adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் (A-024)

ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகுகேதுப் பெயர்ச்சி இம்முறை வாக்கியப் பஞ்சாங்கப்படி, நாளை 21-6-2014 சனிக்கிழமை அன்றும், திருக்கணிதப்படி அடுத்த மாதம் 12-7-2014ம் தேதியும் நடக்க இருக்கிறது. 

இம்முறை ராகுகேதுக்களின் மாற்றம் துலாம், மேஷ ராசியில் இருந்து கன்னி, மீனம் ராசிக்கு நடக்க இருக்கிறது. 
பொதுவாகவே உபய ராசிகள் எனப்படும் குரு, புதனின் வீடுகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளில் அமரும் ராகுகேதுக்கள் கெடுபலன்களைச் செய்வது இல்லை. 

அதிலும் “ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி” என்று துவங்கும் பழம்பெரும் பாடலின்படி கன்னி, ராகுவிற்கு மிகவும் பிடித்த வீடு என்பதாலும், கேதுவிற்கு மீனம் நட்புவீடு என்பதாலும் இம்முறை ராகுகேதுக்களினால் நன்மைகளே நடக்கும். தீமைகள் பெரிதாக இருக்காது. 


குறிப்பாக நமது மூலநூல்களில் பாபக்கிரகங்கள் 3, 6, 11 ல் மட்டுமே பலன் தரும் என்று கூறப்பட்டிருந்தாலும், அனுபவத்தில் 12 ம் வீட்டில் அமரும் ராகுகேதுக்களும் தீமை செய்வதில்லை என்பதால் இம்முறை மேஷம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு ராகுவும், ரிஷபம், மகரம் ஆகிய ராசிகளுக்கு கேதுவும் நன்மைகளைச் செய்வார்கள். 

இவை தவிர்த்த மற்ற ராசிகளுக்கு கெடுதல்கள் நடக்குமா என்றால் நிச்சயம் கெடுதல்கள் நடக்காது. 

இரண்டு நாட்களுக்கு முன் “மாலைமலர்” நாளிதழில் நான் எழுதி இணைப்பாக வெளிவந்த ராகுகேதுப்பெயர்ச்சி பலன்களில் கூறப்பட்டுள்ள முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் மற்ற ராசியினர் கெடுதல்கள் நடைபெறாமால் காத்துக் கொள்ளலாம். 

நவக்கிரகங்களில் ராகுகேதுக்கள் மட்டுமே வித்தியாசமான கிரகங்கள் ஆகும். ஒன்பது கிரகங்களில் சூரியனும், சந்திரனும் ஒளிக்கிரகங்கள் எனவும் குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகியோர் பஞ்சபூதக்கிரகங்கள் எனவும் ராகுகேதுக்கள் சாயாக்கிரகங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. சாயா என்ற வார்த்தைக்கு நிழல் என்று அர்த்தம். 

ஏனெனில் மற்ற கிரகங்களைப் போல கல், மண்ணாகவோ அல்லது திரவ, வாயு ரூபமாகவோ ஆன நம் கண்களுக்குத் தெரியும் கிரகங்கள் அல்ல ராகு கேதுக்கள். பூமி சூரியனைச் சுற்றிவரும் சூரியப்பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றிவரும் விரிவுபடுத்தப்பட்ட சந்திரப்பாதையும் வெட்டிக்கொள்ளும் பூமி மற்றும் சந்திரனின் நிழல்களான இரண்டு புள்ளிகளே ராகுகேதுக்கள் எனப்படுகின்றன. 

இந்த இரண்டு நிழல்களையும் துல்லியமாக அறிந்து இவைகளை கிரகங்களாக ஆக்கியதிலும், குறிப்பிட்ட இடங்களில் நாகநாத சுவாமி என இவைகளுக்கான பரிகாரக்கோவில்களை அமைத்ததிலும் நமது மேலான இந்துமத ரிஷிகள், சித்தர்கள் மற்றும் ஞானிகளின் ஆழ்ந்த மெய்ஞானம் வெளிப்படுகிறது. மேலைநாட்டு ஜோதிடத்தில் இவைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் மகரிஷி பராசரர் மனிதவாழ்வில் ராகுகேதுக்களின் தாக்கத்தை உணர்ந்து இவைகளுக்கு மற்ற கிரகங்களைப் போல தசை வருடங்களையும் அமைத்துள்ளார். இந்திய ஜோதிடத்தில் அவரால் ராகுவிற்கு பதினெட்டு வருடங்களும், கேதுவிற்கு ஏழு வருடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 

தசாபுக்தி அமைப்பில் உள்ள ஒரு சூட்சுமத்தை சொல்கிறேன்.. தெரிந்து கொள்ளுங்கள். 

