கோட்சார நிலையில் பாபக் கிரகமான சனி, ஒரு மனிதனின் ஜென்ம ராசிக்கு முன்னும் பின்னும் ஏழரைச் சனியாக அமர்ந்து பாதிப்பதைப் போல, மூன்று தொடர் இராசிகளைப் பாதிக்கும் திறன் ராகுவிற்கும் உண்டு.
சனி என்பது ராகுவைப் போலவே ஒரு இருள் கிரகம். ஆனால் பருப்பொருள் உடைய வாயுக் கிரகம். அதாவது சனி, திடப் பொருள்களான மண், பாறைகள் போன்றவைகளால் அமைந்த கிரகம் அல்ல. பஞ்ச பூதக் கிரகங்களில் அவர் முற்றிலும் வாயுவினால் மட்டுமேயான எடையற்ற கிரகம் ஆவார்.
சனியின் எடை நீரின் அடர்த்தியை விடக் குறைவு. சனியை நீங்கள் அதை விடப் பெரிய ஒரு கடலில் தள்ளுவீர்களேயானால் அது அந்தக் கடலில் மிதக்கும். சூரியனிடமிருந்து அவர் வெகு தூரத்தில் இருப்பதால் அவருக்கு கிடைக்கும் சூரிய ஒளியும் குறைவு, அதனால் அவரின் பிரதிபலிப்புத் திறனும் குறைவு எனும் நிலையில் அவர் இருள் கிரகம் ஆகிறார்.
ஒளியற்ற சனி கோட்சாரத்தில் தான் இருக்கும் இராசியையும், அதன் முன்பின் ராசியையும் ஏழரைச் சனியாகி பாதிப்பது போல, இருட்டுக் கோளான ராகுவும், ஜென்ம ராசி மற்றும் அதன் முன்பின் ராசிகளில் கோட்சார நிலையில் அமரும் போது ஒரு மனிதனுக்கு சாதகமற்ற பலன்களையே தருவார்.
ஆனால் ராகுவின் கடுமை ஏழரைச் சனியைப் போல் இல்லாமல் சற்றுக் குறைவாக இருக்கும். அதற்கு அவர் பருப்பொருள் அற்ற வெறும் நிழல் கிரகம் என்பதும் ஒரு காரணம்.
எதையுமே நேரிடையாகச் சொல்லாமல் மறைபொருளாகச் சொல்லும் நமது கிரந்தங்களில், 3,11 மிடங்களில் இருக்கும் ராகு, கேதுக்கள் நன்மையைச் செய்வார்கள் என்று ஞானிகள் சொல்வதன் உண்மையான சூட்சுமம் என்னவெனில், மேற்சொன்ன இடங்களில் ராகுவோ, கேதுவோ இருக்கும் நிலையில் இந்த பாவங்களின் நேரெதிர் பாவமான, லக்கினத்தின் அதிர்ஷ்ட வீடுகள் ஐந்து மற்றும் ஒன்பதில் இதன் மறுமுனைக் கிரகம் இருந்து நல்ல பலன்களை மற்றொரு முனையான 3,11 மிடங்களுக்கு தரும் என்பதுதான்.
அதாவது ஒரு ஜாதகத்தில் மூன்றாமிடத்தில் ராகு இருக்கும் நிலையில், லக்னத்தின் அதிர்ஷ்ட பாவமான ஒன்பதில் கேது அமர்ந்து, ராகுவின் மூலமாக நல்ல பலன்களை எடுத்துத் தரும். பதினொன்றில் ராகு இருக்கும் நிலையில், இன்னொரு அதிர்ஷ்ட ஸ்தானமான ஐந்தாமிடத்தில் கேது இருந்து அந்த பாவத்தின் நன்மைகளைச் செய்யும்.
இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கிறேன்...
எப்பொழுதுமே ராகுவிற்கு பலன் கூறும் போது, கேது இருக்கும் இடத்தின் தன்மை மற்றும் அதன் கோணத்திலும், கேதுவிற்கு பலன் சொல்லும் போது ராகு இருக்குமிடத்தின் தன்மை மற்றும் அதன் கோணத்திலும் பலன் சொன்னால் மிகச் சரியாக வரும்.
மற்ற ஏழு கிரகங்களும், தங்களது தசைகளில் அவை இருக்கும் நட்சத்திர நாதனின் அடிப்படையில் முதன்மைப் பலன்களைச் செய்யும் நிலையில் ராகு, கேதுக்கள் சார அடிப்படையில் முதன்மைப் பலன்களை செய்வது இல்லை. இது எனது நீண்டகால ஆய்வில் கிடைத்த தீர்க்கமான முடிவாகும். பல்வேறு ஜாதகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த உண்மை புரியும்.
