ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8286 99 8888
பாப கிரகங்களான சனி, செவ்வாய் பற்றிச் சொல்லும் பொழுது என்னால் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தை “சூட்சும வலு”. இது இப்போது ஜோதிடம் அறிந்தவர்கள் அல்லது ஜோதிட ஆர்வலர்களிடையே அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது என்பதை நான் அறிவேன்.
செயற்கையாக திணிக்கப்படும் எந்த ஒரு விஷயமும் நிலைத்து நிற்காது. அதுவே இயற்கையாகத் தோன்றுமாயின் நிரந்தரமாக இருக்கும் என்பது ஒரு பிரபஞ்ச விதி. அதன்படி என்னால் சொல்லப்படும் இந்த சூட்சும வலு எனும் வார்த்தை இயற்கையாக உருவானது. உருவாக்கப்பட்டதல்ல.
சொல்லப் போனால் நான் ஒரு மொழி அறிஞன் அல்ல. சில உண்மைகளைச் சொல்ல அனைவரும் உபயோகப்படுத்தும் பாமரத்தனமான ஒரு வார்த்தையாகத்தான் இந்த சூட்சுமவலு என்பதை உபயோகப் படுத்துகிறேனே தவிர, இந்தக் கிரக நிலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொண்டு நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை.
எனக்குத் தெரிய வந்த ஒரு மறைமுகமான உண்மையை மற்றவர்களுக்கு விளக்க, போகிற போக்கில் எல்லோரையும் போல நான் தேர்ந்தெடுத்த ஒரு வார்த்தைதான் இந்த சூட்சும வலு.
சூட்சுமம் என்ற வார்த்தைக்கு மறைந்திருக்கும் உண்மை அல்லது உண்மையான உண்மை என்பதாக அர்த்தம் என்று நினைக்கிறேன். இது சரியா அல்லது தவறா என்பதை மொழி அறிஞர்கள்தான் விளக்க வேண்டும். ஆனால் மறைந்திருக்கும் உண்மையான உண்மை என்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தையை நான் உபயோகப்படுத்துகிறேன்.
ஜோதிடம் என்பது ஒரு புரியாத புதிர்தான். புரிகின்ற வரைக்கும் நமக்கு அது புதிராக இருப்பது போலத் தோன்றினாலும், எல்லாம் எனக்கு புரிந்து விட்டது என்று பிறகு நம்ப வைத்து, அதன் பிறகு அதுவும் புதிய புதிராகி தலைசுற்ற வைக்கும் மாபெரும் சாஸ்திரம் இந்த ஜோதிடக்கலை.
பாப கிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய சனி, செவ்வாயின் செயல்களும் இப்படிப்பட்டதுதான். பூமியில் வாழும் மனித உயிர்களுக்கு தேவையற்ற நீலநிற ஒளிக்கதிர்களை பிரதிபலிக்கக்கூடிய, சூரியனின் கதிர்கள் ஓரளவிற்கு மட்டுமே எட்டக்கூடிய அதிக தூரத்தில் இருக்கும் சனி நமக்கு பாப கிரகமானதைப் போல மனிதனுக்கு தேவையற்ற கோபத்தை கொடுக்கக்கூடிய சிகப்பு நிற கதிர்களைப் பிரதிபலிக்கும் செவ்வாயும் பாபராகியது.
இந்த இடத்தில் ஒன்றை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். உலகின் பல நாடுகளில் ஜோதிடக்கலை இருந்தாலும் இந்திய வேத ஜோதிடம் ஓரளவிற்கு முழுமையான கலையாக உலகின் பிற பகுதிகளில் இருப்பவர்களால் நம்பப்படுகிறது.
ஜோதிடம் இந்தியாவில் தோன்றியதா அல்லது கிரேக்கம், மேற்கு ஆசியா போன்ற இடங்களில் முதலில் தோன்றியதா என்பதை பற்றிய வாதப்பிரதிவாதங்கள் இன்றும் தொடர்கின்றன. எங்கே தோன்றியிருந்தாலும் இக்கலையை ஓரளவிற்கு நிலைப்படுத்தியது இந்தியாதான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.
ஏனெனில் மற்ற ஜோதிட முறைகளில் இல்லாத மனித வாழ்வின் சம்பவங்களை அடுத்தடுத்து பிரித்துச் சொல்ல உதவும் தசா புக்தி அமைப்புகள் இந்திய ஜோதிடத்தில் மட்டுமே இருக்கின்றன. அதைப் போலவே இந்திய ஜோதிடம் பாப கிரகமான சனியுடன் நின்று விடுகிறது. ஆனால் மேற்கத்திய ஜோதிடம் அதனையடுத்தும் நெப்டியூன், யுரேனஸ், புளூட்டோ என ஏனைய கிரகங்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது.
