adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
நாகதோஷம் உள்ள பெண்ணிற்கு அதே தோஷமுள்ள மணமகனைத்தான் திருமணம் செய்ய வேண்டுமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


இ. சிவக்குமார். சென்னை-12  

கேள்வி.

குருஜிக்கு எனது பணிவான வணக்கங்கள். என் மகள் அபிராமிக்கு நாகதோஷம் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  இதுபோன்ற ஜாதகங்களுக்கு அதே போன்ற நிலையில் இருக்கும் இன்னொரு நாகதோஷ வரனைத்தான் முடிக்கவேண்டும் என்றும்  சொல்கின்றனர். அதாவது ஏழில் ராகு இருந்தால் இதேபோல மணமகனுக்கும் ஏழில் ராகு இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இதனால் என்னுடைய பெண்ணிற்கு திருமணம் தடையாகி கொண்டிருக்கிறது. உண்மையில் இது போன்ற நாகதோஷ பெண்ணிற்கு அதே தோஷமுள்ள மணமகனைத்தான் திருமணம் செய் வேண்டுமா அல்லது திருநாகேஸ்வரம், காளகஸ்தி, திருவான்மியூரில் உள்ள நாகராஜாவிற்கு பரிகாரபூஜை செய்துவிட்டு நாகதோஷம் இல்லாத மாப்பிள்ளைக்கு மணமுடிக்கலாமா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.


 

பதில்.  

சமீபத்திய இருபது ஆண்டுகளாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஜோதிடர்களிடம் இதுபோன்ற நாகதோஷம் உள்ளவர்களுக்கு அதேபோன்ற நாகதோஷம் இருக்கின்ற வரனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கின்ற தவறான கருத்து நிலவி வருகிறது.  கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ஜோதிடர்கள் இதுபோன்ற தேவையற்ற ஒரு கருத்தைச் சொல்லி வரன் பார்க்கும் பெற்றோர்களை அவதிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.  

இதைவிட மேலாக திருமண தகவல் மையங்களில் இருப்பவர்களே ஜோதிடர்களாக மாறி இரண்டு எட்டில் ராகு-கேதுக்கள் இருந்தால் அதேபோன்ற இரண்டு எட்டில் ராகு-கேது உள்ள ஜாதகங்களையும், ஏழில் ராகு இருந்தால் அதேபோன்ற ஏழாமிடத்தில் ராகு இருக்கும் ஜாதகங்களையும் மட்டுமே இணைக்கத் தருகின்றனர் என்பதையும்  கேள்விப் படுகிறேன். ஆக, திருமண தகவல் மையம் நடத்துபவரே ஜோதிடராகவும் ஆகி விடலாம் என்ற அளவிற்கு இந்த நாகதோஷம் ஜோதிடத்தைக் கொண்டு வந்து விட்டது.

இந்த நாகதோஷம், செவ்வாய் தோஷத்தைப் பார்க்காமல் அத்தை மகனையும், மாமா பெண்ணையும் திருமணம் முடித்த நம்முடைய தாயும், தந்தையும்,  தாத்தா, பாட்டிகளும் நம்மை விட நன்றாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை.  கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாகத்தான் ஏழில் ராகு இருந்தால் அதேபோன்ற ஏழில் ராகு இருப்பவரை சேர்க்க வேண்டும், இரண்டில் செவ்வாய் இருந்தால் அதேபோன்ற இரண்டில் செவ்வாய் இருக்கும் வரனை முடிக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு ஜோதிடம் வந்துவிட்டது.  

உண்மையில் இந்த நாகதோஷம், செவ்வாய் தோஷம் என்பது லட்சத்தில் ஒருவரை மட்டுமே அபூர்வமாக பாதிக்கக்கூடிய தோஷமாகும். விதிகளை விட விதிவிலக்குகளை அதிகமாக ஆராயவேண்டிய இந்த மாபெரும் சாஸ்திரத்தில், விதிகளை மட்டுமே அறிந்து கொண்டு பலர் அரைகுறை ஜோதிடர் ஆகி விடுவதால் வந்துவிட்ட நிலை இது.  

நாகதோஷம் உள்ள பெண்ணுக்கு நாகதோஷம் உள்ளவரைத்தான் மணக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க தவறானது. ராகு ஏழில், எட்டில், இரண்டில் இருப்பதால் வரக் கூடியதாக சொல்லப்படும் இந்த தோஷத்திற்கு விதிவிலக்குகளை கவனிக்க வேண்டும். இந்த விதிவிலக்குகளையும், ராகு அங்கே இருப்பதால் என்ன செய்வார் என்பதையும்  முழுமையாக கணிக்கத் திறமையற்ற ஜோதிடர்கள் “நமக்கேன் வம்பு” என பொத்தாம் பொதுவாக உருவாக்கியதுதான் இப்போது சொல்லப்படுகின்ற நாகதோஷம்.

