adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ரஜினிகாந்த் ஜாதகம்; சில விளக்கங்கள் – (E-011)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜிகைப்பேசி : 8286 99 8888உச்ச நட்சத்திரம் திரு. ரஜினிகாந்த் அவர்கள் “தமிழக முதல்வராக முடியுமா” என்ற தலைப்பில்  சென்ற வாரம் யு டியூபில் வெளியிடப்பட்ட என்னுடைய வீடியோ எனது மாணவர்களிடையே சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன்.  

ஆயினும் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் இதே கருத்தினை கொண்ட இரண்டு கட்டுரைகள், மூன்று வருடங்களுக்கு முன்பே கடந்த 2017, மே 27,  28ம் தேதிகளில் “கலைஞர், எம்ஜிஆர், ஜெயா, அடுத்து ரஜினியா?” என்ற தலைப்பில் என்னால் எழுதப்பட்டிருக்கின்றன.  


அந்தக் கட்டுரைகளின் இறுதியில், மேற்கண்ட நால்வரின் ஜாதகங்களையும் காட்டி, ஏற்கனவே தமிழக முதல்வராக இருந்த மூவரின் ஜாதகங்களில் வேதஜோதிட விதிகளின்படி, ஒருவர் முதல்வராக பதவி வகிப்பதற்கான உள்ள விதிகளை விளக்கி, இதுபோன்ற எந்த ஒரு விதியும் ரஜினியின் ஜாதகத்தில் இல்லாத காரணத்தினால், உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக முதல்வராவது என்பது ஜோதிட விதிகளின்படி சாத்தியமாகாது என்பதை அப்போதே விளக்கியிருக்கிறேன்.  அதனுடைய சுருக்கம்தான் சென்றவாரம் வெளியிடப்பட்டிருந்த காணொளியும் கூட.  

அந்த வீடியோவை வெளியிட்டதற்குப் பிறகு நடந்து வரும் சம்பவங்களும், சில அறிக்கைகளும் என்னுடைய ஜோதிட கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே அமைந்திருக்கின்றன. ஆகவே ரஜினியின் அரசியல் பற்றிய வேத ஜோதிடக் கருத்து மூன்று வருடங்களுக்கு முன்பே தெளிவாக மாலைமலரில் சொல்லப்பட்டிருக்கிறது. சென்ற வார வீடியோ அதனுடைய நீட்சிதான்.   

ஒரு ஜோதிடன் சமூக நிகழ்வுகளை அலசும்போது விருப்பு வெறுப்பு இல்லாதவனாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.  அதைவிட மேலாக எந்த ஒரு நிலையிலும் அவனை அறியாமல் கூட அவன் மனம்  ஒரு சார்பு நிலையை எடுக்கவே கூடாது. அப்படி இருந்தால் அங்கு ஜோதிட விதிகள் தவறாகி விடும்.  

என்னை பொறுத்தவரையில் எந்த ஒரு நிலையிலும் தனி மனிதர்களை விட ஜோதிடத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

ஒரு மனிதன் யாராக இருந்தாலும், நமது எதிர்காலத்தை நாமே கணக்கிட்டு அறிய பரம்பொருள் கொடுத்த வாய்ப்பான இந்த அரும்பெரும் ஜோதிடக்கலைக்கு முன்பு ஒரு தூசுதான். என்றேனும் ஒருநாள் தனி மனிதன் அழிந்தே தீருவான். ஆனால் மனித குலம் உள்ளவரை இந்த ஜோதிடக்கலை இருக்கும்.  

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட, பிரதமர் மோடி அவர்களின் உண்மையான ஜாதகம் எதுவென்று சரியாக தெரியாத காரணத்தினால் அவர் விருச்சிக லக்னத்தில் பிறந்திருந்தால் மறுமுறை பிரதமராக இயலாது எனவும் துலாம் லக்னத்தில் பிறந்திருந்தால், அப்போது நடக்கும் தர்மகர்மாதிபதிகளான சந்திர தசையில் புதன் புக்தியில் மீண்டும் பிரதமராவார் என்றுதான் பேட்டி அளித்திருந்தேன்.  