சுபக்கிரகங்களான குருதசைக்கு முன் ராகுதசையும், சுக்கிரதசைக்கு முன் கேதுதசையும் வரும். அது ஏனெனில் வாழ்க்கையில் ஒரு மனிதனுக்குத் தேவையான பணம், புகழ், அந்தஸ்து, வீடு, வாசல், மனைவி, குழந்தைகள், வாகனம் போன்ற அனைத்து சுகங்களையும் அளிப்பவை குருவும் சுக்கிரனும். 

இந்த இரு சுபக்கிரகங்களும் ஒரு மனிதனுக்கு யோகம் அளிப்பதற்கான முன்னேற்பாடுகளை, அடிப்படை அஸ்திவாரங்களை ராகுகேதுக்கள்தான் முன்னரே எடுத்துச் செய்வார்கள். 

அதாவது அந்த மனிதன் பிற்காலத்தில் யோகமுடன், புகழுடன் எந்தத் துறையில் சிறந்து விளங்கப் போகிறானோ அந்த இடத்திற்கு அவனை நகர்த்தும் அமைப்பை ராகுகேதுக்கள் செய்வார்கள். இராகுகேதுக்களின் தசையில்தான் அவை நடக்கும். 

இந்த அமைப்பை தம் துறைகளில் உச்சத்திற்குச் சென்ற கலைஞர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்களின் ஜாதகங்களில் காணலாம். நம் சித்தர்களும் ஞானிகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து அமைத்த அனைத்துக் கோவில்களுக்கும் பின்னால் மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து உன்னத அம்சங்களும் உள்ளன. 

அக்கோவில்களில் முறைப்படி வழிபடுவதன் மூலமும், அந்தத் திருக் கோவில்களுக்குள் ஒரு நாழிகைக்கும் (24 நிமிடங்கள்) குறையாமல் இருந்து அர்ச்சனை அபிஷேகம் போன்றவைகளைச் செய்வதன் மூலமும் நமது வாழ்க்கைக்குத் தேவையான கிரக வலுவைப் பெற்று நாம் மேம்பட முடியும். கிரக தோஷங்களைப் போக்கிக் கொள்ள முடியும். குறிப்பிட்ட கோவில்களுக்கு ஏற்றபடி நாம் கிரகவலுவைப் பெறுவதற்காக ஒரு நாழிகை, ஒரு ஜாமம், ஒரு இரவு என அந்த திருத்தலங்களுக்குள் நாம் இருப்பதற்கான காலவரையறையையும் நம் ஞானிகள் வகுத்திருக்கிறார்கள். ஸ்ரீ காளஹஸ்தி போன்ற புனித இடங்களில் நாம் ஓர் இரவு தங்கி பரிகாரம் செய்வது இந்தக் காரணத்திற்காகத்தான். 

 அதன்படி நாகநாதசுவாமி என்ற பெயரில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்துத் திருக்கோவில்களும், நாகதேவதைகளாக உள்ள அம்மன் கோவில்களும், சில புகழ்பெற்ற சுயம்புவான புற்றுக்கோவில்களும் ராகுகேதுக்களுக்கான பரிகாரக் கோவில்கள்தான். 

அந்த அந்தக் கோவில்களுக்கென உள்ள பரிகார முறைகளை நாம் செய்வதன் மூலம் ராகுகேது தோஷங்கள் நீங்கப் பெற்று நம் வாழ்வில் எல்லா நன்மைகளையும் நாம் அடையலாம். குறிப்பாக தொண்டை மண்டலம் எனப்படும் சென்னையைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஸ்ரீகாளஹஸ்தி மிகச்சிறந்த பரிகாரஸ்தலம். கேதுபகவானுக்கென உள்ள கண்கண்ட பரிகார ஸ்தலம் காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சித்திரகுப்தன் ஆலயம். கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன் என்பதால் கேது தோஷங்களைப் போக்கும் வல்லமை இத்திருக்கோவிலுக்கு உண்டு. 

