adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பால்வெளி மண்டல ஜோதிட விதி… (A-019)

ஆங்கிலப் புத்தாண்டு இந்த வருடம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில், மீனராசியில் பிறக்கிறது.

எப்பொழுதுமே, புதுவருடம் டிசம்பர் 31, நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு பிறக்கும் என்பதால் எல்லா வருடங்களிலும் அது கன்னி லக்னமாகவே இருக்கும்.

எனவே லக்னப்படி கிரகங்களின் நிலை அறிந்து புத்தாண்டு பலன்களைக் கணிப்பதை விட ஒவ்வொரு வருடமும் மாறும் ராசியின்படி கிரகநிலை களைக் கணித்துப் பலன் அறிவதே நமது இந்திய முறைக்கு ஏற்றது என்பது எனது கருத்து.
மேலும்,  மேற்கத்திய நாடுகளில்தான் ஒரு தனிமனிதனுக்கு ஒவ்வொரு வருடமும் ஜாதகம் கணித்து பலன் சொல்லும் சாயன முறை வழக்கத்தில் உள்ளது. அது துல்லியமானதும் அல்ல.


ஆனால், அயனாம்சத்தைக் கழித்து விட்டு பிறந்த ஜாதகம் எழுதி, சந்திரனுக்குப் பின் உள்ள நட்சத்திரத்தை அறிந்து அதன் உடுமகாதசை வருடங்களை வாழ்வின் பகுதிகளாகப் பிரித்து, தனிமனிதனின் முழு ஆயுளுக்கும் பலன் சொல்லும் உன்னதமான முறைகளைக் கொண்ட நம் இந்திய ஜோதிடத்தில் நிராயனமுறையை நாம் பின்பற்றுவதால் ராசியைக் கொண்டு வருடபலன் அறிவதே சரியானது.

மேலும் இந்தியாவின் ‘பிறந்த’ ஜாதகம் என்று 1947 ஆகஸ்டு 15 நள்ளிரவு 12 மணி என்று ஒரு ஜாதகத்தை கணித்து அதன் தசாபுக்திப்படியும் சில ஜோதிடர்கள் இந்தியாவின் ஆண்டுப் பலன்களை எழுதி வருகிறார்கள்.இதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அதன்படி பார்த்தால் இன்றைய இந்தியாவிற்கு தற்போது 65 வயதாகிறது. கிழவனாகி விட்ட இந்தியா இன்னும் சில வருடங்களில் இறந்து விடுமா? அல்லது விம்சோத்ரி தசா வருடங்களான 120 வருடம் முடிந்தபின் மீண்டும் இந்தியா பிறக்குமா?

நாடுகள் மற்றும் உலகின் வேறு வேறு பகுதிகளின் இயற்கைச் சீற்றங்களைக் கணிக்க அட்ச, தீர்க்க ரேகைகளையும், அயனாம் சத்தையும் சார்ந்த ஒரு சிக்கலான புரிந்து கொள்ள மிகவும் கடுமையான விதி ஒன்று நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது.தனிமனிதனுக்கென்று ஜோதிட விதிகள் இருப்பதைப் போல என்றோ ஒருநாள் பிறந்து தற்போது வளர்ந்து, ஒரு நாள் நிச்சயமாக அழியப்போகும் நமது பூமிக்கும், பூமியின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஒட்டு மொத்தமான மனித குலத்திற்கும் ஜோதிட விதிகள் இருக்கத்தான் செய்கின்றன.தனிமனிதனை சூரிய மண்டலத்தில் உள்ள குரு, சுக்கிர, செவ்வாய் போன்ற கிரகங்கள் பாதித்து இயக்குவதை போல், சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் அடங்கிய இந்த சூரிய மண்டலத்தை, அது சுற்றிவரும் ‘மில்கிவே’ எனப்படும் பால்வெளி மண்டலத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தி கொண்ட கருந்துளைகளும், அவற்றின் ஈர்ப்புவிசைகளும், பால்வெளி மண்டலத்தின் மையசக்தியும் பாதித்து இயக்குகின்றன.இந்த விதி இல்லையெனில், பூமியில் மனித நாகரிகங்கள் அழிந்து போனதற்கும், டைனோசர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்ததற்கும், சுனாமிக்கும், பூகம்பங்களுக்கும், எரிநட்சத்திரங்கள், வால்நட்சத்திர மோதல் போன்ற பேரழிவுகளுக்கும், பரிணாம வளர்ச்சிக்கும், எல்லாவற்றையும் விட கடந்த நூறு ஆண்டுகளில் மனிதகுலத்தின் மாபெரும் விஞ்ஞான வளர்ச்சியான இந்த செல்போன் யுகத்திற்கும் நீங்கள் விளக்கம் சொல்ல முடியாது.இந்த மாபெரும் “பால்வெளி மண்டல விதி”க்கு முன் அற்பமான தனிமனித ஜோதிட விதி இயங்க முடியாது.

சமீபத்தில் இலங்கையிலும், மற்ற உள்நாட்டுக் கலவர நாடுகளிலும், சுனாமியிலும், பூகம்பங்களிலும், பட்டினிகளிலும் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து போனார்களே... அத்தனை பேரின் ஜாதகங்களிலும் அவர்கள் அன்று இறந்து போவார்கள் என்ற கிரகநிலை இருந்திருக்குமா?

இதையே நான் வேறுவிதமாகவும் விளக்குவேன்...

உலகின் சில பகுதிகளில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுச்சியுடன் எப்படித் திடீரெனப் போராடுகிறார்கள்?

அனைவரின் எண்ணங் களும் எப்படி ஒன்று சேர்க்கப் படுகின்றன? அதற்கேற்ப சில சம்பவங்கள் எப்படி தற்செயலாக 

நடக்கின்றன?

சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆண்டுகொண்டிருந்த கட்சிதான் மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையாகப் பேசப்பட்ட நிலையில் திடீரென சரியான சமயத்தில் ஒரு ஊழல் பூதம் கிளம்பி மக்களின் எண்ணங்களை ஒன்று சேர்த்து புதிய ஆட்சியைக் கொண்டு வந்த சக்தி எது?இதையே நான் ‘பால்வெளி மண்டல ஜோதிட விதி’ என்கிறேன்....

இந்த 2012ம் ஆங்கிலப் புத்தாண்டு பற்றிய பொதுப்பலன்கள் ஒரு சாதாரண ஜோதிடனின் எளிய கணிப்புகள்.

நம்மைத் தோற்றுவித்து இயக்கும் பரம்பொருள் ஒன்றே நடக்கப் போவது அனைத்தையும் துல்லியமாக அறியும்.ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் நாடும்

 ஆதித்ய குருஜி

(2012ம் ஆண்டின் புத்தாண்டு பலன்கள் புத்தகத்தில் குருஜியின்

முன்னுரை)