#adityaguruji #jodhidam
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய்க்கு சனி எதிர்த் தன்மையுடைய கிரகமாவார். அதே நேரத்தில் அவர் செவ்வாய்க்கு எதிரி அல்ல.
சனிக்கும், செவ்வாய்க்கும் உள்ள சில உறவு முரண்பாடுகளை ஏற்கனவே சில ஆய்வுக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளேன். அதிலும் சனி நீசம் பெறுவது செவ்வாயின் மேஷ வீட்டில் எனும் நிலையில், செவ்வாய் உச்சம் பெறுவது சனியின் மகரத்தில் என்பது ஒரு சுவையான முரண்பாடு.
சனி மேஷத்திலும், செவ்வாய் மகரத்திலும் இருக்கும்போது நீச, உச்ச பரிவர்த்தனை நிகழும் என்பதும் மற்ற கிரகங்களுக்கு இல்லாத, இந்த இரண்டு பாபக் கிரகங்களுக்கு மட்டுமேயான ஒரு தனித்துவமான அமைப்பு.
செவ்வாய் மட்டுமே இதுபோல நீச சந்திரனுடன், தானும் நீசமாகி பரிவர்த்தனை அடைவார். செவ்வாய்க்கு மட்டும் உள்ள இந்த அமைப்பில் மறைந்திருக்கும் சூட்சுமங்களை நேரம் கிடைக்கும்போது விளக்குகிறேன்.
பொதுவாக நமது கிரந்தங்களில் சனிக்கும், சூரிய-சந்திரர்களுக்கும் கடும் விரோதம் எனவும், தேவகுரு எனப்படும் குருவும், அசுரகுரு எனப்படும் சுக்கிரனும் ஜென்ம விரோதிகள் எனவும் வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளனர்.இதுபோன்ற கடுமையான “ஆகாத தன்மை” எதுவும் செவ்வாய்க்கும், சனிக்கும் கிடையாது என்றாலும், செவ்வாயின் மேஷ லக்னத்திற்கு சனி பாதகாதிபதி என்பதால் விருச்சிக லக்னத்திற்கு சனி நட்பும், எதிர்ப்பும் கலந்த சமத் தன்மை உடையவராகவே இருப்பார்.
விருச்சிகத்திற்கு மூன்று, நான்கு எனப்படும் தைரியம், புகழ், நற்பெயர், இசை ஈடுபாடு. இளைய சகோதரர்கள் போன்றவற்றைக் குறிக்கும் மூன்றாமிடத்தின் அதிபதியாகவும் வீடு, வாகனம், சுகம், ஒழுக்கம், கற்பு, தாயார், கல்வி போன்றவற்றைக் குறிக்கும் நான்காமிடத்தின் அதிபதியாகவும் சனி அமைவார்.
பொதுவாக ஒரு பாபக் கிரகம் உபசய ஸ்தானத்திற்கும், கேந்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாவது நன்மைகளைத் தரும் என்பதால் சனி விருச்சிக லக்னத்திற்கு யோகம் செய்யும் ஆதிபத்தியங்களைக் கொண்டிராத கிரகம் என்றாலும் சுபத்துவமும், சூட்சும வலுவும் பெற்றிருக்கும் நிலையில் மேலே சொன்ன மூன்று, நான்காமிடத்தின் நல்ல பலன்களைச் செய்வார்.
லக்னத்தில் அவர் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தராது என்றாலும் ஒன்பதாமிடத்தில் குரு உச்சம் பெற்று, வேறு எவருடனும் சேராமல் லக்னத்தில் அமர்ந்திருக்கும் சனியை பார்த்தாரேயானால் விருச்சிக லக்னக்காரர்களுக்கு குரு தசையும், சனி தசையும் நன்மைகளைச் செய்யும்.
மேற்கண்ட அமைப்பில் சனியும், குருவும் லக்னத்தோடு சம்பந்தப்படுவார்கள் என்பதால் இவர்கள் இருவரோடும் ஏதேனும் ஒருவகையில் கேதுவும் தொடர்பு கொண்டு, ராசி எனப்படும் சந்திரன் நிற்கும் வீட்டினைக் குருவோ, சனியோ பார்க்கும் நிலையில் ஜாதகர் ஆன்மிகத்தோடு சம்பந்தப்பட்டவராக இருப்பார்.
