adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சுக்கிரனின் சூட்சுமங்கள் C-027 – Sukkiranin Sutchumangal
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 
 
கைப்பேசி எண் : 8681 99 8888
 
ஜோதிடத்தில் நவ கிரகங்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப் படுகின்றன. ஒன்று தேவகுரு எனப்படும் குருவின் தலைமையிலான சூரிய, சந்திர, செவ்வாய், கேது ஆகியவர்களை கொண்ட ஒரு அணி. மற்றொன்று அசுர குரு எனப்படும் சுக்கிரனைத் தலைவராகக் கொண்ட புதன், சனி, ராகு ஆகியவர்களைக் கொண்ட இன்னொரு அணி.
 
இவ்விரு பிரிவுகளையும் சுருக்கமாக அருள் அணி, மற்றும் பொருள் அணி என்றும் குறிப்பிடுவது உண்டு.
 
ஒருவரின் ஜாதகத்தில் குரு யோகராகி வலுப் பெற்றிருந்தால், அவர் இப்படித்தான் வாழ்வது என, ஒரு கோடு போட்டுக் கொண்டு, வரையறைக்குட்பட்ட வாழ்க்கையை வகுத்து அதன்படி நடப்பவராகவும் இருப்பார்.
 
சுக்கிரனை யோகராகக் கொண்டு, சுக்கிரன் வலுப் பெற்ற ஜாதகர் எப்படியாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற கருத்துடன் தன் வெற்றியை அடைய எவ்வித வழிமுறையையும் கடைப்பிடிக்கும் நபராக இருப்பார். வெற்றி ஒன்றே இவரது குறிக்கோளாக இருக்கும். அதை அடைய உபயோகப்படுத்தும் வழிகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்.
 
தெளிவாகச் சொல்லப் போனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைக்க வைப்பவர் குரு. எப்படியும் வாழலாம் என்று உற்சாகப் படுத்துபவர் சுக்கிரன். இதுவே தேவ குருவுக்கும், அசுர குருவிற்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசம்.
 
ஒன்பது கிரகங்களிலும் மிக மிகத் தனித்தன்மை வாய்ந்தவர் சுக்கிரன். மற்றவர்களுக்கு இல்லாத தனிச் சிறப்பான ஒரு பெருமையும் அவருக்கு வேத ஜோதிடத்தில் இருக்கிறது.
 
ஒருவரை அரசனுக்கு நிகராக அதிகாரம் செய்பவராகவோ அல்லது அரசனாகவோ உருவாக்கும் ராஜ யோகங்களைத் தருபவை ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் மட்டும்தான். இவர்கள் தரும் ராஜயோகத்திற்குத் துணை நிற்கும் இணை யோகங்களைத் தருபவை பஞ்சபூதக் கிரகங்கள் எனப்படும் குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய ஐந்து கிரகங்களும் என்பதை கடந்த அத்தியாயங்களில் விளக்கியிருந்தேன்.
 
சூரிய, சந்திரர்களைத் தவிர்த்து குஜாதி ஐவர்கள் என்று குறிப்பிடப்படும் இந்த ஐந்து கிரகங்களும் ஒருவருக்கு கேந்திரங்களில் ஆட்சியோ, உச்சமோ அடைந்தால் அது பஞ்ச மகா புருஷ யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் உள்ளவர், தான் இருக்கும் துறையில் தனித்துத் தெரியும் மகாமனிதராக இருப்பார்.
 
இத்தகைய பெருமை வாய்ந்த பஞ்சமகா புருஷ யோகங்களில் சுக்கிரன் தரும் யோகத்திற்கு மாளவ்ய யோகம் என்று பெயர். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு கேந்திரங்களில் சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ பெறும் நிலையில் இந்த யோகம் அமையும்.
 
ஒரு சிலர் லக்னம் மற்றும் சந்திரனுக்கு கேந்திரங்களில் மேற்கண்ட ஐந்து கிரகங்களும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் யோகம்தான் என்று விளக்கம் தருகிறார்கள். அது தவறு. இந்த யோகங்கள் லக்னத்திற்கு மட்டுமேயென அமைந்த தனித்தன்மை உள்ள அமைப்புக்கள். அதேநேரத்தில் லக்னம் வலுவிழந்து, ராசியே லக்ன பலனை எடுத்துச் செய்யும் ஜாதகங்களில் மட்டும் இவை சந்திர கேந்திரங்களில் பலன் தரும்.
 
