adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கேதுவால் ஏற்படும் சூட்சும வலு – (E-013)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8286 99 8888

எதிலும் ஒரு ஞானத்தை தருபவர் எனும் அடிப்படையில் ஜோதிடத்தில் கேது என்பவர் ஞானகாரகன் என்று சொல்லப்படுகிறார். ஆனால் இந்த கேது என்ன செய்யும் என்பதை கணிப்பதற்கு ஜோதிடத்தில் மிக உயர்ந்த ஞானம் தேவைப்படும்.  


ஜோதிடம் எனும் தேவ ரகசியம் கட்டுரைகளில் சாயா கிரகங்கள் எனப்படும் ராகு-கேதுக்கள் ஒரு ஜாதகத்தில் என்ன செய்யும் என்பதை கணிப்பதற்கு மிக உயர்நிலை புரிதல் வேண்டும் என்று எழுதி இருக்கிறேன். அதை தற்போது மாற்றி

கேதுவை கணிப்பதற்கு மிக மிக உயர்நிலை புரிதல் வேண்டும் என்று எழுதலாம்.  

வேத ஜோதிடத்தில் முழு மற்றும் முக்கால் பாபர்களாக கூறப்படும் சனி, செவ்வாய் தரும் பலன்களை தலைகீழாக மாற்றி அமைக்கக் கூடிய தன்மை கொண்டவர் இந்த கேது.  மேற்கண்ட பாபர்களுடன் இணைந்து கேது இருப்பதை நான் இரண்டாவது நிலை சூட்சும வலுவாகச் சொல்கிறேன்.  

ராகு கரும்பாம்பு, கேது செம்பாம்பு எனும் அடிப்படையில் இது அமைகிறது. ராகு-கேதுக்களை இப்படிச் சொல்வது ஏன் என்பதை நாம் ஏற்கனவே ஒளித் தத்துவ அடிப்படையில் விரிவாக சொல்லி இருப்பதால் இங்கே அதைக் குறிப்பிட வேண்டாம்.  

ராகு என்பது எதனையும் முழுமையாக விழுங்கி கபளீகரம் செய்யும் முழுமையான இருள். கேது என்பது அப்படி அல்ல.  கேதுவும் ஒரு இருள்தான் என்றாலும் மறைபடும் பொருளின் தன்மையை கேதுவால் மாற்ற இயலுமே தவிர அதனை முழுமையாக மறைக்க, தடுக்க இயலாது.  

அதாவது தன்னோடு இணையும் அல்லது தான் நெருங்கும் ஒரு கிரகத்தை, இருவரும் இருக்கும் தூரத்தைப் பொறுத்து ராகு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார். ஆனால் கேதுவால் அந்த கிரகத்தை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாது. பதிலாக நெருங்கும் தூரத்தைப் பொறுத்து, கேது அந்தக் கிரகத்தின் தன்மையை மாற்றுவார்.  

மனிதனுக்கு தேவையற்ற விஷயங்களை தரக்கூடிய பாப கிரகங்களை, அதன் தன்மையை மாற்றி கிட்டத்தட்ட சுபர்கள் போல் செயல்பட வைப்பது கேதுவின் வேலை.  கேது தரும் இத்தகைய சூட்சும வலுவைப்பற்றி நான் சொல்லுவது இதுவரை எந்தவித ஜோதிட மூல நூல்களிலும் இல்லாதது.  

சமூகத்தின் சகல தரப்பிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான வித்தியாசமான ஜாதகங்களைப் பார்க்க பரம்பொருள் அனுமதித்திருக்கும் ஒரு எளிய ஜோதிடனாகிய எனது அனுபவத்தால் கிடைத்தது இந்த கேதுவின் சூட்சும நிலை. கணக்கற்ற ஜாதகங்களில் இந்த உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே கேதுவால் ஏற்படும் சூட்சும வலு என்று இதனை பிறருக்கும் சொல்ல ஆரம்பித்தேன்.  

இளம் வயதில் கேதுவால் ஏற்பட்ட ஒரு சந்திர கிரகணத்தை பார்த்த எனக்கு, அப்போது ஏற்பட்ட சிறுபொறி போன்ற ஒரு உந்துதலால் தோன்றிய கருத்தின் விளைவே இது.  

