ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8286 99 8888
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல எந்த ஒரு விஷயத்திற்கும் இரண்டு கோணங்கள் இருக்கிறது என்பது ஜோதிடத்திற்கும் பொருந்தும்.
ஒரு பாவகமோ அல்லது ஒரு கிரகமோ தங்களுடைய சுபத்துவ, சூட்சும வலுவை பொறுத்து ஒரு மனிதனுக்கு நன்மைகளையோ அல்லது தீமைகளையோ செய்கின்றன.
உண்மையில் ஒரு கிரகம் தான் இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் எந்த ஒரு நிலையையும் முழுமையாக கொடுத்து விடுவதில்லை. அந்த கிரகம் இருக்கும் பாவகத்தின் அடிப்படையிலும், தான் பெற்றிருக்கும் சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு நிலைகளின் அடிப்படையிலும் மட்டுமே முழுமையான பலன்களைத் தருகிறது.
அந்த நிலையிலும் தன்னுடைய ஆதிபத்தியத்தையும், காரகத்துவம் எனப்படும் தனது இயல்பையும், எந்த பாவகத்தில் அந்த கிரகம் அமைந்திருக்கிறதோ அதன் இயல்பையும், தான் பெற்றுள்ள சுபத்துவம், பாபத்துவம், சூட்சும வலு நிலைகளையும் தனது தசையில் அந்த கிரகம் எடுத்துச் செய்கிறது.
மனிதனின் வாழ்வில் நடக்கப்போகும் எதிர்கால சம்பவங்களை எடுத்துச் சொல்லும் தசா எனும் ஆளுமை வருடங்கள் அமைப்பில் தசைக்கு உட்பட்ட ஒன்பது சமமற்ற பிரிவுகளாக புக்திகள் எனும் அடுக்கு சொல்லப்படுகிறது.
ஒரு தசை நடக்கும் போது அந்த தசாநாதனின் தலைமையை ஏற்று மற்ற எட்டு கிரகங்களும் தசை நாயகனின் ஆளுமையின் கீழ், தான் எதை அந்த மனிதனுக்கு தர விதிக்கப்பட்டதோ அவற்றை வரிசைக்கிரமப்படி தன்னுடைய சுபத்துவ, பாபத்துவ பலனை தசாநாதனுக்கு உட்பட்டு, தசாநாதனின் ஆணைப்படி தருகின்றன.
எந்த ஒரு நிலையிலும் தசாநாதனை புக்தி நாதர்கள் மீற முடியாது. தசாநாதன்தான் ஒரு தசையின் மூலம். அவரே அனைத்திற்கும் பொறுப்பான சர்வாதிகாரி. மற்றவர்கள் எல்லாம் அவருடைய கட்டளையின் கீழ் நின்று அவருக்கு துணை புரிய கடமைப்பட்டவர்கள்தான்
ஒரு கிரகம் தான் பெற்ற சாரம் எனப்படும் நட்சத்திரத்தின் அடிப்படையில் மட்டுமே தன்னுடைய முழு பலன்களைத் தந்து விடுவதில்லை. ஒரு கிரகம் அந்த ஜாதகத்தின் முழு யோகர்கள் என்று சொல்லப்படும் 1,5,9 எனப்படும் திரிகோணாதிபதிகளின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும் தனது தசையில், தான் பெற்ற ஆதிபத்தியம், காரகத்துவம் இரண்டையுமே முதன்மையாக பிரதிபலிக்கும்.
இதில் காரகத்துவத்தை முதலில் தருமா, அல்லது ஆதிபத்தியத்தை முதலில் செய்யுமா என்பது ஒவ்வொரு ஜாதகத்தின் தனித்தன்மையையும் அப்போது ஜாதகருக்கு நடக்கும் கோட்சார நிலையையும் பொருத்தது. எனினும் தசை நடத்தும் கிரகம் சுபத்துவமாக இருப்பின் தனது காரகத்தை முதலிலும் மற்றும் அதிகமாகவும், அடுத்த நிலையாக தான் பெற்ற ஆதிபத்தியத்தையும் செய்கிறது.
எந்த ஒரு பாவகத்திற்கும் சுபம், அசுபம் என இரு வித நிலைகள் இருக்கின்றன. உதாரணமாக ஆறாம் பாவகம் கடன், நோய், எதிரி போன்றவைகளை கொடுத்தாலும், இதில் முதன்மையான கெடுநிலையாகச் சொல்லப்படும் கடன்படுதல் என்பது இரண்டு வெவ்வேறு தன்மைகளைக் கொண்டதாகும்.
