ஒரு காலத்தில் “நீ என்ன பெரிய டாட்டா பிர்லாவா... இப்படிச் செலவு செய்கிறாய்?” என்று அடுத்தவரைக் கேள்வி கேட்கப் பயன்பட்ட உதாரணங்கள் தற்போது “அவன் பெரிய அம்பானிப்பா...!” என்று மாறிவிட்டன.
டாட்டாக்களும், பிர்லாக்களுமாவது பாரம்பரியமான நல்ல வசதியான குடும்பத்தின் வழி வந்தவர்கள். ஆனால் அம்பானிகளின் தந்தையார் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளின் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தன் வாலிப வயதில் மும்பையில் பிளாட்பாரத்தில் பீடாக்கடை வைத்திருந்தவர்.
மும்பையின் நடைபாதையில் கடை வைத்திருந்த அம்பானி இந்தியாவின் பணக்கார அடையாளமாய் மாறியது எப்படி? நீங்களும் அம்பானி போன்ற மகா கோடீசுவரராக எப்போது ஆவீர்கள்? உங்கள் ஜாதகமும் அது போன்ற வலுவுள்ளதா?
திருமகளைத் தன்னகத்தே வரவழைக்கும் அந்த ஜோதிட சூட்சுமங்கள் என்ன? ஒவ்வொரு மனிதனையும் ஏங்க வைக்கும் அந்தப் பணத்தை எப்போது சம்பாதிக்க முடியும்?
இது பற்றி வேதஜோதிடம் என்ன சொல்கிறது?
- எந்த லக்னமாயினும் லக்னாதிபதி வலுவடைந்து, லக்னத்தை ஐந்து, ஒன்பதுக்குடையவர்கள் வலுப்பெற்றுப் பார்த்து, அவர்களின்தசையும் நடைபெறுமானால் பிரபலமானவராகவும், கோடீசுவரனாகவும் மாறும் யோகம்.
- தொழிலுக்குரிய பத்தாம் பாவாதிபதியும், செயல்புரியும் லக்னாதிபதியும், பணம் தரும் தனாதிபதியும் வலுப்பெற்றிருந்தால் பணக்கார யோகம்.
- பணத்தைக் கொடுக்கும் குருவும், அதை அனுபவிக்க இயலும் சுக்கிரனும் வலுப் பெற்றிருந்தால் பணக்கார யோகம்.
- இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் பாவத்தின் அதிபதிகள் வலிமை குறையாமல் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் பெறுவது பணக்கார யோகம்.
- ஒன்பது பத்துக்குடையவர்கள் பரிவர்த்தனையாதல், இணைந்திருத்தல், ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற ஏதாவது ஒரு அமைப்புடன் இருந்து இருவரது தசாபுக்தியும் சரியான பருவத்தில்ஜாதகருக்கு நடந்தால் கோடீசுவரன் ஆவார்.
இவையனைத்தும் பொதுவான அம்சங்களே...
இனி சூட்சும விதிகளைக் காண்போம்.
- காலபுருஷனின் கேந்திர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் எனப்படும் சர ராசிகளை லக்னங்களாகக் கொண்டு பிறந்தவர்கள் விடாமுயற்சியுடன் எதையும் சாதிக்கப் பிறந்தவர்கள்.
- மேற்கண்ட சர ராசிகளில் சுபகிரகங்கள் நேர் வலுவுடனும், பாபக் கிரகங்கள் சூட்சும வலுவுடனும் இருந்து அவர்களுடைய தசையும் நடக்கும் போது மிகப்பெரிய தனலாபங்கள் கிடைக்கும். குறிப்பாக லக்னாதிபதி சுபரானால் நேர்வலுவும், பாபரானால் சூட்சும வலுவும் அடைந்திருக்க வேண்டும்.
- மூன்று கிரகங்கள் திக்பலம் பெற்றிருந்து, அவர்கள் லக்ன யோகர்களாகவும் இருந்தால் அவர்களின் தசை நடக்கும்போது ஜாதகர் ஏழைக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கோடீசுவரனாவார்.
- பணத்திற்கு அதிபதி குருவே...! தனகாரகனான குருபகவான் ஜாதகத்தில் வலுவுடன் இருப்பது பணக்கார அமைப்பை உருவாக்கும். அவர் சீக்கிரகதியில் (அதாவது சூரியனுக்கு இரண்டில்) ஸ்திர ராசியில், பதினொன்றாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் (இந்த மூன்று அமைப்பும் ஒரு சேர இருந்தால்) பணம் கொட்டும்.
- 3, 11 மிடங்களில் ராகு இருந்து, அது சர ராசியாகி, ராகு ஐந்து ஒன்பதுக்குடையவர் சாரம் பெற்று, ராகுக்கு வீடு கொடுத்தவர் அவருக்கு கேந்திரத்தில் (சர ராசியில்) உச்சமாகி, ராகுதசை நடக்கும் போது எப்படி பணம் வந்தது என்று மலைக்குமளவிற்கு முறைகேடான வழியில் பணமழை பொழியும்.
(தசாநாதனுக்கு வீடு கொடுத்தவர் 6,8,12 ல் மறையக் கூடாது என்ற விதி உண்டு. அதற்கு இந்த அமைப்பு விதிவிலக்கு. இதில் ராகுவுக்கு வீடு தரும் இயற்கைப் பாபிகள் சனியும், செவ்வாயும் லக்னத்திற்கு 8, 12 ல் மறைந்து உச்சம் பெறுவார்கள்.)
- விருச்சிகம் லக்னமாகி, சந்திரனோ சூரியனோ வலுப்பெற அமாவாசை அல்லது, பௌர்ணமியில் பிறப்பது, அல்லது ஜாதகர் ஆடி மாதம் சிம்ம ராசியில் விருச்சிக லக்னத்தில் பிறப்பது மஹா தனயோகம்.
(இந்த அமைப்புப்படி சூரியனும் சந்திரனும் ஒன்பது பத்துக்குடையவர்களாகி, இணைந்தோ, பார்த்துக் கொண்டோ இருப்பார்கள். ஆடிமாதம் சிம்மராசி என்பது சூரியனும், சந்திரனும் பரிவர்த்தனை ஆவார்கள்.)
- தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் செவ்வாய் இருப்பது “தசம அங்காரஹா” என நமது கிரந்தங்களில் உயர்வாக சொல்லப்படுகிறது. இதன் சூட்சுமம் என்னவெனில் செவ்வாய் தைரியத்திற்கான கிரகம். தொழில் செய்வதற்கு தைரியம் (ரிஸ்க்) வேண்டும். செவ்வாய் இந்த இடத்தில் திக்பலம் பெறுவார். இங்கே செவ்வாய் தனித்து ஆட்சி உச்சம் பெறாமல் வெறும் திக்பலம் மட்டும் பெற்றிருந்தால் ஜாதகர் மகா கோடீசுவரன் ஆவார்.
(தனித்து ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் அதீத கோபம் மற்றும் அசட்டுத் தைரியத்தில் தவறான முடிவெடுத்து தொழில் சரிவை சந்திப்பார். எனவே செவ்வாய் பத்தாமிடத்தில் ஸ்தானபலம் பெறாமல் வெறும் திக்பலம் மட்டும் பெற்றிருக்க வேண்டும்.)
- உத்தரகாலாம்ருதத்தில் சொல்லியபடி இந்து லக்னத்தில் சுப கிரகம் வலுவுடன் இருந்து அதன் தசை நடந்தால் நேர்வழியில் பணமும், பாபகிரகம் இருந்தால் மறைமுக வழியில் பணமும் ஏராளமாய் வரும்.
உத்தர காலாம்ருதத்தில் மகாபுருஷர் காளிதாசர் இந்து லக்னம் என்ற அமைப்பைப் பற்றி சொல்கிறார்.காளிதாசர் பிறப்பில் அப்பாவியாக, ஏதும் அறியாதவராக இருந்தவர். ஒரு காளி கோவிலில் தனக்கு எற்பட்ட துன்பங்களை மனப்பூர்வமாக முறையிட்டுத் தூங்கியவருக்கு, விழித்த உடன் கவிதா ஞானமும், ஜோதிட ரகசியங்களும், பரம்பொருளிடமிருந்து நேரிடையாக கிடைக்க ஆரம்பித்தன.
இதையே பெரியவர்கள் “சக்தி” அவருடைய நாக்கில் எழுதினாள் என்று பூடகமாகச் சொன்னார்கள். (நம் காலத்தில் வாழ்ந்த கணிதமேதை ராமானுஜம் சில சிக்கலான சூத்திரங்களுக்கான விடை தனக்கு பிரபஞ்சத்திலிருந்து நேரிடையாக கிடைத்தது என்று சொன்னது இங்கு கவனிக்கத்தக்கது.)மகரிஷி பராசரர் அருளிய விம்சோத்ரி உடுமகாதசை கணக்கைப் போலவே (நாம் இன்று கணிக்கும் உடுமகாதசை வருடங்களான கேது 7, சுக்கிரன் 20, சூரியன் 6, சந்திரன் 10, செவ்வாய் 7, ராகு 18, குரு 16, சனி 14, புதன் 17, என்பனவற்றை நமக்குத் தந்தவர் மகரிஷி பராசரரே...!) மகாபுருஷர் காளிதாசரும் நமக்கு இந்து லக்னம் என்ற ஒப்பற்ற அமைப்பைத் தந்திருக்கிறார்.
காளிதாசர் மற்ற கிரகங்களால் பூமிக்கு கிடைக்கும் கதிர் அல்லது ஒளி அளவை மிகத் துல்லியமாக “கிரககளா பரிமாணம்” என்ற பெயரில் சொல்லுகிறார்.
கிரககளா பரிமாண எண்களாவன....
சூரியன் | 30 |
சந்திரன் | 16 |
செவ்வாய் | 6 |
புதன் | 8 |
குரு | 10 |
சுக்கிரன் | 12 |
சனி | 1 |
நம்மை ஒளியால் மூழ்கடிக்கும் சூரியனுக்கு 30 எண்களையும், ஒளியைத் தர இயலாத அளவுக்கு வெகு தூரத்தில் இருக்கும் சனிக்கு எண் ஒன்றையும் அவர் தருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
சனியின் ஒளிவீச்சே ஒன்று என்ற குறைந்த அளவில் நம்மை வந்து அடைவதால்தான் அதற்கு அப்பால் உள்ள யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்களின் தாக்கம் நம்மை பாதிப்பதில்லை என்று இந்திய ஜோதிடம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும் கதிர்வீச்சு மொத்த அளவை அவர் பராசரரின் உடுமகாதசை அளவைப் போலவே 120 எனக் கொண்டது இங்கு குறிப்பிடத் தக்கது.இந்து லக்னத்தை எப்படிக் கணிப்பது என்றால், காளிதாசரால் கிரகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கிரககளா பரிமாண எண்களின்படி லக்னத்திற்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதுக்குடையவரின் எண்ணையும் கூட்டி, வரும் எண்ணை பனிரெண்டால் வகுத்து, மீதி வரும் எண்ணை ராசியிலிருந்து எண்ணினால் வருவதே இந்து லக்னம்
.
இந்த இந்து லக்னத்தில் இயற்கைச் சுப கிரகங்களோ, லக்ன யோகர்களோ வலுவுடன் அமர்ந்து அவர்களின் தசை நடந்தால் அந்த ஜாதகன் கோடீசுவரன் ஆவான். (செப் 7-13, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)