நமது மூல நூல்கள் சிறப்பாகக் குறிப்பிடும் பஞ்சமகா புருஷ யோகங்களில் சுக்கிரன் தரும் யோகமான மாளவ்ய யோகம் மட்டுமே பூமியில் பிறந்த அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கும். சுக்கிரனைத் தவிர்த்து வேறு எந்தக் கிரகத்திற்கும் இந்த அமைப்பு இல்லை.
 
இதையே சற்று வேறுவிதமாகச் சொல்லப் போவோமேயானால் சுக்கிரன் ஒருவர் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். மற்ற கிரகங்களுக்கு இந்தச் சிறப்பு அமையவில்லை.
 
இயற்கைச் சுப கிரகங்களில் முதலிடம் வகிக்கும் குருவுக்கு கூட இல்லாமல் சுக்கிரனுக்கு மட்டும் இந்த அமைப்பு உள்ளது ஏன்? ஒன்பது கிரகங்களிலும் அவர் மட்டும் தனியாக முக்கியத்துவம் பெறுவதன் காரணம் என்ன?
 
(சுப கிரகங்களில் முதன்மையானவர் குருவா, சுக்கிரனா என்பதிலும் மூல நூல்களில் இருவிதக் கருத்து உள்ளது. மகாபுருஷர் காளிதாசர் சுப கிரகங்களை வரிசைப்படுத்தும் போது சுக்கிரன், குரு, புதன், வளர்பிறைச் சந்திரன் என்றே வரிசைப் படுத்துகிறார். இதுபற்றிய சூட்சும விளக்கங்களை நேரம் கிடைக்கும்போது பின்னர் விளக்குகிறேன். இப்போது கிரக சூட்சுமங்களை மட்டும் பார்க்கலாம்.)
 
உதாரணமாக செவ்வாய், சனி ஆகிய இருவரும் ஒரு சர ராசி, இன்னொரு ஸ்திர ராசி ஆகியவைகளுக்கு அதிபதி என இரு ஆதிபத்தியங்களுக்கு உரியவர்களாகி சர, ஸ்திர எனப்படும் எட்டு லக்னங்களுக்கு கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவார்கள்.
 
ஒரு வீட்டை மட்டுமே சொந்தமாகக் கொண்ட ஒரு ஆதிபத்திய ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் சர, ஸ்திர லக்னங்கள் எனப்படும் எட்டு லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சியோ, உச்சமோ அடைவார்கள்.
 
உபய ராசிகள் இரண்டைச் சொந்த வீடாகக் கொண்ட குரு, சர மற்றும் உபயம் எனப்படும் எட்டு லக்னங்களுக்கு கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவார். இரு ஆதிபத்திய கிரகமாக இருந்தாலும் ஒரே வீட்டில் ஆட்சி, உச்சம் எனும் நிலையைக் கொண்டதால் புதன் மட்டும் நான்கே நான்கு லக்னங்களுக்கு மட்டும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சமடைவார்.
 
சுருக்கமாகச் சொல்லப்போனால் சூரிய, சந்திர, செவ்வாய், சனி, குரு ஆகிய ஐந்து கிரகங்களும் எட்டு லக்னக்காரர்களுக்கு மட்டும் யோகம் தரும் அமைப்பிலும், அறிவுக்கு காரகனான புதன் நான்கு லக்னங்களுக்கு மட்டும் யோகம் தரும் அமைப்பிலும், இருக்கும் நிலையில் சுக்கிரன் மட்டுமே பனிரெண்டு லக்னங்களில் பிறக்கும் அனைவருக்கும் யோகம் தரும் அமைப்பில், எல்லா லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சியோ உச்சமோ பெறுவார்.
 