சனிக்கு அப்பால் இருக்கின்ற மேற்கண்ட மூன்று கிரகங்களுக்கும் இந்திய ஜோதிடத்தில் இடமில்லை. ஆனால் மேற்கத்திய ஜோதிடம் மேற்கண்ட கிரக நிலைகளையும் உள்ளடக்கியது. மேற்கு ஜோதிடத்தை நான் முழுமையாக அறிந்தவன் இல்லை. குறிப்பாக எனக்கு ஆங்கிலமும் தெரியாது.
என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் தங்களின் மெய் ஞான அறிவு மூலமாக மாபெரும் ஜோதிட ரகசியங்களை அறிந்து, நமக்கும் அதைச் சொன்ன நம்முடைய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் நிச்சயமாக சனிக்கு அப்பாலும் சில கிரகங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்திராமல் இருந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் குறைந்த அளவே ஒளி பிரதிபலிப்பு திறனைக் கொண்ட சனிக்கும் அப்பால் இருக்கின்ற காரணத்தாலும், சூரியனின் கதிர்களை உயிர்களுக்கு தேவையான அளவிற்கு பிரதிபலிக்கும் திறன் இல்லாத காரணத்தினாலும்தான், நிச்சயமாக இவற்றின் தாக்கம் மனிதனுக்கு இருக்காது என்பதால் இந்திய ஜோதிடத்தில் மேற்கண்ட மூன்று கிரகங்களையும் கொண்டு வரவில்லை.
தனது வாழ்நாளில் உணரவோ, பார்க்கவோ இயலாத ஒரு கிரகத்தின் தாக்கம் மனிதனுக்கு இருக்க முடியாது என்பதே உண்மை.
இந்திய ஜோதிடத்தில் பராசர மகரிஷியால் மனிதனின் முழு ஆயுள் என்பது 120 ஆக வரையறுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் இதுவரை 120 வயது தாண்டி வாழ்ந்த ஒரு மனித உயிர் நிரூபிக்கப்படவில்லை. அனைவரும் பெரும்பாலும் 120 வயதுக்குள் ஆயுளை முடித்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.
இத்தகைய நீண்ட ஆயுளை கொண்ட ஒரு மனிதனின் காலத்தில், அவன் வாழும் பூமிக்கு அருகில் ஏறத்தாழ நான்கு முறை சனி கிரகம் வந்து செல்லும். அதாவது சனி சூரியனைச் சுற்றும் பாதையின் அளவு 30 ஆண்டுகள் கொண்டது.
12 ராசிகள் கொண்ட நம்முடைய ஜோதிட அமைப்பில் இவை அனைத்தையும் முழுமையாகச் சுற்றிவர சனிக்கு 30 ஆண்டுகள் மட்டுமே ஆகும். ஆனால் சனிக்கு அப்பால் உள்ள நெப்டியூன், யுரேனஸ், புளூட்டோ போன்ற கிரகங்கள் மனிதனின் ஆயுளை விட இரண்டு மடங்கான 250க்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கொண்ட சுற்றுப்பாதையை கொண்டவை. எனவே இவை மனிதனின் மேல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்து இந்திய ஜோதிடத்தில் சேர்க்கப்படவில்லை.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் பார்க்கவோ, உணரவோ முடியாத இந்த கிரகங்கள் தனிமனிதனை பாதிக்க இயலாவிட்டாலும், ஒட்டுமொத்த மனித சமூகத்தை பாதிக்கக் கூடியவைதான். அதனால்தான் உலகியல் ஜோதிட விதிகளைக் கணிக்க இவை உதவுகின்றன.
சுனாமி, பூகம்பம், போர் போன்ற மனித குலத்தை அழிக்க கூடிய ஒட்டுமொத்த பேரழிவுகளின் மீது மட்டுமே இந்த கிரகங்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தனிமனிதனின் பேரில் அல்ல. அதைப்போலவே மேற்கண்ட மூன்று கிரகங்களும் முழுமையான பாப கிரகங்கள்தான். எந்த ஒரு நிலையிலும் இவைகளுக்கு சுபத்தன்மை கிடையாது.
நீலம் மற்றும் சிகப்பு நிறமான சனி, செவ்வாய் இரண்டு கிரகங்களும் தனிமனிதனின் குணங்களை மற்றும் வாழ்க்கைத் தன்மையை பாதிக்கக் கூடிய சில விஷயங்களை தரக் கூடியவை. அதனால்தான் இவை நம்முடைய ஞானிகளால் பாப கிரகங்கள் என்று சொல்லப்பட்டன.
சுப கிரகங்கள் மனிதனுக்கு தேவையான நன்மைகளை மட்டுமே தருபவை. பாபர்கள் மனிதனுக்கு தேவையற்ற விஷயங்களை தருவதற்காக உள்ளவை. சுபத்தன்மையும், பாபத்தன்மையும் கலக்கும்போது மனிதனுக்கு நல்லதும் கெட்டதும் கலந்து சம்பவங்கள் நடக்கின்றன.
