adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ராஜயோகம் நிறைவு…(B-029)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

நிறைவாக அரச ஜாதகத்தின் மீதமுள்ள யோக அமைப்புக்களைப் பற்றிப் பார்க்கலாம்...


“அரச ஜாதகம்”

ருசக யோகம்

இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெறுவதால் உண்டாகும் ருசக யோகமும் இவரது ஜாதகத்தில் உள்ளது. ஒருவருக்கு செவ்வாய் வலுப் பெறுவதன் மூலம் அதிகாரம் செய்யும் அமைப்பு உண்டாகும் என்ற வகையில் மட்டுமே இந்த யோகம் பயனளிக்கும். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குணநலன்களிலும் குறைகளை உண்டாக்கும்.

இந்த அரசனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் வாய்ப்புப் பெற்றுள்ள இவரது அணுக்கச் சீடர்கள் இவரின் பிரசித்தி பெற்ற முன்கோபத்தையும் சட்டென்று வெளிவரும் குத்தலான பேச்சுக்களையும் அறிவார்கள்.

இது ருசக யோக நாயகனான செவ்வாய் ஏழாமிடத்தில் உச்ச வலுப் பெற்று லக்னத்தையும் இரண்டாமிடத்தையும் பார்ப்பதால்தான்.

செவ்வாய் இங்கே உச்சம் பெற்ற காரணத்தால்தான் ஏழாமிடம் பலவீனமாகி, முதல் மனைவியை இவர் இழக்க நேர்ந்தது. பின்னரும் இரண்டு மனைவிகள் என்ற அமைப்பு ஏற்பட்டது.

பாபக் கிரகங்கள் லக்னாதிபதியாகவோ அல்லது லக்ன சுபர்களாகவோ வந்தாலும் அவர்கள் சூட்சும வலுப் பெறாமல் நேர்வலுப் பெற்றால் அந்த பாவத்தைக் கெடுப்பார்கள் என்ற என்னுடைய “சூட்சும வலுத் தியரி” க்கு இந்த ஜாதகமும் ஒரு நல்ல உதாரணம்.

அதே நேரத்தில் இவரின் சிறு வயதிலேயே செவ்வாய் தசை முடிவுற்றது இவர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்பதை நிரூபிக்கிறது. எனவே இவரின் ஜாதகத்தில் ருசக யோகம் இருந்தாலும் செவ்வாய் தசை சிறுவயதில் முடிவுற்றது என்பதால் இவரைப் பாதிக்கவில்லை.

ஜெய்மினி சித்தாந்தம்.

ஜெய்மினி மகரிஷி பதா லக்ன அமைப்பிற்கு 3,6,8,12 ல் பாபக் கிரகங்கள் அமைந்திருப்பின் அது மகா ராஜயோக ஜாதகம் என்று சொல்கிறார்.

பதா லக்னம் என்பது லக்னாதிபதி நின்ற வீட்டின் எண்ணிக்கையை அவர் நின்ற வீட்டிலிருந்து எண்ணி வரும் ராசி ஆகும். அதன்படி இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் பதினோராமிடமான ரிஷபத்தில் அமர்ந்துள்ளார். ரிஷபத்திலிருந்து பதினொன்று வரை எண்ணினால் வரும் மீனமே பதா லக்னம் ஆகும்.

மீனத்திலிருந்து எண்ணி வரும் மூன்றாமிடமான ரிஷபத்தில் சூரியனும், ஆறாமிடமான சிம்மத்தில் ராகுவும், எட்டில் சனியும், பனிரெண்டில் கேதுவும் இருப்பது ஜெய்மினி மகரிஷி சித்தாந்தப்படி ராஜயோக அமைப்பு ஆகும்.

சிவராஜ யோகம்

தலைமைக் கிரகமான சூரியனை குரு வலுப் பெற்றுப் பார்ப்பது நமது ஞானிகளால் சிவராஜ யோகம் என்று சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

அதிலும் சூரியனுக்கு திரிகோணங்களில் குரு இல்லாமல் அவருக்கு நேருக்கு நேர் நின்று வக்ரம் பெற்றுப் பார்ப்பது தனிப்பட்ட விசேஷ அமைப்பாகும். இது போன்ற நிலையில் குருவை சூரியனும் பார்ப்பார்.

ஏற்கனவே தலைமைப் பொறுப்பைத் தருபவர் சூரியன்தான் என்பதை நிறைய இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். நமது மேலான இந்து மதத்தின் நாயகன், தலைவன், சிவன் எனப்படும் ஈஸ்வரன்தான் என்பதாலும் இந்த அமைப்பு சிவராஜ யோகம் என்று சொல்லப்படுகிறது.

ஒருவர் அரசில் அங்கம் வகிக்க வேண்டுமெனில், அதிகாரம் செலுத்த வேண்டுமெனில் ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் வலுவாக இருந்து ஒருவருக்கொருவர் கேந்திரங்களிலும் இருக்க வேண்டும் என்பது ஜோதிடத்தில் ராஜ விதி.

இந்த ஜாதகரை அரசனாக்கிய முதன்மை அமைப்பு இந்த ராஜ யோகமேயாகும். அதிலும் தலைமைப் பொறுப்பைத் தரும் சூரியன் திக்பலம் பெறும் இடமான பத்தாமிடத்திற்கு அருகில் அமர்ந்து, சந்திர கேந்திரத்தில் சந்திரனுடன் இணைந்து விருச்சிகத்தில் நட்பு வலுவுடன் உச்ச சந்திரனின் பார்வையைப் பெற்று சுபத்துவமான குருவின் பார்வையைப் பெற்றதால் இந்த யோகம் முழுமை பெற்று இவர் தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பான அரசன் ஆனார்.    

நிறைவாக,

வீடு கொடுத்தவர்களின் வலிமை யோகம்.

ஒரு தசையின் நாயகன் வலுப் பெற்று அந்த தசை நன்மை செய்ய வேண்டுமெனில் அந்த தசா நாதனுக்கு வீடு கொடுத்தவர் வலிமை பெற வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் முக்கிய விதி.

ஏற்கெனவே இதைப் பற்றி விளக்கும் போது சனி, செவ்வாய் போன்ற பாபக் கிரகங்களின் உச்ச நிலைகள் இது போன்ற மறைமுகமான நிலைகளுக்கு மட்டுமே பயன்படும். நேரிடையாக அவர்களின் தசையில் நன்மைகளைத் தராது என்பதை விளக்கியிருக்கிறேன்.

(அதாவது ராகு சர ராசிகளில் 3, 11 மிடங்களில் (மேஷம், மகரம்) இருக்கும் போது அந்த வீடுகளின் அதிபதிகள் சனி, செவ்வாய் உச்சம் பெற்றால் ராகு தசை நன்மைகளைத் தரும்.)

இந்த அரச ஜாதகத்தில் இவருக்கு அரசியலில் ஏற்றத்தைத் தந்த குரு தசையின் நாயகன் குருவுக்கும், மிகப் பெரிய உச்ச நிலைகளுக்கு இவரைக் கொண்டு சென்ற புதன் தசையின் நாயகன் புதனுக்கும் வீடு கொடுத்த செவ்வாய், எவ்வித பங்கமும் இன்றி பரிபூரண உச்சம் பெற்றிருப்பது மிகச் சிறந்த அமைப்பு.

இந்த நிலையால் விருச்சிகத்தில் இருக்கும் குருவும், மேஷத்தில் இருக்கும் புதனும் இன்னும் வலிமை பெற்றனர். அதன் விளைவாக இவருக்கு குரு தசையும், புதன் தசையும் மிகப்பெரிய வெற்றிகளைத் தந்தன.

மேலும், கேதுவுக்கு கன்னியும், கும்பமும் மட்டுமே நற்பலன்களைத் தரக்கூடிய விசேஷமான இடங்கள். இங்கே புதன் தசைக்குப் பிறகு நடந்த கேது தசையின் நாயகன் கேதுவிற்கு இடம் தந்த சனியும் அவருக்குத் திரிகோணத்தில் உச்சம் பெற்றார்.

எனவேதான் கேதுவும் எட்டாமிடத்தில் இருந்தாலும் சுபத் தன்மை பெற்று அவரது தசையும் நன்மைகளைச் செய்தது.

தற்போது இவருக்கு சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. கடக லக்னத்தின் பாதகாதிபதியான சுக்கிரன் இங்கே பனிரெண்டில் மறைந்தது சிறப்பு என்பது ஒருபக்கம் இருக்க, சுக்கிரனுக்கு பனிரெண்டாமிடம் மிக நல்ல ஸ்தானம் என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஒருவருக்கு யோகமான ஜாதகம் அமைந்தால் மட்டும் போதாது. அந்த யோகத்தைத் தரும் கிரகங்களின் யோக தசையும் சரியான வயதில் நடப்பில் வரவேண்டும். யோகங்கள் இருந்து யோக தசைகள் வராவிட்டால் அந்த யோகத்தால் பலனில்லை.

அது போலவே யோகங்கள் பங்கமின்றி அமைவதும் மிகவும் முக்கியம். ஞானிகள் துல்லியமாக, தெளிவாக விளக்கும் யோகங்களில் சிறு பிசகு ஏற்பட்டால் கூட அந்த ஜாதகர் யோகங்களைக் கனவில் மட்டுமே அனுபவிப்பார்.

ஆக...

இவருக்கு என்னுடைய சூட்சும வலுத் தியரிப்படி வந்திருக்கக் கூடாத செவ்வாய் தசை 5 வயதில் முடிந்தது. இரண்டாமிடமான சிம்மத்தில் பகை பெற்ற ராகுவின் தசை 23 வயதில் முடிந்தது.

அடுத்து நடைபெற்ற குரு, சனி புதன், கேது என அனைத்து தசைகளும் நம் ஞானிகள் அருளிய ஜோதிட விதிப்படி சிறப்புடன் அமைந்திருப்பது மிகப் பெரும் யோக அமைப்பு. இதுவே பரிபூரண ராஜயோக நிலை. இதுவே உண்மையான அதிர்ஷ்டம் எனப்படும் அமைப்பு. இதைத்தான் நமது கிரந்தங்கள் “ராஜயோகம்” எனக் குறிப்பிடுகின்றன.

இத்துடன் யோக விளக்கங்கள் நிறைவுற்றது. 

வணக்கம்...

( ஏப் 19-25, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whats app ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.