adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மிதுனம்: 2023 புத்தாண்டு பலன்கள்

#astrologeradityagurujinewyearpalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மிதுனம்:

கடந்த மூன்று ஆண்டு காலமாக அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு கடைசியில் விடிந்தே விட்டது என்பதுதான் 2023 சொல்லுகின்ற ஜோதிட செய்தி. உங்களில் பலருக்கு ஜென்ம ராகுவின் ஆதிக்கத்தினால் 2018 ஏப்ரல் மாதத்தில் இருந்தே கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சோதனைகள்தான் இருந்தது. அதேநேரம் 10 சதவிகித மிதுன ராசிக்காரர்கள் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் நல்ல தசா, புக்திகள் அமைந்ததால் பெரிய தொல்லைகளை அனுபவிக்காமல் இருந்தீர்கள். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.


சமுதாயத்தின் சகல தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் விடியலை தரக்கூடிய ஆண்டாக 2023 இருக்கும். குறிப்பாக திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு. தற்போது உள்ள  அனைத்து கஷ்டங்களும், மன அழுத்தங்களும் விலகக்கூடிய அமைப்பு இந்த ஆண்டு முதல் பிறக்கிறது.

கடந்த சில வருடங்களாக மிதுனத்தினர் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் மிதுன ராசி பெண்களுக்கு கூடுதலான. கவலைகள் இருந்து வந்தன. கணவர், மனைவி கருத்து வேற்றுமை, குடும்பத்தில் பிரிவு, நெருங்கிய உறவினர் இழப்பு, பண நஷ்டம், கடன் தொல்லை, ஆரோக்கிய குறைவு, வழக்கு, அசிங்கம், கேவலம், அவமானம், காதல் தோல்வி, தொழில், வேலையின்மை, குழந்தைகளால் சங்கடம், தூக்கமின்மை என சனி ரூம் போட்டு யோசித்து மிதுனத்தினருக்கு தொல்லைகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்க்கை படிப்படியாக செட்டில் ஆகும் என்பது ஜோதிடப்படி உறுதியான ஒன்று. எனவே 2023-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே நல்ல பலன்கள் நடந்து, இப்போதுள்ள சிக்கல்கள் தீர்ந்து இந்த ஆண்டு முதல் மிதுனத்தினர் அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள் என்பது உறுதி. கஷ்டத்தில் உள்ள அனைவருக்கும். 2023-ம் வருடம் நல்ல திருப்புமுனைகளையும், எதிர்கால நல்வாழ்க்கைக்கு தேவையான அஸ்திவாரங்களையும் அடிப்படைகளையும் அமைத்து தரும்.

ஏப்ரல் மாதம் முதல் குரு லாபஸ்தானத்திற்கு வந்து, ஏற்கனவே அங்கு நிலை கொண்டுள்ள ராகுவுடன் இணைந்து, ராகுவை சுபத்துவப்படுத்தி உங்களையும் வளப்படுத்த இருக்கிறார். ஆகவே, வருடத்தின் பிற்பகுதியில் மிதுனத்தினரின் அத்தனை கஷ்டங்களும் விலகி அவரவர்களுடைய வயதிற்கு ஏற்றார் போலவும், தகுதி இருப்பிடத்திற்கேற்றார் போலவும் நன்மைகள் மட்டுமே இருக்கும்.

சொந்தத் தொழில் தொடங்க நல்ல நேரம் இது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்து விட்டது. வியாபாரிகளுக்கு இது வசந்த காலம். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும்.

சில தொழில் முனைவோர்கள் இந்த வருடம் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் இனிமேல் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். கலைஞர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலைமை மாறி நல்லபலன்களைத் தரும் நிலை  வந்திருக்கிறது. இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள்.

அருமையான வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடங்கலின்றி மனநிறைவுடன் நடக்கும். புத்திர பாக்கியம் தாமதமானவர்களுக்கு வாரிசு உருவாகி தவழ்ந்து விளையாடப் போகிறது.

இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. அரசியல்வாதிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட எல்லோருக்குமே இது நல்ல பலன்களை அளிக்கும் வருடமாக இருக்கும்.

மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை நன்றாக இருக்கும். நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பு  இருக்கும். மகன் மகளுக்கு திருமணம் நடத்த முடியும். பேரன் பேத்திகள் மூலம் நல்ல சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். வயதானவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். இதுவரை இருந்துவந்த போட்டிகள் எதிர்ப்புகள் விலகும்.

யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். எதிர்காலத்திற்கான சேமிப்புகள் செய்ய முடியும். பிறப்பு ஜாதகத்தில் தசாபுக்திகள் சாதகமாக அமைந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் பிரபலமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத் துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ சரியான சந்தர்ப்பத்தில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

மாணவர்களுக்கு இது மனதில் பதிந்து படிக்கும் வருடம். எல்லா வகையிலும் ‘ஜாலி’யாக இனிமேல் இருப்பீர்கள். இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது. சிலருக்கு பாகப் பிரிவினையாக உங்கள் பெயரில் ஏதேனும் சொத்து கிடைக்கும். சகோதர உறவு அனுசரணையாக இருக்கும். சிலர் அறப்பணிகளில் ஈடுபடவோ, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்கோ வாய்ப்பு இருக்கிறது.

சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக்கும். பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை இனிமேல் நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். வருடத்தின் ஆரம்பத்திலேயே சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு இதுவரை தாமதமாகி வந்த திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். ஏற்கனவே முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நல்லபடியாக நடந்து நீடித்தும் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத் தலைவிகளின் கவலைகள் தீரும். கணவரும், குழந்தைகளும் உங்களுடைய எண்ணம் போலவே நடந்து கொள்வார்கள். இதுவரை சனி எங்கே அடித்தாரோ அங்கே உங்களை அரவணைத்து வழிகாட்டும் வேலைகளைச் செய்வார் என்பதால். கடந்த காலங்களில் இருந்த கவலைகள் இனி பெண்களுக்கு இருக்காது.

ஆன்மீக ஈடுபாடு இந்த வருடம் அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார்.

கிரக நிலைமைகள் சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும். எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும்.

மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல் திறனையும், புத்துணர்ச்சியையும் இந்தப் புதுவருடம் மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.  எனவே இந்த மேன்மைமிகு புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். மிதுனத்திற்கு இனிமேல் சோதனைகள் எதுவும் இல்லாத புத்தாண்டு இது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.