ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8286 99 8888
வேத ஜோதிடத்தில் மூல ஒளிக் கிரகங்களான சூரியனையும், சந்திரனையும் தவிர்த்து அதனையடுத்த சுப ஒளி பிரதிபலிப்பு கிரகங்களான குருவும், சுக்கிரனும் மிகவும் இன்றியமையாதவை.
ஒரு யோக ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் வலுவாக இருப்பார்கள் என்பது ஒரு மறைமுகமான விதி.
சூரியனுக்கு அடுத்த மிகப்பெரிய உருவத்தினை கொண்ட, சூரியனின் ஒளியை இரண்டு மடங்காக திரும்ப பிரதிபலிக்கின்ற குரு, ஜோதிடத்தில் முதன்மை சுபராக சொல்லப்படும் நிலையில், அளவில் சிறியதாக இருப்பதன் காரணமாக சுக்கிரன் இரண்டாம் நிலை சுபர் ஆகிறார். ஆயினும் சூரியனுக்கு மிக அருகே சுக்கிரன் இருக்கும் காரணத்தினால் சுக்கிரனின் ஒளி அளவு அதிகமாக இருப்பது போல நமக்குத் தோன்றுகிறது.
மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு மிகப்பெரிய அமைப்பான பனிரெண்டு லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சத்தை அடையும் ஒரே கிரகம் என்ற ஒரு சிறப்பு சுக்கிரனுக்கு மட்டுமே இருப்பதால் ஏதோ ஒரு வகையில் சுக்கிரன் ஒரு தனித்துவமான கிரகம் என்பதே உண்மை.
ஒரு கிரகத்தின் ஈர்ப்பு விசை மற்றும் அது சூரியனிடமிருந்து பெறும் ஒளியின் அடிப்படையில் அதனுடைய உச்ச, மூலத்திரிகோண, ஆட்சி, நட்பு, சமம், பகை, நீச்ச வீடுகள் அமைகின்றன.
சுக்கிரனின் முழுமையான சுபத்துவம் அது மீனத்தில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு கிடைக்கிறது. மீனத்தில் ஒளி பொருந்திய நிலையில் இருக்கும் உச்ச சுக்கிரன், கடகத்தில் உள்ள உச்ச குருவிற்கு 50 சதவிகித அளவிற்கு சுபத்துவத்தை தரக் கூடிய நிலையில் இருப்பார்.
எந்த ஒரு நிலையிலும் சுக்கிரனால் குருவை மிஞ்சிய சுபத்துவத்தை தர இயலாது.
சுபத்துவ, பாபத்துவ படிநிலைகள் என்பது ஒரு ஜாதகத்தின் தராதரத்தை அளவிடுவதற்கு மிகவும் அவசியம் என்பதால் குருவுக்கும் சுக்கிரனுக்கும் உள்ள ஒளி மதிப்பீடு அளவுகளை ஓரளவிற்கேனும் ஒரு ஜோதிடர் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு ஜாதகத்தில் உள்ள குறைகளை குருவின் பார்வை அல்லது இணைவு முழுமையாக களையும் என்றால், அதே குறையை சுக்கிரன் இணைவு அல்லது பார்வை பாதி அளவு குறைக்கும் என்பதே உண்மை.
சுக்கிரனின் முழுமையான சுபத்துவ நிலை அதன் உச்ச வீடான மீனம், அதனை அடுத்த நிலை மூலத்திரிகோண வீடான துலாத்தில் அமைகிறது. மூன்றாவதாக சுக்கிர வலு ஆட்சி வீடான ரிஷபத்தில் இருக்கும். சனியின் சர வீடான மகரத்தில் சுக்கிரன் அதிநட்பு நிலையிலும், சனியின் ஸ்திர வீடான கும்பம் மற்றும் புதனின் மிதுனத்தில் நட்பு நிலையிலும் அமைவார்.
குருவின் மீன வீடு உச்சம் என்கின்ற நிலையை அடைவதால் இன்னொரு வீடான தனுசு அவருக்கு நட்பும் பகையும் அல்லாத சமமாக அமையும். மீதம் இருக்கின்ற, சுக்கிரன் எப்போதும் பகைவர்களாக கருதும் சூரிய சந்திரனின் வீடுககளான கடகம், சிம்மம் பகையாகவும், கன்னி நீச வீடாகவும் சுக்கிரனுக்கு அமையும். இதில் இறுதியாக உள்ள செவ்வாயின் மேஷ விருச்சிக வீடுகள் அவருக்கு பகையும் சமமும் கலந்த நிலையில் உள்ளவை.
மேற்கூறிய இவை அனைத்தும் என்னுடைய நீண்ட கால ஜோதிட ஆய்வின் அடிப்படையில் நான் உணர்ந்தவை.
பொதுவாகவே மூல நூல்களில் கிரகங்களின் நட்பு, பகை வீடுகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் இன்றைய பஞ்சாங்கங்களில் இவைகளைப் படித்தால் அனைவருக்கும் தலை சுற்றிப் போகும். அந்த அளவு குழப்பங்கள் கிரகங்களின் நட்பு, சம, பகை வீடுகளில் உள்ளன.
