adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
காதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…! C-053 – Kadhal Yennum Peyaril Karppizhakka Seiyum Raahu…
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 
 
கைப்பேசி எண் : 8681 99 8888
 
ஒரு சூட்சும நிலையாக ஆட்சி பெற்ற கிரகத்துடன் இருக்கும் ராகு அது மூன்று, பதினோராமிடங்களாக இருந்தாலும் நல்ல பலன்களைத் தருவது இல்லை.
 
அது ஏனெனில், இப்போது நீங்கள் உங்களின் சொந்த வீட்டில் வலுவாக இருக்கும் நிலையில் இன்னொருவர் உங்கள் வீட்டை ஆக்கிரமிக்க வருகிறார் என்றால் என்ன செய்வீர்கள்..?
 
எதிர்த் தாக்குதல் நடத்துவீர்கள், இல்லையா...?
 
எதிரியும் வலுவானவராக இருந்தால் என்ன நடக்கும்...? சண்டையில் இருவருமே களைத்துப் போய் உங்களைச் ஜெயிக்க முடியாமல் அவரும், அவரைத் துரத்த முடியாமல் நீங்களும் அதே வீட்டில் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு குடியிருப்பீர்கள்.
 
அதுபோலத்தான்...
 
தான் ஆக்கிரமிக்கும் வீட்டின் அதிபதி அங்கேயே வலுவாக இருந்து தனக்கு எதிர்ப்புக் காட்டி நெருக்குதல் தருவதால், எதிர்ப்பு வலுத்த நிலையில் ராகு அந்த இடத்தில் நல்ல பலன்களைச் செய்ய முடிவது இல்லை. நிழல் கிரக ஆக்கிரமிப்பால் ஆட்சி பெற்ற கிரகமும் அங்கே நல்ல பலனைச் செய்யாது.
 
ஆனால் ஒரு நீசக் கிரகம் ராகுவுடன் இணையும் போது, ஏற்கனவே அந்தக் கிரகம் பலவீனம் பெற்றிருக்கும் நிலையில் முற்றிலுமாக ராகுவிடம் சரணடைந்து விடுவதால், அந்தக் கிரகத்தின் காரகத்துவங்களை முற்றிலுமாகக் கவர்ந்து, எதிர்க்க யாரும் இல்லாத நிலையில், இருக்கும் பாவத்தின் தன்மைகளைப் பொறுத்து ராகு பலன்களைச் செய்வார்.
 
நவ கிரகங்களில் ராகு மட்டுமே ஜோதிடர்களின் தலையைச் சுற்ற வைத்து திணற வைக்கும் கிரகம் ஆவார்.
 
ராகு இருக்கும் சில நிலைகளில் அவரது தசை நன்மையைச் செய்யுமா அல்லது தீமையைத் தருமா என்று கணிப்பது ஜோதிடர்களுக்கு பெரும் சவாலாகவே அமையும். அதிலும் ராகுவோ, கேதுவோ சுயச் சாரத்தில் இருந்து விட்டால் வேறு வினையே வேண்டாம். பலன் சொல்லுவது குதிரைக் கொம்புதான். சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் ராகு,கேதுக்களின் செயல்களை எவ்வாறு கணிப்பது என்பதை ஒரு தனி அத்தியாயமாக அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.
 
ராகுவைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னொரு அமைப்பாக, குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு ராகுவின் தசை நடப்பில் இருந்தால் அக் குடும்பத்தில் பிரிவு, துயரம், மரணம், தரித்திரம் போன்ற பலன்கள் நடக்கும்.
 
ஏனெனில் ராகு என்பது ஒரு இருட்டு. குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோருக்கு ராகு தசை நடக்கிறது என்றால் குடும்பமே இருட்டில் இருக்கிறது என்றுதான் பொருள். ராகு ஆமேடம், எருது, சுறா எனப்படும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், போன்ற ஸ்தானங்களில் இருப்பது மட்டுமே இந்த அமைப்பிற்கு விதிவிலக்கு.
 
இவை தவிர்த்து மற்ற இடங்களில் இருக்கும் ராகு,கேதுக்களின் தசை, குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு நடக்குமாயின் அந்தக் குடும்பத்தில் துன்பங்கள் அதிகம் இருக்கும்.
 
நம்முடைய மூலநூல்களில் ராகு நன்மை செய்வார் என்று கூறப்பட்டிருக்கும் அனைத்து அமைப்புகளும் ஒரு ஜாதகத்தில் இருந்து, ராகு தசையில் ஜாதகர் கஷ்டப்படுகிறார் என்றால் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களை வாங்கிப் பார்த்தால் அவர்களில் வேறு எவருக்காவது ராகுவின் தசை நடப்பில் இருக்கும்...
 
என்னுடைய அனுபவத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தைகளுக்கு ராகுவின் தசை அல்லது புக்தி நடப்பில் இருந்த போது குடும்பமே வறுமை மற்றும் வேறு வகையான பிரச்னைகளில் சிக்கி சிதறுண்டு போன நிலைகளைப் பார்த்திருக்கிறேன்.
 
இந்தக் காரணத்தினால்தான் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது எதிர்காலத்தில் இருவருக்கும் ராகுதசை சந்திப்பு இருக்கக் கூடாது என்பதை நான் முக்கியமாகப் பார்க்கிறேன்.
 
அடுத்து இன்னொரு சூட்சுமமாக நமது கிரந்தங்களில் சொல்லப்படும் காரகன், காரக பாவத்தில் இருக்கும் “காரஹோ பாவ நாஸ்தி” எனும் நிலையை எடுத்துச் செயல்படுத்துவது பெரும்பாலும் ராகு, கேதுக்கள் தான்.
 
உதாரணமாக, செவ்வாய் சகோதர காரகன். அவர் சகோதர ஸ்தானமான மூன்றாமிடத்தில் வலுவுடன், சுபர் பார்வையின்றி இருந்து தசை நடத்தினால் நிச்சயம் சகோதர பிரிவு, சகோதர விரயம், உடன்பிறப்பால் தொல்லை போன்ற பலன்களைச் செய்வார்.
 
இதில் செவ்வாய் தசை ஏழு வருடம் என்ற நிலையில் மிகக் கடுமையான சகோதர பலனை ஏழு வருடங்களில் எப்போது செய்வார் என்று கணிப்பது மிகவும் கடினம்.
 
இந்த நிலையில் ராகுவோ, கேதுவோ செவ்வாயின் வீடுகளில் இருந்தாலோ, அல்லது செவ்வாயின் பார்வையைப் பெற்றிருந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் செவ்வாயின் சம்பந்தத்தைப் பெற்றிருந்தாலோ அவர்களின் புக்திகளில் சகோதர விரயம் போன்ற கடுமையான பலன்கள் இருக்கும்.
 
அதிலும் ராகுவுக்கோ, கேதுவுக்கோ ஆறு, எட்டாமிட சம்பந்தம் இருந்தால் அவர்களது புக்திகளில் சகோதரனை மாரகம் செய்து “காரஹோ பாவ நாஸ்தி” யை செயல்படுத்துவார்கள்.
 
இன்னும் ஒரு முக்கிய நிலையாக குழந்தைப் பருவத்தில் வரும் ராகு தசை, சிறுவயது சுக்கிர தசையைப் போலவே நன்மைகளைத் தராது. அதிலும் பள்ளிப் பருவத்தில் ஒரு குழந்தைக்கு வரும் ராகுவின் தசை, அக் குழந்தையின் கல்வி பயிலும் ஆர்வத்தைக் குறைக்கும்.
 
இதுபோன்ற அமைப்பில் அந்த மாணவனோ, மாணவியோ படிப்பைத் தவிர்த்து விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வார்கள். சில நிலைகளில் இளம்பருவத்தில் வரும் ராகுவின் தசை கல்வியில் தடைகளை ஏற்படுத்தும்.
 
“குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்” “குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும்” என்பது போன்ற சிறுவயது சுக்கிர தசையைப் பற்றிய பழமொழிகளை கேள்விப் பட்டிருப்பீர்கள்.
 
அது ஏனெனில்...
 
சுக்கிரன் காமத்திற்கு காரணமான கிரகம். உடல்ரீதியாக ஒருவர் காமத்திற்கு தயாராகாத சிறுவயதில் வரும் சுக்கிர தசையால் ஜாதகர் இனம் புரியாத பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு மனரீதியாக அலைக்கழிக்கப் படுவார்.
காமத்திற்கு உடலும் தயாராகாமல், மனமுதிர்ச்சியும் இல்லாத இளம் பருவத்தில் வரும் சுக்கிரனின் தசை, ஜாதகரை காமத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கத் தூண்டும் மற்றும் வேறு தவறான வழிகளில் இட்டுச் செல்லும் என்பதால்தான் நமது கிரந்தங்கள் சுக்கிர தசை நடுத்தர வயதில் அதாவது காமத்தை முழுமையாக அறிந்த 32 வயதிற்கு மேல் வர வேண்டும் என்று குறிப்பிடுகின்றன.
 