அதற்கு முன்னர் ராகுவால் ஏற்படும் சந்திர கிரகணத்தால் பௌர்ணமிச் சந்திரன் மறைந்து அமாவாசை நிலை வந்ததை கண்டிருந்த எனக்கு, அதாவது நிலவு சில நிமிடங்களுக்காவது முழுக்க மறைந்து கடுமையான அமாவாசை தோற்றம் பௌர்ணமி அன்று ஏற்பட்டதை பார்த்த எனக்கு, கேதுவால் ஏற்பட்ட சந்திர கிரகணத்தில் சந்திரன் முழுமையாக மறைக்கப்படாமல் வெண்ணிலவு செந்நிலவாக இருளுக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

வானில் தெரிந்த இந்த நிலையை, அப்போதுதான் எனக்கு ஒளித் தத்துவமாக தெரிய ஆரம்பித்திருந்த ஜோதிட அறிவோடு, ஜாதகத்தில் இருக்கும் சந்திரனோடு வானில் உள்ள நிலையை என்னையும் அறியாமல் ஒப்பிட்டுப் பார்த்தபோது, பரம்பொருள் எனக்கு தெரிய அனுமதித்ததே இந்த கேதுவால் ஏற்படும் சூட்சும வலு.  

நம்முடைய மூலநூல்கள் பொத்தாம் பொதுவாக ராகு-கேது இருவருமே இருள் கிரகங்கள் என்பதால் கடுமையான பாபர்கள் என்றும், இருக்கும் சூழலுக்கு ஏற்ப இவைகள் தங்களுடைய பலன்களை செய்யும் என்றும் சொல்லிவிட்டன.

நம்முடைய மூலநூல்கள் ஒரே தொனியில் ராகு-கேதுக்கள் இருவருமே ஒரு மனிதனுக்கு கடுமையான கெடுபலன்களை செய்யக் கூடிய இயல்பைக் கொண்டவை,  முறையான ஆட்சி வீடுகள் இல்லாததால், இருக்கும் இடத்தை ஆக்கிரமித்து, அதன் அதிபதியின் தன்மையையும், தன்னோடு இணைந்த, தன்னைப் பார்த்த, தனக்கு கேந்திரங்களில் இருக்கும் கிரகங்களின் பலன்களையும் கவர்ந்து மனிதனுக்கு நன்மை தீமைகளை செய்யும் என்று கூறுகின்றன.  

ராகு-கேதுக்கள் இரண்டும் ஒரே விதமான பலனைச் செய்யும் என்றால் இரண்டு தனித்தனி கிரகங்கள் எதற்கு? ஒன்றாகவே இருந்து விட்டுப் போய் இருக்கலாம் இல்லையா? அதிலும் வட, தென் துருவங்கள் போல இரண்டும் நேரெதிரே 180 டிகிரியில் அமையும் எனும்பொழுது ஒன்றின் தன்மை, இன்னொன்றுக்கு எதிராகத் தானே இருக்க வேண்டும்?

அதனால் தானே கரும்பாம்பு, செம்பாம்பு என இரண்டும் எதிர் நிலைகளை கொண்டிருக்கின்றன? இதை நாம் தெளிவாக உணர்ந்தாலே கேதுவைப் பற்றிய சில உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்.  

ஒரு விதியைப் படித்தாலே, அது பற்றி உணரும் முன்பே அந்த விதி ஏன் சொல்லப்பட்டது என்று ஆராயும் குணம் கொண்டவன் நான். ஜோதிட விதிகள் என்று வந்து விட்டாலே அது உண்மையாக இருக்குமா, இது உண்மையாக இருக்குமா என்று எதிலும் சந்தேகம் எனக்கு.  

இன்றைக்கு நம்மிடையே உள்ள மூலநூல்களில் உள்ள விதிகள், கருத்துக்கள் அனைத்துமே நம்முடைய ஆதிகர்த்தாக்களான  தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளால் சொல்லப் பட்டவை என்று சொல்ல முடியாது.  

