adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சூட்சும வலு விளக்கங்கள் – (E-006)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8286 99 8888

ஒரு ஜாதகத்தில் சுபத்துவமும், பாபத்துவமும் கலந்திருக்கும் நிலையில் எதை இறுதி நிலையாகக் கொள்வது?

நேற்று வெளியிட்டிருந்த யூடியுப் வீடியோவில் மிதுன லக்னத்தில் பிறந்த ஒரு ஜாதகரைப் பற்றி விளக்கியிருந்தேன். அரசில் பணிபுரியும் அவருக்கு ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது. பலன் கேட்டவர் அவரது தம்பி. மிதுன லக்னத்திற்கு ராகு மட்டுமே யோகர் என்று நீங்கள் சொல்லும் நிலையில் ராகு தசை ஏன் என் சகோதரருக்கு கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறது என்று அவர் என்னிடம் கேட்டார்.


ஜோதிடத்தில் விதிகளை விட விதிவிலக்குகளே முக்கியம் எனும் நிலையில் உங்கள் அண்ணனின் ஜாதகத்தில் ராகுவிற்கு மிதுன லக்னத்தின் 6-8 எனும் கெட்ட ஆதிபத்தியங்களைக் கொண்ட செவ்வாய், சனியின் தொடர்பு இருக்கிறது, அதாவது ராகு, சனியின் வீடான கும்பத்தில் அமர்ந்து, ஆறுக்குடைய கொடும் பாபியான செவ்வாயுடன் இணைந்த நிலையில், கூடுதலாக சனியின் மூன்றாம் பார்வையையும் பெற்று தசை நடத்துகிறார். எனவே இந்த ராகு தசை யோக நிலையையும் தாண்டி உங்கள் அண்ணனுக்கு கெடுதல் செய்து கொண்டிருக்கிறது என்று விளக்கியிருந்தேன்.

உண்மையில் கடுமையான பாபத்துவம் அடைந்த ராகு, ஒரு மனிதருக்கு தாளமுடியாத துன்பத்தையும், மன அழுத்தத்தையும், மரணம் பற்றிய எண்ணங்களையும் தனது தசை, புக்திகளில் தருவார். தற்கொலைக்கு தூண்டுபவரும் ராகுதான்.

ராகுவிற்கு நல்ல வீடுகளாகவும், சுயமாக பலன் தரும் இடங்களாகவும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து இடங்கள் நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.  இவை தவிர்த்த பிற 7 வீடுகளில் ராகு சுயமாக நல்ல பலன்களைத் தரமாட்டார். என்னுடைய “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் இவற்றை விரிவாகவே விளக்கியிருக்கிறேன்.  

அதே நேரத்தில் செவ்வாய், சனியின் சர வீடுகளான மேஷமும், மகரமும் ராகுவிற்கு நல்லவைகளாக அமையும் நிலையில், செவ்வாய், சனியின் ஸ்திர வீடுகளான விருச்சிக, கும்பத்தில் ராகு நற்பலன்களை தருவதில்லை. 

இன்னொரு முக்கிய விளக்கமாக மேலே நான் குறிப்பிட்டிருந்த வீடியோவில் இன்னொரு ஜோதிட ஆர்வலர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் மிதுன லக்னம். அவரது ஜாதகத்திலும் இதேபோன்று செவ்வாயின் மேஷ வீட்டில் ராகு, சனியின் பத்தாம் பார்வையில் இருக்கிறார். அவருக்கு மட்டும் ராகு தசை ஏன் யோகத்தைச் செய்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.  

ஜோதிடத்தை மேலோட்டமாக உணர்ந்து கொள்வதால் வரும் கேள்வி இது. 

அந்த வீடியோவிலேயே செவ்வாய், சனியின் சர வீடுகளான மேஷம், மகரத்தில்  இருக்கும் ராகு நன்மைகளைத் தரும் என்பதை விளக்கி இருக்கிறேன்.  அதைப் போலவே 3, 11 மிடங்களில் இருக்கும் ராகுவும் லக்னத்திற்கு ஏற்றாற்போல கெடுதல்களைச் செய்வதில்லை.  

ஜெயலலிதா அவர்களின் ஜாதகத்தில் வெற்றி தரும் ஸ்தானமான 11-ல் ராகு அமர்ந்திருந்தார். அந்த ராகுவை பாபத்துவமாக இருக்கும் சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் பார்ப்பது உண்மைதான். ஆனால் இங்கே ஒரு தனித்த அமைப்பாக தனது மூலத்திரிகோண வீடான தனுசில் பங்கமற்ற நிலையில் அமர்ந்திருந்த குரு, ராகுவைப் பார்த்து அதிக சுபத்துவப் படுத்தியிருந்தார். இதுவே ஜெயலலிதாவின் ராகு தசை மேன்மைக்குக் காரணம்.

குருவின் தொடர்பில் இருக்கும் ராகு துன்பங்களைத் தரமாட்டார் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். சுபத்துவமும், பாபத்துவமும் கலந்திருக்கும் நிலையில் கிரகங்களின் நிலை அறிவதற்கு, முதலில் அவற்றின் பாபத்தன்மையை கணக்கிட்டு விட்டு, பின்னர் இறுதி நிலையாக அவர்கள் எப்படிப்பட்ட சுபத்துவ அமைப்பில் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட வேண்டும்.

எந்த ஒரு நிலையிலும் கிரகங்களின் சுபத்துவ நிலையே இறுதியானது. அதுவே உண்மையான பலனைச் சொல்லும்.  

முதலில் ஒரு கிரகம் எத்தகைய பாபத்துவ நிலை அடைந்திருக்கிறது என்பதை கணக்கிட்டுக் கொண்டு, அடுத்து சுபத்துவம் எனும் நல்ல தொடர்புகள் எவ்வாறு அந்த கிரகத்திற்கு அமைந்திருக்கிறது என்பதை கணித்து, சுபத்துவத்தை இறுதி அளவுகோளாக வைத்து அதன் பிறகே பலன் அறிய வேண்டும்.  

அதை விடுத்து முதலில் சுபத்துவ நிலைகளைக் கணக்கிட்டு விட்டு அதன் பிறகு அந்த கிரகத்தின் பாபத்தன்மையை கணித்து பலன்கள் அறிய முற்பட்டால் பலன்கள் தலைகீழாக மாறும்.

எத்தகைய நிலையிலும் ஒரு கிரகத்தின் வலிமை இழந்த தன்மையை அதாவது பாபத்துவத்தை தூக்கி நிறுத்தும் அமைப்பு, முழுமையாக குருவிற்கும், பாதி நிலையில் சுக்கிரனுக்கும் உண்டு. குரு, சுக்கிர சுப ஒளி அமைப்புகளே ஒரு மனிதனுக்கு எந்த நிலையிலும் நன்மைகளைத் தர வல்லமை கொண்டவை.

அதோடு ஜோதிடத்தின் நோக்கமே முழுக்க முழுக்க சுபத்தன்மையை அறிவதுதான். அதாவது ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை அளிப்பதுதான்.  எத்தகைய ஒரு நிலையிலும் நாளைமுதல் உனக்கு நல்ல காலம் பிறக்கிறது, நீ நன்றாக இருப்பாய் என்று சொல்வதற்காகத்தான் ஜோதிடம்  உணரப்பட்டது.  

உண்மையில் மனிதர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதற்காக மட்டுமே அறியப்பட்டதுதான் ஜோதிடம். எந்த ஒரு நிலையிலும் இந்த மாபெரும் கலையில் எதிர்மறை எண்ணங்கள் இல்லவே இல்லை. ஒரு மனிதனுக்கு ஜோதிடம் புரிகிறது என்றாலே அவனுக்கு சில நல்லவைகள் முன்கூட்டியே உணர்த்தப்படுகின்றன என்பதுதான் அர்த்தம்.  

இதை உணராத சில ஜோதிடர்கள் தங்களுடைய ஜாதக அமைப்பின்படி, எப்பொழுதும் அவர்களே எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக, தன்னம்பிக்கை இல்லாதவர்களாக இருந்து, வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் எதிர்மறை பலன்களை மட்டுமே சொல்லி, சில நிலைகளில் பயமுறுத்தி ஜோதிடத்தை அவநம்பிக்கை கொண்ட ஒரு கலையாக நினைக்க வைக்கிறார்கள். 

அனைத்திலும் இறுதி நிலையாக நல்லவைகளை மட்டுமே அடையாளம் காட்டி எதையும், எந்த நிலையிலும் உன்னால் ஜெயிக்க முடியும் என்று சொல்வதற்காக பரம்பொருளால் நமக்கு அருளப்பட்டது ஜோதிடம் என்பதுதான் உண்மை.  

அடுத்து, கேதுவால் ஏற்படும் சூட்சும வலு அமைப்பிலும் சிலருக்கு நிறைய குழப்பங்கள் இருக்கிறது.  சிலர் பாபத்துவ நிலையில் இருக்கும் சூரிய, சந்திரர்களுடன் குறிப்பாக, தேய்பிறைச் சந்திரன் கேதுவுடன் இணைந்திருக்கும் நிலையில் சூட்சும வலுவை அடைந்திருப்பதாக முடிவு செய்து கொள்கிறீர்கள். எந்த ஒரு நிலையிலும் சந்திரன் சூட்சும வலுவை அடைந்திருக்கிறார் என்று நான் சொன்னதே இல்லை.  

ஜோதிடத்தில் எந்த ஒரு எழுத்தையும், வார்த்தையையும் மிக நுணுக்கமாக கவனித்து பேசும், எழுதும் வழக்கம் கொண்ட நான் எந்த ஒரு இடத்திலும் சந்திரனும், கேதுவும் இணைந்திருக்கும் நிலையில் சந்திரன் அங்கே சூட்சும வலுவை அடைந்திருப்பதாக சொன்னதே இல்லை.  

உண்மையில் கேதுவால் ஏற்படும் சூட்சுமவலு என்பது முழு மற்றும் முக்கால் பாபர்களாகிய சனி, செவ்வாய் இருவருக்கு மட்டுமே உரித்தானது. இது ஒரு தனித்தன்மை வாய்ந்த நிலை.

சூரியனும், சந்திரனும் எந்த ஒரு நிலையிலும் கேதுவுடன் தொடர்பு கொள்ளும்போது கிரகணம் எனும் பாபத்துவ நிலையைத்தான் அடைவார்களே தவிர, சூட்சும வலு எனப்படும் நல்ல நிலையை அல்ல.

தெளிவாகச் சொல்லப்போனால் பஞ்சபூத கிரகங்களில் சனி, செவ்வாய் இருவருக்கு மட்டுமே சூட்சும வலு அமைப்பு சொல்லப்பட வேண்டும். மற்ற மூன்று சுப கிரகங்களான சுக்கிரன், குரு, புதனுக்கு சூட்சும வலு இல்லை. ஆனால் புதன் சுபர் நிலையில் இருந்து மாறி பாபர்களுடன் இணைந்து பாபராக இருக்கும் போது, அரிதான சில நிலைகளில் சூட்சும வலுவை அடைவார். அதை மிக நுணுக்கமாக கணிக்க வேண்டும்.

குரு, கேதுவுடன் இணையும்போது கேள யோகம் எனப்படும் அதிக பணம் சம்பாதிக்க வைக்கும் நல்ல யோகம் ஏற்படுகிறது. குருவும் இங்கே பாபத்துவ நிலையை அடைய மாட்டார். தன காரகனாகிய குரு, கேதுவுடன் இணையும் போது அவரை பணம் தரச் சொல்லி கேது தூண்டும் நிலை  ஏற்பட்டு இங்கே கேள யோகம் உண்டாகிறது. ஆனால் ராகுவுடன் குரு இணைவது சண்டாள யோகம் எனப்படும் பாபத்துவம்.

அதே போல சுக்கிரன், புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் கேதுவுடன் இணையும்போது தங்களுடைய காமம், சொகுசு, அறிவு, ஆராய்ச்சி ஆகிய நல்ல தன்மைகளை வேறுவிதமாக  அதிகப்படுத்திக் கொடுக்கின்றன. அதாவது கேதுவுடன் இணையும் சுக்கிரனும் புதனும் நிச்சயமாக கெடுபலன் தருவது இல்லை. ஆனால் இவர்கள் இருவரும் ராகுவுடன் நெருங்கி இணைவது பாபத்துவம்.  

ஒளிக் கிரகங்களான சூரியனையும், சந்திரனையும் தங்களுடைய இணைவால் கிரகணத்தை ஏற்படுத்துபவை ராகு-கேதுக்கள். இது எந்த நேரத்திலும் நிலையான ஒன்று. இது மாறவே மாறாது. ராகு ஒளியை முழுமையாக மறைக்கின்ற நிலையில், கேது முழுமையற்ற நிலையில் மறைக்கிறார். அவ்வளவே.  

ஜோதிடத்தில் எப்போதும் பஞ்சபூத கிரகங்களுக்கும், ஒளி கிரகங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்க முடியாது. சாயா கிரகங்களும் தனித்துவமானவை. எப்போதும் கிரகங்களை மூன்று பிரிவாக பிரித்தே பலன் மற்றும் விதிகளை உணர வேண்டும்.  

சந்திரன்-கேது, சூரியன்-கேது இணைவு ஒரு ஜாதகத்தில் இருந்தால் கண்டிப்பாக அது குறைந்த அளவு கிரகணம் அதாவது சூரிய, சந்திரர்களின் ஒளி ராகு அளவிற்கு இல்லாமல் ஓரளவு குறைந்த நிலையில் இங்கே மறைக்கப்பட்டு இவர்கள் பாபத்துவம் அடைந்திருக்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர சூரிய, சந்திரர்கள் சூட்சும வலு அடைந்துள்ளார்கள் என்று கணிக்கக் கூடாது.

எந்த ஒரு நிலையிலும் சூரிய, சந்திரர்கள் கேதுவுடன் இணைவது சூட்சும வலு அல்ல. கிரகணம் மட்டுமே.

அடுத்த வெள்ளி சந்திப்போம்..

மாலைமலரில் 25.09.2020 இன்று வெளிவந்தது .

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.