தென்மாவட்டத்தவர்களுக்கு சோழப்பேரரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ராகுபகவான் திருத்தலமும், கீழ்ப்பெரும் பள்ளத்தில் அமைந்திருக்கும் கேதுபகவான் திருக்கோவிலும் இந்த நிழல் கிரகங்களின் தோஷம் போக்குபவை. சோழர்களின் முதன்மை மந்திரியாக இருந்த குன்றத்தூர் சிற்றரசர் சேக்கிழார் பெருமான் வயதான காலத்தில் ரதத்தில் சென்று வழிபட முடியவில்லை என்ற காரணத்தினால் முறைப்படி அமைத்த தொண்டை மண்டல நவகிரகதலங்களில் ஒன்றான வடதிருநாகேஸ்வரம் எனப்படும் குன்றத்தூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவிலும், போரூர் அருகில் உள்ள வட கீழ்ப்பெரும்பள்ளம் எனப்படும் கெருகம்பாக்கம் அருள்மிகு நீலகண்டேஸ்வரர் ஆலயமும் நாகதோஷம் போக்கும் ஸ்தலங்கள். 

ஒரு மனிதனின் ஜாதகத்தில் அவனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய அமைப்புக்களான கல்வி, வேலை, திருமணம், குழந்தைகள் ஆகியவற்றைத் தடுக்கும் தோஷங்களான களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவை பெரும்பாலும் இந்த சர்ப்பக் கிரகங்களால்தான் உண்டாகின்றன. 

ஒரு நல்ல அனுபவமுள்ள ஜோதிடருக்கு இந்த தோஷங்களை முழுமையாகக் கணிக்கும் திறமை வேண்டும். எல்லா ஜோதிடராலும் இது முடிவதில்லை. அதேபோல எல்லாவகையான களத்திரதோஷங்களுக்கும் சில ஜோதிடர்கள் ஸ்ரீகாளஹஸ்தியில் சர்ப்பசாந்தி பூஜையை மட்டுமே தீர்வாகச் சொல்லுவார்கள். இது தவறு. 

சாதாரண காய்ச்சல் என்றால் மெடிக்கல்ஷாப்பில் ஒரு குரோசின் மாத்திரை வாங்கி சாப்பிட்டால் காய்ச்சல் போய் விடும். டைபாய்டு காய்ச்சலுக்கு அதே குரோசின் மாத்திரை சாப்பிட்டால் நோய் தீருமா? 

ராகுவால் உண்டாகும் சில குறிப்பிட்ட அதீத களத்திர தோஷங்களுக்கு சர்ப்பசாந்தி பூஜையை விட ஸ்ரீகாளஹஸ்தியில் ருத்ராபிஷேகப்பூஜை செய்வதே சிறந்த பரிகாரமாக அமையும். 

ஏனெனில் ருத்ராபிஷேகப்பூஜை என்பது, எல்லாம் வல்ல இறைவி, அம்மை ஞானப்பிரசுன்னாம்பிகை முன்பும், அடுத்து நம்மைக் காத்தருளும் ஸ்ரீ காளத்திநாதனின் முன்பும் நம்மை இருக்கச் செய்து செய்யப்படுவது. அது ஒன்றே ராகுவின் தடையை நீக்கச் செய்து நமக்கான இன்பத்தை இவ்வாழ்வில் நமக்கு கிடைக்கச் செய்கிறது. நம் மேலான இந்து மதத்தில் நம் சித்தர்களும் ஞானிகளும் சொல்லியுள்ள முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் அனைத்து ராசிக்காரர்களும் கிரகதோஷங்களும், ராகுகேதுப் பெயர்ச்சி போன்ற கிரகமாற்றங்களில் நடக்கும் தங்களது ராசிக்கான கெடுபலன்களும் நீங்கப் பெற்று சுகவாழ்வு வாழமுடியும் என்பது நிச்சயம்.

( 20-6-2014 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)