ஜோதிட சாஸ்திரம் என்பது பல்வேறு விதிகளை சரியான இடங்களில் ஒருங்கிணைத்து உண்மையான பலனை அறிவது.
நம்முடைய மூல நூல்களில் கிரகங்கள் வலுப்பெற்றால் அதனுடைய “தன்மை” யை மனிதனுக்கு முழுமையாகத் தரும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, எந்த ஒரு கிரகமும் ஆட்சி, உச்சத்தை அடைந்தால் “நன்மை” களைத் தரும் என்று சொல்லப்படவில்லை.
உண்மையில் ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டது. இதைத்தான் நாம் கிரகங்களின் காரகத்துவங்கள் என்று சொல்கிறோம். ஒரு கிரகம் வலுப் பெற்றால் அது, அதனுடைய காரகத்துவத்தை வலிமையாக அந்த மனிதனுக்குத் தரும் தகுதியைப் பெற்றுள்ளது என்றுதான் அர்த்தமே தவிர, அந்த மனிதனுக்கு நன்மைகளைத் தரும் என்று பொருள் அல்ல.
ஷட்பலம் என்று சொல்லக்கூடிய ஒரு கிரகத்தின் வலிமையை அளவிடக்கூடிய நிலைகூட இங்கே ஆறு விதமாக சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அதற்கு மேலும் கிரக வலுவை அறிய ஏகப்பட்ட வழிமுறைகள் இந்திய ஜோதிடத்தில் உள்ளன. இவை அனைத்தும் ஒரு கிரகத்தின் உள்ளார்ந்த வலுவைச் சொல்லக் கூடியவைதானே தவிர, ஒரு கிரகம் அந்த மனிதனுக்கு எதைச் செய்யும் என்று சொல்லக் கூடியவை அல்ல.
ஷட் பலத்தில் முதன்மையாக செயல்படக்கூடிய ஸ்தான பலம் எனப்படும் ஒரு கிரகத்தின் ஆட்சி, உச்சம் என்பது இங்கு சுபர்களான குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதனுக்கு முதன்மையாகவும், அதனை அடுத்து அதற்கு இணையாக திக்பலம் என்று சொல்லப்படக்கூடிய ஒரு கிரகம் நிற்கின்ற திசையின் அடிப்படையில் சொல்லப்படக்கூடிய இரண்டாம் வலு பாப கிரகங்களுக்கு முதன்மையாக, மனிதனுக்கு நன்மைகளை செய்ய உதவுவதை நான் அனேக ஜாதகங்களில் உணர்ந்திருக்கிறேன்.
ஆகவேதான் பாபிகளான சனி, செவ்வாய் இருவரும் அவர்களுக்கு திக்பலம் எனப்படும் ஏழு, பத்தாம் இடங்களில் அமர்ந்திருப்பதை நான் சூட்சுமவலு என்று சொல்கிறேன்.
எந்த ஒரு நிலையிலும் சனி, செவ்வாய் இருவரும் நேரிடையாக தனித்து ஆட்சி, உச்சத்தை அடைந்திருப்பது மனிதனுக்கு நன்மைகளைச் செய்வதில்லை. மாறாக அந்தக் கிரகங்களின் இயல்பான குணங்களான மந்தம், கோபம் போன்றவைகளையே தரும்.
அதேபோல ஸ்தான பலம் மற்றும் திக்பலம் ஆகிய இரண்டு நிலைகளையும் பாபர்கள் ஒருசேர அடைந்திருக்கவும் கூடாது. அப்படி அடைந்திருக்குமாயின் சுபத்துவம் ஒன்றே அதற்கு மாற்றாக இருக்க முடியும்.
அதாவது சனியும், செவ்வாயும் ஆட்சியோ, உச்சமோ அடைந்திருக்கும் நிலையில் திக்பலம் எனப்படும் இரண்டாவது நிலையிலும் இருக்கக்கூடாது. அப்படி அவர்கள் அடைந்திருப்பார்களேயானால் தங்களது பாபத்தன்மையை ஒரு மனிதனுக்கு அப்படியே பிரதிபலிப்பார்கள்.
எனவே எந்த ஒரு நிலையிலும் ஒரு ஜாதகத்தில் பாபிகளான சனியும், செவ்வாயும் ஸ்தான பலத்தில் முதன்மை வலுவான ஆட்சி, உச்சத்தை அடையாமல் இரண்டாவது நிலையான திக்பலம் பெறுவது ஒருவரை மிகுந்த அதிர்ஷ்டசாலியாக்கும் என்பதே பாப கிரகங்களின் முதன்மை சூட்சும வலுவாக இருக்கும்.
அடுத்த வெள்ளி பார்ப்போம்.
மாலைமலரில் 06.11.2020 இன்று வெளிவந்தது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.