ராகு, கேதுக்கள் முதலில்...
தன்னுடன் இணைந்த கிரகத்தின் பலனையும், அடுத்து தான் இருக்கும் வீட்டின் அதிபதியின் பலனையும், பின்னர் தன்னைப் பார்த்த கிரகம், அதன்பிறகு தான் அமர்ந்த சாரநாதனின் பலன் இறுதியாக தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரங்களின் தன்மை அல்லது தனது சாரத்தில் அமர்ந்த கிரகங்களின் தன்மைகளையே செய்கின்றன. இந்த வரிசைப்படியே அவைகளின் தசையில் பலன்கள் நடக்கும்.
மற்ற கிரகங்களின் இருப்பை நாம் எப்போதும் உணருகின்றோம். வானில் அவற்றை வெறுங்கண்ணால் பார்க்கவும் செய்கின்றோம். ஆனால் ராகு கேதுக்களை நாம் கிரகண காலங்களில் மட்டுமே பார்க்க முடியும்.
ஒரு வினோத விளைவாக, திருக்கணித பஞ்சாங்கம் சரியா? வாக்கியம் சரியா? என்ற விவாதத்தில் திருக்கணிதமே சரி என்பதை நிரூபித்ததும் இந்த ராகு, கேதுக்கள்தான்.
எவ்வாறெனில் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகங்கள் அமர்ந்திருக்கும் டிகிரி அளவில் வித்தியாசங்கள் உள்ளன. ராகு, கேதுக்களின் டிகிரி அளவுகளும் இந்த இரண்டு பஞ்சாங்கங்களிலும் வேறு வேறாக இருக்கும். ஆரம்ப காலத்தில் மனிதத் தவறால் திருத்தாமல் விடப்பட்ட கணிதப் பிழையால் வாக்கியப் பஞ்சாங்கத்தில் இந்த வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இந்த தவறுகளுக்கும் ஞானிகளுக்கும் சம்பந்தம் இல்லை. இது முழுக்க முழுக்க வாக்கியப் பஞ்சாங்கத்தை கணிப்பவர்களின் தவறு.
திருக்கணித, வாக்கிய, இரண்டின் கிரக நிலை டிகிரி அளவுகளில் எது சரி, எது தவறு என்பதை அறிய சாதாரண மனிதராகிய நாம் மகாவிஷ்ணுவைப் போல விஸ்வரூபம் எடுத்து வானத்துக்கு மேலே போய் நின்று அளவெடுத்துப் பார்த்துத்தான் கிரகங்களின் சரியான இருப்பிடத்தை உணர முடியும். இது சாத்தியமற்றது.
ஆனால் பூமியில் கிரக இருப்பு நிலைகளை நாம் உணர வைக்கும் ஒரே நிகழ்வு கிரகணம் மட்டும்தான். சூரிய, சந்திரர்களை மறைக்கும் ராகு, கேதுக்களின் இருப்பு சிறிது மாறினாலும் குறிப்பிட்ட நேரத்தில் கிரகணம் வராது என்பதே உண்மை.
வாக்கியப் பஞ்சாங்கம் தவறு என்பதால் வாக்கியப் பஞ்சாங்க கணக்கின்படி கிரகணம் வரவே வராது. தங்களது கணிப்பின்படி கிரகணம் தெரியாது என்பதால் கிரகண நேரத்தை மட்டும் திருக்கணித பஞ்சாங்கத்தில் இருந்து காப்பியடித்து வாக்கியங்கள் வெளியிடுகின்றன. உண்மையில் வாக்கியப் பஞ்சாங்கத்தில் உள்ள கிரகண நேரங்கள் திருக்கணிதப் படியானவை.
செவ்வாய், சனி ஆகிய இரு பாபக்கிரகங்களின் தொடர்பையோ, இணைவையோ, பார்வையையோ பெற்ற ராகு, கேதுக்கள் கடுமையான பலன்களைச் செய்வார்கள். ஆனால் இவ்விரு கிரகங்கள் நீசம் பெறும் நிலையில் மேஷ, கடகத்தில் அவர்களுடன் இணைந்திருக்கும் ராகு கெடுபலன்களைக் குறைத்துத்தான் செய்கிறார்.
மேலும் அஷ்டமாதிபத்தியம் பெற்ற பாபக்கிரகங்களின் இணைவைப் பெற்ற நிழல் கிரகங்கள் அல்லது எட்டாமிடத்தில் இருந்து பாபக்கிரகங்களின் இணைவைப் பெற்ற ராகு, கேதுக்கள் ஆகிய இரண்டு நிலையும் மிகக் கடுமையானவை.
