adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
புதுக்கணக்கு துவங்க நல்லநேரம் எது? (A-017)

#adityaguruji

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

ஜோதிடம் என்பது இந்துக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது என்பதில் யாருக்கும் இரண்டு கருத்து இருக்க முடியாது.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன், தன்னைச் சுற்றி நடக்கும் வானவியல் நிகழ்வுகளை ஊன்றிக் கவனிக்க ஆரம்பித்த போதே அங்கே ஜோதிடமும் பிறந்து விட்டது.

சிலமாதம் வெயிலும், சிலமாதம் காற்றும், சிலமாதங்கள் மழையும் என பருவங்கள் ஒரு ஒழுங்கான முறையில் மாறுவதை நிர்ணயித்த பிறகே வாழ்விற்குத் தேவையான உணவாதாரமான விவசாயத்தை மனிதனால் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவர முடிந்தது.

இதற்கு அவனுக்குத் துணை நின்றது அந்தக் கால வானவியலான ஜோதிடம் மட்டும்தான்.

இன்றைக்கும் தமிழில் “ஆடிப்பட்டம் தேடி விதை” போன்ற பழமொழிகளின் ஆதார விதை ஜோதிடத்தில் இருந்து பெறப்பட்டதுதான்.

இந்து மதமே ஜோதிடத்தினை அஸ்திவாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டதுதான். காலவியல் விஞ்ஞானம் என்று நான் பெருமையுடன் சொல்லும் இந்த ஜோதிடத்தின் மேல் கம்பீரமாக எழுந்து நிற்பதுதான் உலகின் உன்னத மூத்தமதமான நமது மேலான இந்து மதம்.

ஆலயங்களில் அருள்பாலிக்கும் நமது அருட்சக்திகளாம் இறைத் திருக்கள் அவதரித்த தினங்கள் அனைத்தும் பௌர்ணமி தினங்களாகவே இருப்பதை என்றேனும் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

வருடத்தின் அத்தனை பௌர்ணமிகளிலும் நமது ஆலயங்களில் ஏதாவது ஒரு திருவிழாவோ அல்லது உற்சவமோ நடந்து கொண்டே இருக்கும்.

இயற்கையோடு இணைந்து பயிர்த்தொழிலை மனிதன் பார்த்த காலத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய இரண்டு கிரகங்களான சந்திரன், சனியின் இயக்கங்களை வைத்தே மழையையும், காற்றையும் தெய்வாம்சம் பொருந்திய நமது ஞானிகள் துல்லியமாகக் கணித்தார்கள்.

அன்றைக்கு அவர்களால் உருவாக்கப்பட்ட விதிகள்தான் இன்றைக்கும் பஞ்சாங்கங்களில் மழைப்பொழிவையும் இயற்கைச் சீற்றங்களையும் கணிக்க உதவுகின்றன.

உயிர்த்தொழிலான பயிர்த்தொழில் எனப்படும் விவசாயத்திற்கு பிறகு நம்முடைய தினவாழ்வின் இன்னொரு முக்கியத்தொழிலான வியாபாரம் பண்டமாற்று முறையாக ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே அவை நல்லநேரம் பார்த்துத் துவங்கப்பட்ட குறிப்புகள் நமது பழமையான நூல்களில் இருக்கின்றன.

எனவே எக்காலத்திலும் எந்த ஒரு விஷயத்திற்கும் இந்தப் பண்பட்ட பாரத பூமியில் பிறந்த ஒருமனிதன் நாள், நட்சத்திரம், திதி போன்றவைகளைக் கவனித்தும் அவை சொல்லும் பலன்களை ஒட்டியும்தான் தனது வாழ்க்கைச் செயல்களை அமைத்துக் கொண்டிருக்கிறான்.

“மாறுதல் ஒன்றே மாறுதல் ஆவாதது” எனும் வாக்கியத்தின்படி தோன்றிய அனைத்தும் அழிவதும் வேறோன்றினைப் போல உருமாறுவதும் உலக இயல்பு.

ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு நாமும் மெல்ல மெல்ல நம்முடைய பாரம்பரிய வழக்கங்களை நம்மை அறியாமலேயே மேல்நாட்டுப் பாணிக்கு மாற்றிக் கொண்டு வந்திருக்கிறோம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒருவரை நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று கேட்டோமானால் அவர் பங்குனி மாதம் பனிரெண்டாம் தேதி பிறந்தேன் என்பார். இப்போதோ அந்த பதில் மார்ச் டுவென்டி பைவ் என்று மாறி விட்டது.

ஒரு நிதியாண்டு என்பது தற்போது ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கி மார்ச் முப்பத்தி ஒன்றாம் தேதி முடிவதால் ஒரு தொழிலுக்கு புதுக்கணக்கு துவங்கும் நாள் ஆங்கில மாத ஏப்ரல் முதல்தேதி என்றாகி விட்டது.

பொதுத்துறை வங்கிகள், பெரிய நிறுவனங்கள், மட்டுமல்லாமல் வரி செலுத்தும் சிறு வணிகர்கள் கூட இந்த நாளில் புதுக்கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருப்பதால் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்களுக்கு புதுக்கணக்கு தொடங்க ஒரு நல்ல நேரத்தை சுட்டிக்காட்டுவது ஒரு ஜோதிடனின் கடமையாகிறது.

கணக்கு என்று வந்து விட்டாலே ஜோதிடத்தில் அது வியாபாரி, நிபுணன் என்று புகழப்படும் புதனின் ஆளுகைக்குள் வந்து விடும். அந்தக் கணக்கை சிக்கலில்லாமல் எழுதி முறையாகப் பராமரித்து அதனால் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு பெறப்படும் செல்வம் சுக்கிரனைக் குறிக்கும்.

எனவே சுக்கிரனும், புதனும் இணையும் நாள், நட்சத்திரம், ஹோரை இவையே புதுக்கணக்கு ஆரம்பிக்க துல்லியமான நல்ல நேரம் ஆகும்.

நாட்காட்டிகளில் புதுக்கணக்கு தொடங்க நல்லநேரம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது எந்த ஒரு நல்லசெயலையும் செய்ய ஏதுவான நேரமான பொதுவான முகூர்த்தநேரம்தான். அந்த நேரத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்யலாம்.

ஆனால் நான் இங்கே குறிப்பிடுவது புதுக்கணக்கு எழுவதுவதற்கு மட்டுமேயான, அந்த ஒன்றை மட்டுமே செய்வதற்கான நல்லநேரம் என்பதால் கீழே நான் குறிப்பிட்டுச் சொல்லும் நேரங்களில் புதுக்கணக்கினைத் துவங்குவதன் மூலம் நல்ல லாபங்களை வரும் வருடத்தில் பெறலாம்.

இந்த வருடம் ஏப்ரல்மாதம் முதல்தேதி மங்களகரமாக வெள்ளிக்கிழமை எனும் சுக்கிரனின் கிழமையிலும் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்திலும் ஆரம்பிப்பதால் பொருள் சேர்க்க விரும்புவோருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து லாபத்தை அள்ளித்தரும் என்பதில் சந்தேகமில்லை.

ஹோரை என்பது சூரியஉதயத்தின் அடிப்படையிலானது என்பதாலும் தமிழ்நாட்டின் நகரங்களுக்கிடையே சூரியஉதயம் மாறுபடும் என்பதாலும் புதுக்கணக்கு துவங்க நான் குறிப்பிடும் துல்லியநேரம் என்பது ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

பலன் சொல்வதிலும் நாள்கள் குறிப்பதிலும் கூடுமானவரை பொதுப்படையாக சொல்லாமல் எப்போதுமே நான் துல்லியமாகக் கணிக்க விரும்புவதாலேயே இந்த ஹோரையில் உள்ள சூரிய உதய நேர வித்தியாசத்தைக் குறிப்பீட்டேன்.

பெரும்பாலோர் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் ராகுகால நேரத்தை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. காலண்டர்களில் பத்தரை பனிரெண்டு, ஒன்றரை மூணு எனப்படும் ராகுகால நேரங்கள் சூரிய உதயத்தை ஆறுமணி என பொதுவாகக் கொண்டு கணித்தவைதான். அது துல்லியமானது அல்ல.

உதாரணமாக இன்று சென்னையில் சூரியஉதயம் காலை 6.05 ஆகவும் மதுரையில் உதயம் 6.15 ஆகவும் கோவையில் உதயம் 6.19 ஆகவும் இருக்கும் நிலையில் இன்று வியாழக்கிழமை காலண்டர்களில் குறிப்பிடப்படும் பொதுவான ராகுகால நேரமான 1.30 – 3.00 என்பது சென்னையில் 1.35 - 3.05 ஆகவும் மதுரையில் 1.45 - 3.15 ஆகவும் கோவையில் 1.49 – 3.19 ஆகவும் இருக்கும்.

இதுபோன்ற வித்தியாசங்கள் உள்ள நிலையில் கோவையில் இருக்கும் ஒருவர் இன்றைக்கு ஒன்றரையிலிருந்து மூன்றுமணி வரை மட்டுமே ராகுகாலம் என்று நினைத்துக் கொண்டு ஒரு செயலை 3.10 க்கு ராகுகாலம் முடிந்து விட்டது என்று ஆரம்பிப்பாரேயானால் அவர் ராகுகாலத்தில் தான் செய்கிறார் என்று அர்த்தம்.

மேலும் இந்தவருடம் ஏப்ரல் முதல்தேதி அஷ்டமி, நவமியில் ஆரம்பிக்கிறது என்பதால் சிலர் இப்போது புதுக்கணக்கு துவங்கலாமா என்று குழப்பத்தில் இருப்பார்கள்.

ஹோரை பார்க்கும்போது திதி பார்க்கத் தேவையில்லை என்பது ஜோதிடவிதி என்பதாலும் அஷ்டமி, நவமியை விட ஹோரையே சக்திவாய்ந்த காலக் கணிதம் என்பதாலும் தாராளமாக நான் குறித்துள்ள ஹோரையில் புதுக்கணக்கு துவங்கலாம்.

புதுக்கணக்கு துவங்க துல்லியமான நல்ல நேரங்கள்.

சென்னை மற்றும் சுற்றுப்புற சிறுநகரங்கள் (பாண்டிச்சேரிக்கு இரண்டு, விழுப்புரத்திற்கு மூன்றுநிமிடம் கூட்டிக் கொள்ளவும்)

காலை 7.05 முதல் 8.05 வரை மற்றும் பொதுவான நல்ல நேரமான 10.05 முதல் 10.35 வரை பிறகு மதியம் 2.05 முதல் 3.05 வரை

மதுரை விருதுநகர் தூத்துக்குடி திண்டுக்கல் ஈரோடு மற்றும் சுற்றுப்புற சிறுநகரங்கள் (திருச்சிக்கு மூன்றுநிமிடம் குறைத்துக் கொள்ளவும் )

காலை 7.15 முதல் 8.15 வரை மற்றும் பொதுவான நல்லநேரமான 10.15 முதல் 10.45 வரை பிறகு மதியம் 2.15 முதல் 3.15 வரை

கோவை மற்றும் சுற்றுப்புற சிறுநகரங்கள் (சேலத்திற்கு ஐந்துநிமிடம் குறைத்துக் கொள்ளவும் )

காலை 7.19 முதல் 8.19 வரை மற்றும் பொதுவான நல்லநேரமான 10.19 முதல் 10.49 வரை பிறகு மதியம் 2.19 முதல் 3.19 வரை

நெல்லை, திருப்பூர் மற்றும் சுற்றுப்புற சிறுநகரங்கள் (நாகர்கோவிலுக்கு ஒரு நிமிடம் கூட்டிக்கொள்ளவும்)

காலை 7.17 முதல் 8.17 வரை மற்றும் பொதுவான நல்ல நேரமான 10.17 முதல் 10.47 வரை பிறகு மதியம் 2.17 முதல் 3.17 வரை

வேலூரைச் சுற்றியுள்ள சிறுநகரங்கள் (தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு மூன்றுநிமிடங்கள் கூட்டிக் கொள்ளவும்)

காலை 7.10 முதல் 8.10 வரை மற்றும் பொதுவான நல்லநேரமான 10.10 முதல் 10.40 வரை பிறகு மதியம் 2.10 முதல் 3.10 வரை

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்