணத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் தரும் சக்தி அற்றவர். ராகுவுடன் நெருங்கி இணையும் சுக்கிரன், பெண் சுகத்தையும், உல்லாசத்தையும், காதல் அனுபவம் மற்றும் சுக வாழ்வையும் தர மாட்டார். செவ்வாய் தன் இயல்புகளான கோபம், வீரம், வெறித்தனம், கடினமனம், சகோதரம் போன்றவற்றை இழப்பார். ராகுவிடம் சரணடையும் சனியால் வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது. சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் ராகுவிடம் நெருங்கும்போது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஜாதகர் இழந்து மனநலம் குன்றுவார். தாயன்பு பறி போகும். புதனுடன் இணையும் ராகுவால் நிபுணத்துவம் குறையும். அறிவாற்றல் அளவோடுதான் இருக்கும். கணிதத் திறமை காணாமல் போகும். சூரியன் ஆன்ம பலத்தையும், அரசுத் தொடர்பு, அரசலாபம், தந்தையின் ஆதரவு போன்றவற்றைத் தரும் வலிமையை இழப்பார். ஒரு கிரகம் உச்சம், மூலத் திரிகோணம், ஆட்சி போன்ற எத்தகைய வலிமை நிலையில் இருந்தாலும் சரி…! அது ராகுவுடன் மிகவும் நெருங்கினால் அத்தனை வலிமையையும் இழக்கும். மேலே சொன்னவைகளை நீங்கள் நன்றாக அறிந்த ஜாதகத்தில் ஒப்பிட்டுப் பாருங்கள். சரியாக இருக்கும். உதாரணத்திற்கு நம் காலத்தில் வாழ்ந்த தெய்வம், காமாட்சி என்ற பெயர் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாமல், துறவுக்கு உண்மை அர்த்தமாய் சொகுசு வாழ்க்கை தவிர்த்து, நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சி மகாபெரியவரின் அவதார ஜாதகத்தில் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்ததைச் சொல்லலாம். சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றிருக்கும் நிலையில் கூட ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்று நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அவ்வாறு விமோசனம் கிடையாது. (எப்போதும் சூரியனுடன் இணைந்தே இயங்குவதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் சொல்லுகிறார். அதுபோல சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று வேறு சில மூலநூல்கள் சொல்லுகின்றன.) நான் மேலே சொன்னவைகள் குறிப்பிட்ட கிரகங்களின் காரகத்துவங்கள் மட்டும்தான். ஜாதகத்தில் மேற்கண்ட கோள்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியனவோ அவைகளும் அந்தக் கிரகங்கள் வலுவிழந்ததால் பாதிக்கப்படும். அதாவது ஐந்துக்குடையவன் ராகுவுடன் நெருங்கினால் புத்திர பாக்கியம், அதிர்ஷ்டம், சிந்தனை மற்றும் செயல்திறன் பாதிக்கப்படும். ஆறுக்குடையவன் ராகுவுடன் இணைந்தால் ஜாதகர் நோயற்ற நிலை, கடன் வாங்க அவசியமின்மை, எதிரிகளற்ற வாழ்வு போன்றவைகள் அமையப் பெறுவார். ஏழுக்குடையவனுடன் ராகு இணைவு பெற்றால் தாமத திருமணம் அல்லது திருமணமே இல்லாத நிலை, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் போன்ற பலன்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி ராகுவுடன் மிக நெருங்கி இருந்தால் அந்த ஜாதகர் தீர்க்காயுள் வாழுவது கடினம். அதேநேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தன்னுடன் மிக நெருங்காமல் அதேராசியில் குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் இருக்கும் கிரகங்களின் இயல்பை ராகு பெறுவார் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகங்களின் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை ராகுபகவான் தனது தசை, புக்திகளில் செய்வார். அதாவது அவர்களிடமிருந்து பறித்ததை ராகு தனது தசையில் தருவார். உதாரணமாக, குருவுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்த ராகுவின் தசையில் மிகப் பெரிய தனலாபம், புத்திர பாக்கியம் போன்றவைகளும், சுக்கிரனுடன் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்த ராகுவின் தசையில் சொகுசு வாழ்க்கையும், பெண்களால் சுகமும் இருக்கும். அதேபோல பாபக் கிரகங்களுடன் இணைந்த ராகு அவர்களின் கெட்ட காரகத்துவங்களை தனது தசையில் பிரதிபலித்து ஜாதகரை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவார். குறிப்பாக சனி, செவ்வாயின் பார்வை மற்றும் இணைவைப் பெற்ற ராகு தன் தசையில் நல்ல பலன்களைச் செய்வது கடினம். மேற்கண்ட இருவரும் லக்ன சுபர்களாக இருந்தாலும் இதே நிலைதான். ஒரு கிரகம் ராகுவுடன் எத்தனை டிகிரியில் இணைந்திருக்கிறது, வேறு ஏதாவது பலவீனத்தை அந்தக் கிரகம் அடைந்திருக்கிறதா, அதோடு அவர்கள் இருக்கும் ராசி எப்படிப்பட்டது, லக்னத்திற்கு அந்த ராசி எத்தனையாவது பாவம், மற்றும் ராகுவிற்கு அந்த பாவம் வலிமையான இடமா என்பதோடு, வேறு யாருடைய பார்வை மற்றும் தொடர்பு ராகுவிற்கு இருக்கிறது, ராகுவும் அவருடன் இணைந்த கிரகமும் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்கள், அந்த நட்சத்திரநாதன் லக்னத்திற்கு சுபரா, அசுபரா, என்ன பாவத்திற்கு உரியவர், போன்ற நுணுக்கமான விஷயங்களை சரியாகக் கணிக்க முடிந்தால் போதும். ஒருவருக்கு ராகுதசை எத்தகைய பலன் தரும் என்பதை துல்லியமாகச் சொல்லி விடலாம்.
கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு என்ன பலன்களைத் தருவார்?
கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு தனது தசா, புக்திகளில் அந்த பாவத்தைக் கெடுப்பார் என்பது பொதுவான ஜோதிட விதி. ஆனால் இயற்கைச் சுப கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கை பாபக் கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற சூட்சுமம் உள்ளது. இதுவே பாதகாதிபதிகளின் தத்துவம் என்ற எனது ஆய்வு முடிவினை ஒட்டியும், இயற்கைப் பாபரான ராகு, தான் இருக்கும் வீட்டு அதிபதியின் தன்மையை பிரதிபலிப்பவர் என்பதாலும், சனி செவ்வாயின் வீடுகள் ஐந்து, ஒன்பதாம் இடங்களாகி அந்த வீடுகளில் இருந்தால் மிகக் கடுமையான பலன்களைத் தருவார். இந்த அமைப்பின்படி கடகம், துலாம் ஆகிய லக்னக்காரர்களுக்கு ராகு ஐந்தாமிடத்தில் கெடுதல்களைச் செய்வார். மேற்கண்ட அமைப்பில் நடக்கும் ராகு தசை, புக்திகளில் குழந்தைகள் சம்பந்தப் பட்டவைகளில் கெடுபலன்களும், புத்திர சோகமும், வாரிசு விரோதம், அவர்களால் அவமானம், அதிர்ஷ்டக்குறைவு, பூர்வீக சொத்துக்கள் இழப்பு போன்ற பலன்கள் நடக்கும். மேலும் ஐந்தாமிட ஆதிபத்தியங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். அதேபோல மிதுனம், மீனம் ஆகிய லக்னத்தவர்களுக்கு ராகு ஒன்பதாமிடத்தில் கெடுபலன்களை நடத்துவார். இந்த லக்னத்தவர்களின் ஒன்பதாமிட ராகு தசையில் தந்தையின் ஆதரவை இழத்தல், தந்தையின் மறைவு, விரோதம், பாக்யங்கள் பறிபோகுதல் போன்றவை நடக்கும். மேலே கண்ட லக்னங்களுக்கு திரிகோணங்களில் ராகு தனித்த நிலையில் இருந்தால் சொன்ன பலன்களே நடக்கும். அதேநேரத்தில் ராகு இந்த இடங்களில் சுபர் பார்வை பெற்றோ, ஒரு கேந்திராதிபதியுடன் இணைந்திருந்தாலோ சிறிது மாறுபாடான பலன்களைத் தருவார். ஆனாலும் அடிப்படையில் கெடுபலன்கள் என்பது மாறாதது. இதைப் போலவே சுப கிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கேந்திர ஸ்தானங்களில் தனித்திருக்கும் ராகு அந்த பாவத்தை முழுமையாகக் கெடுப்பார். ஏற்கனவே இந்தத் தொடரில் “காரஹோ பாவ நாஸ்தி" அமைப்பை செயல்படுத்துவது ராகு,கேதுக்கள் தான் என்று நான் எழுதியதைப் போலவே கேந்திராதிபத்திய தோஷத்தை எடுத்துச் செயல்படுத்துவதும் பெரும்பாலும் ராகு, கேதுக்கள் தான். அதிலும் சந்திரன் பூரணத்தை நெருங்கும் சமயத்தில் வளர்பிறைச் சந்திரனாக இருக்கும்போது கடகத்தில் தனித்து அமரும் ஏழாமிட ராகு மிகவும் கடுமையானவர். இந்த அமைப்பில் மகரத்தில் சந்திரன் அமர்ந்து ராகுவைப் பார்க்கும் நிலையில் ராகுதசை, புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார். அதாவது கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகங்களின் தொடர்பைப் பெற்ற ராகு,கேதுக்கள் அவர்களின் செயல்களை தாங்களே எடுத்து நடத்துவார்கள். இது ராகுதசை, கேதுபுக்தியிலோ அல்லது சம்பந்தப்பட்ட கிரகங்களின் புக்தியிலோ நடக்கும்.
 ( மே 6 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

5 thoughts on “கேந்திர,கோணங்களில் இருக்கும் ராகு தரும் பலன்கள் C-055 – Kenthira Konangalil Irukkum Raahu Tharum Palangal.

 1. 04/07/1994 4:20am ayya nan valkai veruthu poie ungalai vanthu parthen nengal ennum 7 monthuku apparam nalla erupanu sonninga aana 1year mudunchu enno na appadiye than eruke ayya

 2. DOB:04/07/1994 4:20am ayya nan valkai veruthu poie ungalai vanthu parthen nengal ennum 7 monthuku apparam nalla erupanu sonninga aana 1year mudunchu enno na appadiye than eruke ayya

  1. வணக்கம்
   குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும்.
   ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
   வணக்கம்
   தேவி
   ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *