adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மீனம்: 2023 புத்தாண்டு பலன்கள்

#astrologeradityagurujinewyearpalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு 2023ம் வருடம் நல்ல பலன்களை செய்யும். உங்களுக்கு ஏழரை சனி என்ற அமைப்பு இந்த வருடம் ஆரம்பிக்கிறது என்றாலும் கூட கெடுபலன்கள் எதுவும் இந்த வருடம் நடக்க வாய்ப்பில்லை. பொதுவாக விரயச்சனி நடக்கும் பொழுது வருமானம் கூடுதலாக வந்து, அதை. சேமிக்க முடியாமல். செலவு செய்து வருத்தப்பட நேரிடும் என்பதால். 2023 வருமானம் உள்ள வருடமாகவே மீன ராசிக்கு அமையும்.


ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் குரு மாற்றத்தின் மூலமாக ராசிநாதன் குரு யோக பலன்களை தரக்கூடிய இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். ஏற்கனவே அங்கே நிலை கொண்டுள்ள ராகுவை அவர் சுபத்துவப் படுத்துகிறார். இந்த சுப ராகுவின் தயவால் சிலருக்கு தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு. இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.

வருடம் முழுவதும் ராசிநாதன் நல்ல நிலையில் இருப்பதால் உங்கள் உடலும், மனமும் இந்த வருடம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் சந்தோஷம் தெரியும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களில் சிலருக்கு சென்ற காலங்களில் இருந்து வந்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இந்த வருடம் மாறும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள்  விலகி நல்லவைகள் இந்த வருடம் நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் இன்னும் மேன்மையான நல்ல பலன்கள் உண்டு.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் நிம்மதியான சூழல் இருக்கும்.

அனைத்து மீன ராசியினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத் தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும். வருடம் முழுவதும் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவங்கள் சுபத்துவ நிலைகளில் இருப்பதால் உங்களுடைய வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள்.

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமலோ இருப்பவர்களுக்கும், குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் மே மாதத்திற்குள் நல்ல செய்திகள் இருக்கும். குழந்தை இல்லா தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைபடாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

வருடத்தின் பிற்பகுதி மாதங்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற அதிர்ஷ்ட விளைவுகளில் குறிப்பிட்டதக்க அளவிற்கு பணலாபம் கிடைக்கும். அதேநேரத்தில் இந்த பலன் எல்லோருக்கும் பொருந்தாது. ஜனன கால தசாபுக்தி அமைப்புகள் சரியாக இல்லாத மீன ராசிக்காரர்களுக்கு பங்குச்சந்தையில் சரிவுகள் வரலாம் என்பதால் இதில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கிரகங்கள் சாதகமான அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலர் இந்த வருடம் திடீர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் இந்த வருடம் உங்களால் சாதிக்க முடியும்.

நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு இந்த வருடம் மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன்  வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள்.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.

குடும்பம் உண்டாகாத இளையபருவத்தினருக்கு உடனடியாக வாழ்க்கைத் துணை அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை முரணாகிப் போனவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடந்து அந்த அமைப்பின் மூலம் நிம்மதியும், சந்தோஷமும் நீடித்து இருக்கும். இதுவரை குடும்பத்திற்கு வாங்க முடியாத அத்தியாவசியமான பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

நடுத்தரவயது தாண்டிய மீன ராசிக்காரர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கப் படும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

வெளிநாட்டுக்கு போக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நன்மைகளை அடைவீர்கள். வயதானவர்கள் தங்கள் பிள்ளைகளை பார்ப்பதற்கோ, பேரன், பேத்தி பிரசவத்திற்கோ வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள். வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைக் கவனமாகச் செய்யுங்கள். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

2023-ம் வருடத்தில் மீன ராசிக்கு மிகச்சிறந்த நல்ல பலன்களும் கவுரவம், அந்தஸ்து உயரும் சம்பவங்களும் நடக்கும் என்பதும் இதுவரை பொருளாதார சிக்கலில் இருந்து வந்தவர்கள் அதிலிருந்து மீண்டு நல்ல பணவரவை அடைவீர்கள் என்பதும் உறுதி.

தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் இந்த வருடம் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் நல்ல ஒரு வருடமாக இது அமையும். மொத்தத்தில் மீன ராசிக்கு இந்த புத்தாண்டு நன்மைகளை செய்வதோடு எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.