பொதுவெளியில் வெளியிடப்பட்டிருக்கும் பிரபலமானவர்களின் ஜாதகங்களை நம்பி பலன் சொல்வதிலும் மிகப்பெரிய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் ரஜினி அவர்களின் ஜாதகம் பல வருடங்களுக்கு முன்பே பலரால் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதை வைத்தே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாலைமலரில் வந்த கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.  

மிக முக்கியமாக சென்ற வாரம் வெளியிடப்பட்டிருந்த வீடியோவில், ரஜினி அவர்களின் ஜாதகத்தில் நீங்கள் சொல்லும் சுபத்துவ-சூட்சுமவலு கோட்பாட்டின்படி, ராஜயோகத்தை தரும் சூரியன், சுக்கிரனுக்கு 4 பாகை அளவில் மிக அருகில் சுக்கிரனை அஸ்தங்கப்படுத்தி சுபத்துவமாகத்தானே இருக்கிறார் எனும் சந்தேகத்தை ஒரு மாணவர் எழுப்பியிருக்கிறார்.

அதேபோல சனியின் பார்வையும் டிகிரி அளவில் சூரியனிடம் இருந்து விலகித்தானே இருக்கிறது, அதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை? சுபத்துவ-சூட்சும வலு விதிகளை எங்களுக்கு போதித்து,  இரண்டு கிரகங்களின் தொடர்பினை டிகிரி கணக்கில் எப்படி பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்த நீங்களே, ரஜினி விஷயத்தில் தவறு செய்யலாமா என்று குருவுக்கே சொல்லிக் கொடுக்கும் பாணியில் எனது மாணவர்கள் கமெண்ட் செய்திருக்கிறீர்கள்.  

 அன்பு மாணவர்களே..  

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். வேதஜோதிடத்தை மட்டுமே சுவாசமாக கொண்டிருக்கும் நான், எந்த ஒரு நிலையிலும் ஜோதிடத்தை மட்டுமே முன்னிறுத்தி பலன் தருவேனே தவிர, ஜோதிட விதிகளை இஷ்டம்போல வளைக்கும் தவறை ஒரு நாளும் செய்ய மாட்டேன்.  

அதேபோல என்னுடைய 40 ஆண்டு காலத்திற்கும் மேலான ஜோதிட அனுபவத்தை, என்னிடமிருந்து வெறும் நான்கு மாத காலத்தில் பெற்றுவிட்டோம் என்று நீங்கள் எந்த ஒரு நிலையிலும் பெருமிதம் கொள்ளாதீர்கள்.  

எப்படிப்பட்ட நிலையிலும் என்னுடைய அனுபவம் உங்களை விட சற்றுக்  கூடுதலாகத்தான் இருக்கும். குறையவே குறையாது. மிக முக்கியமாக என்னிடம் குறை காணவோ, அல்லது என்னைத் திருத்தவோ ஒருவர் முயல்வார் ஆயின் அவர் என்னிலும் ஞானம் உள்ளவராகவோ அல்லது என்னைவிட அனுபவசாலியாகத்தான் கண்டிப்பாக இருக்க வேண்டுமே தவிர என்னுடைய மாணவர் என்று அவர் தன்னைச் சொல்லிக் கொள்ள முடியாது.  

அப்படி ஒரு நிலை வருமாயின், மாணவர்களே.. ஒரு நல்ல ஜோதிடக் கருத்து ஒரு சிறுவனிடமிருந்து கிடைத்தாலும் அவரைக் கூட குருவாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பான்மை கொண்ட எனக்கு நீங்கள் குருநாதர் ஆவீர்கள்.  

தற்போது புதிதாக மாலைமலரில் ஆரம்பித்திருக்கும் “ஜோதிடம் ஒரு விஞ்ஞானம்” தொடர் இதுபோன்ற சுபத்துவ, பாபத்துவ படிநிலைகளை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் ஆரம்பமாகி இருக்கிறது.

