ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8286 99 8888
என்னை பின்பற்றுகிற ஜோதிடர்களுக்கும், ஜோதிட மாணவ மற்றும் ஆர்வலர்களுக்கும் தற்போது ஒரு பெருத்த சந்தேகம் எழுந்திருக்கிறது.
பாரம்பரிய முறையில் ஒரு கிரகத்தின் வலுவை அறிவதற்கு முதன்மையாக சொல்லப்படும் என்பதும் ஷட்பலம் என்பதும், இப்போது நீங்கள் சொல்லிவரும் சுபத்துவம் என்பதும் ஒன்றுதானா என்பதுதான் அது.
அதைவிட மேலாக எல்லோரும் நம்புவதைப் போல ஏற்கனவே வேத ஜோதிட விதிகள் “முழுமையாகவும், இறுதியாகவும்” ஆக்கப்பட்டு விட்ட நிலையில் இவர் தற்போது புதிதாக சொல்லுகின்ற சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு விதிகள் எந்த நிலையில் சரியாக இருக்கும் என்பதும் கூட ஒரு சந்தேகம் தான்.
உண்மையில் அனைத்து ஜோதிட முறைகளின் தாயாகிய பாரம்பரிய ஜோதிடம் எனும் இந்த மாபெரும் கலை பல நூற்றாண்டுகளை கடந்திருந்தாலும், அவ்வப்போது மேதமை மிக்க சிலரால் செதுக்கப்பட்டே வந்திருக்கிறது.
ஜோதிடத்தில் எதுவுமே இறுதியான நிலை அல்ல. ஜோதிடத்தின் அடிப்படையான இந்தப் பிரபஞ்சம் வளர்ந்து கொண்டும், விரிந்து கொண்டும் இருக்கும் நிலையில், விஞ்ஞான வளர்ச்சியினால் உலகில் புதிது புதிதாக தோன்றும் பொருட்களுக்கு காரகத்துவம் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருப்பது போல, பரிணாம வளர்ச்சியின் காரணமாக இருப்பதை விட மேம்பட்ட விதிகளையும் ஜோதிடத்தில் நாம் அறியத்தான் வேண்டி இருக்கிறது.
அடிக்கடி நான் எழுதுவது போல மிகப் பெரும்பாலான ஜோதிட விளக்க நூல்கள் உண்மையில் பயனற்றவை. நிஜமான ஜோதிட முறையிலிருந்து மேற்கண்ட நூல்கள் நம்மை திசை திருப்பவே செய்கின்றன.
ஜோதிடத்தை நமக்கு அருளிய ஆதி கர்த்தாக்கள் இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற சில நிச்சய கணக்குகளையும், மூல விதிகளையும் விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றிலிருந்து அவ்வப்போது காலத்திற்கு ஏற்றார் போல எது பொருந்துகிறதோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது மூல விதிகளை நம்முடைய அனுபவத்திற்கேற்ப மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளின் கருத்தாக இருந்திருக்க முடியும்.
அதேநேரத்தில் ஒரு மனிதனின் எதிர்காலத்தை அறிய கூடிய இந்த மாபெரும் இயலில் எந்த ஒரு விதியும் இரண்டும் இரண்டும் நான்கு என்பதைப் போல வெளிப்படையாக, மிகவும் சுலபமாக இருக்கவே முடியாது. அதாவது வெளிப்படையாக மிகச் சுலபமாக தெரியும் ஒரு கணக்கின் மூலமாக ஒரு மனிதனின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் சொல்லிவிட முடியாது. அப்படிச் சொன்னால் அது சரியாகவும் இருக்காது.
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ஷட்பலம் எனப்படும் ஒரு கிரகத்தின் பலனை கணக்கிட உதவும் கணித முறைகளை புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு சாதாரண கூட்டல் கழித்தல் கணக்குகள் தெரிந்திருந்தால் போதுமானது.
ஏதோ ஒரு வகையில் இங்கே எல்லோரும் கல்வி பயின்று இருக்கிறோம். நம்மில் தொண்ணூறு சதவிகிதம் பேர் ஓரளவிற்கேனும் கூட்டல், கழித்தல் எனும் கணித முறைகளை பற்றி தெரிந்துதான் வைத்திருக்கிறோம் ஆகவே எழுதப் படிக்கத் தெரிந்த எவரும் ஜோதிடத்தின் ஆழமான தன்மைகளைப் புரிந்து கொண்டு ஒரு மனிதனின் எதிர்காலத்தை தெளிவாக சொல்ல முடியும் என்ற நிலை இருந்திருக்கலாமே?
ஜோதிடம் என்பது பல்வேறு விதமான சூட்சும பின்னல்கள் அடங்கிய ஒரு காலக் கணிதம். இங்கே நேரடியாக எதையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது. எதிர்காலத்தை புரிந்து கொள்வதற்கான ஒன்று, இங்கே அறிவு என்ற பெயரில் அல்லாமல் ஞானம் என்ற நிலையில் பரம்பொருளால் அருளப்படுகிறது.
ஆகவே பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ஒரு கிரகத்தின் வலுவை கணக்கிட இருக்கும் கணித முறைகளில் முதன்மையான ஷட் பல கணக்குகளை மட்டும் வைத்து நீங்கள் ஒரு கிரகம் என்ன செய்யும் என்பதை உறுதியாக கணிக்கவே முடியாது.
ஷட்பலம் எனப்படும் ஒரு கிரகத்தின் தன்மையை அறிவதற்கான ஆறுவித பலங்களில், முதன்மையாக ஸ்தான பலம், திக்பலம், திருக் பலம், கால, அயன, சேஷ்ட பலம் எனும் ஆறு விதமான பலங்கள் சொல்லப்பட்டாலும், இந்த ஆறு நிலைகளுக்கும் உப பிரிவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவைகள் அனைத்தும் ஒரு கிரகத்தின் வலிமையை கணிக்கவே தவிர, அந்தக் கிரகம் என்ன நல்ல, கெட்ட பலனைத் தரும் என்பதைக் குறிப்பதற்காக அல்ல.
என்னுடைய கடந்த கால ஆய்வுக் கட்டுரைகளில் பாப கிரகங்களான சனி, செவ்வாய் வலிமை பெற்றால் அந்த ஜாதகருக்கு தன்னுடைய “தன்மை”களைத் தருமே தவிர “நன்மை” களை அல்ல என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்ற சில விஷயங்களை இடையில் வந்த ஜோதிடர்களாலும், நம்முடைய ஞானக் குறைவாலும் நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோமே தவிர இங்கே எந்த ஒரு இடத்திலும் கிரகங்கள் வலுப்பெற்றால் நன்மையைத் தரும் என்று சொல்லப்படவே இல்லை. இதை ஒட்டித்தான் ஷட்பல கணிதத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
உண்மையைச் சொல்லப் போனால் வேத ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிற “கணிதங்கள்” பலன் சொல்வதற்கு பயனற்றவை. அவைகள் நம்மை திசை திருப்புகின்றன. ஒரு நிச்சயமற்ற உறுதியில்லாத அமைப்புகளையே அவை நமக்கு காட்டுகின்றன.
அதாவது ஒருவரின் ஜாதகத்தில் ஏழில் செவ்வாய் இருந்தால் இந்த பலன் என்கின்ற ஒரு வெறும் “கணிதம்” நிச்சயமாக உறுதித்தன்மை அற்றது என்பது நமக்குத் தெரியும். அதாவது ஏழில் செவ்வாய் இருப்பதினாலேயே ஒருவருக்கு திருமண வாழ்க்கையில் இதுதான் நடக்கும் என்பதை நூறு சதவிகித துல்லியத்துடன் சொல்லிவிட முடியாது. இதைத்தான் ஜோதிடம் எண்களுக்குள் மட்டும் இல்லை என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.
