adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மேஷம்: 2023 புத்தாண்டு பலன்கள்

#astrologeradityagurujinewyearpalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு 2023ம் ஆண்டு நல்லவிதமான திருப்பு முனைகளை கொடுக்கக் கூடிய யோக ஆண்டாக இருக்கும். வருட ஆரம்பத்தில் முதல் நான்கு மாதங்கள் உங்களின் பாக்கியதிபதி குரு, செலவுகளை கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தாலும், அவை வளர்ச்சிக்கான செலவுகளாக, முதலீட்டுக்கான செலவுகளாகவே அமையும். ஏப்ரல் மாதத்தில் குரு, உங்களின் ராசிக்கே மாறி ஏற்கனவே ராசியில் அமர்ந்து உங்களுக்கு இப்போது சாதகமற்ற தன்மைகளையும், கஷ்டங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ராகுவை சுபத்துவப் படுத்தப் போகிறார் என்பதால் ஏப்ரல் மாதத்திலிருந்து நல்ல பலன்களை. மேஷ ராசிக்காரர்கள் எதிர்பார்க்கலாம்.


எல்லாவற்றையும் விட மேலாக, ஜனவரி மாதம் நடக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலமாக. லாபாதிபதி சனி மிகவும் யோகம் தரும் பதினோராம் இடத்திற்கு வருவது மேன்மையான ஒன்று. இதன்மூலம் மேஷ ராசிக்காரர்கள் அனைவருக்குமே வயதிற்கு ஏற்றார்போல செய்தொழிலில் மேன்மை வரக்கூடிய நல்ல நிலை வந்திருக்கிறது. ஆகவே எப்படிப் பார்த்தாலும் ஒரு மனிதனின் முதன்மைத் தேவையான. ஜீவன அமைப்பில் நல்ல பலன்களை செய்யக்கூடிய நிலையில் 2023ம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கிறது. மேஷத்திற்கு இனி முன்னேற்றங்கள் மட்டுமே இருக்கும்.

வருடத்தின் பிற்பகுதி எட்டு மாதங்கள் குரு, ராசியின் 5, 7, 9ம் இடங்களை தன்னுடைய சுப பார்வையால் பார்க்கப் போவதால் இந்த வருடத்தின் பிற்பகுதியில் இளைய பருவத்தினருக்கு திருமணம் அல்லது திருமணத்திற்கான உறுதி நிகழ்வுகள் நடக்கக்கூடிய நிலை இருக்கும். ஒன்பதாம் பாவகத்தை குரு பார்க்கப் போவது சிறப்பான அமைப்பு. இதுவரை உங்களின் வயதிற்கு ஏற்றவகையில் என்ன பாக்கியத்தை அடைவதற்கு உங்களுக்கு தடைகள் இருந்து வந்ததோ அவைகள் இந்த வருடம் நீங்க இருக்கின்றது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ராசியில் உள்ள ராகு அதிர்ஷ்டத்தைத் தருகின்ற விதமாக சுபத்துவத்தை குருவின் இணைவினால் அடைகிறார். இதன் மூலமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவைகள் இதுவரைக் கைகொடுக்காத மேஷத்தினருக்கு இப்பொழுது கை கொடுக்கும். அலுவலகத்தில் இதுவரை என்னை மட்டுமே வெளிநாட்டிற்கு அனுப்பாமல் இருக்கிறார்கள் அல்லது வீட்டில் என்னை நம்பி வெளிநாட்டிற்கு சென்று படிக்கவோ வேலை செய்யவோ அனுமதி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற நிலையில் உள்ள மேஷராசி இளைஞர்களுக்கும் இந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து வெளிநாடு வெளிமாநில வாய்ப்புகள் அமையும்.

குரு, ராகு ராசியில் இணைவதால் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கும் நன்மை உண்டு. வருடத்தின் பெரும்பாலான நாட்கள். ராசிநாதன், செவ்வாய் நல்ல அமைப்பிலேயே இருக்கிறார். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு. தொல்லைகளை கொடுக்காத ஆண்டாகவே 2023 அமையும். அடுத்து வரக்கூடிய 2024, 2025 ஆகிய மொத்தம் மூன்று வருடங்களுமே மேஷ ராசிக்காரர்களுக்கு வயதிற்கு ஏற்ற வகையில் நற்பலன்களை செய்யும். அதற்கான அச்சாரம் போடுகின்ற விதமாக இந்த 2023 அமையும்.

இதுவரை தொல்லைப் படுத்தி கொண்டு வந்த கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள், வழக்குகள் சாதகமான முடிவுக்கு வரும். பொருளாதார உயர்வு இந்த வருடம் நன்றாக இருக்கும். சனி பதினொன்றில் அமர்ந்தால் செல்வம் வரும் என்பது ஜோதிட விதி. அதன்படி இந்த வருடம் சனியின் மூலம் மறைமுகமான வழியில் உங்களுக்கு பண வரவும், தனலாபங்களும் இருக்கும்.

தொழில் விஷயமாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு வெற்றிகள் இருக்கும். விரும்பிய தேசத்திற்குச் செல்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலம் மற்றும் தூரமான இடங்களில் பணி அமையும். சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவு இடங்களுக்கு போய் வாரா வாரம் திரும்புவது போன்ற வேலைகள் கிடைக்கும்.  

பிறக்க இருக்கும் புத்தாண்டு வாழ்க்கை, தொழில், வேலை, நட்பு, குடும்பம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களைக் கொடுக்கும். ஆரம்பத்தில் அவை கஷ்டமாகத் தோன்றினாலும் வருடத்தின் இறுதிப் பகுதியில் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்பது உங்களுக்குத் தெரிய வரும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.  குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு ஆண் வாரிசு கிடைக்கும். முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் இரண்டாவது வாழ்க்கை நல்லவிதமாக அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

வயதானவர்கள் தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இருக்காது.

செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கப் போவது இல்லை.

சிலருக்கு அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து  ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். மறைமுகமான வழிகளில் லாபம் வரும். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்களுக்கு அதிகாரம் தரும் பதவி, அந்தஸ்து உண்டாகும் செயல்கள் நடந்து புகழ் பெறுவதற்கான அமைப்பு இருக்கிறது.

சிலருக்கு இந்தவருடம் அரபு நாடுகளுக்கு வேலை, தொழில் விஷயமாக பயணப்படுதலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் வேலை அமைதலும் இருக்கும். இன்னும் சிலருக்கு முஸ்லிம், கிறித்துவ நண்பர்கள், அமைப்புகள், பங்குதாரர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். பிறப்பால் முஸ்லிம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதத்தினர் மூலம் நல்லவைகள் நடக்கும்.

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை  வந்திருக்கிறது. இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள். மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

இதுவரை எந்த விஷயத்தில் தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும். எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த புத்தாண்டில் தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மேஷத்திற்கு மேன்மை தரும் வருடம் இது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.