ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8286 99 8888
சமீபத்தில் என்னிடம் குருவின் அல்லது சுபர்களின் பார்வை அல்லது இணைவு ஆகிய இரண்டில் எது அதிகமான சுபத்துவத்தைத் தரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
குருவின் தொடர்பு ஒரு கிரகத்துக்கு அதிக சுபத்துவத்தைத் தரும் எனும் நிலையில் இங்கே தொடர்பு எனும் வார்த்தையை குருவின் இணைவு மற்றும் பார்வை, குருவின் வீடுகளில் இருப்பதால் உண்டாகும் சுபத்துவம், அம்சத்தில் குருவின் வீட்டில் இருத்தல், அம்சத்தில் குருவோடு கலந்திருத்தல் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குருவோடு இணைதல், பார்வை பெறுதல், குருவின் வீடுகளில் இருத்தல், நவாம்சத்தில் குருவின் இணைவு, அம்சத்தில் குருவின் வீடு என்பதை சுபத்துவ அமைப்பின் ஒருவிதமான படிநிலைகளாகச் சொல்லலாம். அதேநேரத்தில் இங்கே குருவின் நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருப்பதை சுபத்துவமாகக் கொள்ளக்கூடாது.
ஒரு கிரகம் தான் வாங்கிய நட்சத்திரத்தின் அடிப்படையில் ஒருபோதும் சுபத்துவத்தை பெறுவதில்லை. என்னுடைய சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு கோட்பாட்டில் நட்சத்திரங்களுக்கு இடமில்லை. சுபருடைய நட்சத்திரங்களோ அல்லது பாபருடைய நட்சத்திரங்களோ, சப்த கிரகங்களுக்குத்தான் சுப, பாபத்தன்மைகளை கொடுக்கும் அமைப்பு இருக்கிறதே தவிர நட்சத்திரங்களுக்கு அல்ல.
ஒரு கிரகத்தின் நட்சத்திர சாரம் என்பது நவாம்ச நிலைகளோடு தொடர்புடையது. நவாம்ச சக்கரத்தில் ஒரு கிரகம் எங்கே இருக்கும் என்பதை ராசிக்கட்டத்தில் அது பெற்றிருக்கும் நட்சத்திரத்தை வைத்தே சொல்லிவிட முடியும்.
நவாம்ச சக்கரத்தில் குருவின் தனுசு, மீன வீடுகள் முதல் நிலையிலும், சுக்கிரனின் துலாம், ரிஷபம் இரண்டாவது நிலையிலும், புதனின் கன்னி, புதன் மூன்றாம் நிலையிலும், அந்த ஜாதகத்தில் வளர்பிறை, தேய்பிறை, பௌர்ணமி, அமாவாசை நிலைகளைப் பொருத்து கடகமும் சுபத்துவத்தை தரும். இப்போது நான் சொன்ன இந்த வரிசை கிரக வீடுகளின் ஆட்சி, மூலத்திரிகோண நிலையை பொருத்தது.
ஒரு கிரகம் குரு அல்லது சுக்கிரன் அல்லது பவுர்ணமி சந்திரனின் நட்சத்திரத்தில் இருந்தால் சுபத்துவம் என்று அர்த்தமாகாது. நிச்சயமாக அது சுபத்துவத்தை அடையவும் செய்யாது. ஒரு கிரகத்தின் சுபத் தன்மையை சுபர்களுடன் இணைவது, பார்வையைப் பெறுவது, சுபர்களின் வீடுகளில் இருப்பது அல்லது நவாம்சத்தில் இவர்களுடைய வீடுகளில் இருப்பது போன்ற நேரடி தொடர்புகளின் மூலம்தான் கணக்கிட வேண்டுமே தவிர நட்சத்திரங்களின் அடிப்படையில் கணக்கிடக் கூடாது.
உதாரணமாக பாபரான ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரங்களின் முதல் மற்றும் நான்காம் பாதங்களில் அமர்ந்திருக்கும் ஒரு கிரகம், அம்சத்தில் குருவின் வீடுகளான தனுசு, மற்றும் மீனத்தில் அமரும். இந்த நிலையில் அந்தக் கிரகம் கடைநிலை சுபத்துவத்தைத்தான் பெற்றிருக்குமே தவிர ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதால் பாபத்துவம் அடையாது.
அதைப் போலவே முதல்நிலை சுபர்களான குரு மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் முதல் மற்றும் நான்காம் பாதங்களில் கிரகங்கள் அமரும்போது பாபரான செவ்வாயின் மேஷ, விருச்சிகத்தில் அமரும் நிலை பெறுவார்கள். அப்பொழுது குரு, சுக்கிரனின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் அவர்கள் சுபத்துவமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.