சில நிலைகளில் இதுபோன்ற அமைப்பில் ஆன்மிகத்தில் ஜாதகர் மிக உயர்ந்த நிலைக்கு செல்வார். ராகுதசையின் ஆரம்பத்தில் இருந்தே ஜாதகருக்கு ஆன்மிக ஈடுபாடு ஏற்பட்டு, அடுத்து வரும் குரு தசையிலும், சனி தசையிலும் அபாரமான ஆன்மிக ஆற்றல் ஏற்பட்டு ஜாதகர் கடவுளைப் பற்றி உணர்ந்தவராக இருப்பார்.
அதே நேரத்தில் சுபத்துவம் இல்லாமல் சனி மட்டும் லக்னத்தில் இருப்பது நன்மைகளைத் தராது. பாப வலுக் கொண்ட சனி லக்னத்தில் இருக்கும் நிலையில் ஏழாமிடத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பார் என்பதால் பாபத்துவம் பெற்ற சனியால் ஜாதகரின் மனைவி ஸ்தானம் எனப்படும் குடும்ப அமைப்பும், தொழில் ஸ்தானமும் கெடும்.
லக்ன சனியால் ஜாதகர் பிடிவாத குணம் கொண்டவராகவும், எல்லோருடனும் முரண்படுபவராகவும், ஊரோடு ஒத்துப் போகாதவராகவும், சூரியனின் வலுவைப் பொறுத்து நிலையற்ற தொழில், வேலை போன்ற அமைப்புகளை கொண்டவராகவும் இருப்பார்.
இரண்டாமிடமான குடும்பஸ்தானம் குருவின் வீடு என்பதால் இந்த இடத்தில் அமரும் சனி தனது கெடுபலன்களை குறைத்துக் கொள்வார். ஆயினும் எந்த ஒரு லக்னத்திற்கும் சனி இரண்டில் இருப்பது குடும்ப வாழ்க்கையை தாமதப் படுத்துவதோடு, தனம் எனப்படும் பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் இரண்டாமிடத்தில் இருக்கும் சனி நன்மைகளைச் செய்யமாட்டார்.ஆதிபத்திய விஷேசம் இல்லாத அவயோக கிரகம் மூன்று, ஆறு, பத்து, பதினொன்றாமிடங்களில் இருப்பது நன்மைகளைத் தரும் என்ற விதிப்படி விருச்சிக லக்னத்திற்கு சனி மூன்றாமிடமான மகரத்தில் ஆட்சி பெறுவது யோகத்தைத் தரும்.
இந்த அமைப்பில் குரு, சுக்கிரன், தனிப் புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோரின் தொடர்புகளைப் பெற்று சனி சுபத்துவம் அடைவாராயின் ஜாதகரை தனது 19 வருட தசை அமைப்பில் வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வார்.
ஏற்கனவே உபசய அமைப்பில் எந்த ஒரு லக்னத்திற்கும் மூன்று, பதினொன்றாம் இடங்களில் பாபக் கிரகங்கள் அமர்வது ஏன் நன்மைகளைச் செய்யும் என்ற நுணுக்கத்தை விளக்கியிருந்தேன்.
அதன்படி விருச்சிக லக்னத்திற்கு மூன்று, பதினொன்றாம் இடங்களில் சனி அமரும்போது, இந்த லக்னத்தின் தர்ம கர்மாதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நட்சத்திரங்களிலோ அல்லது லக்னாதிபதி செவ்வாயின் நட்சத்திரத்திலோ மட்டுமே அமர முடியும் என்பதால் யோக சாரத்தில் அமரும் சனி இந்த இடங்களில் நன்மைகளைச் செய்வார்.
மற்றொரு உபசய ஸ்தானமான ஆறாமிடத்தில் அமரும் சனி நீசமடைவது விருச்சிக லக்னத்திற்கு நன்மையைத்தான் தரும். ஆனால் அந்த இடத்தில் அவர் வக்ரமடைந்து உச்ச பலம் பெறக் கூடாது. மேலும் மறைமுகமான பரிவர்த்தனையோ, தனுசு, சிம்மத்தில் வலுவுடன் அமர்ந்த குருவின் பார்வையையோ பெற வேண்டும். குறைந்த பட்சம் குருவைத் தவிர மற்ற சுபர்களின் தொடர்பாவது அவருக்கு இருந்தால் நன்மைகள் நிச்சயம் உண்டு.