ரஜினியின் ஜாதகத்தில் உள்ள சூரியன் வெறும் நான்கு டிகிரிக்குள் சுக்கிரனோடு சேர்ந்து சுபத்துவமாகி இருக்கும் ஒரு விதி மட்டுமே தமிழக முதல்வராவதற்கு போதுமானது என்றால், தமிழக மக்கள் ஏழு கோடிப் பேரில் கண்டிப்பாக 5 கோடிப் பேர் தமிழ்நாட்டின் முதல்வராகி இருக்க வேண்டும். ஏனெனில் உலகில் இருக்கும் எழுபது சதவிகிதம் நபர்கள் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரனோடு சேர்ந்துதான் இருப்பார்.  

மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதி இருந்த மாலைமலர் கட்டுரையில் கூட அனைத்து அதிகார அமைப்புகளும் வணங்கி நின்று சல்யூட் அடிக்கும், அரசனுக்கு நிகரான, தமிழக முதல்வர் பதவியில் ஒருவர் அமர வேண்டுமாயின், கோடியில் ஒருவருக்கு மட்டுமே அமையும் ராஜயோக அமைப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்பதை தெளிவு படுத்தி இருக்கிறேன்.  

என்னுடைய காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதகத்தில் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசனின் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் என்று நம்முடைய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் சொன்ன விதிகள் மிகக் கச்சிதமாக பொருந்தி இருப்பதை நிரூபித்தும் இருக்கிறேன்.  

இன்னும் சொல்லப்போனால் இதுவரை நான் இன்றைய முதல்வர் மாண்புமிகு எடப்பாடி அவர்களின் ஜாதகத்தை பார்த்ததில்லை. ஆனால் அவர் அரசனாகும் யோகத்தைத் தரும் சூரியன் உச்ச நிலையில் இருக்கும் சித்திரை மாதத்தில் பிறந்தவர் என்பதை அறிந்திருக்கிறேன்.  

எவர் ஒருவருக்கு சூரியன் அதிக உச்சபட்ச சுபத்துவ நிலையில் இருக்கும் நிலையில், மற்ற பிற அமைப்புகளும் ஒத்துழைக்கும் போது,  லக்னம் மற்றும் லக்னாதிபதி மிக உயரியநிலையில் ஒளிமயமாக உள்ள நிலயில் மட்டுமே ஒருவருக்கு தமிழக முதல்வர் பதவி எனும் மிக உயரிய அந்தஸ்து கிடைக்குமே தவிர, சுக்கிரன் 5 டிகிரிக்குள் சூரியனை சுபத்துவப்  படுத்தி விட்டால் மட்டும் ஒருவர் தமிழக முதல்வர் ஆகிவிட முடியாது.  

சென்ற வாரம் வெளியிடப்பட்டிருந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் ஜாதகத்தில் கூட சூரியன் உச்சமாகி, குருவால் பார்க்கப்படும் முதல் நிலை சிவராஜ யோகம் அமைந்திருந்தது. ஆனால் அவர் தமிழக முதல்வராக இல்லையே ஏன்?  

ஒவ்வொரு ஜாதகமும் ஏதேனும் ஒரு வகையில் உயர்வான ஒன்றுதான்.  அந்த அமைப்பில் ரஜினி அவர்களின் ஜாதகம் கலைத்துறையில் மிக உயரிய நிலையை அடையக்கூடிய ஒன்று. அதற்கு அவரது ஜாதகத்திலேயே அதிகமான சுபத்துவ அமைப்பில் இருக்கும் சுக்கிரனின் நிலையே சாட்சி.  

ரஜினியின் ஜாதகத்தில் சுக்கிரன் மட்டுமே சுபரான குருவின் வீட்டில் இன்னொரு சுபரான புதனுடன் இணைந்து அதிக சுப நிலையில் இருக்கிறார்.  