பராசர மகரிஷி, வராகமிகிரர், காளிதாசர் போன்ற நம்முடைய இந்திய ஜோதிடத்தின் தந்தைகளால் சொல்லப்பட்ட விஷயங்கள் அப்படியே முழுமையாக நமக்கு இப்போது கிடைக்க வாய்ப்பில்லை.  அவர்கள் சொன்னது ஒரு 30 சதவிகிதம் அளவிற்கு நமது மூல நூல்களில் இருக்கலாம்.  

இன்றைக்கு நம்மிடையே உள்ள மூலநூல்களில் ஞானிகள் அல்லாத, தன்னுடைய பெயரை வெளிக்காட்ட திண்மை இல்லாத ஜோதிடர்கள், ஞானிகள் பெயரில் எழுதி நுழைத்த இடைச் சொருகல்கள் ஏராளம். எனவே மூல நூல்களை அப்படியே நம்பிப் படிப்பதிலும் ஏகப்பட்ட அபாயங்கள் இருக்கின்றன. அனைத்து துறைகளிலும் இது இயல்பான ஒன்றுதான்.

தமிழில் புலிப்பாணி என்ற முனிவர் பெயரில் உள்ள ஒரு நூல் இது போன்று தனது பெயரை வெளிக்காட்ட முடியாத, ஜோதிடத்தை விட பாடல் இயற்றுவதில் திறமை கொண்டிருந்த சில ஜோதிடர்கள் எழுதியதுதான். அந்த நூலை ஜோதிடத்தை மட்டுமே உயிர் மூச்சாக கொண்ட ஒருவர் எழுதியிருக்க முடியாது. ஜோதிடத்தை விட எதுகை, மோனையில் விளையாட நினைக்கும் கவிஞர்களுக்கு அந்த நூலால் நன்மை அதிகம்.  

கடந்த காலத்தில் இருந்த குருகுல கல்வி முறையில் ஒரு விஷயத்தை, ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தும் போது, மூலத்தில் இருந்ததை விட விளக்கங்கள் என்ற பெயரில் தனது கருத்தையும் குருவின் கருத்தாக சொல்லியிருப்பது தெரிய வரும். 

எதையும் சற்று மிகைப்படுத்தி சொல்வது மனித குணம். ஜோதிட நூல்களிலும் இது உண்டு. அதனால் நாம்தான்  பாலையும் நீரையும் பிரிக்கும் அன்னப்பறவை போல போல மூலத்தையும் அதன் பிறகு இணைக்கப்பட்டதையும் ஊன்றி கவனித்து தகுந்ததை எடுத்துக் கொள்ள வேண்டும்.  

சொன்னாலும் புரிந்து கொள்ளும் அளவிற்கு திறன் இல்லாத ஒரு சமுதாயம் இருந்த காலத்தில், பூரண அறிவுடன் சற்று அவசரப்பட்டு பிறந்துவிட்ட நம்முடைய ஞானிகள், பல ஜோதிட விதிகளை ஏன் என்ற விளக்கத்துடன் இல்லாமல், இப்படித்தான் என்கின்ற மூல அமைப்போடு மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.  

நம்மிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் ஜோதிடத்தை நமக்கு தந்தவர்களுக்கு இருந்திருக்கவே முடியாது. அப்படி இருந்திருந்தால் அவர்கள் ஜோதிடத்தையே  நமக்கு போதித்திருக்க மாட்டார்கள்.  

பல விஷயங்களை அவர்கள் விளக்கிச் சொல்லாமல், மறைபொருளாக சொன்னது போல ஒரு தோற்றம் இருப்பதற்குக் காரணம், அவர்கள் சொல்லியிருந்தாலும் அன்றைக்கு இருந்த சமுதாயத்தில் அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு கணித அறிவுடன் அவர்களைத் தவிர பிறர் இல்லை என்பதுதான் உண்மை.  

காலப்போக்கில் அறிவார்ந்த சமுதாயம் வளர வளர, இன்றைக்கு இருக்கும் நாம் ஜோதிடத்தை ஆராயும் தன்மையுடனும், கேள்வி கேட்கும் அறிவுத்தன்மையுடனும் இருக்கிறோம்.  