ராசியில் சனி நீசமடைந்து அம்சத்தில் உச்சம் பெறுவது நன்மைதான் என்றாலும் கூட நவாம்சத்தில் உச்சம் அடைய வேண்டும் என்றால் இந்த லக்னத்தின் விரையாதிபதி சுக்கிரனின் பரணி மூன்றாம் பாதத்தில்தான் இருக்க முடியும் என்பதால் அவர் அம்சத்தில் உச்சம் பெறுவது வெளிநாட்டு விஷயங்களை மட்டும் தரும்.
அதைவிட விருச்சிகத்தின் ஜீவனாதிபதியான சூரியனின் கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் அமர்ந்தால், அம்சத்தில் குருவின் வீட்டில் அமரும் நிலை பெற்று, நீசநிலை மாறி ஜாதகருக்கு நன்மைகளைத் தருவார். அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் அமர்வது வர்க்கோத்தம அமைப்பு என்பதால் இதுவும் நன்மையான நிலைதான். ஆனால் கேது நல்ல நிலைகளில் இருக்க வேண்டும்.
மற்றொரு உபசய ஸ்தானமான பத்தாமிடத்தில் சனி அமர்வது கண்டிப்பாக நல்ல அமைப்பு அல்ல. பொதுவாக சிம்மத்தில் சனி அமர்வது ஒருவரின் ஆளுமைப் பண்பையும், தலைமை தாங்கும் தகுதியையும் குறைக்கும்.
சிம்மத்தில் சனி அமர்ந்தால் ஒருவர் கண்டிப்பானவராக இருப்பது கடினம். மேலும் ஜீவன ஸ்தானத்தில் சனி அமர்வதும் நல்லநிலை அல்ல. இங்கே இருக்கும் சனியை வலுப் பெற்ற சுப கிரகங்கள் பார்த்தோ அல்லது வேறு வகைகளில் தொடர்பு கொண்டால் ஒழிய சனியால் தீமைகள் இருக்கும்.பத்தில் இருக்கும் சனியை இரண்டு, நான்கு, ஆறில் இருக்கும் குருதான் பார்க்க முடியும் என்பதாலும், எந்த ஒரு லக்னத்திற்கும் பத்தில் சனி இருப்பது ஒரு விஷேசமான அமைப்பாக சொல்ல மாட்டேன்.
சனி நன்மைகளைச் செய்ய வேண்டும் என்றால் வலுப் பெற்ற குரு அவரைப் பார்க்க வேண்டும் என்ற நிலையில், ஆறாமிடத்தில் மறையும் குருவின் பார்வைக்கு வலு குறைவாக இருக்கும் என்பதால் பத்தில் சனி இருப்பது நல்ல நிலை இல்லை. சனியைப் பார்க்கும் குரு நல்ல அமைப்பில் இருந்தால் மட்டுமே சனி சுபத்துவம் அடைவார்.
மேலும் ஒரு சுப கிரகம் கேந்திரத்தில் இருக்கக் கூடாது எனும் அடிப்படையில் நான்காமிடத்தில் குரு இருப்பதும் வலுவைத் தராது என்பதால் அவர் நான்கில் இருந்து சனியை பார்ப்பதும் சனிக்கு சுபத்துவம் அளிக்காது என்பதோடு நான்கில் குரு இருந்தால், சனி ஏழாம் பார்வையாக குருவைப் பார்த்து வலுவிழக்கச் செய்வார் என்பதால் விருச்சிக லக்னத்திற்கு பத்தில் சனி இருக்கும் போது குரு நான்கில் இருப்பதும் நல்ல அமைப்பு அல்ல.
எனவே மீதமுள்ள இரண்டாம் வீட்டில் குரு ஆட்சி நிலை பெற்று பத்தில் இருக்கும் சனியை பார்த்து ஜாதகருக்கு குரு, சனி தசைகள் வருமானால் ஜாதகர் யோகத்துடன் விளங்குவார்.
ஏற்கனவே பதினொன்றாம் வீட்டில் சனி இருந்தால் நன்மை என்று சொல்லி விட்டேன். விருச்சிகத்தின் பதினொன்றாம் வீடு சனிக்கு மிகவும் பிடித்த புதனின் கன்னி ராசி என்பதாலும் சனி இங்கே நட்பு நிலை பெறுவார் என்பதாலும் இந்த வீட்டில் அடங்கியுள்ள சூரிய, சந்திர, செவ்வாய் நட்சத்திரங்களில் எதில் இருந்தாலும் நன்மைதான் என்பதாலும், பதினொன்றாமிட சனி வேறு வகைகளில் பாபத்துவம் அடையாமல் இருந்தால் விருச்சிகத்திற்கு நன்மைகளைச் செய்வார்.