நவாம்சத்தில் செவ்வாயின் வீடுகளில் இருக்கும் கிரகங்கள் ராசிக் கட்டத்தில் செவ்வாயின் பாப, சுபத் தன்மையைப் பொருத்து பலம் அல்லது பலவீனத்தை அடையும்.
எந்த ஒரு நிலையிலும் கிரகங்கள் தான் அமர்ந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் சுபத்துவ- பாபத்துவத்தை அடைவது இல்லை. அதேபோல சுபக் கிரகங்களின் இணைவிற்கு முக்கியத்துவமா அல்லது பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா எனும் கேள்விக்கு அது அந்த ஜாதகத்தில் சம்பந்தப்பட்ட கிரகங்களின் வலிமையைப் பொறுத்தது என்றுதான் பதில் சொல்ல வேண்டும். இரண்டுமே முக்கியமானவைகள்தான்.
நம்முடைய கிரந்தங்களில் குருவின் பார்வை, அதன் ராசி இருப்பை விட அதிக வலிமையானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நிலையில் ஒரு கிரகத்தை குரு பார்த்து சுபத்துவப்படுத்துவதை நாம் முதன்மையாகச் சொன்னாலும், இன்னொரு ஜாதகத்தில் குருவோடு ஒரு கிரகம் இணைந்திருப்பதை வைத்து அதன் சுபத்துவத்தை கணிக்க வேண்டியிருக்கும்.
இதுபோன்ற நிலைகளில் சம்பந்தப்பட்ட கிரகங்களின் ஸ்தான பலம் மற்றும் குருவின் வலிமையை வைத்துத் தான் சுபத்துவ நிலையைக் கணக்கிட வேண்டுமே தவிர எடுத்த எடுப்பில் குருவின் பார்வை வலிமையானது அல்லது குரு இணைந்திருப்பது அதிக சுபத்துவம் என்று சொல்லி விடமுடியாது.
குருவின் இணைவு அல்லது பார்வை என்பது ஒரு கிரகத்திற்கு மிகுந்த சுபத்துவத்தை தரும் அமைப்பு. இணைவா அல்லது பார்வையா எது முதன்மை போன்ற நுணுக்கமான அமைப்புகளில் தனித்தனி ஜாதகத்தை வைத்துதான் நீங்கள் கணிக்க முடியுமே தவிர, இரண்டிற்குமான படிநிலை சமன்பாடுகளை இப்போது உருவாக்குவது கஷ்டம்.
கீழே இரண்டு வேறுபட்ட துறைகளை சேர்ந்தவர்களின் ஜாதகங்களை கொடுத்திருக்கிறேன்.
ஒருவர் தமிழ் எழுத்துலகம் நன்கு அறிந்த, எளிதில் மறக்கப்பட முடியாத, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள். இன்னொருவர் ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள ஒரு காவல்துறை உயர் அதிகாரி.
எழுத்தாளருக்கு புதனும், காவல்துறை அதிகாரிக்கு செவ்வாயும் சுபத்துவம் அடைந்திருக்க வேண்டும் என்கின்ற வித்தியாசமான நிலைகளை தருவதற்காக இவர்களின் ஜாதகங்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
திரு. சுஜாதா அவர்களின் ஜாதகத்தில், ஒருவரை மிகச் சிறந்த எழுத்தாளராக்க கூடிய எழுத்தின் காரகனாகிய புதன், மேஷத்தில் 26 டிகிரியில் இருக்க, அவருக்கு நேர் எதிரே மிகச் சரியாக 180 டிகிரியில் துலாமில் அதே 26 டிகிரியில் குரு அமர்ந்து, புதனை அதிகமான சுபத்துவப் படுத்தி இருக்கிறார்.
மகர லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகப்படி நான்காவது கேந்திரத்தில் இருக்கும் புதன், ஒன்பதாமிட செவ்வாயுடன் பரிவர்த்தனை அடைந்து ஸ்தான பலத்தின் முதன்மை அமைப்பான உச்ச நிலையை மறைமுகமாக அடைந்து, குருவால் அதிக சுபத்துவமாக இருக்கும் நிலையில், நவாம்சத்திலும் குருவின் தனுசு வீட்டில் புதன் இருப்பதால் சுஜாதா அவர்கள் எழுத்தில் மிகப்பெரிய உச்ச நிலையை அடைந்தார்.
இங்கே “ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவமுள்ள கிரகத்தின் தொழில் உங்களுக்கு அமையும், அதன்படியே உங்களுடைய எண்ண ஓட்டங்களும் இருக்கும்” என்கின்ற என்னுடைய சுபத்துவ, சூட்சும வலு கோட்பாடும் கச்சிதமாகப் பொருந்துகிறது.