இந்த அமைப்பில் இருக்கும் ராகு,கேது தசைகள் மிகவும் மோசமான பலன்களைத் தரும். இந்த நிலைகள் லக்கினத்திற்கு மட்டுமல்ல சந்திரனுக்கு எட்டு என்று இருந்தாலும் பொருந்தும் .
இன்னொரு சூட்சும நிலையாக ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி முற்றிலும் வலுவிழந்த அமைப்பில் இருந்து, ராகு, கேதுக்கள் லக்னாதிபதியோடு சம்பந்தப்படாமல் லக்னத்தில் இருக்கும் நிலையில், நிழல் கிரகங்களின் தசை நடைபெற்றால் ஜாதகரின் உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டையும் கெடுக்கும். இதுபோன்ற அமைப்பில் லக்ன நாயகன் பாபக்கிரகங்களோடு இணைந்து அவர்களது பிடியில் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும்.
லக்னத்தோடும், அஷ்டமாதிபதியோடும் ஒரே நேரத்தில் ராகு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகரை சுயமரணம் எனும் முடிவைத் தேட வைக்கிறார். இப்படி ஒருவர் தற்கொலை முடிவெடுக்கும் நிலையில் அஷ்டமாதிபதியை ராகு மிகவும் நெருங்கி முற்றிலும் பலவீனப்படுத்தி இருப்பார்.
மேற்கண்ட அமைப்பில் எட்டுக்குடையவன் பாபக்கிரகமாக இருந்தாலோ, இவர்களுடன் ஆறுக்குடையவரும் சம்பந்தப்பட்டிருந்தாலோ தற்கொலை என்பது கொடூரமான விபத்தாக மாறலாம்.
ஒரு பாவத்தில் ராகு, கேதுக்கள் எப்போது அமர்கின்றனவோ, அது முதல் அந்த பாவ ஆதிபத்தியம், மற்றும் பாவாதிபதியின் தன்மைகள், அதன் காரகத்துவங்களை ஆளுமை செய்கின்றன அல்லது கட்டுப்படுத்துகின்றன.
குறிப்பாக சில நிலைகளில் ராகு இருக்கும் பாவத்தின் அதிபதி தனது ஆதிபத்திய பலனையும், காரகத்துவங்களையும் தரும் வலிமையை இழந்து விடுகிறார். அதேநேரத்தில் அந்த வீட்டில் அமர்ந்த ராகு, தனது தசையில் அந்த பாவத்தின் ஆதிபத்தியப் பலனையும், அந்த வீட்டு அதிபதி கிரகத்தின் காரகத்துவப் பலனையும் செய்வார்.
மேலும் ராகு, கேதுக்கள் அமர்ந்த ராசிநாதனின் தசை ஜாதகருக்கு வாழ்நாளில் வர இயலாத நிலை இருந்தால், முழுக்க முழுக்க அந்த பாவத்தில் அமர்ந்த நிழல் கிரகங்கள்தான் அந்தப் பொறுப்பை எடுத்துச் செய்கின்றன.
அதேபோலத்தான் ராகுவுடன் இணைந்த கிரகத்தின் நிலையும்....! ராகுவுடன் இணைந்த கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்களையும், ராகுதான் தனது தசையில் எடுத்துச் செய்வார்.
இன்னொரு நிலையாக ராகு அமர்ந்த பாவாதிபதி தனது தசையில் பலன்களை மாற்றி மாறுபட்டதாகத் தருவார். அதாவது ஜோதிடரின் கணிப்பில் இந்த தசை நன்றாக இருக்காது எனும் நிலையில் அந்த தசை நற்பலன் தருவதும், நன்மைகள் செய்யும் என்ற கணிப்பில் கெடுதல்களைச் செய்து குழம்பச் செய்வதும் ராகு கேதுவின் வேலைதான்.
ஒரு கிரகத்தின் தசை எவ்வாறு பலன் தரும் என்று கணிக்கும் முன்பு அந்த கிரகத்தின் வீடுகளில் இராகு, கேதுக்கள் அமர்ந்து அந்த பாவம் கெட்டுப் போயிருக்கிறதா என்பதைக் கவனித்த பின்னரே பிறகு அந்த தசையைப் பற்றிய பலன்களைச் சொல்ல வேண்டும்.
உதாரணமாக மிதுன லக்னத்திற்கு செவ்வாய் தசை நன்மைகளை அளிக்காது. மிதுனத்திற்கு செவ்வாய் 6, 11 க்குடைய பாவி என்பதாலும், லக்னாதிபதி புதனுக்கு அவர் ஆகாதவர் என்பதாலும் தசையின் ஒரு பகுதியான மூன்றரை வருடங்கள் தன் ஆறாமிடத்துப் பலனை மிகக் கடுமையாகத் தந்து ஜாதகரை வாட்டி வதக்குவார்.