நான்காமிடமான கும்பத்தில் மூலத் திரிகோண பலம் பெறும் சனி, ஒரு பாபக் கிரகம் கேந்திரத்தில் இருப்பது நன்மை என்ற அடிப்படையில் சுப கிரக சம்பந்தமும், சூட்சும வலுவும் அடையும் பட்சத்தில் விருச்சிகத்திற்கு நன்மைகளைச் செய்வார்.
இங்கிருக்கும் சுபத்துவ சனியால் சனி தசையில் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற அமைப்புகளில் நன்மைகள் இருக்கும். அதேநேரத்தில் வெறும் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண நிலையை மட்டும் பெற்று சூட்சும வலுப் பெறாத சனி எனது “பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ப்படி நேர்வலு மட்டும் அடைந்திருந்தால் தனது தசையில் வீடு, வாகனம், தாயார் போன்றவற்றை இழக்க வைப்பார். இதில் தாயார் விரயம் என்பதற்கு சந்திர வலுவும் வீடு, வாகன இழப்பு என்பதற்கு சுக்கிரனின் வலுவும் கவனிக்கப்படவேண்டும்.
ஐந்தாமிடத்தில் சனி இருப்பது நல்ல நிலை அல்ல. இது குருவின் வீடாக இருந்தாலும் இங்கே சனி அமர்வது புத்திர தோஷத்தைக் கொடுக்கும். உச்சம் பெற்ற குருவின் பார்வை அல்லது விருச்சிகத்தில் இருக்கும் குருவின் பார்வை மட்டுமே இந்த இடத்தில் இருக்கும் சனியைக் கட்டுப்படுத்தி பலன்களை மாற்றித் தர வைக்கும் என்பதால் ஐந்தாமிடத்து சனியை கண்டிப்பாகக் குரு பார்க்க வேண்டும்.
ஏழாமிடமான ரிஷபம், சனிக்கு நட்பு வீடு என்பதாலும் இங்கே அவர் திக்பலம் அடைவார் என்பதாலும் விருச்சிகத்திற்கு இங்கே அவர் இருந்து தசை நடத்துவது நன்மைகளைத் தரும். ஆயினும் இங்கிருந்து அவர் லக்னத்தை பார்ப்பார் என்பதால் ஜாதகருக்கு நல்ல குணங்கள் அமைவதற்கு தடை இருக்கும். சுபத்துவ சனியானால் சனியின் லக்ன பார்வை ஜாதகருக்கு ஆன்மிக ஈடுபாட்டைக் கொடுக்கும்.
எட்டாமிடமான மிதுனம் சனிக்கு நட்பு வீடுதான் என்றாலும் சனி இங்கு அமர்வது ஜாதகருக்கு ஆயுள் நீட்டிப்பைத் தருமே தவிர, சனி தசை நடக்கும்போது ஜாதகரின் குடும்பத்தில் குழப்பம், பிரிவு, குடும்ப இழப்பு, பொருளாதாரச் சிக்கல், வம்பு, வழக்கு, அசிங்கம், விபத்து, வெளிநாட்டில் அலைச்சல் போன்ற பலன்களையே அனுபவிப்பார். எட்டாமிடத்து சனி சிறிதளவேனும் நன்மைகளை செய்ய வேண்டும் எனில் குரு, சுக்கிர தொடர்பால் சுபத்துவம் அடைந்திருப்பது நல்லது.
ஒன்பதாமிடமான கடகம் அவருக்கு பகை வீடு என்ற நிலையிலும் ஒரு பாபக் கிரகம் திரிகோணத்தில் அமரக் கூடாது எனும் அடிப்படையிலும் சனி இங்கே இருப்பது நன்மைகளை தராது. அதிலும் அஷ்டமாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் சனி அமர்ந்தால் தன் தசையில் ருத்திர தாண்டவமே ஆடுவார். இந்த இடத்தில் குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அமர்ந்து குருவின் பார்வை அல்லது தொடர்பு ஏற்படுமாயின் கடுமை சற்று குறையும்.
பனிரெண்டாமிடத்தில் உச்சம் பெறும் சனி தசையில் ஜாதகருக்கு வெளிநாடு, வெளிமாநிலம், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற இனங்களில் தொடர்புகள் ஏற்படும். ஒரு அவயோகக் கிரகம் மறைந்து வலுப் பெற்றால் நன்மை எனும் விதிப்படி சனி இங்கே ஜாதகருக்கு நன்மைகளை செய்வார்.
( ஜன 7 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
Excellent 👌