ராகு என்பது இயல்பான நிலையில் ஒன்றின் சுபத்தன்மையைக் குறைக்கக் கூடியது, கேது என்பது அதனை வளர்க்கக் கூடியது என்பதே உண்மை. எந்த ஒரு கிரகத்தையும்  முழுமையாக ஆக்கிரமிக்க இயலாத இரண்டாம் நிலை இருள் கிரகமான கேது, ஒரு கிரகத்துடன் இணையும் போது அதனுடைய சுய இயல்புத் தன்மையை மாற்றியோ, அல்லது அதன் சுபத் தன்மையை அதிகப்படுத்தியோ மனிதனுக்கு நன்மை செய்ய வைக்க தூண்டுகிறார்.  

இணையும் கிரகம் பாப கிரகமாக இருப்பின் அதனை முழுமையாக தீமை செய்ய இயலாத தன்மைக்குக் கேது கொண்டு வருகிறார். சுப கிரகமாக இருப்பின் இன்னும் கூடுதலான நன்மையை செய்ய வைக்கிறார்.  

முதன்மை சுப கிரகமான குருவுடன் ராகு சேருவதை தன, புத்திர காரகனான குரு தருகின்ற எதனையும், குருவுடன் இணையும் ராகு செய்ய விடமாட்டார் எனும் அர்த்தத்தில் சண்டாள யோகம் என்ற அவயோகமாக சொல்லுகின்ற நம்முடைய மூலநூல்கள், அதே குரு கேதுவோடு சேரும்பொழுது அதனை கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகமாக சொல்வது இங்கே குறிப்பிடத்தக்கது.  

அதாவது குருவின் முக்கியமான ஜட காரகத்துவமான பணம் தரும் நிலை கேள யோகத்தால் தூண்டப்படும் என்பதே, இது ஒரு கோடீஸ்வர யோகம் என்பதைக் குறிக்கிறது.

தனகாரகனாகிய குரு ஒரு மனிதனின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கும் பொழுது அவன் மிகப் பெரிய பணக்காரன் ஆவான் என்பது ஜோதிட விதி.  

இப்பொழுதுதான் கோடீஸ்வரன் என்பது சகஜமான வார்த்தை ஆகிவிட்டதே தவிர 30 ஆண்டுகளுக்கு முன்பு கூட லட்சாதிபதி என்றாலே ஒருவர் மிகப்பெரிய பணக்காரர் என்றுதான் அர்த்தம். ஒரு துறையின் மிக உயர்ந்த நிலையைக் குறிப்பதற்கு நாம் ஈஸ்வர நிலை என்று சொல்வோம். அதன் அடிப்படையில் இன்று நாம் பில்லினர் என்று சொல்லக்கூடிய தன்மையைத்தான் அன்று கோடீஸ்வரன் என்று சொன்னார்கள்.  

அதன் அடிப்படையில் பார்த்தால் குரு கேது இணையும் கேள யோகத்தால், ஏற்கனவே பணத்தை கொடுக்கக்கூடிய குருவை இன்னும் அதிகமான உயர்நிலை பணத்தைத் தரும் கோடீஸ்வர அமைப்பிற்கு ஏற்ப பணம் தர கேது தூண்டுவார் என்பதாலேயே அது கேள யோகம் எனும் கோடீஸ்வர யோகம் என்று சொல்லப்பட்டது.  

சனியின் இயல்பு வறுமையைத் தருவது. அதனுடைய இன்னொரு தன்மை ஆன்மீகம் எனப்படுவது. இவை இரண்டையும் சனியுடன் சில குறிப்பிட்ட டிகிரி நிலைகளில் இணையும் கேது மாற்றுகிறார். அதைப் போலவே இன்னொரு பாபக் கிரகமான செவ்வாய் முன்யோசனை இன்றி, அசட்டுத் துணிச்சலில் எதையும் செய்ய வைக்கும் ஒரு கிரகம். இந்த செவ்வாயை விவேகத்துடன் கூடிய ஒரு வீரமுடன் செயல்படக்கூடிய அமைப்பை செவ்வாயுடன் இணையும் கேது தருகிறார்.

அதே நேரத்தில் இந்த இருவரும் ராகுவுடன் சேரும் பொழுது தங்களுடைய இயல்புத் தன்மையான மந்தம், முன்கோபம் போன்றவற்றினை அதிகப்படுத்தி செய்வார்கள்.

அடுத்த வெள்ளி பார்ப்போம்.

மாலைமலரில் 13.11.2020 இன்று வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.