ஏழில் இருக்கும் செவ்வாய் எந்த பாவகத்தில் இருக்கிறார், அவர் இருக்கும் வீடு எத்தகைய தன்மையது, அவர் யாருடன் சேர்ந்திருக்கிறார், அந்த லக்னத்திற்கு செவ்வாய் எந்த ஆதிபத்தியத்தை தர விதிக்கப்பட்டவர், செவ்வாய் இங்கே சனி, ராகுவோடு சேர்ந்தருக்கிறாரா அல்லது குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரனின் தொடர்புகளில் இருக்கிறாரா என்பது போன்ற சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு அமைப்புகளுக்குள்தான் அந்த செவ்வாய் செய்யப்போகும் நல்ல, கெட்ட விளைவுகள் இருக்கின்றன.
ஆனால் ஷட்பலம் என்ற பெயரில் நமக்குச் சொல்லப்படும் கணிதங்கள், ஒரு கிரகத்தின் வலுவை மட்டும்தான் குறிக்கிறதே தவிர, அக்கிரகத்தின் ஆதாரத் தன்மையை அல்ல.
என்றோ ஒரு நாள் யாரோ ஒருவர் ஆராயாமல் சொன்ன சில கிரக நிலைகளை, அவர் ஒரு சித்தர் அல்லது முனிவர் என்ற பெயரில் சொல்லியிருக்கிறார் என்பதற்காக இன்று ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஆழமாக சிந்தித்து பார்ப்போமேயானால், இங்கே விளக்க நூல்கள் அல்லது கணித முறைகள் என்று சொல்லப்படும் சில நிலைகள், ஒரு ஜாதகத்தின் உண்மையான பலனை சொல்வதற்குப் பதிலாக தவறான நிலையையே சொல்லுகின்றன.
உதாரணமாக ஷட்பல நிலையில் ஒரு கிரகம் பெறும் வலிமை ரூபம் எனும் அளவில் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஒருவருடைய வாழ்க்கை அமையும் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஷட்பல வரிசையில் ரூபம் கணக்கில் முதலிடத்தை பெறும் கிரகம் உங்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைச் செய்யும் எனவும், தர வரிசையில் ரூபம் கணக்கில் குறைவான மதிப்பெண்களைப் பெறும் கிரகம் உங்களுக்கு கெடுதல்களைச் செய்யும் எனவும் நம்முடைய விளக்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ரூபம் எனும் மதிப்பை அதாவது குறைவான மதிப்பெண் பெறும் கிரகம் ஒருவருக்கு நல்ல பலனைத் தராது என்று விளக்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ரூபம் கணக்கில் குறைந்த நிலை பெறும் கிரகத்தின் காரகத்துவங்கள் உங்களுக்கு கிடைக்காது என்பது இதன் உட்பொருள்.
மேலும் ஷட்பலத்தில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே இடம் இருக்கிறது, ராகு- கேதுக்களுக்கு இதில் இடமில்லை. இது ஏன் என்பதையும் ஒருமுறை விளக்கியிருக்கிறேன்.
அதாவது சூரியன் உள்ளிட்ட ஏழு கிரகங்களும் நெருப்பு, வாயு, கல், மண், நீர் போன்ற பஞ்சபூத நிலைகளால் உருவாகி இருக்கும் பொழுது, இதுபோன்ற பருப்பொருள் அற்ற நிழல் கிரகங்களான ராகு- கேதுக்களுக்கு மற்ற கிரகங்களின் கணித விதிகள் பொருந்தாது. ராகு-கேதுக்கள் தனியானவை. அவைகளை எந்த நிலையிலும் மற்ற கிரகங்களோடு ஒப்பிடவே முடியாது என்பதுதான் உண்மை. ஆகவே ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஷட்பல கணக்குகள் சொல்லப்பட்டுள்ளன.
நவீன காலத்திற்கு ஏற்ப, அனைவரும் முழுமையாக ஏற்றுக் கொள்ளக்கூடிய, நூறு சதவிகிதம் துல்லியமான சில ஜோதிட விதிகளை தற்போது சொல்லிக் கொண்டிருக்கும், வேத ஜோதிடத்தின் மாண்பை ஓரளவு புரிந்து கொண்டிருக்கும் ஞானமுள்ள எனக்கு, ஷட்பல வரிசையில், ஜோதிட காரகனும், என்னுடைய லக்னாதிபதியுமான புதன் கடைசி நிலையான ஏழாமிடத்தில் இருக்கிறார்.
அதாவது புதன் கிரகம் என்னுடைய ஜாதகத்தில் ஷட்பல கணக்குகளில் மிகவும் வலிமை அற்ற ஒரு தன்மையில் இருக்கிறது.
வாழ்நாள் முழுவதையும் ஜோதிட ஆய்வுகளிலேயே கழித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஜாதகத்தில் ஜோதிட காரகனாகிய புதன் நீச்ச நிலையில், லக்னாதிபதியாக அமர்ந்து, ஷட்பல வரிசையில் மிகவும் வலிமை இழந்த கடைசி ஏழாவது கிரகமாக இருக்கிறார். அப்படியானால் புதனின் முதன்மை ஞான காரகமான ஜோதிட அறிவு எனக்கு எப்படி வந்தது?
மிக நீண்ட என்னுடைய ஆய்வுகளுக்குப் பிறகு, ஒருவரின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ, அந்தக் கிரகத்தின் எண்ணங்களும், தொழிலும் அந்த ஜாதகருக்கு அமையும் என்பதை 100% உறுதியாகச் சொல்லுகிறேன். இதை கணக்கற்ற ஜாதகங்களில் நிரூபித்துக் கொண்டும் இருக்கிறேன். நமது வேத ஜோதிடம் சொல்லும் பத்தாமிட தொழில் விதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டது இது.
எனது ஜாதகத்தில் ஷட்பல வரிசையில் ஜோதிட கிரகமான புதன் கடை நிலையில் இருந்தாலும், தற்போது நான் சொல்லி வரும் விதிகளின்படி அதி உயர் நிலையில் சுபத்துவமாக இருக்கிறார்.
அதாவது எனக்கு மிதுன லக்னமாகி, லக்னாதிபதி புதன் நீச்சம் அடைந்திருந்தாலும், குருவின் வீட்டில், உச்ச சுக்கிரனுடன் இணைந்து, கூடுதலாக சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனை ஆகியிருக்கும் நிலையில், மறைமுகமாக குருவோடு இணைந்து வர்க்கோத்தம நிலையிலும் இருக்கிறார். (25-3-1965, காலை 11-55, மதுரை.)
இந்த அமைப்பின்படி எனது ஜாதகத்தில் புதன் உயர்நிலை சுபத்துவமாக அமைந்து, சிறுவயது முதல் ஜோதிடம் மட்டுமே ஆர்வம் என்றாகி, தற்போது ஜோதிட புதிர்களை அவிழ்த்து சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஆசானாக உங்களின் முன் நிற்கிறேன்.
இந்த நிலை ஒன்றே போதும் ஷட்பல கணக்குகள் என்பவை சாதாரணமான கணிதங்கள் தானே தவிர, ஆழ்ந்து சிந்தித்து வேத ஜோதிடத்தில் கிரகங்களின் உண்மை நிலையை சொல்லித் தருபவை அல்ல என்பதை அறிவதற்கு.
உண்மையில் ஷட்பல கணக்குகள் ஒரு கிரகத்தின் வலிமையை அறிவதற்காகத் தானே தவிர அது எதைதரும் என்பதற்காக அல்ல.
பட்டவர்த்தனமாக சொல்லப்போனால் வேதஜோதிடம் உண்மையில் மிக எளிமையானது. புரிந்துகொண்டால் மகா சுலபமானது. அறைகுறை அறிவுள்ள சிலர் தலையை சுற்றி மூக்கை தொடும் சில கணக்குகளை இதில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மூலநூல்களில் 30 சதவிகிதம் மட்டுமே உண்மை, 70 சதவிகிதம் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டவை என்பதை அடிக்கடி நான் சொல்லி வருகிறேன். இனிவரும் காலங்களில் ஜோதிடத்தை அறிவதற்கு கொடுத்து வைத்திருக்கும் இளைய தலைமுறையினர் மட்டுமே, இதுபோன்ற வேண்டாதவைகளை விலக்கி தேவையான விதிகளை மீண்டும் ஒருமுறை எழுத முடியும்.மீண்டும் அடுத்த வெள்ளி சந்திக்கலாம்.
மாலைமலரில் 25.12.2020 அன்று வெளிவந்தது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.