ஒருவரின் ஜாதகத்தில் அதிக சுபத்துவமுள்ள கிரகத்தின் எண்ண ஓட்டங்களே அவருக்கு அமையும் எனும் என்னுடைய சுபத்துவ- சூட்சுமவலு கோட்பாட்டின்படி உச்சநட்சத்திரம் அவர்கள் இளமையிலிருந்தே கலைத் தாகம் கொண்டு, இன்றும் திரையுலகில் எவருமே மறுக்கவியலாத சாதனைகளைச் செய்து, இந்த 70 வயதிலும் அவரே திரையுலகில் முதன்மை நிலையில் இருக்கிறார்.  

சுக்கிரனை விட சூரியன் அதிகமான சுப நிலையில் அவருக்கு அமைந்திருந்தால், சில வருடங்களுக்கு முன்பே குறிப்பாகச் சொல்லப் போனால் 1996 ஆம் ஆண்டு இருந்த சில அரசியல் சூழ்நிலைகளிலேயே அவர் தன்னையும் அறியாமல் அரசியலுக்கு வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு தமிழ்நாட்டின் முதல்வராகி இருப்பார்.  

உண்மையை சொல்லப் போனால் தமிழ்நாட்டின் முதல்வர் பதவி என்பது ஒரு தனி மனிதன் ஆசைப்பட்டுத் தேர்ந்தெடுப்பது அல்ல. அது பரம்பொருளாக பார்த்து உங்களை அழைத்து, அதில் அமர்த்தி அழகு பார்ப்பது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இன்றைய முதல்வர் திரு. எடப்பாடி அவர்கள் தமிழக முதல்வர் ஆவார் என்று யாராவது சொல்லியிருந்தால் அவரே அதை நம்பி இருக்க மாட்டார். ஜெயலலிதா இருக்கும்போதே முதல்வர் பதவியை அடைந்த திருமிகு. ஓபிஎஸ் அவர்களின் நிலையும் இதுதான்.

ஒரு ஜாதகத்தின் தனித்துவத்தை அளவிடும் நிலையில் நான் அடிக்கடி சொல்லும் பாவக, காரக சுபத்துவம் மற்றும் பாபத்துவ, சூட்சும வலு நிலைகளை நிச்சயம் அளவிட்டே ஆக வேண்டும்.  

அதைவிட மேலாக ஒரு உயர்நிலை ஜாதகத்தை அறிய அந்த ஜாதகத்தில் லக்ன முனை எந்த இடத்தில் அமைந்திருக்கிறது?  12 பாவகங்களின்  முனைகளோடு தொடர்பு கொண்டவர்கள் யார்? அவர்கள் சுபர்களா? அல்லது பாபர்களா? பாவக முனைகளுக்கும் அங்கிருக்கும் கிரகங்களுக்கும் இடையே இருக்கும் தூர அளவுகள் எப்படிப்பட்டவை? கிரகங்கள் பாவகங்களில் எத்தகைய அவஸ்தைகளில் இருக்கின்றன என்பது போன்ற கணக்குகள் இன்னும் ஜோதிடத்திற்கு இருக்கின்றன.  

அவைகளில் பலவற்றை ஓரளவிற்கேனும் நான் அறிந்திருக்கிறேன்.  

ஆனால் இதுவரை வித்தியாசமான பரிமாணங்களில் நான் சிறிதளவேனும் அறிந்துள்ள உயர்நிலை ஜோதிட  அமைப்புகளை இன்னும் முழுமையாக சொல்லித் தர ஆரம்பிக்கவில்லை. பரம்பொருள் எனக்குத் தெரிய அனுமதித்ததை கண்டிப்பாக உங்களுக்குத் கற்றுத் தருவேன். ஒருவேளை என்னால் இயலாது போனாலும் வேறு ஒரு நிலையில் உங்களில் யாரேனும் ஒருவருக்கு பரம்பொருள் இவற்றை நிச்சயமாக உணர வைக்கும்.

அடுத்த வெள்ளி பார்ப்போம்.

மாலைமலரில் 30.10.2020 இன்று வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.