காவல்துறை உயரதிகாரியின் ஜாதகத்தில் அத்துறைக்கே உரிய காரக கிரகமான செவ்வாய் நேரடியாக உச்ச நிலையில் அமர்ந்து, குருவுடன் 12 டிகிரிக்குள் இணைந்து சுபத்துவமாகி இருக்கிறார். கூடுதலாக கேதுவுடன் இணைந்து நான் சொல்லும் சூட்சும வலுவும் செவ்வாய்க்கு இருக்கிறது. ஆகவே இந்த இரண்டு ஜாதகங்களிலும் குரு தன்னுடைய பார்வை மற்றும் இணைவு ஆகிய நிலைகளில் முதன்மை கிரகங்களை சுபத்துவப் படுத்தி இருக்கிறார்.
இன்னும் ஒரு தனிப்பட்ட நிலையாக எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டிருந்தாலும் அவரும் ஒரு அரசுப் பணியாளராக, மத்திய அரசில் ஒரு ஜெனரல் மேனேஜர் அளவில் ஒரு உயர் அதிகாரியாக இருந்தார். ஆனால் அவர் இருந்த துறை நேரடியாக அதிகாரம் செலுத்தும் துறையாக அல்லாமல் ஒரு விஞ்ஞானத் துறையாக இருந்தது. ஆயினும் அவர் ஒரு மத்திய அரசின் உயர் அதிகாரிதான்.
அடுத்து காட்டப்பட்டுள்ள காவல்துறை உயர் அதிகாரி ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள ஒரு நேரடியான, சகல அதிகாரங்களையும் கொண்ட ஒரு மிக உயர் நிலையில் உள்ளவர். இந்த இரு அதிகார நிலைகளுக்கும் உள்ள பாவக, காரக நிலை வித்தியாசங்களை நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.
அரசுப் பணிக்கு உரிய கிரகமான சூரியன் மற்றும் சிம்மம் இரண்டும் அதிக சுபத்துவமாக இருக்கும் நிலையில், வேறு சில துணை அமைப்புகளும் சரியாக பொருந்தி வரும் போது, ஒருவர் நேரடியான அதிகாரத்திலும், சூரியன் மட்டும் சுபத்துவமாக இருக்கின்ற நிலையில், ஒருவர் அதிகாரம் அற்ற சேவை அமைப்பில் அரசுத் துறையில் உயர் அதிகாரியாகவும் இருப்பார் என்று சொல்லியிருக்கிறேன். அந்த அமைப்பும் இங்கே இவர்கள் இருவரின் ஜாதகத்திலும் பொருந்துகிறது.
நேரடியான அதிகாரத்தைக் கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் ஜாதகத்தில் உயர் அதிகாரத்தை தரக்கூடிய சூரியன் 4 டிகிரிக்குள் குரு, சுக்கிரன் இருவருடனும் இணைந்து, இருவரையும் அஸ்தகங்கப்படுத்தி, தான் மிகுந்த சுபத்துவமாகி, ராசிக்குப் பத்தாம் இடத்திலும் அமர்ந்து, தன்னுடைய ராசியான சிம்மத்தை தானே பார்க்கிறார். அதேபோல சுக்கிரனின் பார்வையும் சிம்மத்திற்கு இருக்கிறது. எனவே இது நேரடியான அதிகாரத்தை தரும் அமைப்பு.
இந்த இடத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருவரும் தங்களின் இணைவின் மூலம் சூரியனை சுபத்துவப்படுத்துவதன் மூலம் இவர் காவல் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார். இந்த இடத்தில் சுபர்களின் இணைவு பயன்படுகிறது.
சுஜாதா அவர்களின் ஜாதகத்தில், சூரியன் உச்சமாகி குருவின் பார்வையில் இருப்பதால் அவரும் மத்திய அரசு பணியில் உயரதிகாரியாக இருந்தார். ஆனால் சிம்மம் சுபத்துவமாகாத காரணத்தினால் அவருக்கு நேரடியான அதிகார பதவி இல்லை.
அதே நேரத்தில் சுஜாதாவின் ஜாதகத்தில் சிம்மத்தை சனி பார்ப்பதும் நல்லது அல்ல. ஆனால் இங்கே அந்த சனியின் பார்வைக் கொடூரத்தை குறைக்கும் விதமாக குரு, சனியையும் பார்ப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்கு பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்ட காரணத்தாலும் சுஜாதா அரசுப்பணியில் இருந்தார். எனவே குருவின் பார்வைகளால் சுபத்துவம் பெற்ற ஜாதகம் சுஜாதாவுடையது.
மேலும் சில விளக்கங்களை அடுத்த வெள்ளி பார்ப்போம்.
மாலைமலரில் 23.10.2020 இன்று வெளிவந்தது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.