adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சுபத்துவம் என்றால் என்ன? E-003

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888

சுபத்துவம் என்பது கிரகங்கள் பெற்றிருக்கும்  நல்ல ஒளித் தன்மையைக்  குறிக்கிறது. ஒரு ஜாதகத்தில் சுபத்துவத்தை அடைந்திருக்கும் கிரகங்கள் அந்த மனிதனுக்கு நல்ல வாழ்வை அளிக்கின்றன. 

இயற்கை சுப கிரகங்கள் நான்கு என்பதும். அவை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் நமக்குத் தெரியும். இதில் குரு என்பவர் மிக உயர்நிலையில் உள்ள சுபராக கருதப்படுகிறார். குறிப்பாக கடகத்தில் உச்சநிலையில் இருக்கும் குரு, ஒரு மனிதனுக்கு பூரண சுப பலன்களைத் தரக் கூடியவர் என்று வேத ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.  


உச்சம் என்கின்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு உயர்ந்த என்றும் நீச்சம் என்ற வார்த்தைக்கு தாழ்ந்த என்றும் அர்த்தம். அதன்படி ஒரு கிரகம் தன்னுடைய ஒளியை பூமிக்கு அதிகமாக தரும் நிலையில் இருக்கும்பொழுது உச்சம் எனப்படும் உயர் நிலையை அடைகிறது. அதன் ஒளி பூமிக்கு கிடைக்காத போது அது நீச்சம் எனும் நிலையை அடைகிறது. இதனை பூமி அல்லது சூரியனுக்கு அருகில் அந்த கிரகம் வரும் நிலை அல்லது விலகும் நிலை என்றும் சொல்லலாம்.  

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடகத்தில் உச்சம் பெறும் குரு, ஒளித்  தன்மையில் தன்னுடைய மிக அதிகமான பொலிவினை அங்கே பெறுகிறார். குறைந்த அளவு ஒளியை மகரத்தில் பெறுகிறார்.  அதாவது குரு மகரத்தில் இருக்கும் போது பூமிக்கு அவரது ஒளி குறைந்த அளவிலேயே கிடைக்கிறது. 

மகரத்தில் இருந்து அவர் கடகம் நோக்கிச் செல்லும் நிலையே பாரம்பரிய ஜோதிடத்தில் உச்சத்தை நோக்கி செல்லும் ஆரோகணம் என்றும், தனது பூரண உச்ச டிகிரியில் இருந்து குரு விலகி மீண்டும் மகரம் நோக்கிச்  செல்லும் நிலையே நீச்சத்தை நோக்கிச் செல்லும் அவரோகணம் என்றும் சொல்லப்படுகிறது.  

எனது நீண்டகால ஆய்வுகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடகத்தில் உச்சம் பெறும் குருவின் சுப ஒளியால் நடக்கும் நல்ல பலன்களுக்கு நிகராக, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நிலையை அடையும் சந்திரனின் சுப ஒளியால் உண்டாகும் பலன்களும் இருப்பதை அறிந்திருக்கிறேன்.  

குருவின் முழுமையான ஒளித்திறன் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்படுவது. மேலும் குரு என்பவர்  பூமியிலிருந்து நூற்றுக்கும் அதிகமான கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகம். அதே நேரத்தில் அவர் நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமானவர். ஆகவே அவருடைய   சுப ஒளி தூரத்தில் இருந்தாலும் முதன்மையான அளவில் பூமியில் வாழும் உயிர்களை நல்ல தன்மையில் பாதிக்கிறது.  

அதே நேரத்தில் நமக்கு மிக அருகில் இருக்கும் நம்முடைய துணைக் கோளான சந்திரன் மாதம் ஒருமுறை ஒளி அளவில் உயர்நிலை பெறுகிறார். இதையே நாம் பௌர்ணமி என்கிறோம். சந்திரன் நமக்கு மிக அருகில் இருப்பதால்  ஒளித் தன்மை கூடுதலாக இருக்கும் பொழுது குருவுக்கு நிகரான சுபத்தன்மை பெறுகிறார். எனவேதான் என்னுடைய சுபத்துவ கோட்பாட்டில் பௌர்ணமி சந்திரனை, குருவை விட மேலான அல்லது குருவுக்கு நிகரான ஒரு சுப நிலையில் சொல்லுகிறேன்.  

12 வருடங்களுக்கு ஒரு முறை ஒளி உச்சநிலையை அடையும் குருவை விட மாதம் ஒரு முறை ஒளி உச்சநிலையை அடையும் சந்திரனே உயிர்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை தரும் அமைப்பை பெற்றிருக்கிறார். 

மேலும் சந்திரனே உயிர்கள் அனைத்திற்கும் தாய் போன்றவர். அவரே மாதா காரகன். குரு வெறும் தன, புத்திர காரகன் மட்டும்தான். தாயில்லாமல் குழந்தை வந்து விடுவதில்லை. அம்மாவே எதிலும் முதன்மை. எனவே என்னுடைய சுபத்துவ, சூட்சும வலு கோட்பாட்டின்படி, சுப கிரகங்களின் வரிசை முதலில் பௌர்ணமி சந்திரன், இரண்டாவதாக குரு, அடுத்து சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் என்று அமையும். 

இந்த நிலையால்தான் ஜோதிட மூல நூல்கள் நிலவைச் சுற்றி சில சிறப்பான யோகங்களைச் சொல்கின்றன. சந்திரனைப் போன்ற யோக அமைப்புகள் குருவிற்கு இல்லை. என்னதான் குருவின் பார்வை சிறப்பாக சொல்லப்பட்டாலும் பார்வையின் மூலம் கிரகங்களை சுபத்துவப்படுத்தும் சந்திர அதியோகம் என்னும் அமைப்பு நிலவுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர குருவிற்கு அல்ல.  

ஒருநிலையில் தனது மூன்று பார்வைகளின் மூலம் மற்ற கிரகங்களை குரு சுபத்துவப் படுத்தினாலும், தனக்கு எதிரே மூன்று இடங்களில் வரிசையாக அமர்ந்திருக்கும் கிரகங்களை நல்ல தன்மையாக்கும் அதியோகம் சந்திரனுக்கு மட்டுமே இருக்கிறது. குருவிற்கு இல்லை. மேலும் அதியோகம் மாதம் ஒருமுறை முழுமையாக வரும் ஒன்று. குருவின் நிலை அப்படிப்பட்டது அல்ல. 

அதுபோலவே நிலவின் கேந்திரங்களில் இருக்கும் கிரகங்கள் நீச்ச பங்கம் அடையும் என்று சொல்வது கூட கேந்திர நிலைகளின் பிரதிபலிப்பால் நிலவின் ஒளி அந்த நீச்ச கிரகத்திற்கு கிடைக்கும் என்பதுதான். 

என்னதான் குரு உயர்நிலை சுபராக சொல்லப்பட்டாலும், ஒரு நீச்ச கிரகத்தின் கேந்திரங்களில் அமர்வதன் மூலம் அதனை நீச்ச பங்கப் படுத்தும் தகுதி குருவிற்கு இல்லை. அது நிலவுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் பார்வையின் மூலம் அந்த நீச்ச கிரகத்தை சுபத்துவப் படுத்தும் தகுதி குருவிற்கு இருக்கிறது. இதுவே சந்திர, குருவின் ஒளி நிலைகளில் உள்ள நுணுக்கமான வித்தியாசங்களை நமக்குக் காட்டும். 

சந்திரன் பவுர்ணமி எனப்படும் ஒளி உயர்நிலையை அடைய சென்று கொண்டிருக்கும் நிலையில் உள்ள வளர்பிறை தசமிக்கு பிறகும், பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை பஞ்சமி வரைக்கும் மனிதனுக்கு தேவையான நல்ல ஒளி நிலையைக் கொண்டிருக்கிறார். 

அமாவாசையிலிருந்து மெதுவாக ஒளியினைப்  பெறத் துவங்கும் சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக இருளில் இருந்து வெளிப்பட்டு பத்தாவது நாள் எனப்படும் தசமியன்று கிட்டத்தட்ட வட்ட வடிவமான நிலையை அடைகிறார். அதைப்போலவே பௌர்ணமிக்கு பிறகு தன்னுடைய ஒளியை இழக்க ஆரம்பிக்கும் சந்திரன், அதனையடுத்த ஐந்தாவது நாளான பஞ்சமி திதிக்குப் பிறகுதான் தன்னுடைய வட்டவடிவமான முழு உருவத்தை இழக்கும் நிலைக்கு உள்ளாகிறார்.  

முழு வடிவை இழக்காத தேய்பிறை பஞ்சமி திதி வரைக்கும் உள்ள சந்திரனை நல்ல நிலையில் உள்ள சந்திரனாகவே கருதவேண்டும். ஜோதிட மூல நூல்கள் சொல்லும் வளர்பிறை, தேய்பிறைச் சந்திரன் அமைப்பு இங்கே பொருந்துவதில்லை. உண்மையில் அமாவாசையிலிருந்து வளர்பிறை என்பதும் பவுர்ணமி நாளுக்கு பிறகிருந்தே தேய்பிறை வந்து விடுகிறது என்பதும் நிலவின் ஒளி இழப்பு நிலைகளை குறித்துக் காட்டும் ஒரு கணக்கு மட்டும் தான். அது சரியான பலன் அறிய உதவாது. நிலவின் உண்மையான ஒளித்தன்மை மட்டுமே ஜாதக பலன் அறிய உதவும்.  

எதையும் மிக நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டிய இந்த மகா சாஸ்திரத்தில் ஒளி அமைப்புகளின் அடிப்படையில்தான் சந்திரனை புரிந்து கொள்ள வேண்டும் என்பதால் நம் கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரியும் நிலவின் ஒளி அமைப்பின் அடிப்படையில்தான், ஜோதிடப்படி சந்திரன் ஒரு மனிதனுக்குத் தரும் பலன்களையும் புரிந்து கொள்ள வேண்டும். 

குருவிற்கு அருகில் போய் நின்று அவரது ஒளி அளவுகளை நம்மால் பார்க்கவோ, அளவெடுக்கவோ இயலாது. ஆனால் சந்திரனை அருகில் பார்க்க இயலும். ஒருவேளை நமக்கு குருவையும் அளவெடுக்கக் கூடிய திறன் இருக்குமாயின் அப்போது அவருடைய ஆரோகண, அவரோகண அளவுகளையும் நேரிடையாக தெரிந்து கொள்ள முடியும்.  

சந்திரனின் இந்த ஒளி அளவை வைத்துத்தான் மூலநூல்கள் சந்திரனால் உண்டாகும் மிகச் சிறந்த யோகமான சந்திர அதியோகத்தைச் சொல்லுகின்றன. நான் மேலே சொன்ன குறிப்பிட்ட ஒளி நிலையில் இருக்கும் சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டில் இருக்கும் குரு, சுக்கிரன், புதன், போன்ற கிரகங்கள் இருக்கும் நிலையில் மட்டுமே மனிதனை உயர்வான நிலையில் கொண்டு செல்லக்கூடிய சந்திர அதியோகம் உண்டாகிறது. 

அமாவாசை நிலையிலோ அல்லது மிகக் குறைந்த ஒளி நிலையில் சந்திரன் இருக்கும் பொழுதோ உண்டாகும் சந்திர அதியோகத்தால் பலன்கள் இருப்பதில்லை அதிலும் சந்திரன் முழுக்க முழுக்க ஒளி இழந்த நிலையில் இருக்கும் அமாவாசையன்று அதற்கு எதிரே அமையும் சந்திர அதியோகத்தால் துளியும் பலன் இருக்காது. 

அதி யோகத்தின் மூலம் குரு,சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களும் தங்களுடைய சுப ஒளியினை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, தாங்களும் நல்ல சுபத்துவ நிலையை அடைந்து, தங்களுடைய தசையில் ஒரு மனிதனுக்கு நல்லவற்றை தரும் தகுதி பெறுகின்றன. இந்த யோகத்தில் பாபக்கலப்பு ஏற்படும் போது நன்மைகளின் அளவு குறைகிறது. 

என்னுடைய நீண்டகால அனுபவத்தில் பௌர்ணமி அன்று அல்லது பௌர்ணமிக்கு சற்று முன்பின்னாக உயர் குடிப்பிறப்பு நிகழ்வதைக் கவனித்திருக்கிறேன். பெரும்பாலான அரசியல்வாதிகள், வசதி படைத்தவர்கள், உயர்நிலையில் இருப்பவர்கள் அனைவருமே இதுபோன்ற நிலைகளில் பிறந்தவர்கள்தான். அவர்களது வாரிசுகள் கூட இதுபோன்ற அமைப்பில்தான் ஜனிக்கிறார்கள்.  

ஒரு நல்ல ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாக அமைந்து, லக்ன கேந்திரங்களிலும் அமைர்வார்கள் என்று சொல்லப்படுவது கூட சந்திரனை மையப்படுத்தித்தானே தவிர, சூரியனை முதன்மைப்படுத்தி அல்ல.  

சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாக  அமையும் பொழுது அவை அமாவாசை, பவுர்ணமி அல்லது வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி, நவமி திதிகளுக்கு அருகில் அமையும். இதுபோன்ற நிலைகளில் சந்திரனின் சுப ஒளி ஜாதகருக்கு நல்ல அமைப்பில் கிடைக்கிறது. இந்த நிலையில் பிறக்கும் ஒருவர் திட மனதுடன், முடிவெடுக்கும் திறனுடன் அமைந்து வாழ்வில் முன்னேற்றத்தை அடைகிறார். 

அடுத்த வெள்ளி பார்ப்போம்..  

மாலைமலரில் 04.09.2020 இன்று வெளிவந்தது .

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.