ஒருவர் தன் வாழ்நாளில் கடன் வாங்காமல் இருக்கவே இயலாது என்பதுதான் உண்மையான பெரும்பான்மை மக்களின் நிலை. வாங்கும் கடனை அவர் நல்லவிதமாக உபயோகப்படுத்தி வாழ்வில் முன்னேறுகிறாரா அல்லது தேவையற்ற விதத்தில் கடன் வாங்கி செலவு செய்கிறாரா என்பதுதான் என்பது ஆறாம் பாவகத்தின் அல்லது ஆறாம் அதிபதியின் சுபத்துவ, சூட்சும வலு நிலையை பொருத்தது.
ஆறாம் அதிபதி நல்ல சாரம் என்று சொல்லப்படும் யோகர்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலும், அவர் பாபத்துவமாக இருக்கும் நிலையில் ஒருவருக்கு தேவையற்ற செலவுகள் அவரது தசையில் ஏற்படுகின்றன. அல்லது நியாயமான தேவைகளுக்கே வருமானம் இல்லாத நிலை உண்டாகிறது. அதன் மூலமாக அவர் கடன்காரன் ஆகிறார் அல்லது ஒரு நோக்கத்திற்காக அவர் கடன் வாங்கிவிட்டு, அது நிறைவேறாமல் பிறிதொரு வகையில் அந்தப் பணம் செலவாகி, மீளவே முடியாத அளவில் கடன்காரன் ஆகி மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்.
அதேநேரத்தில் ஆறாம் அதிபதி 6, 8, 12 என்று சொல்லப்படும் அந்த ஜாதகத்தின் கெடுபலன்களை தர விதிக்கப்பட்ட கிரகங்களின் நட்சத்திரங்களில் இருந்தாலும் சுபத்துவம் மற்றும் சூட்சும வலுவோடு இருக்கக்கூடிய சூழல்களில் சுபக்கடன் என்று சொல்லப்படும் கடன் மூலமான நல்லவைகளை பெறும் நிலையை ஜாதகர் அடைகிறார்.
இது போன்ற சுபத்துவ சூழல்களில் ஆறாம் அதிபதி, வாழ்க்கையை முன்னேற்றக் கூடிய தொழில் மூலமான நல்ல கடன்களை நியாயமான வகையில் தந்து, அதனை திருப்பிச் செலுத்தும் வகையில் நல்ல தொழிலையும் கொடுத்து, அந்த மனிதனை கடன் மூலமாக முன்னேற்றும் அமைப்பை செய்கிறார்.
ஆகவே இங்கே ஆறாம் அதிபதி தசையில் அவர் பெறுகின்ற சாரம் என்பது இரண்டாம் பட்ச நிலையாகவே வருகிறது.
எந்த ஒரு நிலையிலும் ஒரு மனிதனுக்கு ஆறாம் பாவகம் என்பது கெடுதலை தருவதாக நமக்கு போதிக்கப்பட்டிருந்தாலும், நான் இந்த அத்தியாயத்தின் முதல் பாராவில் சொன்னதைப்போல அனைத்து அமைப்புகளிலும் இருவேறு நிலைகளை கொண்டதுதான் வாழ்க்கையும், ஜோதிடமும்.
ஒரு தசையில் பலன் அறிவது என்பது வைக்கோல் போரில் ஊசியை தேடுவதற்கு ஒப்பானது.
உதாரணமாக ஒரு மிதுன லக்ன ஜாதகருக்கு ஆறாம் அதிபதி மிகக் கொடுமையான பலன்களைத் தரக்கூடிய செவ்வாயாக அமைகிறார். நான் ஏற்கனவே சொல்லும் அவயோக கிரகங்கள் 3, 6, 10, 11 ம் இடங்களில் நட்பு நிலைகளில் இருந்தால் நன்மைகளைச் செய்யும் என்ற அமைப்பின்படி செவ்வாய் அந்த ஜாதகத்தில் இருந்தாலும் பாபத்துவமாக இருப்பின் நல்ல பலன்களை தருவதில்லை.
உண்மையில் அந்த ஜாதகத்தின் மிகச் சிறந்த சுபரான 5-க்குடைய சுக்கிரனின் சாரத்தை செவ்வாய் பெற்றிருந்தாலும், சாரம் தந்த சுக்கிரன் உச்ச நிலையை அடைந்து இருந்தாலும், ஆறாம் பாவகாதிபதியாகிய செவ்வாய் தனக்கு மிகவும் பிடித்த மூன்றாம் இடமான சிம்மத்தில் நட்பு நிலையில் இருந்தாலும், அவர் சனி, ராகு போன்ற கிரகங்களின் தொடர்பினைப் பெற்று பாபத்துவமாக இருக்கும் நிலையில் ஆறாம் பாவகத்தின் அசுப நிலைகளையே தருவார்.
அதே நேரத்தில் இன்னொரு எதிர் நிலையாக வேறொரு உதாரணத்தைப் பார்ப்போமேயானால், துலாம் லக்னத்திற்கு கடுமையான அவயோக கிரகமான குரு பாபத்துவ அமைப்பை பெறாமல் தன்னுடைய இயல்பான தன்மையில் இருக்கும் நிலையில், அவரது தசையில் சுபக் கடன்கள் என்று சொல்லப்படும் நல்லவிதமான கடன்களை கொடுத்து ஒரு ஜாதகரை முன்னேற்றுகிறார்.
கீழே இரண்டு உதாரண ஜாதகங்களை கொடுத்திருக்கிறேன். இவ்விரண்டும் நான் ஏற்கனவே வேறொரு சந்தர்ப்பத்தில், வேறொரு நிலைகளை விளக்கிச் சொன்ன ஜாதகங்கள்தான்.
இந்த ஜாதகங்களை கொண்டவர்களுக்கு சரியான பருவத்தில் ஆறாம் அதிபதியின் தசைகள் நடந்தன. மிதுன லக்ன ஜாதகருக்கு ஆறாம் அதிபதியான செவ்வாய் தசை நடந்த காலம் முழுக்க நல்ல பலன்கள் நடக்கவில்லை.
செவ்வாய் அந்த ஜாதகத்தில் யோகரான உச்ச சுக்கிரன் சாரத்தில், மூன்றாம் இடத்தில் அதிநட்பு நிலையில் அமர்ந்திருந்தும், பாபத்துவமான சனியின் பார்வையை பெற்றிருந்த காரணத்தினாலும், வேறு எவ்வித சுபத் தொடர்புகள் செவ்வாய்க்கு ஏற்படாத காரணத்தினாலும் தசை ஆரம்பித்ததும் முதன்மையாக ஆறாமிடத்தின் அனைத்து அசுப விஷயங்களும் ஜாதகருக்கு நடந்தன.
செவ்வாயின் ஆதிபத்தியம் வழியாக ஜாதகர் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார். அதே நேரத்தில் செவ்வாய் பாபத்துவமாக மூன்றாம் இடத்தில் இருந்த காரணத்தினால் செவ்வாயின் காரகத்துவங்களும் நசிந்தன.
துலாம் இலக்கின ஜாதகருக்கும் ஆறாம் அதிபதியான குரு, லக்னாதிபதியான சுக்கிரன் சாரத்தில்தான் அமர்ந்திருக்கிறார். ஆனால் இந்த இடத்தில் குருவிற்கு பாபத்துவத் தொடர்புகள் எதுவும் இல்லை. அவ யோகரான குரு, சுயமாக நன்மையைத் தரும் நிலையில் பதினொன்றாமிடத்தில் அதிநட்பு நிலையில் நல்ல அமைப்பில் இருக்கிறார்.
எனவே துலாம் லக்கன ஜாதகருக்கு குரு தனது சுய புக்தியில், தனது உயிர் காரகத்துவமான குழந்தையை கொடுத்த பிறகு தனது ஜட காரகத்துவமான அளவற்ற பணத்தை கொடுக்கும் நிலைக்கு ஆளானார்.
இந்த இடத்தில் சுபத்துவ, பாபத்துவ அடிப்படையில்தான் குரு, மற்றும் செவ்வாயின் ஆதிபத்திய, காரகத்துவ விஷயங்கள் நடந்தன. உண்மையில் மிதுன லக்கன ஜாதகருக்கு ஆறாமிட பாபத்துவ செவ்வாய் தனது உயிர்க் காரகத்துவமான சகோதரத்தைக் கெடுத்தார். இங்கே சுப நிலையில் இருந்த அதே ஆறாம் அதிபதி குரு, தனது உயிர்க் காரகத்துவமான குழந்தைகளை கொடுத்தார் என்பதே துல்லியமான உண்மை.
இங்கே முதன்மையான பலன்கள் நடந்தது சாரத்தின் அடிப்படையில் அல்ல. அதே நேரத்தில் சாரநாதன் இந்த இரு ஜாதகங்களிலும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால், அவர்களது தசைகளில் நல்ல தொழில் அமைப்புகள், தொடர்புகள் இருவருக்குமே உண்டாயின.
எத்தகைய ஒரு நிலையிலும் சாரநாதனும், அவர் பெற்றிருக்கின்ற தொடர்புகளும் முக்கியமானவையே. ஆனால் எது முதலில் தரப்படுகிறது என்பதை நாம் சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு தொடர்புகளின் அடிப்படையில்தான் கணிக்க முடியும்.
அடுத்த வெள்ளி பார்ப்போம்.
மாலைமலரில் 09.10.2020 இன்று வெளிவந்தது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.