adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஒரே தசை வந்தால் திருமணம் செய்யக்கூடாதா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

முத்துச்செல்வன்வாணியம்பாடி.

கேள்வி.

இந்த நூற்றாண்டின் பெரும் ஜோதிடனான எனது ஆசானுக்கு பக்தனின் தாள் பணிந்த வணக்கங்கள். அடிக்கடி மாலைமலரிலும், டிவியிலும், யூடியுப் வீடியோக்களிலும் பத்துப் பொருத்தம் என்பது பொய் என்று தெளிவுபட கூறுகிறீர்கள்உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் பத்துப் பொருத்தம் பார்ப்பதில்லை என்றும் நாங்கள் அறிகிறோம். இந்த பத்துப் பொருத்தத்திலும் ஒரு நிலையாக ஏக தசை என்று  மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே தசையாக வந்தாலும் திருமணம் செய்யக் கூடாது என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்களேஅது எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆசான் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

பதில்.

பத்துப் பொருத்தம் என்பது உண்மைக்கு மாறானது, தற்போதைய வாழ்க்கை முறையில் இது தேவையில்லை என்பதோடு, இதனால் இருவருடைய மண வாழ்க்கை எப்படி அமையும் என்பதை சொல்லவே முடியாது என்பதை எழுதியும், பேசியும் வருகிறேன்.

பெண்ணிற்கு ஜாதகம் எழுதாத அந்தக் காலகட்டத்தில், திருமணம் செய்யப் போகிற இருவரின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் வைத்து, வருபவர்களின் ஆறுதலுக்காக ஏதோ பார்க்க வேண்டும் என்று மட்டுமே பார்க்கப்பட்ட இந்த பத்து பொருத்தத்தை, பெண்ணைப் படிக்க வைத்து விட்டு, அவளை வேலைக்கும் அனுப்பி விட்டு, தன் மணமகனைத் தானே தேர்ந்தெடுக்கும் உரிமையையும் அளித்துக்  கொண்டிருக்கின்ற நவீன சமூகத்தில், பார்ப்பது போன்ற அறியாமை வேறு எதுவும் இல்லை.

“கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்று போதிக்கப்பட்டு பெண்ணிற்கு வேறு போக்கிடம் இல்லாத அந்தக் காலத்தில், இந்த பத்து பொருத்தம் ஏதோ “ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்பது போல குருட்டாம்போக்குதனமாக பார்க்கப்பட்டு வந்தது.  இப்போது இது பொருந்தாது. தேவையும் அற்றது. தற்போது குடும்பநல கோர்ட்டில் விவாகரத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் தம்பதிகளிடையே சென்று பொருத்தம் பார்த்தீர்களா? என்று கேட்டீர்களேயானால் பத்து பொருத்தத்தின் நம்பகத்தன்மை புரிய வரும்.

தன்னுடைய வாடிக்கையாளருக்கு மேம்போக்கு இல்லாத உண்மையான பதிலைச் சொல்ல நினைக்கும் ஒரு ஜோதிடர் இந்த பத்துப் பொருத்த கதையை பொருட்படுத்தவே மாட்டார். நட்சத்திரங்களை மட்டுமே வைத்து எந்தவிதத்திலும் ஒருவருடைய குணம் மற்றும் உடல் அமைப்பை சொல்லி விடவே முடியாது. அதிலும் இதில் உள்ள ரச்சு பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் என்பவைகள் மிகவும் வேடிக்கையானது. கடந்த காலங்களில் இருந்து வந்த சில ஜோதிட விதிகள் இப்போது வழக்கொழிந்து விட்டதைப் போல, இன்னும் சில காலத்திற்கு பிறகு இந்த பத்துப் பொருத்தம் என்பதும் மறைந்து போய்விடும் என்பதுதான் உண்மை.

ஜோதிடம் என்பது கோடிக்கணக்கான காம்பினேஷன் கொண்டது. இந்தப் பொருத்தங்களைத்  தாண்டித்தான் உண்மையான ஜோதிடம் இருக்கிறது என்பதை ஒரு 10 சதவிகித ஜோதிடர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். அதிலும் இப்போதைய ஜோதிடர்கள் பரவலாகச் சொல்லி வரும் கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான தசாபுக்திகள் நடந்தால் கெடுதல் நடக்கும் என்பதிலும் உண்மையில்லை.  

தசா,புக்திகள் என்பது உங்களுடைய லக்னத்தின் அடிப்படையில் அமைவது. இருவருக்குமே 1, 5, 9 போன்ற யோக தசைகள் ஒன்று போல நடக்குமாயின் மிகப்பெரிய நன்மைகள் இருக்கும். இருவருக்கும் 6, 8 போன்ற கெடுதல்களை தரக்கூடிய தசைகள் நடந்தால் சாதகமற்ற பலன்களை மட்டுமே தரும் என்பதுதான் உண்மை.

உண்மையைச் சொல்லப் போனால், வாழ்வில் ஒன்றாக இணைந்து பயணிக்கின்ற கணவனுக்கும், மனைவிக்கும் ஒரே நேரத்தில் கெடுதலான தசைகளும், ஒரே நேரத்தில் நல்லவைகளை தரக்கூடிய தசைகளும்தான் அமையும். அப்போதுதான் இன்பத்தையோ துன்பத்தையோ அவர்கள் இணைந்து அனுபவிப்பார்கள். ஒருவருக்கு சந்தோஷத்தையும், இன்னொருவருக்கு துன்பத்தையும் கொடுக்கக் கூடிய தசாபுக்தி அமைப்பு நடக்குமானால் இருவரும் வாழ்வில் இணையவே மாட்டார்கள்.  இதுதான் ஒரு எதார்த்தமான உண்மை.

பத்துப் பொருத்தம், செவ்வாய் தோஷம், நாகதோஷம், தசா சந்திப்பு, கால சர்ப்ப தோஷம் போன்றவைகளை சொல்லுகின்ற ஜோதிடர்கள் அனுபவமற்றவர்கள் மற்றும் ஆய்வு மனப்பான்மை இல்லாதவர்கள். இப்படி சொல்லுகின்ற ஜோதிட பலன் பொதுவானதாகத்தான் இருக்குமே தவிர துல்லியமானதாக இருக்காது.

மணமுடிக்க போகின்ற இருவருக்கு தசா சந்திப்பு இருக்குமாயின், இருவருக்கும் 1,5,9 வீடுகளின் தசா, புக்திகள் நடந்தால் தாராளமாக இருவரையும் இணைக்கலாம். 6,8 போன்ற வீடுகளின் தசா புக்தி நடக்கும் போது விவாகரத்து போன்றவைகள் கண்டிப்பாக வரும்.  அவைகளை இணைக்கக் கூடாது.  

ஜோதிடத்தை பொதுவாக மட்டுமே பார்க்கும் குறைவான ஞானம் உள்ளவர்களுக்கு இந்த தசா சந்திப்பு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல என்ன நடக்கும் இந்த இருவருக்கும் என்ற பலன் தெரியாமல் மிகப்பெரிய ஒன்றாகத் தெரியும். அனுபவம் உள்ளவர்களுக்கு அது தெரிவதில்லை. அவ்வளவுதான்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


மாலை மலர்   நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008


இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com