ராகு இரண்டு, ஏழு, எட்டில் இருந்தாலும் கூட குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதனுடைய இணைவு, வீடு, பார்வை போன்ற தொடர்புகளை பெற்றிருந்தால் ராகுவே சுபராகி, தோஷத்தைச் செய்யாமல் நல்ல மணமகனையோ, மணமகளையோ தருவார் என்பதுதான் உண்மை. இதுபோன்ற நிலையில் நாகதோஷம் என்பது நாக யோகமாக மாறி விடும். இதற்கு எதிர்நிலையாக ராகு, செவ்வாய்-சனி, ஆறு, எட்டுக்குடையவர்களின் தொடர்புகளை பெற்று பாபத்துவமாக இருக்கும் போது, ராகுவின் தசை வருமாயின் தோஷ ஜாதகத்தை இணைத்தாலும் வாழ்க்கை பாதிக்கப்படும்.  

இப்போது நான் சொல்லியிருப்பது ஒரே ஒரு விதிவிலக்குதான். இதை விட ஆயிரம் விதி விலக்குகள் இந்த நாக தோஷம் என்று சொல்லப்படும் இரண்டு, ஏழு, எட்டில் ராகு இருப்பதால் வரும் நிலைக்கு விதிவிலக்காக இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் பார்க்கக்கூடிய அமைப்பில் ஞானமுள்ள அனுபவ ஜோதிடர்கள் இங்கே 10 அல்லது 20 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். இதனால்தான் ஏழில் ராகு இருக்கிறதா, அதேபோன்ற ஏழில் ராகு உள்ள வரனை மட்டுமே சேர்த்து விடு என்கின்ற அளவிற்கு ஜோதிடம் மிகவும் மோசமாகி விட்டது.  

உண்மையில் நாகதோஷத்தை சரியாகக் கணிப்பதற்கான முழுமையான ஞானம் உள்ள ஜோதிடரிடம் செல்லுங்கள். ஏழில் ராகு இருக்கிறார், எட்டில் ராகு இருக்கிறார், இரண்டில் இருக்கிறார் இவரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பொத்தாம் பொதுவாக சொல்கின்ற ஜோதிடரை நம்ப வேண்டாம்.

ராகு சுபத்துவமாக சுபர்களின் தொடர்பில் இருக்கும்பொழுது கண்டிப்பாக அந்த நபருக்கு நல்லவைகளைச் செய்வார். அதே ராகு பாபத்துவமாக செவ்வாய், சனி தொடர்பில் இருக்கும்போது தீய பலன்களை செய்வார். அப்படி ராகு செய்ய வேண்டும் என்றாலும் கூட ராகுவின் தசை வர வேண்டும். வேடிக்கை என்னவென்றால் ராகுவின் தசை வரவே வராத அல்லது ராகுவின் தசை திருமணத்திற்கு முன்பே முடிந்து விட்ட ஒருவருக்கு கூட இங்கே நாகதோஷம் என்பதுதான்.

ஆகவே தற்போது தமிழ்நாட்டு ஜோதிடர்களால் பரவாலகச் சொல்லப்படுகின்ற செவ்வாய் தோஷத்திற்கு அதேபோன்ற செவ்வாய் தோஷம் உள்ளவரைத்தான் முடிக்கவேண்டும், நாகதோஷம் இருப்பவருக்கு அதே இடத்தில் ராகு கேதுக்கள் இருக்கும் ஒருவரைத்தான் முடிக்க வேண்டும் என்ற கருத்து யாரோ ஒரு அரைகுறை அனுபவஸ்தர் போகிற போக்கில் சொல்லிவிட்டார் என்பதற்காக ஆய்வுநோக்கில் இல்லாமல் சொல்லப்படுகின்ற தவறான கருத்தாகும். அதேநேரத்தில் இதைச் சொல்லாத அனுபவ ஜோதிடர்களும் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.   

குரு, சுக்கிர தொடர்புகளில் ராகு இருக்கும் பொழுது எவ்வித கெடுபலனையும் செய்யாமல் நல்ல வாழ்க்கையைத் தருவார். பாபத்துவமாக இருக்கும் பொழுது ராகு தசை நடந்தால் கெடுதல்களைச் செய்வார்.  ஆகவே ஒட்டு மொத்தமாக பத்துப்பொருத்தம் என்கின்ற ஒரு தவறான பொருத்த அமைப்பையும், நாகதோஷம், செவ்வாய் தோஷம் என்ற மேலோட்டமான நிலையையும் பார்க்காமல், அருகில் இருக்கக்கூடிய ஞானமுள்ள ஜோதிடரிடம் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் அனுகூல பொருத்தம் என்கின்ற வகையில் பொருத்திப் பார்த்து தாராளமாக நாகதோஷம் இல்லாத மணமகனையும் முடிக்கலாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 


தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


மாலை மலர்   நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008


இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com