ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ஜோதிடம் ஒரு விஞ்ஞானமா இல்லையா என்பதைப் பற்றி காலம் காலமாக வாதப் பிரதிவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் நமது உச்சநீதிமன்றம் ஜோதிடம் ஒரு அறிவியல்தான் என தீர்ப்பளித்து நமது பல்கலைக்கழகங்களில் ஜோதிடமும் ஒரு விருப்பப் பாடமாக வைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
ஜோதிடம் ஒரு காலவியல் விஞ்ஞானம் என்பதை எனது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் நான் அடிக்கடி வலியுறுத்தி வருகிறேன்.
உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை ஏற்றுக்கொள்ளும் அறிவியல் துறை, அதை முன்கூட்டியே சொல்ல முடியும் என்று ஜோதிடம் சொல்வதை மட்டும் ஏற்க மறுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்தும் அல்லது இருக்கும் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைதான். தெளிவாகச் சொல்லப் போனால் ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று இல்லை என்பதைத்தான் நம்முடைய அறிவியல், பௌதிக உண்மை எனும் பெயரில் வேறுவிதமாகச் சொல்லுகிறது.
உதாரணமாக சூரியன் இல்லாவிட்டால் நாம் இல்லை, நாம் இல்லாவிட்டால் நிலவு இல்லை. ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய ஈர்ப்பு விசையால் சூரியனோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நிலையான அமைப்பில் கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதேபோல நமது சூரியனும் ஒரு சிறு துளியாய் இந்த பிரபஞ்சத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்பதே அறிவியல் சொல்லும் உண்மை.
அதைப்போலவே வாழ்வியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் உயிர்களுக்கு நடக்கின்ற சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, அனைத்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை என்று ஜோதிடம் சொல்வதை தனக்கே உரிய சந்தேகக் கண்ணோட்டத்தோடு அறிவியல் பார்க்கத் துவங்கும் இடத்தில் இருந்துதான் ஜோதிடமும், விஞ்ஞானமும் விலக ஆரம்பிக்கிறது. அதுவரை இவை இரண்டும் வானியல்ரீதியாக ஒன்றாகத்தான் பயணிக்கின்றன.
சுமார் ஆயிரத்து இருநூறு கோடி வருடங்களுக்கு முன்பு, ஒன்றும் இல்லாத ஒரு சூன்யத்திலிருந்து ஒரு மாபெரும் வெடிப்பு நிகழ்ந்து, இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பதைத்தான் இன்றைக்கு அறிவியல் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனை வேறு ஒரு பரிமாணத்தில் நாம் புரிந்து கொண்டால் பெருவெடிப்பிலிருந்து முதலில் பிறந்தது ஒளி. அந்த ஒளியினால்தான் அனைத்தும் உருவாகின.
ஒளியே ஆதார அனைத்திற்கும் மூலமாக இருக்கிறது. இந்த ஒளி சென்று கொண்டே இருப்பதால்தான் பிரபஞ்சம் இன்றும் விரிவடைந்து கொண்டு வருகிறது. ஆகவே ஒளியின் அடிப்படையில்தான் பிரபஞ்சமும், அதனை அடுத்த கேலக்ஸி எனப்படும் பால்வெளி மண்டலங்களும் அதனுள் அமைந்திருக்கும் நமது சூரியனும், அதனை நம்பி இருக்கும் நமது கிரக கூட்டங்களும் இருக்கின்றன.
நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் ஒளியும் அதற்கு நேர் எதிரான இருளும்தான் நம்மை உருவாக்கவே செய்தன. இந்த முரண்பட்ட இரண்டும் இணைந்திருப்பதுதான் பிரபஞ்சம். அதைப்போல்தான் ஜோதிடமும்.
ஜோதிடம் என்பதே முழுக்க முழுக்க முரண்பாடுகள் கொண்ட சமன்பாடுகள்தான் என்பதை எனது விளக்கங்களில் அடிக்கடி சொல்லி இருக்கிறேன்.
இப்பிரபஞ்சத்தின் ஒரே ஆதாரமான உயிரினம் என்று நம்பப்படும் நம்முடைய மனித இனத்திற்கும், ஒரு தனி மனிதனுக்கும் நடக்கின்ற சம்பவங்களும் இதேபோல முரண்பட்ட இரண்டை இணைக்கின்ற விதத்தில்தான் அமைந்திருக்கிறது. அதாவது வட, தென் துருவங்களுக்கு இடையில்தான் மனித வாழ்க்கை இருக்கிறது.
காலம்காலமாக எண்களின் வடிவில் புரிந்து கொள்ளப்பட்ட இந்திய வேத ஜோதிடத்தை தற்போது நான் வேறு ஒரு பரிமாணத்தில், ஒளியின் வடிவங்களில் விளக்க ஆரம்பித்திருக்கிறேன்.
என்னுடைய பால பருவத்தில் இருந்தே ஜோதிடம் எனது உயிர்மூச்சாக இருந்து வந்திருக்கிறது. எனக்கு ஜோதிடம் தவிர வேறு எதுவும் தெரியாது. ஆரம்ப காலத்தில் எனக்குத் தெரிய வந்த ஜோதிடம் வேறுவிதமாக இருந்தது. ஏறத்தாழ 40 ஆண்டு கால அனுபவத்திற்குப் பிறகு இப்போது புரியும் ஜோதிடம் வேறுவிதமாக இருக்கிறது.
அனைவரையும் போலவே நானும் ஐந்தில் சனி இருந்தால் இப்படி, ஏழில் செவ்வாய் இருந்தால் இப்படி என கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்பிக் கொண்டிருந்தவன்தான். ஆனால் அதையும் தாண்டி சுப, பாப ஒளிக் கலப்புகளுக்கு உள்ளேதான் உண்மையான ஜோதிட பலன்கள், அதாவது மனித வாழ்வின் சம்பவங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தபோது உண்மை ஜோதிடம் பிடிபட்டது.
எல்லோருக்கும் எப்போது அறிவுக்கண் திறக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்குத் திறக்கலாம், பலருக்குத் திறக்காமலேயே போய்விடலாம். அது பரம்பொருள் உங்கள் மேல் வைத்திருக்கும் கருணையின் அடிப்படையிலானது.
மிகப் பெரும்பாலானவர்களைப் போலவே ஜோதிடம் என்பது ஒரு அனுமானக் கலை மட்டும்தான். சில யூகங்களை மட்டும்தான் இங்கே சொல்ல முடியுமே தவிர அனைத்தையும் துல்லியமாகச் சொல்ல முடியாது என்று நானும் முன் நாட்களில் கருத்துக் கொண்டிருந்தவன்தான்.
இப்படியும் நடக்கலாம் என்றுதான் சொல்ல முடியுமே தவிர, இப்படித்தான் நடக்கும் என்று சர்வ நிச்சயமாகச் சொல்ல முடியாது என்பதுதான் ஜோதிடத்தைப் பற்றிய முதன்மைக் கருத்தாக இன்றைக்கும் இருக்கிறது.
வேத ஜோதிடத்தில் சுபத்துவம், பாபத்துவம், சூட்சுமவலு என சில கோட்பாடு வழிமுறைகளைச் சொல்லியிருக்கும் எனக்கு, எப்போது ஒளித் தத்துவம் பிடிபட ஆரம்பித்ததோ அன்று முதல் ஜோதிடம் பற்றிய நிச்சயமில்லாத தன்மை பற்றிய கருத்துக்களை மாற்றிக் கொண்டு, இங்கே எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என்று என்னுடைய மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறேன்.
அதேநேரத்தில் ஜோதிடத்தில் இப்போது நான் சொல்லும் சுபத்துவ, சூட்சுமவலு எனப்படும் ஒளி பற்றிய விதிகளைக் கொண்டு, நிச்சயமாக இந்த நிலையில் அனைத்திற்கும் நூறு சதவிகித பலன்களைச் சொல்ல முடியாதுதான்
ஆனால் ஒரு நிலையில் எனக்குப் பிறகு வரும் சந்ததியினர், இப்போது நான் சொல்லும் கிரகங்களின் பிரதிபலிப்பு ஒளி, சூரியனின் சுய ஒளி பற்றிய சுபத்துவ பாபத்துவ தத்துவம் எனும் நூலைப் பிடித்துக் கொண்டே போகும் நிலையில், ஏற்கனவே நான் சொல்லி இருக்கும் ஒருவரின் பிறந்த இடம் பற்றிய தீர்க்கமான துல்லிய கணக்குகளும் வரும்பொழுது ஒரு உயிர் ஜனிக்கும் நேரத்திலேயே, அந்த உயிர் எந்த நிலையில், எங்கு எப்படிப்பட்ட அமைப்பில் வளர்ந்து, என்று இறுதியை அடையும் என்பதை 100 சதவிகித துல்லியத்துடன் சொல்ல முடியும் என்பதுதான் இந்த சுபத்துவ- சூட்சும வலுக் கோட்பாட்டின் அடிப்படை.
மிக உறுதியாக தற்போது வேத ஜோதிடத்தில் நாம் பின்பற்றி வரும் எண்கள் ரீதியிலான கணக்குகளை கொண்டு, அதாவது ஒரு கிரகம் ஒன்றில் இருந்தால் இந்த பலன், இரண்டில் இருந்தால் இந்த பலன் என்று கணக்கிடும் முறைகளை விட தற்போது நான் சொல்லும் சுபத்துவ சூட்சும வலு கோட்பாடு மிகவும் உயரிய நிலையிலேயே இருக்கும்.
அதை விடவும் மேலாக இந்த தத்துவத்தை புரிந்த ஒருவர் ஒளி கலப்பினால்தான், சம்பவங்கள் நடக்கின்றது என்பதையும் சுப ஒளி அதிகமாக இருக்கின்ற நிலைமையில் ஒரு மனிதன் மிகவும் நன்றாக வாழ்கிறான், அவன் நினைப்பது அனைத்தும் நடக்கிறது, அவன் ஒரு உயர்ந்த அமைப்பில் இருக்கிறான் என்பதையும், வானில் பாப ஒளி அமைப்புகள் கலந்து மிகுந்த நிலையில் பிறக்கும் ஒரு மனிதன் வாழ இயலாதவனாக அல்லது வாழத் தகுதியற்றவனாக இருக்கிறான் என்பதையும் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.
அறிந்து கொள்ளப்பட்ட காலத்திலிருந்தே ஒவ்வொரு நிலையிலும் ஜோதிடம் செதுக்கப்பட்டுக் கொண்டுதான் வந்திருக்கிறது. ஜோதிடத்திற்கு தேவையான மூல விஷயங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அருளிய நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் எவரும் இவை இப்படித்தான், இவற்றை ஒருபோதும் மாற்ற இயலாது என்று சொன்னதில்லை. காலத்திற்கேற்ப, இடத்திற்கு ஏற்ப, சூழ்நிலைகளைப் பொறுத்து ஜோதிட விதிகள் மாறலாம் என்றுதான் நமக்கு அறிவுறுத்தி சென்றிருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், இந்த விதிகளை பின்வரும் சந்ததியினர் தங்களுடைய அனுபவத்திற்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இக்கருத்துக்கு இப்போது நான் சொல்லுகின்ற சுபத்துவ சூட்சுமவலு கோட்பாடு ஒரு நல்ல உதாரணமாக இருக்கும்.
ஒளித் தத்துவமாக ஜோதிடத்தைப் பார்க்கும்போது எதையும் துல்லியமாக சொல்ல முடியும் என்பதற்கு, இப்போது நமது சமூகத்தில் பரவலாகி வரும் ஒருவர் வெளிநாட்டில் செட்டில் ஆகக்கூடிய நிலைக்கான விதியினைப் பார்த்தோமேயானால், “ஒருவரது ஜாதகத்தில் 8, 12ஆம் இடங்கள் சுபத்துவமாகி, இந்த இரண்டு அதிபதிகளும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு, அவர்களது தசைகளோ அல்லது ராகு, கேதுக்களின் தசைகளோ அல்லது சர ராசிகளில் இருக்கின்ற கிரகங்களின் தசைகளோ அடுத்தடுத்து வருமாயின் அவர் நிரந்தரமாக வெளிநாட்டில் செட்டில் ஆவார்” எனும் விதி என்னை பின்பற்றுபவர்களால் நூறு சதவிகிதம் துல்லியமானது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஒளிக்கலப்பின் அடிப்படையில் மேலே சில வரிகளில் நான் சொன்ன இதே விதி பாரம்பரிய ஜோதிடத்தில் கிட்டத்தட்ட பலவிதமான வடிவங்களில் எண்களால் விளக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது மூன்றாம் இடம் வலுத்திருந்தால் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்வார், 3, 6, 9, 12 ம் இடங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டால் ஒருவர் வெளிநாட்டில் வசிப்பார் அல்லது அங்கேயே நிரந்தரமாக இருப்பார் எனவும், மூன்றாம் இடம் குறுகிய தூரப் பயணம், ஒன்பதாம் இடம் நடுத்தர தூர பயணம், 12ஆம் இடம் நீண்ட தூர பயணம் என்பது போன்ற தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விஷயங்களாக எண்கள் வடிவில் பாரம்பரிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.
இதுபோன்ற தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விஷயங்களுக்கு பதிலாக சில வரிகளில் துல்லியமான விதிகளை ஒளியின் அடிப்படையிலான சூட்சுமவலு கோட்பாட்டில் உணர்த்த முடியும் என்பதைத்தான் இதனையடுத்து வரப்போகின்ற சில கட்டுரைகளில் விளக்க இருக்கிறேன்.
அடுத்தடுத்த வாரங்களில் சேர்ந்து பயணிப்போம் வாருங்கள்...,
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.