நான்கு லக்னங்களுக்கு மட்டும் புதனுக்கு கேந்திரங்களில் பலம் என்ற நிலை ஏன் என்பதை புதனைப் பற்றிய சூட்சுமங்களில் விளக்கியிருந்தேன். அதைப்போலவே சுக்கிரனைப் பற்றிய இந்த சூட்சுமத்தை ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் சொல்லியிருக்கிறேன். ஆயினும் சுக்கிரனைப் பற்றிய தனித்த கட்டுரையில் இதைச் சொல்வது அவசியம் என்பதால் மீண்டும் சுருக்கமாக விளக்குகிறேன்.
 
பரம்பொருளினால் படைக்கப்பட்ட இந்த எல்லையற்ற, முடிவற்ற, இன்று வரையிலும் வினாடிக்கு ஐந்து லட்சம் கிலோ மீட்டர்கள் வேகத்தில் விரிவடைந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பிரபஞ்சத்தில் நம் பூமி ஒரு அணுவை விடச் சிறியது.
 
இந்த அணுவிலும் சிறிய பூமியில் அதனினும் சிறிய மனிதர்களாகிய நாம் என்ன காரணத்திற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்?.
 
இதுபற்றி நமது மேலான இந்து மதம் என்ன சொல்கிறது?
 
மனித குலம் ஏதோ ஒரு உண்மையைக் கண்டு பிடிப்பதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறது. அந்த உண்மையை நோக்கிப் போய்க் கொண்டும் இருக்கிறது. இதுவே நம்முடைய மேலான இந்து மதம் உலகிற்கு சொல்லும் நீதி.
 
இந்த உண்மைக்கான தேடலில் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் போய்க் கொண்டிருக்கும் போது, பரம்பொருள் தனிமனிதனுக்குக் கொடுத்த ஆயுள் போதாது. எனவே ஒரு மனிதன் தனக்குப் பதிலாக தன்னுடைய நகலை பிரதிநிதியாக மகன், மகள் என்ற பெயரில் இங்கே விட்டுச் செல்கிறான்.
 
அந்த மகனோ, மகளோ அவர்களின் சந்ததியை இங்கே விட்டுச் செல்வார்கள். இவ்வாறாக ஒரு தனிமனிதன், ஒரு மாபெரும் சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியாக இணைந்து, உண்மைக்கான தேடலில் தொடர்ந்து முன்னேறிச் செல்வான்.
 
ஆகவே மனிதன் பிறந்ததன் அடிப்படையான நோக்கம் என்ன?
 
இனவிருத்தி...!
 
ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து, தங்களுக்குப் பதிலாக ஒரு ஜீவனை உருவாக்கி, அதை நல்வழியில் வளர்த்து இப்பூமியில் விட்டு விட்டு மறைந்து போவதுதானே வாழ்க்கையின் தாத்பர்யம்? அதுதானே உண்மை?
 
அந்த இனவிருத்திக்கு அடிப்படை காமம். அது இல்லையேல், இதை எழுதிய நானும் இல்லை... படித்துக் கொண்டிருக்கும் நீங்களும் இல்லை.
 
எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதாவது பணம், பொருள், பதவி, உணவு, உறைவிடம் உள்ளிட்ட எவை இருந்தாலும் இல்லாவிட்டாலும், படைப்புக் கடமைக்காக ஒரு மனிதனுக்கு காமம் கண்டிப்பாக தேவைப்படுவதால்தான் அந்தக் காமத்திற்குக் காரகனான சுக்கிரன் மட்டும் அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் பலம் பெறுகிறார்.
 
அதனால்தான் காமத்தை ஒரு ஒழுங்குக்குள் வைத்து அதை ஒரு மனிதன் தன் மனைவி என்ற துணையின் மூலமாக மட்டுமே அடைய வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் சுக்கிரனை களத்திர காரகன் என அழைக்கிறது. கால புருஷனின் களத்திர ஸ்தானமான துலாம் ராசிக்கு சுக்கிரன் அதிபதியாவதன் தத்துவமும் இதுதான்.
 
அதேநேரத்தில் குழந்தையைக் கொடுப்பவர் குருதானே? அவர்தானே புத்திர காரகன்? நியாயமாக அவருக்குத்தானே தனிச் சிறப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி எழுமானால் குழந்தையைத் தருவது குரு என்றாலும் அது சுக்கிரனின் காமத்தின் மூலமாகத்தான் தரப்படுகிறது.
 