இப்போது நான் குறிப்பிடும் இந்த கிரகங்களின் நிலைகள் அவைகள் சூரியனைச் சுற்றி வரும் வான்கோள பாதையையும், பூமி மற்றும் சூரியனுக்கு அவர்கள் நெருங்கிவரும் ஒளிவீச்சு நிலையையும் குறிப்பவை.
மேற்கண்ட சுக்கிரன் தனித்து இருக்கும்பொழுது ஒரு நிலையில் குரு, எத்தகைய சுபத்துவத்தை தருவாரோ, அதாவது உச்ச, நீச்ச, நட்பு நிலைகளில் குரு எத்தகைய சுபத்துவத்தை தருவாரோ அதில் பாதி அளவு சுபத்துவ படிநிலைகளை தருவார்.
இதனை நீங்கள் கடகத்தில் இருக்கும் குரு 100% நற்பலனை தருவார் எனில் மீனத்தில் இருக்கின்ற சுக்கிரன் 50 சதவிகித நற்பலனை தருவார் எனும் அமைப்பில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நான் சுபத்துவ, பாபத்துவ படிநிலை அமைப்பு என்று சொல்லுகிறேன்.
இந்த சூட்சுமத்தை நீங்கள் புரிந்து கொள்ளும் அமைப்பில்தான் ஒருவரின் சம்பாத்தியம் என்று சொல்லப்படக்கூடிய வருமான அளவுகள் அளவுகளை துல்லியமாக கணிக்கமுடியும்.
ஒருவர் ஒரு தொழிலில் பத்துக் கோடி சம்பாதிப்பாரா அல்லது ஆயிரம் கோடிகளை சம்பாதித்து மெகா கோடீஸ்வரர் ஆவாரா எனும் கேள்விக்கான விடை நான் மேலே கூறிய சுபத்துவ படிநிலை அமைப்பில் தான் இருக்கிறது.
செவ்வாயுடன் குரு கூடும் போது ஏற்படக்கூடிய ஒரு நிலையில் அங்கே குருமங்கள யோகம் எனப்படும் மிகப்பெரிய யோகம் உண்டாகி, அந்த ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை பொருத்து செவ்வாயால் அந்த ஜாதகருக்கு சுபத்துவ பலன்கள் இருக்கும்.
உதாரணமாக மேற்கண்ட குரு, செவ்வாய் இணைந்திருக்கும் ஜாதகர், காவல்துறையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக, மாவட்ட கண்காணிப்பாளர் என்ற நிலைக்கு மேலாக இருக்கும் நிலையில், செவ்வாய், சுக்கிரன் இணைந்திருக்கும் பிருகு மங்கள யோகத்தை கொண்ட ஒருவர் காவல்துறை ஆய்வாளர் என்று சொல்லப்படக்கூடிய இன்ஸ்பெக்டராக இருப்பார். இதனை பலநூறு ஜாதகங்களில் பார்த்து உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள இயலும்
காவல்துறைதான் என்றில்லை, செவ்வாயின் இன்னொரு துறையான மருத்துவத்திலும் ஒரு மருத்துவரின் வருமானம், தொழில் நேர்த்தி போன்றவைகளையும் இதே போன்ற சுபத்துவ நிலைகள்தான் நிர்ணயிக்கின்றன. செவ்வாய் குருவால் சுபத்துவம் அடைந்த ஒரு மருத்துவர், தொழிலின் மூலமாக மிக அதிக வருமானம் உடையவராக இருக்கின்ற நிலையில், சுக்கிரனால் சுபத்துவம் அடைந்தவர் குறைவான வருமானம் உடையவராக இருப்பார்.
இந்த இருவராலும் செவ்வாய் சுபத்துவப்படுத்தப்படாமல் செவ்வாயின் வெறும் ஸ்தான பலத்தின் அடிப்படையிலோ அல்லது சிம்மத்தில் செவ்வாய் இருப்பதால் மட்டுமே இருக்கின்ற ஒரு மருத்துவர் வருமானமே இல்லாதவராக இருப்பார்.
இப்போது நான் சொல்லும் சூட்சும விஷயங்கள் சுபத்துவ பாபத்துவ அமைப்பின் மிக உயர்நிலை புரிதலாக இருக்கும்.
உண்மையில் ஜோதிடத்தில் எனது அனுபவத்தாலும், பரம்பொருள் கொடுத்த ஞானத்தாலும் நான் புரிந்து கொண்டிருக்கும் சில விஷயங்களை நீங்கள் அப்படியே புரிந்து கொள்ளமுடியும் என்பது இயலாத ஒன்றுதான். ஆயினும் ஊதுகிற சங்கை ஊதி வைப்போம், என்றாவது ஒருநாள் எவருக்காவது கேட்கும் என்கின்ற அடிப்படையிலேயே மேற்கண்ட இந்த விஷயத்தை இப்போது நான் விளக்குகிறேன்.
இப்போது நான் சொல்லுகின்ற சில சுபத்துவ பாபத்துவ படிநிலை விஷயங்கள் புரிந்து கொள்ள கடுமையானவை. இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒருவரேனும் எனது கருத்துக்களை அப்படியே முழுமையாக உள்வாங்க முடிந்தால் இந்த உலகில் நான் ஒருவனே பாக்கியவான் ஆவேன். எனது சொல்லிக்கொடுக்கும் உத்தியும் மிகவும் சரியானதாக இருக்கும்.
சுக்கிரனின் அமைப்பைப் போலவே குருவின் சுபத்துவ நிலையும் உச்சம், மூலத்திரிகோணம், அதிநட்பு, நட்பு, சமம், பகை, நீச்சம் போன்றவைகளுக்கு உட்பட்டது.
குருவின் முதல் நிலை சுபத்துவ வீடாக கடகம் அமைய, இரண்டாம் நிலை சுபத்துவம் அவரது மூலத்திரிகோண வீடான தனுசுவில் அமைகிறது. அதனை அடுத்த அதிநட்பு நிலை குருவிற்கு சிம்மத்தில் அமைய, செவ்வாயின் மேஷம், விருச்சிகம் ஓரளவிற்கு சுபத்துவம் உள்ள நட்பு வீடுகள் ஆகின்றன.
சனியின் கும்பமும், தனக்கு முழுமையான எதிர்த்தன்மையுள்ள சுக்கிரனின் ஸ்திர வீடான ரிஷபமும் குருவிற்கு சம வீடுகள். இது ஒரு வினோதம், மற்றும் ஒரு முரண்பாடு. இதுபற்றிய முழுமையான விபரங்களை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். மீதமுள்ள துலாம், மிதுனம், கன்னி ஆகிய மூன்று வீடுகளும் குருவிற்கு பகை வீடுகள்.
உண்மையைச் சொல்லப்போனால் மூல நூல்களைப் படித்திருப்பவர்கள் என்னுடைய இப்போதைய கருத்தில் சற்று குழம்பிப் போவீர்கள். ஏனென்றால் சம, பகை வீடுகளில் மாறுபட்ட கருத்தினை இப்போது நான் சொல்கிறேன்.
அடிக்கடி நான் சொல்வதைப் போல இந்த ஜோதிட சாஸ்திரத்தை நமக்கு அருளிய ஞானிகள் நான் சொல்வதே இறுதி நிலை என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவர்கள் அருளிய விதிகளை வைத்துத்தான், எனக்கு பரம்பொருள் தெரிய அனுமதித்த சுபத்துவ பாபத்துவ நிலை அமைப்புகளை நான் குறிப்பிடுகிறேன்.
ஆகவே மூல நூல்களை ஆதாரமாகக் கொண்டு எனது கருத்தை மறுப்பவர்கள், இதனை எனது கோட்பாட்டின் ஒரு நிலையாகத்தான் கருத வேண்டுமே தவிர மூலக் கருத்தினை நான் முற்றிலும் மறுப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கீழே சுக்கிரன் முழுக்க பாபத்துவம் அடைந்த ஒரு ஜாதகத்தினைக் கொடுத்திருக்கிறேன்.
மகர லக்னத்தில் பிறந்துள்ள இந்த ஜாதகத்தில் இரண்டாவது நிலை இயற்கை சுப கிரகமான சுக்கிரன் அமாவாசைக்கு அருகில் உள்ள சந்திரன் மற்றும் முழுமையான சனி, செவ்வாய், ராகுவின் பிடியில் முற்றிலுமாக பாபத்துவம் அடைந்திருக்கிறார். இந்த கிரக நிலை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது.
இந்த ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகங்களை ஓரளவு சுபத்துவப்படுத்தி தான் முழுமையாக பாபத்துவம் அடைந்திருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய ஆளுமையை தரக்கூடிய சுக்கிர தசை வரக்கூடிய நிலை இந்த ஜாதகத்தில் இல்லை.
ஏற்கனவே ஒரு கிரகம் தன்னுடைய சுபத்துவ, பாபத்துவ நிலைகளை அதனுடைய தசையில் மட்டுமே முழுமையாகத் தரும் என்பதையும் நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.
இதுபோன்ற ஜாதகங்களை விளக்கும் போது மட்டுமே ஒருவருக்கு என்ன நடக்கும் என்பதை எனது மாணவர்கள் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். உண்மையில் இது ஒரு வித்தியாசமான ஜாதகம்தான்.
ஆகவே அடுத்த வெள்ளி இந்த ஜாதகத்தை அலசுவதோடு இந்த ஜாதகருக்கு என்ன நடக்கிறது, நடந்தது, நடக்கும் என்பதை பார்க்கலாம்.
மாலைமலரில் 27.11.2020 இன்று வெளிவந்தது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.