ஆனால் ஆறாமிடமான விருச்சிகத்தில் ராகுவும், சனியும் இணைவு பெற்றிருந்து, செவ்வாய் வேறு எங்கிருந்து தசை நடத்தினாலும் ஆறாமிட கொடிய பலன்கள் நடக்காது.
ஏனெனில், ஆறாமிட கெட்ட பலன்களை ராகு ஆளுமை செய்கிறார். மேலும் ஆறாமிடத்தில் இரண்டு பாபக்கிரகங்கள் இருந்து அந்த இடத்தைக் கெடுக்கிறார்கள். எனவே செவ்வாய் தசை நன்மை செய்யும்.
புரியவில்லையா? நிதானமாக ஒன்றுக்கு இரண்டு முறை படியுங்கள். புரியும்...!
அதேநேரத்தில் அடுத்து வரும் ராகுவின் தசையில் முழுமையான கெடுபலன்கள் நடக்கும். ஜாதகரை ராகுதசை பிளாட்பாரத்திற்கு கொண்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஏனென்றால், ராகு செவ்வாயின் வீட்டில் இருக்கிறார். விருச்சிகத்தில் அவர் உச்ச பலம் பெறுவார். ( பாபக்கிரகங்கள் நன்மை செய்ய வேண்டுமானால் ஸ்தான பலம் மற்றும் நேர்வலு அடையக் கூடாது. எனது “பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ப்படி சூட்சும வலுதான் பெற வேண்டும்.) அஷ்டமாதிபதி சனியின் இணைவு வேறு. அதாவது ஆறாமிட செவ்வாயின் பலனை ராகு முழுமையாகத் தன் தசையில் செய்வார்.
( ஏப்ரல் 15 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
ஐயா, உங்களது கட்டுரையில் குறித்தபடி ராகு கேதுக்கள் தங்களுடன் இணைந்த கிரகத்தின் காரகத்தை எடுத்து செய்யும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவன் நான். இருப்பினும், ஒரு ஜாதகத்தில் பாவத்தில் மாறும் கிரகங்கள் ராகுவுடனோ, கேதுவுடனோ சேர்கையிலும் இதே பலனைத்தான் தருமா?
உதரணமாக, DOB:05/05/1994 ; TIME: 3.45PM
இந்த ஜாதகத்திற்க்கு, கிட்டதட்ட 4 கிரகங்கள் பாவக மாற்றம் அடைந்துள்ளன. லக்கினாதிபதியே ராசியில் 8லும் பாவத்தில் 9லுமாக உள்ளார்.
ராசியில் சுக்கிரனுடன் மட்டும் சேர்ந்துள்ள கேது, பாவத்தில் உச்ச சூரியன், புதனுடன் சேர்ந்து உள்ளார். இந்த நிலையில் இவர் யாரைப்போல செயல்படுவார்.பாவத்தில் எற்படுவதை சேர்க்காயாக கருதலாமா?
பாவத்தை பற்றி தெளிவான நிலை பலருக்கும் (என்னையும் சேர்த்து) இல்லை. எனவே, ஐயா அவர்கள் பாவ சக்கரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி ஒரு கட்டுரை எழுத கேட்டுகொள்கிறேன்.
உன்மை ஐயா நான் தனுசு லக் 8ல் செவ் ராகு செவ் திசை அருமை ராகு நேர்மாறாபைலன் நடக்காது தங்கள் விளக்கத்தில் புரிகிறது இது தீரும் காலம் எப்போது ஐயா,
புரியும்படியாக விலக்கியதற்கு நன்றி…
பராசரா கூற்று படி ராகு ரிஷபத்தில் கேது விருச்சிகத்தில் உச்சம் . இது ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் இருக்கிறது ஏயெனில் ராகு போகக்காரன் ரிஷபம் உலக இன்பத்தை குறிக்கும் ராசி அங்கே ராகு உச்சம் என்பது சரிதானே . அதேபோல் விருச்சிகம் ஆன்மிக ராசி ங்கே கேது உச்சம் என்பது கோடா சரி தான் .
எனது தோழன் மிதுநா லக்கினம் ராகு 12ல் இப்பொது ராகு தசை , வெளி நாட்டிற்க்கு இருக்கிறான் … இன்பமாக எல்லா போகங்களை அனுபவிக்கிறான் ….
இந்த அருமையான கட்டுரைக்கு நன்றி …..