காமம் எனும் காரணி இருந்தால்தான், அதன்மூலம் சந்ததிக்கான முயற்சிகள் செய்யப்படும். முயற்சிப்பது மட்டுமே உன் வேலை. பலன் என்பது அதாவது புத்திர பாக்கியம் என்பது உன் பூர்வஜென்ம கர்மாவின்படி பரம்பொருள் அருள்வது என்பதும் இங்கே அறிவுறுத்தப்படுகிறது.
 
குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும். ஏன்?
 
மேலே உள்ள இந்தப் பழமொழி ஜோதிடம் அறிந்தவர்களிடையே மிகவும் பிரபலமானது. இது சிறுவயதில் வரும் சுக்கிரதசை நன்மைகளைச் செய்யாது என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது. ஒருசிலர் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறக்கும் ஒருவர் சுக்கிரனின் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தால் அது அந்தக் குடும்பத்திற்கு ஆகாது என்று பொருள் கொள்கின்றனர். இது தவறு. மாபெரும் வானியல் விஞ்ஞானமான இந்த வேதஜோதிடத்தில் நமது ஞானிகள் ஒருவரின் பிறப்பினால் அவரது குடும்பத்திற்கு ஆகாது, பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஆகாது என்பது போன்ற மூட நம்பிக்கைகளை ஒருபோதும் சொல்லவில்லை; இது போன்ற அபத்தக் கருத்துக்கள் ஜோதிடரின் தவறேயன்றி ஜோதிடத்தின் தவறல்ல. சுக்கிரன் வலுப் பெற்று மாளவ்ய யோகம் தரும் நிலையில் இருந்தாலும் கூட சுக்கிர தசை இளம் வயதில் வரக் கூடாது. வந்தால் பலன் இருக்காது. ஏனெனில் பெண்கள், காமம், உல்லாசம், ஆடம்பரம் ஆகியவற்றிற்கு சுக்கிரன் முக்கிய காரகன் ஆவதால், அதற்கு உடலும், மனமும் தயாராகாத நிலையில் வரும் சுக்கிர தசை விழலுக்கு இறைத்த நீராகும். புரியாத பருவத்தில் சுக்கிர தசை வருமானால், அந்த வயதில் வரும் அலைக்கழிப்பான பாலியல் பற்றிய எண்ணங்கள் ஜாதகரை இயல்புக்கு ஒத்து வராத வேறுமாதிரியான, முதிர்ச்சியற்ற நிலைக்கு கொண்டு செல்லும். சிலநிலைகளில் ஜாதகர் இளம் வயதிலேயே பாலியல் சம்பந்தப்பட்ட தவறுகளைச் செய்து அவரது குடும்பத்திற்கு அவமானங்களைத் தேடித் தரக் கூடும். ஆகவேதான் “குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்” என்பது போன்ற பழமொழிகள் ஏற்பட்டன. எனவே மனமும் உடலும் பக்குவமடைந்த முப்பது வயதுகளில் சுக்கிர தசை ஆரம்பித்தால் மிகவும் நல்ல பலன்களைத் தரும்.
 
( ஜூலை 23 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

One thought on “சுக்கிரனின் சூட்சுமங்கள் C-027 – Sukkiranin Sutchumangal

  1. ஐயா நான் தங்களின் தீவிர ரசிகன். .ஜோதிடம் என்பது அதிசயம் ஆனால் உண்மை!.என்ன ஆச்சரியம்!.12 கட்டம் 1 கையில் பிடித்துக்கொண்டு ஒருவரின் நடந்தது நடப்பது நடக்கப்போகிறது அனைத்தும் அப்பப்பா சான்சே இல்லை. ஐயா எனது மகன் பிறந்த தேதி 9.2.1995 8.59 pm புதுக்கோட்டை .வரும் ஜூலையில் படிப்பு முடிகிறது அரசு வேலை கிடைக்குமா தனியார் வேலைகிடைக்குமா.திருமணம் எப்போது .காதல்திருமணமா. சற்று விலக்குங்கள் ஐயா(மகனின் படிப்பு BReck maraine engineering)

Leave a Reply to ARIVAZHAGAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *