adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
my cart
சுக்கிரனின் பாபத்துவம் – (E-016)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 8286 99 8888
சுக்கிரனின் சுபத்துவ-பாபத்துவ அமைப்பிற்கு உதாரணமாக சென்ற வாரம் கொடுத்திருந்த ஜாதகத்தின் முழுமையான விளக்கத்தினை தற்போது பார்க்கலாம். `

கீழே உதாரண ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன்.

நான்காம் அதிபதி செவ்வாய் உச்சமாகி பாபத்துவம் அடைந்துள்ளதாலும், கல்விக்காரகன் புதன் நீச்ச அமைப்பில் உள்ளதாலும், நான்காம் பாவகத்திற்கு சுபத்தொடர்புகள் கிடைக்காததாலும், குறைந்த அளவே படித்துள்ள இந்த ஜாதகர் மார்ச் 23, 1990, அதிகாலை 3 மணி 17 நிமிடத்திற்கு தஞ்சையில் பிறந்திருக்கிறார்.  

மகர லக்னத்தில் பிறந்துள்ள இவருக்கு லக்னத்திலேயே சுக்கிரன், சனி, செவ்வாய், ராகு, சந்திரன் ஆகியோர் இணைந்திருக்கிறார்கள்.  

இன்னும் மூன்று நாட்களில் அமாவாசை ஆகக்கூடிய நிலையில், கடுமையான இருளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும், தனது வட்ட வடிவை இழந்துள்ள, பாபத்துவமான சந்திரன் 16 டிகிரியில் இருக்க, அவருடன் 6 டிகிரிக்குள் இணைந்து, மகரத்தின் 22 வது டிகிரியில் தனக்கு நண்பரான சனியின் வீட்டில் நட்பு நிலையில் சுக்கிரன் இருக்கிறார்.

மேலும் முதல்நிலை ஸ்தான பலமான உச்ச நிலையில் 14 டிகிரியில் இருக்கும் செவ்வாயுடன் 8 டிகிரி தூரத்திலும், தனது சுய வலுவுடன் செயல்படும் தன்மையை பெறும் 20 டிகிரியில் உள்ள மகர ராகுவுடன், மிக நெருக்கமாக நான்கு டிகிரிக்குள்ளும்  இணைந்து கடுமையான கிரகண நிலையில் இருக்கிறார்.

இவர்கள் அனைவரையும் விட்டு விலகி 15 டிகிரிக்கு அப்பால் உள்ள நிலையில் அதாவது அப்போதுதான் 0 டிகிரியில் ராசிக்குள் நுழைகின்ற அமைப்பில் சனி தன்னுடைய ராசிகளுள் முதன்மையான சர வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார்.  

ஜோதிடம் என்பது மிக நுணுக்கமான கலை என்பதால் மேற்கண்ட பாராவில் நான் கொடுத்திருக்கும் ஸ்தான பலம், சர வீடு, மகர ராகு, நட்பு நிலை என்பதையும் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒரு கிரகத்தின் சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு நிலைகளை புரிந்து கொண்டு, அந்தக் கிரகம் எத்தகைய தன்மையில், என்ன பலன் தரும் நிலையில் இருக்கிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

மேற்கண்ட ஜாதகர் ரயில்வே துறையில் கடைநிலை ஊழியராக இருக்கிறார். ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமான கிரகத்தின் தொழில் அமையும் எனும் என்னுடைய விதிப்படி, இந்த ஜாதகத்தில் ரயில்வே துறையில் கடைநிலை அமைப்பைக் குறிக்கும்  காரண கிரகங்களான சனி, செவ்வாய் இருவரும் இணைந்த நிலையில், சனியே அதிக சுபத்துவமுள்ள கிரகமாகி, தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தோடு பார்வை என்னும் தொடர்பை பெற்றிருக்கிறார்.  

சனியின் சுபத்துவம் இங்கே சுக்கிரனால் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சனிக்கும் சுக்கிரனுக்கும் 20 டிகிரி அளவில் வித்தியாசம் இருக்கிறது. ஒரு நிலையில் இங்கே செவ்வாய்தானே சுக்கிரனோடு மிக நெருக்கமான நிலையில் இருக்கிறார், நீங்கள் சனியே அதிக சுபத்துவம் என்று சொல்கிறீர்களே என்ற சந்தேகம் எழலாம்.

செவ்வாய் ஸ்தான பலத்தோடு சுக்கிரனுக்கு 8 டிகிரிக்குள் இணைந்திருந்தாலும் அங்கே முதல் நிலை பாபரான ராகுவோடு 6 டிகிரிக்குள்ளும் இணைந்து கடுமையான பாபத்துவத்தை அடைந்து பலவீனமாகி அதன் பிறகே சுக்கிரனால் சுபத்துவப் படுத்தப் பட்டிருக்கிறார்.

ஆனால் சனி அவ்வாறில்லை. சனிக்கும் ஆட்சி என்கின்ற மூன்றாம் நிலை ஸ்தான பலம் உள்ளது. (உச்சம் முதல் நிலை, மூலத்திரிகோணம் இரண்டாம் நிலை) மிக முக்கியமாக அவர் ராகுவோடு 20 டிகிரி அளவில் விலகி இருக்கிறார். எனவே இந்த ஜாதகத்தில் முறையான நிலையில் அதிக சுபத்துவம் பெற்ற கிரகம் சனியாகவே கொள்ள வேண்டும்.

ரயில்வேத்துறை என்பது நிரந்தரமான ஒரு வேலையை தரக்கூடியது. மேலும் அது அரசு சம்பளம் வாங்கக்கூடிய அமைப்பு. இவரது ஜாதகத்தில் 3, 6-க்குடைய குருவும், புதனும் பரிவர்த்தனை அடைந்த நிலையில், ஒருவருடைய வேலையை குறிக்கக்கூடிய ஆறாம் இடம் குருவின் இருப்பால் நல்ல நிலையில் இருக்கிறது.  

மேலும் ஆறில் இருக்கின்ற குரு, ஜீவன ஸ்தானமான 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். மறைமுகமாக தனது பரிவர்த்தனை நிலையால் சூரியனோடு இணைகிறார்.  மேலும் சூரியன் குருவின் வீட்டில் சுபத்துவமாக இருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் ஆறு, பத்தாமிடங்கள் வலுவாகின்றன.

இந்த ஜாதகருக்கு பதினொரு வயது முதல் ராகு தசை நடப்பதால் கல்வியைக் கெடுத்து, சனியின் சுபத்துவத்தால் ரயில்வே துறையில் கடைநிலை ஊழியராக்கி இருக்கிறது. அடுத்து சரியான பருவத்தில் ஆறாமிடத்தில் தனித்திருக்கும், அதே நேரம் நவாம்சத்தில் தன்னுடைய சொந்த வீடான தனுசில் இருக்கும் குருவின் தசை நடக்க உள்ளதாலும், அதனை அடுத்து ஓரளவிற்கு சுபத்துவம் உள்ள லக்னாதிபதி சனியின் தசை நீடிக்க உள்ளதாலும், இவர் குறைந்த அளவு சம்பளம் வரக்கூடிய அரசு நிறுவனமான ரயில்வே துறையில் கடைநிலை ஊழியராக இருக்கிறார்.  

இந்த ஜாதகருக்கு ராகு தசை, சுக்கிர புக்தி, சனி அந்தரத்தில் திருமணம் நடந்தது. திருமணம் ஒரு மாதம் மட்டுமே நிலைத்தது. இவரது மனைவி தற்போது விவாகரத்து வாங்கிச் சென்று விட்டார்.  

இந்த இடத்தில் ஒன்றைக் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும். இவருக்கு சுக்கிர தசை நடந்திருந்தால் திருமணமாகி இருக்காது. இணைந்த கிரகங்களின் இயல்பை தந்தாக வேண்டிய ராகுவின் தசை நடந்ததால் இவருக்கு திருமணம் ஏற்பட்டது.  

இதைக் குறிப்பாக ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் சென்றவாரம் சமூக வலைத்தளத்தில் வெளிவந்த இந்த கட்டுரையில் ஒரு சகோதரி இவரின் மனைவியை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எது எப்போது நடக்கும் என்ற ஜோதிடப் புரிதலின்படி இவருக்கு சுக்கிர தசை நடந்தால் மட்டுமே அவரது மனைவியைப் பற்றி நாம் ஆராய வேண்டும் குறிப்பாக சுக்கிர தசை நடந்தால் மட்டுமே சரியோ, தவறோ ஒரு மனைவி ஏதோ ஒரு நிலையில் இருக்க முடியும்.  

ஆனால் நடப்பது நான்கு  கிரகங்களுடன் இணைந்திருக்கின்ற, நான்கு கிரகங்களின் கலப்பு பலன்களையும் தர வேண்டிய ராகு தசை என்பதால், எந்த தசா புத்தியில் எந்த கிரகத்தின் பலன்கள் எப்படி நடக்கும் என்பதை யூகிப்பதே ஜோதிடம் அறிந்தவரின் மேதமையாக இருக்க முடியும்.

ராகு என்பவர் தன்னுடன் இணைந்த, தன்னைப் பார்த்த, தான் இருக்கும் வீட்டின் அதிபதி, மற்றும் தனக்கு கேந்திரங்களில் இருக்கக்கூடிய கிரகங்களின் தனமையை தன்னுடைய தசையில் செய்யும் கிரகம் என்பதால், எப்பொழுதும் ராகுவின் தசையில், ஒவ்வொரு கிரகங்களின் புக்திகளிலும், புக்தி நாதர்களின் இயல்பான விஷயங்கள், தசா நாதனான ராகுவின் அனுமதிக்கப்பட்ட தன்மையில் கிடைக்கும்.  

இந்த நிலையினை தசா நாதன் எவராக இருந்தாலும், தசை நடக்கும் பொழுது புக்தி நாதர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பொருத்து நாம் உணர முடியும்.  

ராகு தசை புதன் புக்தியில் இவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைத்திருக்கிறது. ஆறாம் அதிபதி ஒருவர் வேலை செய்வதை குறிக்கக்கூடிய கிரகம். இங்கே ஆறாம் அதிபதி புதன் என்பதாலும், புதன் நீச்ச நிலையில் இருந்தாலும், பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதாலும், அடுத்தடுத்து ஓரளவிற்கு நல்ல தசைகள் வர இருப்பதாலும், புதனின் புக்தியில் ஒரு நிரந்தரமான ஜீவன அமைப்பு வேண்டும் என்பதற்காக ரயில்வேயில் கடைநிலை வேலை கிடைப்பதற்கு ராகு அனுமதித்திருக்கிறார்.  

சுக்கிர புக்தியில், குடும்ப, லக்னாதிபதி சனியின் அந்தரத்தில் இவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. திருமண நாளிலிருந்து சில நாட்கள் வரை தாம்பத்தியத்திற்கான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.  காமத்திற்கு அதிபதியான சுக்கிரன் பாதிக்கப்பட்டு, மனோகாரகனாகிய சந்திரனும் இருளடைந்த நிலையில் உள்ள இவருக்கு, பெண்ணைப் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினாலும், பதட்டத்தினாலும் உறவில் ஈடுபட இயலாத நிலை இருந்திருக்கிறது.  

இதுவும் ஒரு வகையில் ஆண்மைக் குறைவு தான். ஆனால் இவர் உடல்ரீதியாக அனைத்திற்கும் தகுதியானவர்.  இந்த முரண்பட்ட நிலைக்கு லக்னாதிபதியான சனி லக்னத்திலேயே அமர்ந்து ராகுவிடம் இருந்து விலகி இருப்பதும் ஒரு காரணம். அதைப்போலவே லக்னம் கடுமையான பாபத்துவத்தை அடைந்திருந்தாலும் சுக்கிரன் இருப்பதால் லக்னம் ஓரளவு சுபத்துவத்தை அடைந்துள்ளது இன்னொரு காரணம்.  

உண்மையில் இந்த ஜாதகருக்கு பெண்களைப் பற்றிய பயமும், தன்னால் ஒரு பெண்ணுக்கு சுகம் தர முடியாது என்கின்ற தாழ்வு மனப்பான்மையும் அதிகமாக இருக்கிறது. மருத்துவ முறைகளிலும் இவருக்கு ஆர்வம் இல்லை.  பயத்தின் காரணமாக ஜாதகருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.  இனி இவருக்கு திருமணமும் நடக்காது.

ஏனெனில் களத்திரகாரகனாகிய சுக்கிரனே, இங்கே ஐந்தாம் அதிபதியாகி, மிகவும் பலவீனமான நிலையில், புத்திர ஸ்தானமான 5-ஆம் இடத்திற்கு சுபத் தொடர்புகள் கிடைக்காததாலும், புத்திரகாரகன் குரு ஆறில் மறைந்தாலும் இவருக்கு குழந்தை பாக்கியமும் இல்லை.  

எனவே ஏழாம் அதிபதி இருளடைந்து, ஐந்தாம் அதிபதி கெட்டு, களத்திரகாரகன் வலுவிழந்து, புத்திரகாரகன் மறைந்த இந்த ஜாதகத்திற்கு மனைவி, குடும்பம், குழந்தைகள் போன்ற அமைப்பு துளியும் கிடையாது. அடுத்தடுத்து நடக்கின்ற தசா புக்தி அமைப்புகளும் இவற்றை தெளிவாகக் காட்டுகின்றன.  

அதே நேரத்தில் ஆறு, பத்தாமிடங்கள்  சுபத்துவ அடிப்படையில் வலுவாக இருப்பதால் இவர் நிரந்தரமான ஒரு வேலையில் உணவு, உறைவிட பஞ்சமின்றி கடைசிவரை அடுத்தவர் கையை எதிர்பார்க்காத நிலையில் இருப்பார்.

மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒரு காரகத்தைத் தரும் மாபெரும் இயற்கை சுப கிரகமான சுக்கிரன் கடுமையான ஒரு நிலையில் வலுவிழந்ததால் ஏற்படுகின்ற ஒரு நிலை இது. நான் தற்போது சொல்லிவரும் பாவக சுபத்துவ அமைப்புகளும் இந்த ஜாதகத்தில் சரியாக பொருந்தி வருவதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.  

எந்த ஒரு நிலையிலும் ஒருவருக்கு 12 பாவகங்களும் சுபத்துவமாக அமைவது இல்லை. அப்படி அமையும் ஒருவர் பரம்பொருளாக இருப்பார்.  நிச்சயம் அவரால் மனிதனாக இருக்க முடியாது. எந்த பாவகம் உங்களுக்கு பாபத்துவமாக இருக்கிறதோ அந்த பாவகத்தின் மூலமான பலன் உங்களுக்கு குறையும்.  அதே நேரத்தில் அந்த பாவக காரகத்தை தரும் கிரகமும், அதிபதியும் பாபத்துவ  நிலையில் இருந்தால் உங்களுக்கு அந்த பாவக அமைப்பு வாழ்வில் கிடைக்காது. மேற்கண்ட நிலைக்கு இந்த முப்பது வயது வாலிபரின் ஜாதகமும் உதாரணமாக இருக்கும்.  

தற்போது இவருக்கு 30 வயதுதான் ஆகிறது. எதிர்காலத்தில் இவருக்கு மனம் மாறி திருமணம் ஏற்படலாம் இல்லையா என்று நீங்கள் என்னைக் கேட்பீர்களே ஆனால், உங்களுக்கு வேத ஜோதிடத்தைப் பற்றிய புரிதல் அவ்வளவுதான் என்று நினைப்பேன்.  இந்த இளைஞரிடம் பேசிப் பார்க்கும் பொழுதுதான் உங்களுக்கு ஜோதிடத்தின் மகா அற்புத நிலைகள் துல்லியமாக புரியவரும்.  மீண்டும் அடுத்த வெள்ளி சந்திக்கலாம். 

மாலைமலரில் 11.12.2020 இன்று வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.