அதுபோலவே ராகு என்பவர் ஒருநிலையில் போகக் காரகனாகவும், இன்னொரு நிலையில் சாதுரியமாக ஏமாற்றும் கிரகமாகவும் செயல்படுவார். அதாவது, தான் ஏமாறுகிறோம் என்பதே தெரியாமல் தன்னிடம் சந்தோஷமாக ஏமாந்து செல்பவர்களை உண்டாக்கும் திறமையை ராகு அளிப்பார்.
 
மேலே கண்ட போக, மற்றும் ஏமாற்றும் இரண்டு நிலைகளையுமே சிறு வயதில் ஒருவர் செய்ய முடியாது என்பதும் ராகுவின் தசை சிறுவயதில் வந்தால் பலனளிக்காது என்பதற்கு ஒரு காரணம்.
 
சிறுவயதில் நமக்கு பள்ளிப் படிப்பைத் தவிர வேறு எந்த வேலைகளும் இக் காலத்தில் இல்லை என்பதால்தான், அதற்கான முரண்பாடான போகக் காரக ராகுவின் தசை நடக்கும் போது கல்வியில் தடை, படிப்பு சரிவர வராதது போன்ற பலன்கள் நடக்கின்றன.
 
இன்னொரு முக்கிய நிலையாக இளம் பருவத்தில் காமத்தை அறிமுகப் படுத்துவதும், ஒரு பெண்ணை காதல் என்ற பெயரில் கற்பிழக்கச் செய்வதும் இந்த ராகு, கேதுக்கள் தான்.
 
அதிலும் பள்ளியிறுதி, கல்லூரி போன்ற வயதில் இருக்கும் இளம் பெண்களுக்கு சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த ராகு, கேதுக்களின் தசையோ, புக்தியோ அல்லது சுக்கிரன் மற்றும் ஆறு, எட்டாம் அதிபதிகளோடு சம்பந்தப்பட்ட நிழல் கிரகங்களின் தசா,புக்திகள் நடைபெறுமாயின் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
 
இதுபோன்ற அமைப்பில் சர்ப்பக் கிரகங்கள் ஒரு பெண்ணை பருவத்திற்கே உரிய வழிகளில் திசை திருப்புவார்கள். ஒரு ஆண் எப்படிப்பட்டவன் என்பதைப் புரிய வைப்பதும் இது போன்ற கால கட்டங்களில்தான். இதைப் போலவே ஆறு மற்றும் எட்டில் இருக்கும் ராகு, கேதுக்களின் தசை, புக்தி அல்லது அஷ்டமாதிபதியின் தொடர்பை பெற்ற ராகு, கேதுக்களின் தசை, புக்திகளில் கண்டிப்பாக ஒரு இளம்பெண் காதல் என்ற பெயரில் ஏமாறுவார்.
 
தனக்கு முற்றிலும் பொருத்தமில்லாத, தன்னை விட அனைத்து தகுதிகளிலும் குறைந்த, நேர்மாறான ஒருவரை ஒரு இளம் பெண் தேர்ந்தெடுத்து அவரிடம் தன் மனம், உடல் இரண்டையும் ஒப்படைப்பதும், அவருடன் ஓடிப் போய் வாழ்க்கையைத் தொலைப்பதும் பாபத்துவம் பெற்ற ராகு,கேதுக்களின் திருவிளையாடல்தான்.
 
நன்கு படித்த தகுதி வாய்ந்த ஒரு பெண், குறைந்த படிப்பு மட்டுமே படித்த ஒரு மெக்கானிக்கையோ, ஆட்டோ டிரைவரையோ அல்லது ஒன்றுமே செய்யாமல் ஊர் சுற்றித் திரிபவரையோ காதலிக்கிறாரா..? அந்த பெண்ணின் ஜாதகத்தை வாங்கிப் பாருங்கள். அதில் எட்டாமிடத்தின் சம்பந்தமோ அல்லது அஷ்டமாதிபதியின் சம்பந்தமோ பெற்ற ராகு,கேதுக்கள் இருப்பார்கள்.
 
ஏப்ரல் 22 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

One thought on “காதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…! C-053 – Kadhal Yennum Peyaril Karppizhakka Seiyum Raahu…

  1. நட்சத்திரத்தில் இருக்கும் ராகு, செயல்களை எவ்வாறு கணிப்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *